நூறிருப்பு
அன்புள்ள ஜெ
இந்த வரியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்:
“இங்குள்ள எல்லாமே முற்றிலும் பொருளிழந்துபோவதைக் காண்பது வரை வாழ்வதுதான் நூறாண்டு அகவை நிறைவு என்பது.”
மனிதனின் வயதைக் குறைக்கும் வழிமுறை அதிகம் போனால் இன்னும் அரை நூற்றாண்டுக்குள் வந்து விடும் என்று நம்புகிறேன். அதன் பிறகு 100 வயதை ஆரோக்கியத்தோடு கடப்பது பலருக்கும் இயல்வதாகி விடும்.
நீண்ட நெடுநாள் வாழ்க்கை வாழும் ஒருவர் இயல்பாகவே ஆன்மிகத்தை வந்தடைவார் என்று தான் நானும் நம்புகிறேன். அடுத்த நூற்றாண்டு புத்தர்களின் நூற்றாண்டாக அமைய வாய்ப்புண்டு.
நன்றி
ரத்தன்
அன்புள்ள ஜெ
ஓர் எளிய நினைவுக்குறிப்பு என்று சொல்லத்தக்க நூறிருப்பு கட்டுரை ஒரு நாவலுக்கான களம் கொண்டிருக்கிறது. ஓர் அன்னையின் போராட்டம், நிமிர்வு.
இங்கே இப்படி எத்தனையோ அன்னையர் குழந்தைகளுக்காக வாழ்ந்திருக்கிறார்கள். எல்லா வகையிலும் பேரன்னைகளாகத் திகழ்ந்திருக்கிறார்கள். நம் சூழலில் நாம் இந்த ஆளுமைகளைப் பற்றி முழுமையாக உணர்ந்திருப்பதில்லை.
ஆ,மாணிக்கவாசகம்