ஒரு புத்தகத்தின் வலிமையை சோதித்துப்பார்க்க வேண்டுமா? ஒரு புத்தகத்தால் ஒரு மனிதனை என்னதான் செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு பதில் வேண்டுமா? ஆன்ம விசாரணையைத்துவங்க ஒரு தூண்டுகோல் வேண்டுமா?
ஜெயமோகனின் “அறம்” படியுங்கள்.
“அறம்” தந்த அனுபத்தை என்போன்ற எளியவர்கள், சொற்களால் வடித்துவிட முடியாது. மலைப்பாம்பின் ஒளிவீசும் கண்களால் வசியம் செய்யப்பட்டு தன்னிலை இழந்திருக்கும் நிலையில் அந்த மலைப்பாம்பு மெல்ல மெல்ல ஒருவனை விழுங்குவதுபோல் “அறம்” நம்மை விழுங்கி விடுகிறது. நமக்கு மூச்சு திணறுகிறது. பிராண வாயுவிற்காக அல்லாடுகிறோம். அது தன் உடலை வளைத்து நம்மை முறிக்கிறது. நாம் முறிந்து போகிறோம். குழைந்து போகிறோம். கரைந்து போகிறோம். முழுமையாக அறத்தால் செரிக்கப்படுகிறோம். பின் அதனோடு ஒன்றிப்போகிறோம்.
இலட்சியவாதிகளை திரையிலும் கற்பனையிலும் காவியங்களிலும் மட்டுமே பார்த்துப்பழகிய நாம், நாம் வாழும் காலத்தில் நம்மோடு பயணித்த இலட்சியவாதிகளைப் பற்றிய அறிதல் இல்லாமலிருந்திருக்கிறோம். ஜெயமோகன் போன்று படைப்பாளி ஒருவர்தான் நமக்கு யானை டாக்டரையும் பூமேடை இராமையாவையும் டாக்டர் தியோடர் சாமர்வெல்லையும் காரி டேவிசையும் அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது. அவ்வகையில் அவர் ஒரு உன்னதமான படைப்பைக் கொடுத்திருக்கிறார். அவரே கூறியதுபோல் இந்துவில் ஒரு சிறிய இரங்கல் செய்தியாக டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் மறைவு வெளியிடப்பட்டிருந்த நிலையில் “அறம்” புத்தகம் வெளியானபின் பள்ளிக்குழந்தைகளின் பாடப்புத்தகத்தில் அவர் இடம் பெற்றார். கடைசிவரை தன் தியாகங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெறாத தன்னலமற்ற தியாகி பூமேடை இராமையாவுக்கு இப்புத்தகம் நீதி செய்திருக்கிறது. யானை டாக்டரோ இராமையாவோ இந்த அங்கீகாரங்களை எதிர்பார்த்தவர்களல்லர் என்றபோதிலும் அவர்களைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. அவர்கள் வாழ்க்கை நடத்தவில்லை, வேள்வி நடத்தியிருக்கிறார்கள்.
புகழ்பெற்ற எழுத்தாளர்களின் உள்ளங்களில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் சோகங்களையும், வலிகளையும் நமக்கு ஜெயமோகன் காட்டுகிறார். கோமல் சுவாமிநாதன், தி.ஜானகிராமன் (இராமன்), என்.வி.வெங்கட்ராம் (அறம் கதையின் பெரியவர்), இராஜமார்த்தாண்டன் (இராஜம்) ஆகியோரின் வலிகளையும் வேதனைகளையும் நமக்குக் காட்டுகிறார் ஜெயமோகன். (சில கதாபாத்திரங்களின் உண்மைப்பெயர்களை ஜெயமோகன் அவர்கள் குறிப்பிடவில்லை. ஆனால் அவர்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என நினைக்கிறேன். அதனாலேயே அவர்களை வெளிப்படுத்துகிறேன். உண்மைக்கதாபாத்திரங்களைத் தெரிந்துகொள்ள உதவிய நண்பர் இராஜாமணி அவர்களுக்கு நன்றி). இவர்களைப் படிக்கும்போது, “ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான். தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்” எனும் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. சாதிக்கொடுமைகளையும் பசிப்பிணியின் கோரமுகத்தையும் “வணங்கான்”, “நூறு நாற்காலிகள்”, ‘’சோற்றுக்கணக்கு” மற்றும், “ஓலைச்சிலுவை” கதைகளின் வாயிலாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஜெயமோகன்.
ஒவ்வொரு கதையும் ஒரு ஆத்ம தரிசனமாக இருக்கின்றன. மனிதனுடைய கீழ்மைகளை வெளிப்படுத்துகின்றன. அதே சமயத்தில் அவனது மேன்மைகளையும் வெளிப்படுத்துகின்றன.
இக்கதைகள் என்னைப் பலமுறை அழவைத்தன. பல இடங்களில் உளம் நெகிழ்ந்து போனேன். மனமிழந்து போனேன். அடித்து நொறுக்கப்பட்டேன். குற்றஉணர்ச்சிக்கு ஆளானேன். கொல்லன் உலைக்களத்தில் அடிபட்டேன். ஆற்றுப்பெருவெள்ளத்தில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டேன். இதயத்தில் இமயம் ஏற்றிவைக்கப்பட்டதாக உணர்ந்தேன். சிந்தனைச்சிறைக்குள் சிக்கிக்கிடந்தேன். வாகனத்தில் செல்லும்போது அடிக்கடி வழிமாறிச் சென்றேன். பின் வாழ்வில் ஒரு வெறுமையையும் அர்த்தமற்ற தன்மையையும் உணர்ந்தேன். என் அகத்தில் ஒரு மாற்றம் தெரிவதை உணர்ந்தேன். அறம் படிக்கும்முன் இருந்த நான் அறம் படித்தபின் இருக்கும் நானல்ல. புது மனிதனாக உணர்ந்தேன். என் இலட்சியங்கள் மேலும் வலுப்பட்டன. சத்தியத்தின் மீதிருந்த பற்றுதல் இன்னும் அதிகமாகியது. தவறுகளை சகித்துக்கொள்வது முன்பிருந்ததை விடக்கடினமாக ஆகிப்போனது. இத்தகைய மாற்றங்களை வாசகனிடம் ஏற்படுத்துவது ஒரு எழுத்தாளனின் மிகப்பெரிய வெற்றியல்லவா! வென்றிருக்கிறார் திரு. ஜெயமோகன் அவர்கள். தன்னுடைய வலிமையான எழுத்துக்களால்.
நிச்சயம் படியுங்கள். உங்கள் கருத்துகளைப்பகிருங்கள்.
குறிப்பு:என்னுடைய கருத்துகள் உங்களுக்குள் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அவரவர்களின் மனங்களின் தன்மை, வயது, வாழ்வின் அனுபவங்கள், கதைகளுக்கும் தன் வாழ்வனுபத்திற்கும் உள்ள தொடர்பு போன்ற காரணிகளைப் பொருத்து ஒரு கதை அவரின் அந்தராத்மாவைத் தொடுவதும், தொடும் விதமும் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றத்தையும் தரலாம். எனவே எதிர்பார்ப்புகளின்றிப் படியுங்கள். படித்ததைப் பகிருங்கள்.
—வ. ரமணன்