அன்பெனும் வெளி, கடிதம்

ரஃபீக் இஸ்மாயிலின் ‘அன்பெனும் பெருவெளி’ ஆவணப்படம் நீங்கள் குறிப்பிட்டது போல மிகச் சிறந்த இசை மற்றும் கலை அனுபவம். வள்ளலாரைப்பற்றித் தெரிந்து கொள்ள இந்த ஒரு ஆவணப்படம் பார்த்தால் போதும். மண்பாண்டம் செய்வதுபோல இசைக்குழைவில் பாடல்கள் உருப்பெற்றுவருவதைப் பார்ப்பது பேரனுபம். பாடல்வாரியான என்னுடைய மனப்பதிவுகள் கீழே.

அருட்பெருஞ்சோதி – என்னியல் உடம்பிலே, இதயத்திலே தயவிலே என்ற முதலிரண்டு சரணத்தின் முடிவிலும் ‘ததும்பி நிறைகின்ற அமுதே’ என்று ஸ்வரப்படிகளில்  சஞ்சய் தடதடத்து இறங்கிச்செல்வது அழகு. ‘இயற்குணம் அதனிலே’ என்ற மூன்றாவது சரணத்திலும் அதை எதிர்பார்த்திருக்க அதையே  இசையமைப்பாளர் இசைக்கருவிகளில் ஒலித்து ஏமாற்றுவது வேறொரு அழகு.

இதுநல்லதருணம் – மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது,வருணாசிரமமெனும் மயக்கமும் சாய்ந்தது, கொதித்த வேதாகம கூச்சலும் அடங்கிற்று.என்று இன்றைய தி.மு.க அரசின் ‘தீம் சாங்’ போல இருந்தது. கர்நாடகஇசை சாயல் சற்றும் இல்லாத அசல் ‘ராக்’. காணொளியில் ஒருவர் ஆடுவதுபோல் நடிக்க, நாலு பேர் நிஜமாகவே ஆடுகிறார்கள். அந்த இளைஞர்களின் ஆட்டம் நமக்கு உடம்பு வலிக்கிறது.

அஞ்சாதே நெஞ்சே – மரபிசையும் மேலைஇசையும் பின்னிப்பின்னிச் செல்லும் ‘ஃப்யூஷன்’ இசைக்கு சரியான உதாரணம். ‘வஞ்சமிலார் நாம்’ ‘மண்ணில் நமையாண்ட’ என்று கர்நாடக இசையில் ஒலிக்கத் தொடங்கும் பாடல் ‘திருவம்பலத்திருக்கின்றான்’ என்ற அடியில் ‘ராக்’குக்குள் நுழைகிறது. திரும்ப ‘அருட்பெருஞ்சோதி’ என்று தொடங்கும் சரணத்தில் கர்நாடக இசையில் ஒலித்து ‘அஞ்சாதே நெஞ்சே’ என்று ராக்கில் பிரவேசிக்கிறது.

ஒருமையுடன் – ‘பெரிதினும் பெரிது கேள்’ என்று பாரதி சொன்னதை முன்னுணர்ந்து கேட்டிருக்கிறார் வள்ளலார். ‘தருமமிகு சென்னை’ யில் என்கிறார். பெருமையாக இருக்கிறது. ராக் இசையில் ஒலிக்கும் கர்நாடகஇசைப்பாடல். சந்நியாசிகளுக்கே இவ்வளவு ‘வேண்டும்’கள். ‘கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தர நீ கடவாயே!’ என்று இறைவனுக்கே சாபமிட்ட ‘அல்பாயுசு’ பாரதியும் நினைவுக்கு வருகிறார்.

வெண்ணிலா – ஆன்மீக சாதகன் நிறைந்த போதையில் பாடியதுபோல இருந்தது.  ‘யாரும் அறியாமல் இங்கே  அருளாளர் வருவாரோ சொல்லாய் வெண்ணிலாவே, ‘ஆதி அந்தம் என்றுரைத்தால் அந்த ஆதி அந்தம் ஆவதென்ன வெண்ணிலாவே’ என்று கேள்விகள். ‘சச்சிதானந்தக் கடலிலே நான் தாண்டிவிழவேண்டுகின்றேன்  வெண்ணிலாவே’, ‘ராப்பகல் இல்லாவிடத்தே நான் இருக்க எண்ணி வாடுகின்றேன் வெண்ணிலாவே’ என விருப்பங்கள். ‘நான் அதுவாகி நிற்கும் வண்ணம் ஒரு ஞான நெறி சொல்லு கண்டாய் வெண்ணிலாவே’ என்று சொல்லிச் சிரிக்கிறார் சஞ்சய். இன்னொரு ஏசுகிறிஸ்துவாகும் ஆசை வள்ளலாருக்கும் இருந்திருக்கிறது.  சஞ்சயின் சிரிப்பு நமக்கும் தொற்றிக்கொள்கிறது. அசல் ‘ராக்’. 1940,50களில் பழைய ஆங்கிலப்படங்களில் கேட்ட இசையை நினைவு படுத்துகிறது. ‘யார் அந்த நிலவு’ என்னும் டி எம்.எஸ் பாடிய பாடலும் நினைவுக்கு வருகிறது. ஆனால் இது ஆன்மீக போதை. மொத்த ஆல்பத்திலும் சஞ்சய் வேறொருவராக ஒலிக்கும் பாடல் இதுவே.

கல்லார்க்கும் – பாடல் முழுதும் ஒலிக்கும் ‘ஓ..ஒ..ஒ..ஒ.. ஓ.. ஓ..’ சாம கானத்தை நினைவு படுத்துகிறது. வைக்கம் சிவன் கோயிலில் சுவாமிக்கு மட்டும் கேட்பதுபோல் இடைக்கா ஒலித்துக்கொண்டு பாடுவது நினைவுக்கு வந்தது. கடைசியில் அந்த நீண்ட ‘ஆ….’ சிதம்பரம் ஜெயராமனை நினைவு படுத்துகிறது. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை இது போலத்தான் எல்லாப்பாடல்களையும் ஒருமாதிரி ‘ஓங்கி’ச் சொல்வாராம். ஆனால் இது பாடலுக்கும் விருத்தத்துக்கும் இடைப்பட்ட ஒன்று போல ஒலிக்கிறது. சரியான தாளக்கட்டில் அந்த வரிகளைத் திரும்பிச் சொல்வதே கூட கடினமாக இருக்கிறது. கொந்தளித்துக் குமுறும் மனதை அமைதிப்படுத்த இந்த ஒரு பாடல் போதும்.

மொத்தத்தில் இசை ரசிகர்கள் கேட்டு, பாடித் திளைக்க ஒரு ஆல்பம். காணொளியில் நாம் பார்ப்பது நாலைந்து பேரைத்தான். ஆனால் ‘டைட்டில் கார்டி’ல் நூறு பெயராவது காட்டப்படுகிறது. இந்த சிலிர்க்கச்செய்யும் ஒலித்துல்லியம் மற்றும் படைப்பின் செய்நேர்த்தியின் பின்னால்தான் எவ்வளவு உழைப்பு இருந்திருக்கிறது? ஷான் ரோல்டனையும், சஞ்சய்யையும் மற்றும் இசைக்கலைஞர்களையும்  பாராட்ட வார்த்தைகள் இல்லை. தமிழ் ‘ராக்’. Tamil Rocks என்றும் கூறலாம்.

சஞ்சய் சுப்பிரமணியன் சினிமாவில் பாடுகிறார், இப்போது தமிழ் ராக். ஒரு ‘ஜுகல் பந்தி’ காணொளியில் க்வாலி பாடகரோடு பாடிக்கொண்டிருந்தார். நிறைய சோதனை முயற்சிகளில் ஈடுபடுகிறாற்போலத் தெரிகிறது. (லக்கிமேன் யூ டியூப்)

எதுதான் இங்க சந்தோசம் – ‘லக்கி மேன்’ படத்தில் சஞ்சய் பாடிய முதல் சினிமாப்பாடல்

எந்த முன்னறிவிப்பும் செய்யாமல் ‘ஒருமையுடன்’ பாடலை கர்நாடக சங்கீதம் அறிந்த என் எழுபத்தெட்டு வயதான அம்மாவின் காதில் ஒலிக்கச் செய்தேன். முழுப்பாடலையும் கண்களில் நீர் வழியைக்கேட்டவர் ‘காப்பி அப்பிடியே உருக்கிரும். சஞ்சய்…. கேட்கணுமா..அருமை அருமை. ஆனா அந்த ‘மியூசிக்’ தான் எடஞ்சலா இருந்தது’ என்றார். சிரித்துக்கொண்டேன். இது மரபான காதுகளுக்கு அல்ல?

காணொளியில் திரு.கரு.ஆறுமுகத்தமிழன் பேசியதைக் கேட்டபோது ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்’ என்னும் குறள் நினைவுக்கு வந்தது. கடவுள் மறுப்புக்கு வெகு அருகே சென்ற நாராயணகுரு(1856-1928)வும் நினைவுக்கு வந்தார். ஈ.வே.ரா(1879-1973) பெரியாரும் நினைவுக்கு வந்தார். இன்னும் சிறிது  காலம் வாழ்ந்திருந்தால் இராமலிங்க அடிகள் (1823-74) என்ன மாதிரியான பரிணாமம் அடைந்திருப்பார்?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

முந்தைய கட்டுரைநாகங்கள் முதல் நாகங்கள் வரை
அடுத்த கட்டுரைமதுரம் – சுசித்ரா