கொற்றவை, தமிழ்நேயம்- ஒரு பதிவு

தமிழ்நேயம்-31.’கொற்றவை’ சிறப்பிதழ்

கொற்றவை மின்னூல் வாங்க

கொற்றவை வாங்க


கொற்றவையும் தமிழ்த்தேசியமும்

மாமயிடன் செற்றிகந்தாள் 

ஜெயமோகன் கொற்றவை – படைப்பும் பார்வையும் – தொகுப்பாசிரியர் ஞானி – ஒரு பார்வை – பொன். குமார்

சிலப்பதிகாரம் நாடறிந்த கதை. இளங்கோ அடிகள் எழுதியது. கோவலன் – கண்ணகியை மையப்படுத்தியது. ஆனால் கண்ணகியே அதிகம் பேசப்பட்டு வருகிறாள். காரணம் நீதிக்காக போராடிய பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருப்பதேயாகும். இக்கதையை சமகாலத்திற்கு ஏற்ப மையத்தை மாற்றாமல் சில மாற்றங்களோடு கவித்துவமான மொழியில் ‘ கொற்றவை ‘ என்னும் பெயரில் ஒரு புதுக்காப்பியத்தைத் தந்துள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் இலக்கிய பரப்பில் இயங்கி விஷ்னுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், காடு முதலிய படைப்புகளைத் தந்து முன்னணியில் இருப்பவர்.

” மலையாளக் கவிஞர் உண்ணி ராஜா கதகளிக்குரிய ஆட்டக்கதை வடிவில் சிலப்பதிகாரக் கதையை எழுத அந்நூலுக்கு அணிந்துரை எழுதும் போது கொற்றவைக்குரிய கரு முகிழ்ந்தததாகவும் அதை கோவை ஞானியுடன் பல கோணங்களில் விவாதித்ததாவும் பின் நான்காண்டுகள் முயன்று ஆக்கிய பனுவலே ‘ கொற்றவை’ ” என ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.

” சிலம்பினுள்ளும் பேசப்படாத மெளனங்களை உடைத்துப் பார்ப்பதோடு சிலம்புக்கு முன்னரே குமரிக்கண்ட காலம் தொடங்கி தமிழ் வாழ்வினுள் தோன்றி பின்னர் தனக்குள் இறுகிய நூற்றுக்கணக்கான தொன்மங்களை உடைத்துப் பார்க்கும் அறிவாற்றலும் கற்பனை வளமும் புனைவுத் திறனும் கொண்டு தமிழ்மொழியின் பேரழகுகள் அனைத்தும் கொண்டதோர் உச்ச அளவிலான ஒரு படைப்பாக ஒரு செவ்வியல் நாவலாக உருவாகி இருக்கிறது ‘ கொற்றவை ‘ என பனுவல் குறித்த தன் கருத்தைக் கூறியுள்ளார் கோவை ஞானி.

கொற்றவை மீது பெரு விருப்பம் கொண்ட கோவை ஞானியே ஐந்து கட்டுரையாளர்களிடம் இருந்து கொற்றவை மீதான ஆய்வறிக்கைகளைப் பெற்று ‘ ஜெயமோகன் ‘ கொற்றவை படைப்பும் பார்வையும் ‘ என்னும் இத்தொகுப்பை அளித்துள்ளார்.

முதல் கட்டுரை ” கொற்றவை – படைப்புத் தடத்தில் ஒரு பயணம் “. கட்டுரையாளர் முனைவர் ஜெ. ராமதா‌ஸ். நீர், காற்று, நிலம், எரி, வான் என்று ஐந்து தலைப்பின் கீழ் ஆய்வுச் செய்துள்ளார். கொற்றவைக் கதையை முழுமையாகக் கூறி முடிவில் கண்ணகி வரலாறு காலத்திற்கு ஏற்ப எழுதப்பட்டுள்ளது என்றும் சாக்கிய, யவண, சீன, சமண மெய்யியல் கருத்துக்கள் நூல் முழுவதும் விரவிக்கிடக்கின்றன என்றும் தரவுகள் முழுமையாக தரப்பட்டுள்ளன என்றும் கூடுமான வரையில் பிறமொழிச் சொற்களை கலவாமலுள்ளது என்றும் தன் கருத்துக்களைக் கூறியுள்ளார். பாதுகாக்கப்பட வேண்டிய நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ கொற்றவை – பெண்ணிய நோக்கில் தமிழ்ச் சமூக வரலாற்றின் மறுவாசிப்பு ‘ என்னும் தலைப்பில் இரண்டாவதான கட்டுரையை எழுதியவர் முனைவர் அருள்மிகு பிலிப் சுதாகர். கொற்றவையை பெண் தெய்வமாக, தாய் வழி சமூகமாக ஆணாதிக்கத்திற்கு எதிரான ஒரு போராளியாக படைத்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். தொன்மத்தோடு தொடர்பு படுத்தி பேசுகிறார். நெருப்பாற்றில் நீந்தி மாயைகளைத் தகர்த்து வாழும் பெண்களின் கதை என்கிறார். தமிழ்ச் சமூகத்தின் நெடிய வரலாற்றை பெண்ணிய நோக்கில் மறுவாசிப்பு செய்கிறது என்று கருத்துரைத்து அதற்கான தரவுகளை நூல்களில் திரட்டித் தந்து மெய்ப்பித்துள்ளார். முடிவற்ற மாற்றங்களின் தோற்றமாகவும் விளங்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சு. வேணுகோபால் ‘ அன்னையின் கரங்களில் துலங்கும் தமிழர் மானுடப்பரப்பு கொற்றவை ‘ என்னும் தலைப்பில் ஆய்வுரைத்துள்ளார். இது மூன்றாம் கட்டுரை. ‘ கொற்றவை ‘ க்குள் நுழையுமுன் திராவிட எழுத்தாளர்களைச் சாடியுள்ளார்.’ தமிழர் பண்பாட்டின் மாபெரும் சமூக வரலாற்றை இழக்க விரும்பாத ஒரு படைப்பாளியின் ஆவேசம்தான் கொற்றவை ‘ என்று படைப்பாளியான ஜெயமோகனை பாராட்டுவதுடன் தவறிவிட்ட எழுத்தாளர்களின் மீதான விமர்சனத்தையும் வைத்துள்ளார். கொற்றவையை ஒரு நாவலாக பார்க்கக் கூடாது என்று அறிவுரைக்கிறார். நாவலாசிரியர், காப்பியரசர் என இரண்டு நிலைகளில் இருந்து எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார். கடவுள் மறுப்பாளர் கருணாநிதிக்குள்ளும் கொற்றவை ஒரு படிமமாக படிந்துள்ளது என்றும் குறிப்பிடுகிறார்.

‘ கொற்றவையையும் கண்ணகியையும் ‘ ஒப்பிட்டுள்ளார். இளங்கோ குறிப்பிடும் பார்ப்பனரை ஜெயமோகன் மறுத்துள்ளார் என்பதையும் எடுத்துரைக்கிறார். இதையே முடிவிலும் உறுதிப்படுத்துகிறார். ‘ கொற்றவை ‘ என்னும் படைப்பை விட படைத்த படைப்பாளர் ஜெயமோகனையே அதிகம் பேசியுள்ளார். அதுவும் பாராட்டியுள்ளார். மிக நீண்டதான இந்த ஆய்வுரையில் ” கம்ப ராமாயணத்தை தொன்னூற்றைந்து சதவிகித இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் படித்திருக்கவில்லை ” என்று கூறியிருப்பது விவாதத்திற்குரியது

‘ கொற்றவை – ஒரு நயவுரை ‘ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியவர் மலர்விழி மைந்தன். சிறியதான இக்கட்டுரை ஒரு நெடும்பாட்டைப் பற்றி விவரிக்கிறது.” ஓயாத காதல் கொண்ட தமிழ் நெஞ்சம் பழம்பாட்டுகள் சுவைத்து களியேறிய காமமும் கொண்ட நோக்கு ஒன்றாலேயே ” கொற்றவையை முற்றும் முகர்ந்து வாரிப் பருகிட இயலும் ” என்றவர் கொற்றவையைப் பற்றி குறைவாகவே எழுதியுள்ளது ஒரு குறையாகவேயுள்ளது. ஆயினும் பல பாடல் வரிகளை எடுத்துக்காட்டியுள்ளார்.

‘ சிலப்பதிகாரம் – கொற்றவை இணைவும் விலகலும் ‘ என்பது இறுதிக்கட்டுரை. எழுதியவர் க. அறிவன். ” கடல் கொண்ட குமரி நிலத்தில் தொடங்கி கொடுங்காலூர் மங்கல தேவி என்று அறியப்படும் கொடுங்காலூர் அம்மன் ஈறாக விரிந்துரைக்கப்படும் உரை காப்பியம் ‘ கொற்றவை ‘ என்னும் புதுக்காப்பியம்” என்கிறார். அம்மனின் வடிவமாகவே ‘ கொற்றவை ‘ யை பார்த்துள்ளார், படைத்துள்ளார். இவ்வாறே காப்பியம் எழுதப்பட்டதாகவும் சொல்கிறார். மதத்தை கொற்றவை மறுக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘ சிலப்பதிகாரம் ‘ என்னும் பெருங்காப்பியத்தை ‘ கொற்றவை ‘ என்னும் பெயரில் சில திருத்தங்களுடன் தனக்கேயுரிய மொழியில் எழுதியுள்ளார் ஜெயமோகன். தன் முத்திரையை பதித்துள்ளார். சிலப்பதிகாரம் வாசித்தவர்களுக்கு ‘ கொற்றவை ‘ மறுவாசிப்புக்குள்ளாக்கும். ‘ கொற்றவை ‘ யை முதலில் வாசிப்பவர்களுக்கு சிலப்பதிகாரம் வாசிக்கும் ஆவல் ஏற்படும். ‘ கொற்றவை ‘ யை ஐந்து கட்டுரையாளர்களும் வெவ்வேறு கோணத்தில் ஆய்ந்துள்ளனர். தாய்த் தெய்வமாகவே ‘ கொற்றவை ‘ படைக்கப்பட்டுள்ளாள் என கட்டுரைகள் வாயிலாக அறிய முடிகின்றன. ஜெயமோகனின் படைப்பாளுமையை, மொழிப்புலமையை , நிலைப்பாட்டை, போக்கைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு படைப்பை விட படைப்பைப் பற்றிய படைப்புகளை வாசிப்பது படைப்பின் நிறை, குறைகளை உணரச் செய்யும். ஐந்து கட்டுரைகளும் கொற்றவையை விளங்கச் செய்கின்றன. கொற்றவையையும் ஜெயமோகனையும் பேசச் செய்யும் விதமாக தொகுத்தளித்த கோவை ஞானியின் முயற்சியும் பாராட்டுக்குரியது

வெளியீடு

ஞானி கோவை

 

பொன். குமார்

முந்தைய கட்டுரைமஞ்ஞும்மல் பாய்ஸ்- கடிதம்
அடுத்த கட்டுரைகிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்