மருத்துவ அறிமுகம் ஏன்?

ஏப்ரல் 5,6 மற்றும் 7 ஆம் தேதிகளில் (வெள்ளி சனி ஞாயிறு)

நவீன மருத்துவம், அறிமுக முகாம்.

அன்புள்ள ஜெ

நவீன மருத்துவ முகாம் அறிவிப்பைப் படித்தேன். பொதுவாக நீங்கள் ஒருங்கிணைக்கும் பயிற்சிகளெல்லாமே அறிவுச்செயல்பாடு சார்ந்தவையாக உள்ளன. மருத்துவ முகாம் அப்படி தோன்றவில்லை. அது வித்தியாசமாக இருக்கிறது.

அருண் பிரகாஷ்

அன்புள்ள அருண்,

இது மருத்துவ முகாம் அல்ல.நவீன மருத்துவத்தின் அடிப்படைகளை அறிமுகம் செய்வதற்கான ஓர் அறிவுப்பயிற்சி மட்டுமே.

இந்த முகாம் அறிவிக்கப்பட்டபின் பத்து பேருக்குள்தான் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். தொடர்ச்சியாக உடல், நோய், உணவு என பேசிக்கொண்டிருக்கும் நம் நண்பர்கள் பலர்கூட ஆர்வம் காட்டவில்லை. அவர்களுக்கு உடல்பற்றி ஒன்றும் தெரியாது என்பதே என் மதிப்பீடு. அறியாமை அளிக்கும் தன்னம்பிகையே அவர்களின் பலம்.

பல ஆயிரம் ரூபாய் ஊதியம் பெற்றுக்கொண்டு இப்பயிற்சியை அளிக்கும் தகுதியும் அனுபவம்கொண்ட மருத்துவப்பேராசிரியர் ஒருவரின் வகுப்பு இது. அவருடன் ஒரு சந்திப்புக்கே சாதாரணமாக இதைவிட செலவாகும்.

ஆனால் ஒரு ‘ஹீலர்’ தன் டுபாக்கூர் மருத்துவத்தை அறிமுகம் செய்வதாக அறிவித்திருந்தால் குறைந்தது இருநூறு பேர் வந்து முண்டியடித்திருப்பார்கள். நாடெங்கும் அதையே காண்கிறோம். இதுவே நம் மனநிலை. இந்த மனநிலை இங்கிருப்பதனாலேயே இந்த வகுப்பு தேவையாகிறது. இதை இவர்கள் புறக்கணித்தாலும் முன்வைத்தாகவேண்டியிருக்கிறது. இதை நான் எதிர்பார்த்திருந்தேன். இந்தப் பொதுமனநிலைக்கு எதிராகவே என் பயணம்.

ஏன் மக்கள் போலிமருத்துவங்களில் ஈடுபாடு கொள்கிறார்கள்? அவை மிக எளிமையானவை என்பதே காரணம். அத்துடன் அவற்றில் இஷ்டத்துக்கு கற்பனையை தட்டிவிட இடமிருக்கிறது. ஆகவே ஒரு வம்பாகப் பேசிக்கொண்டிருக்க உகந்தவை அவை. உண்மையான மருத்துவத்தின் அடிப்படைகள் கொஞ்சம் முயன்று கற்றுக்கொள்ளப்பட வேண்டியவை. நம்மவர்க்கு அதற்கு மூளைச்சோம்பல். ஆனால் நோய் என்றால் பெரும்பாலானவர்கள் நவீன மருத்துவத்தையே நாடுவார்கள்.

ஏன் நவீன மருத்துவ அடிப்படைகளைக் எகற்றுக்கொள்ள வேண்டும்? ஓர் எளிய மனிதர்கூட மானுட  உடல் இயங்கும்முறை, உறுப்புகள், நோய்கள், மருத்துகள் பற்றிய அறிமுகம் கொண்டிருக்கவேண்டும். எப்போது எப்படி தேவைப்படுமென சொல்லமுடியாது. முழுமையான அறியாமையால் வாழ்க்கையை இழப்பவர்கள் பல லட்சம் பேர்.

ஓர் அறிவியக்கச் செயல்பாட்டாளருக்கு உடலை அறிதலென்பது ஒரு மிகப்பெரிய தரிசனம். வாழ்க்கையின் ஒரு பெரும் மறைபகுதியை அறிவதுபோல. அவருடைய மொத்தப்பார்வையுமே மாறிவிடும்.

மேலைநாடுகளில் கல்விமுறையே அந்த அறிமுகத்தை அளிக்கிறது. இங்கே அந்த அறிதலே இல்லை. இதழ்களில் மருத்துவ ஆலோசனை என்றபேரில் உதிரிச் செய்திகள் கிடைக்கின்றன. அவை முழுக்கப் பயனுள்ளவை அல்ல. ஓர் ஒட்டுமொத்தமான சித்திரமே தேவையானது.

அவற்றைக் கற்பிக்க ஓர் அமைப்பும் வகுப்பும் இருக்கவேண்டும் என்பதே என் எண்ணம். அக்கல்வி கிடைக்கவில்லை என இருக்கலாகாது. உண்மை, நம் சூழலில் உண்மையான எவற்றின்மேலும் ஓருவகை விலக்கம் உள்ளது. ஆனால் என் வழி என்பது எதையும் செய்துபார்ப்பதுதான்

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசை ஏன் வாசிக்கவேண்டும்? நிர்மல்
அடுத்த கட்டுரைகானுறை கொற்றவை – கடலூர் சீனு