காடு ஒரு பதிவு

 

காடு வாங்க

காடு மின்னூல் வாங்க

கிரிதரனுக்கு காடு என்பது முற்றிலும் பரிட்சையமில்லாத ஒன்று, முதன்முதலாக மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் நுழைந்து அதன் பிரம்மாண்டத்தை வியக்க ஆரம்பித்தவன் இப்படித்தான் கூறிக்கொள்கிறான்.

”என்ன மரம் என்று தெரியவில்லை, உதிர்ந்துகிடந்த இலைகள் நல்ல சிவப்பு நிறம். ஓரிரு இலைகளைப் பொறுக்கிக்கொண்டு மரத்தின் வேர்க் குவையருகே சென்று, இரு வேர்ப் படைப்புகள் நடுவே அமர்ந்தேன். ராட்சத வடிவம் கொண்ட அம்மாவின் மடியில் இரு கால்களுக்கும் நடுவே அமர்ந்திருப்பது போல உணர்ந்தேன். அந்த காய்ந்த இலைகளின் செம்புநிறம் என்னை மனம் கிளர வைத்தது”

புன்னகைத்தபடி சுற்றும் முற்றும் பார்த்தவன், புல் தண்டைப் பிய்த்து இலைகளைத் தைத்து ஒரு கிரீடம் செய்து அதை தலையில் அணிந்துகொள்கிறான். ஒரு செம்பழுப்பு நிற இறகை தனது கிரீடத்தில் வைத்துக்கொள்கிறான்.

அங்கிருந்துதான் காடு தன் இருகரங்களையும் விரித்து நம்மை வாரிக்கொள்கிறது.

ஒரு படைப்பு, அதை வாசிப்பவனுக்குக் கிளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். பதற்றத்தைக் கொடுத்து பின் ஆசுவாசப்படுத்திட வேண்டும். அவ்வப்போது புன்னகைக்க அனுமதிப்பது போலவே கொஞ்சம் கனத்த நிமிடங்களையும் வழங்கிட வேண்டும்.

ஜெயமோகனின் ‘காடு’ இவற்றை நிச்சயமாய் நிகழ்த்தியிருக்கின்றது.

நிகழ்காலத்திற்கும் கடந்தகாலத்திற்கும் நடுவே ஒரு காடு, தனக்குள் எத்தனை கதைகளை ஒளித்துவைத்திருக்கிறது என்பதை ரொம்பவே அழகான வர்ணனைகளால் விவரித்திருக்கிறார் ஜெமோ.

தாய்மாமனுக்கு உதவியாய் கான்ட்ராக்ட் வேலைக்கென காட்டிற்குள் தங்கும் கிரி, மெதுமெதுவாய் அந்த வனத்தின் பச்சை ஒளியிடம் தனனை ஒப்புக்கொடுப்பதுதான் கரு.

அதோடு..

மலையத்தியான ‘நீலி’ என்கிற யட்சியிடமும். பெண் வேறு, காடு வேறு என்று யார் சொன்னது? அத்தனை புதிர்களையும் அத்தனை அமானுஷ்யங்களையும் தனக்குள் ஒளித்து வைத்திருப்பவர்களை என்ன பெயர் சொல்லி அழைத்தால் என்ன?!

”ஒரே ஒரு கணம் என்னை ஏறிட்டுவிட்டு என்னைச் சற்றும் பொருட்படுத்தாமல் காட்டு மிருகம் போன்ற லாவகத்துடன் மரங்களின் இலையடர்வுக்குள் மறைந்தாள். ஓடை நீரில் படலமாக பூக்கள் மிதந்து சுழித்துச் சென்றன”

நீலி – கருமையின் மெருகு கூடிய பேரழகி. அறிமுகக் காட்சியில் ஈரம் சொட்ட நடந்துசென்ற நீலியை நீங்கள் பார்த்திருக்கவேண்டும்.

”அவள் முகம் மனதைவிட்டு விலகவேயில்லை. தாங்க முடியாது என்று ஒரு கணம் மனம் பொங்கியது. விடுவிடுவென காடு நோக்கி நடந்தேன். அவளுடைய பாடல் கேட்ட வாதா மரத்தடி. அவளுடைய பாதம் பட்டிருக்கக்கூடிய சருகுப் பொத்தைகள். அவள் தொட்டு வருடியிருக்கக்கூடிய காட்டின் இலைகள். அவள் நடந்த பாறை. குளித்த அருவி. அந்தப் பாறைமீது ஏறி அமர்ந்துகொண்டேன். வெயிலின் நிறம் நன்கு சிவந்துவிட்டது. அந்தப் பகுதி முழுக்க அவளிருந்தாள். அவள் நின்ற இடத்தில் அந்தக் கண்களின் பார்வையும் புன்னகையும் காற்றுக்கு அப்பால் அப்படியே நின்றிருந்தன. சில நிமிடங்கள் எனக்குத் தவிப்பாக இருந்தது. உட்கார முடியவில்லை. அவள்.. அவள்.. அவள்..”

மனம் கொள்ளும் பித்து எதுவரை செல்லும்? காடு முழுக்க அவளைத் தேடி அலைகிறான். அவளது ஒற்றைப் பார்வைக்காக, ஒற்றைப் புன்னகைக்காக, ஒரு சொல்லுக்காக அவளது குடிலுக்கு முன்பு நாட்கணக்காக காத்துக்கிடக்கிறான்.

காடு மெல்ல அவனுக்கு செவி சாயக்கின்றது.மலையாள / வட்டாரத் தமிழ் ஆரம்பத்தில் பிடிகொடுக்காமல் பிறகு மெதுமெதுவாய் மொழியின் லாவகம் புரிய ஆரம்பிக்கும்போது நாம் கிரிதரனாக காட்டின் மத்தியில் நின்றுகொண்டிருக்கிறோம்.

இடம்பெறும் அத்தனை கதாப்பாத்திரமுமே அழகாய் அமைந்திருப்பதுதான் படைப்பின் கச்சிதம். இயற்கையாகட்டும், மனிதர்களாகட்டும்.. இருந்ததிலிருந்து இல்லாமல் போகும்வரையிலான நம் மன உணர்வுகளை எழுத்தாய் வாசிக்கும்போது கொஞ்சம் அதிரத்தான் செய்கிறது.

இந்திரா ராஜமாணிக்கம்

சோலையின் எழில்

முந்தைய கட்டுரைஅயல்நிலத்தில் இருந்து ஒரு வாசகி
அடுத்த கட்டுரைவைணவ இலக்கியம் – கடிதம்