க.நா.சுவின் கதைகள்

விசிறி, க.நா.சு கதைகள் வாங்க

தமிழ் நவீன இலக்கியத்தின் சிற்பி என ஒரே ஒருவரைச் சொல்ல வேண்டும் என்றால் தாராளமாக க.நா.சுவைச் சொல்லலாம். தனி ஒரு மனிதனாக க.நா.சு நிகழ்த்திய சாதனையே தமிழ் நவீன இலக்கியம் என்றே மதிப்பிடமுடியும். பாரதியில் முளைவிட்டு, மணிக்கொடி தலைமுறையில் வேரூன்றிவிட்டிருந்தாலும் நவீன இலக்கியத்தின் அடிப்படைகள் க.நா.சுவால்தான் நிறுவப்பட்டன. (க.நா.சு. வாசகன் விமர்சகன் எழுத்தாளன்)

.நா.சு தன் ரசனைக் குறிப்புகள், நூல்பட்டியல்கள் வழியாக நவின இலக்கியத்தின் அழகியல் அடிப்படைகளை, வாசிப்பு முறைகளை முன்வைத்துக்கொண்டே இருந்தார். தன் மொழியாக்கங்கள் வழியாக அதன் சாத்தியங்களைக் காட்டிக்கொண்டே இருந்தார். தன் வழி தொடரும் ஒரு தலைமுறைத் தொடர்ச்சியை உருவாக்கி நிலைநாட்டினார்.

.நா.சுவுக்கு தான் ஒரு நவீனக் கவிஞராகவேண்டும் என்னும் எண்ணம் இருந்தது. விதவிதமான நாவல்களை எழுதிப்பார்க்கவேண்டும் என்னும் விருப்பம் இருந்தது. சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவர் தொடாத துறை நாடகம் என்று தோன்றுகிறது. 

இளமையில் சுவாமிமலையில் இருந்து ஒரு தட்டச்சுப்பொறியுடன் கிளம்பி சென்னையில் அறை எடுத்து தங்கி ஆங்கில எழுத்தாளராக ஆகிவிடவேண்டும் என்னும் பெருங்கனவுடன் காலம் கழித்துள்ளார். அவருடைய சர்மாவின் உயில் போன்ற நாவல்களில் உலகப்புகழ்பெற்ற புனைவிலக்கியவாதியாக ஆகிவிடவேண்டும் என்னும் அவருடைய கனவு மறைமுகமாக கதைநாயகனின் கனவாக பதிவாகியுள்ளது.

ஆனால் புனைவிலக்கியவாதியாக க.நா.சுவின் இடம் பலவீனமானது. அதை நிறுவியவர்கள் க.நா.சுவின் வழிவந்தவர்களான சுந்தர ராமசாமி முதல் வேதசகாயகுமார் வரையிலான இலக்கிய விமர்சகர்கள்தான். அதற்கு அவர்கள் கையாண்ட அளவுகோல் க.நா.சு உருவாக்கியதுதான். இதுவே க.நா.சு என்னும் இலக்கிய இயக்கத்தின் நேர்மைக்கும் ஆற்றலுக்கும் சான்று.

.நா.சுவின் ஒருநாள், பொய்த்தேவு என்னும் இரு நாவல்களைத் தவிர எவையுமே புனைவிலக்கியமாக கருத்தில்கொள்ளப்படவேண்டியவை அல்ல என்பதே இலக்கிய அழகியல் விமர்சகர்களின் மதிப்பீடு.

சுந்தர ராமசாமி க.நா.சுவின் கதைகள்மனம் தோயாமல்எழுதப்பட்டவை என மதிப்பிடுகிறார். உயர்ந்த இலக்கிய அழகியல் நம்பிக்கைகள் கொண்டிருந்த க.நா.சு இப்படிப்பட்ட கதைகளை எழுதியமை வியப்புக்குரியது என்றும் சொல்கிறார். .நா.சு வெவ்வேறு காலங்களில் எழுதிய தன்வரலாற்றுக் குறிப்புகளில் இதற்கான பதில்கள் உள்ளன. 

.நா.சு இரண்டு வகையான தூண்டுதல்களில் இருந்தே எழுத ஆரம்பிக்கிறார். முதன்மையானது பணத்தேவைதான். இதழ்களுக்கு கதை அனுப்பி அவை பிரசுரமாகும்போது கிடைக்கும் பணத்திலேயே அவர் வாழ்ந்தார். பிரசுர நிறுவனங்களுக்கு மொழியாக்கங்களை விற்று பணம் பெற்றுக்கொண்டார். ஆகவே பணத்தேவைக்காக அவசரமாக எழுதும் வழக்கம் அவருக்கிருந்தது. 

இரண்டாவதாக, விதவிதமான இலக்கிய உத்திகளைச் சோதனை செய்து பார்க்க வேண்டும் என்னும் நோக்கம் அவருக்கிருந்தது.  அவர் பல இடங்களில் அதைச் சொல்லியிருக்கிறார். இலக்கிய உத்திகளை உத்திகளின் பொருட்டே பயன்படுத்தியமையின் பலவீனங்கள் எல்லாமே வெளிப்படுபவை அவருடைய வாழ்ந்தவர் கெட்டால், அசுரகணம் போன்ற பல நாவல்கள். 

இலக்கிய எழுத்துக்கு அடிப்படையாக அமைபவை ஆசிரியனின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களும், அவற்றில் இருந்து எழும் அவனுக்கான கேள்விகளும் அவனுடைய தேடல்களும்தான். .நா.சுவின் தனிப்பட்ட வாழ்க்கையனுபவங்கள் வெளிப்படும் படைப்புகள் பொய்த்தேவு, ஒருநாள் ஆகிய இரண்டும்தான்.அவற்றில் அவருடைய வாழ்க்கைக்கேள்வியும் உள்ளது. 

பொய்த்தேவு நாவலில் சோமு தேடிச்சென்றுகொண்டே இருக்கும் அந்த மணியோசை க.நா.சு கேட்டதுதான். ஒருநாள் நாவலில் கதைநாயகனான முன்னாள் ராணுவவீரன் சட்டென்று எதற்கும் பொருளில்லை என உணர்ந்து எடுக்கும் முடிவும் க.நா.சுவுடையதுதான். 

(சுந்தர ராமசாமி எழுதியுள்ளார், ‘சர்தான்என்பதுதான் க.நா.சுவுக்கு பிடித்தமான சொல்லாட்சி என்பது. அந்த சரிதான் விடு என்னும் தரிசனமே ஒருநாளை உருவாக்குகிறது)

.நா.சுவின் தனிப்பட்ட வாழ்க்கையின் சாயல் உண்டு என்றாலும் எந்த அடிப்படைக்கேள்வியும் இல்லாமல் வெறுமே ஒரு பகற்கனவை மட்டுமே முன்வைப்பது அவருடைய சர்மாவின் உயில் என்னும் நாவல். (க.நா.சுவின் காணிநிலம்)

.நா.சுவின் எல்லாச் சிறுகதைகளும் உளம்தோயாமல், உத்திநோக்குடன் எழுதப்பட்டவையே. ஆகவேதான் தமிழின் நல்ல சிறுகதைகளின் பட்டியலைப் போடும் க.நா.சு மரபினர்கூட க.நா.சு சிறுகதைகளை அவற்றில் சேர்ப்பதில்லை. .நா.சு. சிறுகதைகள் தொடர்ச்சியாக நூல்களாக தொகுக்கப்படவோ மறுபதிப்பு வெளிவரவோ இல்லை.

அழிசி வெளியீடாக க.நா.சுவின் இதுவரை தொகுக்கப்படாத சிறுகதைகள் விசிறி என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளன. ராணி திலக் தொகுப்பாசிரியர்.   இக்கதைகளை எளிதாக முன்னர் சொன்ன இரண்டு வரிசைகளில் அடக்கிவிடலாம். 

இதிலுள்ள திரும்பி வந்தான், வேலைக்காரன் போன்ற கதைகள் க.நா.சு அந்தந்த இதழ்களின் கோரிக்கைக்கு ஏற்ப அவசரமாக எழுதியவை என வகுக்கலாம். பெரும்பாலும் சாரமற்ற எளிய கருத்து ஒன்றைச்சுற்றி ஒரு கதையை கட்டியிருக்கிறார். கதைமாந்தரின் இயல்பிலொ அல்லது கதைச்சூழலிலோ எந்த விதமான யதார்த்தமும் இல்லை. அதற்காக க.நா.சு மெனக்கெடவுமில்லை. 

உதாரணமாக வேலைக்காரன் கதை. அப்படி ஓர் ஓவியனான வேலைக்காரன், அவனுக்கும் அவனுடைய முதலாளியான ஓவிய விமர்சகருக்குமான உறவு எல்லாம்எந்த ஊரில்?’ என்று கேட்கும்படி அவ்வளவு செயற்கையானவை. இக்கதையை க.நா.சு அவர் வாசித்த ஏதேனும் பிரெஞ்சு கதையின் மறுவடிவமாகக் கூட எழுதியிருக்கலாம்

(அவ்வாறு வாசித்த கதைகளுக்கு எதிர்வினையாக தான் கதைகள் எழுதுவதுண்டு என க.நா.சு சொல்லியிருக்கிறார். புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம் கதையினெ எதிர்வினையே தெய்வஜனனம் என்னும் கதை என்று புதுமைப்பித்தன் கதைகளுக்கான முன்னுரையில்  அவரே சொல்லியிருக்கிறார்]

இந்த வரிசைக் கதைகளில் வினோதவிவாகம் ஓர் அபத்தமான கதை. மிகமிக முதிரா முயற்சி. 1958ல் எழுதப்பட்டது. அன்றே புதுமைப்பித்தனின் சிறுகதைச் சாதனைகள் வெளிவந்துவிட்டன என்னும்போது இக்கதையின் அசட்டுத்தனம் ஒவ்வாமையையே அளிக்கிறது. கல்கி இதழுக்காக க.நா.சு இதை எழுதியிருக்கிறார் என அமைதிகொள்ளவேண்டியதுதான்.

இரண்டாம் வகைக் கதைகளில் எத்தனையோ உலகங்கள் குறிப்பிடத்தக்கது. இந்த அண்டவெளியில் உள்ள வேற்று உலகங்களைப் பற்றிய கற்பனையில் திளைக்கும் சிறுவனாகிய கதைநாயகனின் குடும்பமும் சுற்றமும் வேறு வேறு உலகங்களில் வாழ்வதை இயல்பாகச் சொல்லிச் செல்லும் கதை அதன் பார்வைக்காக அன்றி, அதன் உத்திக்காக ரசிக்கத்தக்கது.

அன்றுமின்றும் தமிழ் வாசகர்கள் ரசிப்பது ஆண்பெண் உறவைப் பற்றிய எளிய புனைவுகளை. தத்துவார்த்தமான தேடல்களோ வாழ்க்கை சார்ந்த நுண்ணிய அவதானிப்புகளோ இல்லாத வாசகர்கள் அத்தகைய கதைகளில் நுட்பங்களைக் கண்டடைந்து கண்சொக்குவார்கள். இப்போது எழுதி எழுதி தேய்ந்துவிட்ட கரு என்றாலும் எழுபதாண்டுகளுக்கு முன்பு கூஜா கதையை அன்றிருந்த வாசகர்கள் ரசித்திருக்கக்கூடும்.

சங்கீதப் போராட்டம்ஒரு வகையான அபிப்பிராயம்தான், கதைபோல முயன்றிருக்கிறார். விசிறி அதைப்போல இன்னொரு கதை. ஓர் அரட்டை, அதுவும் வெட்டி அரட்டை. 

மிக எளிமையான, கொஞ்சம் பழமையான   கதையாக இருந்தாலும் இத்தொகுதியின் நல்ல கதைதாயில்லாக்  குழந்தைஉறவு உருவாகும் விதமும், அதில் நிகழும் பிரிவின் தவிர்க்கமுடியாமையும், மானுடம் அதைக் கடந்து நினைவுகளால் உருவாக்கிக்கொள்ளும் ஆழ்ந்த தொடர்பும் வெளிப்படும் விதமும் மிக எளிய சொற்கீற்றோவியமாக வெளிப்படும் இந்தக் கதை சட்டென்று க.நா.சுவை கலைஞனாக எடுத்துக் காட்டுகிறது. 

இது கு.அழகிரிசிசாமி எழுதியிருக்கக்கூடிய ஒரு கதை. ஏன் கு.அழகிரிசாமியை க.நா.சு அத்தனை போற்றி முன்வைத்தார் என்பதற்கான விளக்கமும் இக்கதையே.  

 உலக இலக்கியச்சிமிழ்

க.நா.சுவின் படித்திருக்கிறீர்களா?

க.நா.சு – தமிழ் விக்கி பதிவு

முந்தைய கட்டுரைமாணிக்கவாசகம் ஆசிர்வாதம்
அடுத்த கட்டுரைமொழிவெளி