பழைய கசப்பு, வளர்ந்த ஒளி

1983 முதல் நான் கவிதைகள் எழுதிக் கொன்டே இருந்தேன். கவிதை எழுத ஒரே காரணம்தான். என் அகக்கொந்தளிப்பை வெளிப்படுத்துதல். அதற்கு நேரடியான வெளிப்பாட்டுமுறையாகக் கவிதை என்னும் வடிவம் இருந்தது. கற்பனையால் ஒரு சூழலை உருவாக்கும் உளநிலை அன்று என்னிடம் இல்லை. எழுதி விரிக்கும் பொறுமையும் இல்லை. என் கவிதைகள் ஒருவகை அந்தரங்க டைரிக்குறிப்புகள்.

அன்று எழுதப்பட்ட பெரும்பாலான கவிதைகள் அத்தகையவை. அவை ஒருவகை கசப்புமிழ்தல்கள். அந்த பெருந்திரளில் இருந்து விலகி ஒலித்த குரல் தேவதேவன். பின்னர் இரண்டாம் வருகையில் தேவதச்சன். இன்று இசை. மற்றபடி தமிழ்க்கவிதை என்பது எப்போதுமே ஒருவகை முனகலும், பொருமலும் எரிச்சலும்தான். பரவச நிலைகளோ கண்டடைதல்களோ கூட தமிழ் நவீனக் கவிதையில் மிகக்குறைவு.

இந்தக் கவிதைகளை 1986 வாக்கில், என் 24 வயதில் எழுதினேன் என நினைவு. அம்மா அப்பா இறந்த ஆண்டில். இறுதிக்கவிதை நான் 1988 ல் என் மீட்சிக்குப் பின் எழுதியது. இவற்றை சுந்தர ராமசாமி காலச்சுவடு தொடங்கியபோது அவருக்கு அனுப்பினேன். அவருடைய சேகரிப்பில் அவை இருந்தன. காலச்சுவடு இதழில் வேறு பல கவிதைகள் வெளியாயின. 1991 ல் காலச்சுவடு மலர் வெளிவரும்போது எஞ்சிய இக்கவிதைகளையும் வெளியிட்டார்.

ஆனால் கவிதைகள் வெளியாகும்போது நான் மீண்டுவிட்டிருந்தேன். இக்கசப்பின் பொருளின்மையை உணர்ந்திருந்தேன். இக்கசப்பை வெளியே கொட்டுவதென்பது வீட்டுக்குப்பையை அள்ளி தெருவில் போடுவதுபோல. இவை நான் நான் என்றே புலம்புகின்றன. இவை அல்ல நான். நான் புலம்புவதில்லை

1990 முதல்  நான் என்னை வரலாறாக விரிக்க ஆரம்பித்திருந்தேன். என்னை தத்துவார்த்தமாக பெருகவைக்கத் தொடங்கியிருந்தேன். ரப்பர் வெளிவந்துவிட்டிருந்தது. விஷ்ணுபுரம் நாவலை  எழுதத்தொடங்கியிருந்தேன். ஆகவே இவற்றை காலச்சுவடு மலரில்  வாசித்தபோது ஒருவகை ஒவ்வாமையே உருவாகியது.

இவற்றிலுள்ளவன் நான் அல்ல. என் பழைய ஒரு எக்ஸ்ரே- குணமான காசநோயின் தடம். இறுதிக் கவிதையிலுள்ளவன்தான் நான். என் ஒளி. அதை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

அண்மையில் நண்பர் அன்பு இதைக் கண்டடைந்து அனுப்பியிருந்தார்.

நகரம்

செத்த மிருகத்தின் அடிவயிறு போல
வெளிறி விரைத்திருக்கிறது வானம்
பசிக்கிறதா உடம்பெங்கும் உறுப்புகள்
சுழலத் துடிக்கின்றனவா
குளிர்ந்த மூச்சுவிட்டபடி இருமருங்கும்
வரிசையில் உறைந்திருக்கும் குருட்டு ராட்சதர்கள்
நீர்க்குழாய் மலக்குழாய் புடைக்கும்
கான்கிரீட் பிண்டங்கள்
எங்கே என் கருப்பை,
நகரத்து திரைப்படச் சாலை?
ஒடுங்கிக் கொள்வேன் சுருண்டு கொள்வேன்
இருளில், இருளில்…
கடவுளே இந்த காலையில்
மழிக்கப்பட்ட தலைகள் போல
வெறுமை கொள்கின்றன முகங்கள்.
யார் மீதோ முட்டிக் கொண்டேன்.
மன்னிக்க வேண்டும் சோதரா
தீய சகுனங்கள் தெரிகின்றனவே?
கீழ்வானில் இரும்புக் கோபுர உச்சியில்
கண்மினுக்கும் மைக்ரோ வேவ் நட்சத்திரம்;
நீர் அதைக் காணவில்லையா?
காலை வெயிலில் நீண்டு தெருவில் படிகிறதே
அதன் எலும்புக்கூடு நிழல்!
பாதி வெளிவந்த பிரசவம் போல
இவ்வுதயம்
மதுக்கடை கூடவா திறக்கவில்லை.
உடை உடை மண்டை ஓட்டை
உள்ளிருந்து பதிலுக்கு உடைப்பது யார்.
இந்த மூத்திரச் சந்தில் கொட்ட வேண்டும்
என் மூளையை
பிய்த்தெறிந்தபடி ஓட வேண்டும் இந்தத் தெருக்களில்
உடைகளை… தோலை… சதைகளை
இந்தக் காலையை உங்களுக்கு விற்றுவிடுகிறேன்
எனக்கு ஒரு குன்றிமணியளவு சூரியனைக் கொடுங்கள்
பனியில் நனைந்து பசுந்தளிர்மேல் நின்று நடுங்கும்
ஒரு துளிச் சூரியனை.

பரிணாமம்

இலை மறைவில் கரு
கூட்டுக்குள் புழு
உட்கார்ந்தால் பூச்சி
பறந்தால் பூ

லௌகீகம்

விரல் பத்து
விழி இரண்டு.
மனம் ஒன்று.
மனமோடும் வழி
தொடர விழி
தவிக்கும் விரல்
அறியும் நிஜம்.

ஸ்பரிசம்

தூரம் சுருண்டு ஒடுங்கும்
படிசுக் கட்டிக்குள் பயணிக்கும் ஒளி,
ஒரு பெருவெளிப் பிரவாகம்!
முடிவின்றி ஊடுருவும்
மின்னல் கதிர்!
ஓராயிரம் புறங்களில்
முட்டிச் சிதறுகிறது.
கசிகிறது
அறைக்குள் நிறைகிறது
வண்ணம் சிதற,
வில்லென வளைகிறது.
சுவர்களில் அலை ததும்பும்
அதன் உள்பிரகாசம்.
ஒரு துளி ஜடத்துக்குள்
கொப்பளிப்பதென்ன சலனம்?
ஒரு துளி மண்ணை
ஒளியாக்குவதெந்த ஸ்பரிசம்?

(காலச்சுவடு ஆண்டுமலர் – 1991)

முந்தைய கட்டுரைமன்னர்மன்னன்
அடுத்த கட்டுரைமுடிவிலா முகங்கள்