அருவருப்பின் நடுவே ஓர் அற்புதத்திற்கான காத்திருப்பு

 

தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும்

பி.எம்.எம் இர்ஃபான் அறபு மொழியில் இருந்து மொழியாக்கம் செய்த ஈரானிய (பார்ஸி மொழி) நாவல்தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும்தமிழ்ச்சூழலுக்கு  ஒரு குறிப்பிடத்தக்க வரவு. மூல ஆசிரியர்  முஸ்தபா மஸ்தூர் (Mostafa Mastur) ஈரானிய இலக்கியத்தின் நட்சத்திரங்களில் ஒருவராகக் கருதப்படுபவர்

இந்தியாவில் நமக்கு மொழியாக்கங்களிலேயே சில முன்முடிவுகள், சில எதிர்பார்ப்புகள் உள்ளன. அதையொட்டியே இங்கே மொழியாக்கங்கள் செய்யப்படுகின்றன. உலக இலக்கியம் என நாம் தமிழ் வழியாக அறிவதென்பது அங்குமிங்கும் தொட்டுச்செல்லும் சில புள்ளிகளைத்தான். தமிழினூடாக இன்றும்கூட உலக இலக்கியத்தின் ஒரு பொதுச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள இயலாது.

தொடக்க காலத்தில ஆங்கிலக் கல்வி வழியாகக் கிடைத்த ஆங்கில இலக்கியங்கள் சில மொழியாக்கம் செய்யப்பட்டனஉதாரணமாக ஷேக்ஸ்பியர். ஆனால் இன்று யோசிக்கும்போது விந்தை. இருநூறாண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சி செய்த இந்தியாவின் மொழியான தமிழில் டிக்கன்ஸ், தாக்கரே, ஜார்ஜ் எலியட், எமிலி பிராண்டே, ஜேன் ஆஸ்டின் போன்ற ஆங்கில பேரிலக்கியவாதிகளின் ஆக்கங்கள் மொழியாக்கம் செய்யப்படவே இல்லை. அந்த ஆசிரியர்கள் தமிழுக்கு முற்றிலும் அன்னியமானவர்கள்

அவ்வப்ப்போது இந்திய ஆன்மிகத்தை பேசும் ஐரோப்பிய ஆக்கங்களான மாற்றிவைத்த தலைகள் (தாமஸ் மன்) சித்தார்த்தா (ஹெர்மன் ஹெஸ்) போன்றவை இங்கே மொழியாக்கம் செய்யப்பட்டன. ஆனால் ஐரோப்பியப் பேரிலக்கியங்கள் இங்கே மொழியாக்கம் செய்யப்படவில்லை. உதாரணமாக, இந்தியாவுக்கு அணுக்கமான உளநிலை கொண்டிருந்த ரோமெய்ன் ரோலந்தின் ஷீன் கிறிஸ்தோப் இங்கே மொழியாக்கம் செய்யபப்டவில்லை. மார்சல் புரூஸ்ட் மொழியாக்கம் செய்யப்படுவது எளிதல்ல. ஆனால் ஃப்ளாபர்ட், எமிலி சோலா போன்றவர்கள் கூட இங்கே மொழியாக்கம் செய்யப்படவில்லை

அண்மைக்காலம் வரை லத்தீனமேரிக்க இலக்கியம் ஓரளவு இங்கே மொழியாக்கம் செய்யப்பட்டது. தமிழில் பொதுவாக அதிகமான மொழியாக்கங்கள் அரசியல் கொள்கைகள் சார்ந்து நிகழ்கின்றன. ருஷ்ய இலக்கியமே தமிழில் வந்த மிகப்பெரிய அளவிலான அயல்மொழி இலக்கியம். பேர்ல் பதிப்பக வெளியீடாக வந்த அமெரிக்க இலக்கிய மொழியாக்கங்கள் தொடர்ச்சியாக வரவில்லை. தமிழ்ச்சமூகம் அணுக்கமாக வாழ்ந்தபோதும்கூட மலாய, சிங்கள இலக்கியங்கள் கூட தமிழில் குறிப்பிடுமளவு மொழியாக்கம் செய்யப்படவில்லை.

இச்சூழலில் அராபிய இலக்கியமோ, மத்திய ஆசிய இலக்கியமோ இங்கே வரவில்லை என்பதில் ஆச்சரியமேதுமில்லை. அவ்வப்போது ஆங்கிலம் வழியாக வரும் சில மொழியாக்கங்கள் வழியாகவே நாம் மத்திய ஆசிய, அல்லது எகிப்திய இலக்கியத்தை அறிகிறோம். ஆகவே அறபி மொழியில் இருந்து நேரடியாக வரும் ஒரு மொழியாக்கம் மிக மதிப்பு மிக்கது. இர்ஃபான் அவர்களின்  மொழியாக்கம் மிக இயல்பான மொழிநடையுடன் ,நல்ல வாசிப்புத்தன்மையுடன் உள்ளது.

ஈரானிய நாடகங்கள் சிலவற்றை நான் பார்த்ததுண்டு, சில நாவல்களையும் வாசித்துள்ளேன். இதற்கு முன் வாசித்த ஈரானிய நாவல் My Bird. அவற்றைக்கொண்டு ஈரானிய இலக்கிய சூழலில் நவீனத்துவம் மிக வலுவாக உள்ளது என்னும் உளப்பதிவு எனக்கு உண்டு.இந்நாவலும் அதை உறுதி செய்கிறது. வடிவம், பேசுபொருள் இரண்டிலும் கச்சிதமான நவீனத்துவ ஆக்கம் இது. ரேமண்ட் கார்வரின் கதைகளை பார்ஸி மொழியில் மொழியாக்கம் செய்தவர் முஸ்தபா மஸ்தூர். கார்வரின் ‘கச்சிதமான யதார்த்தவாதம்’ என்னும் அழகியலில் அவர் பெரிதும் ஈடுபட்டிருப்பதை இந்நாவலும் காட்டுகிறது

முஸ்தபா மஸ்தூர்

நாவலின் தொடக்கமே டானியல் என்னும் உளப்பிறழ்வளவுக்கு வாசிப்பும் தனிமையும் விலக்கமும் இருத்தலியல் சிக்கலும் கொண்ட கதாபாத்திரம் மாடியில் இருந்து கீழே போகும் மானுடரை நோக்கி கூச்சலிடும் சொற்களினூடாக வெளிப்படும்காஃப்காத்தனமானஅறைகூவலுடன் அமைந்துள்ளது. அதை ஒரு தீர்க்கதரிசனச் சாயலுடன் நாவல் முன்வைக்கிறது. மானுடம் தன் விழைவால், தன்னலத்தால், அகத்தனிமையால் அழுகி நாற்றமடிக்கும் ஒன்றாக ஆகிவிட்டிருப்பதை டானியல் கூவிச் சொல்கிறான். அதையே நாவலின் தலைப்பும் சொல்கிறது.  அருவருப்பூட்டுகிறது இந்த மானுடக்கலாச்சாரம் என்று.

அதன்பின் வெவ்வேறு கதைப்புள்ளிகளை சுருக்கமாகச் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். அவை ஒரு திரைக்கதையின் காட்சிகள் போல காட்சிகள்உரையாடல்கள் மட்டும் அடங்கியவை. கதைமாந்தரின் அகத்துள் நுழைய ஆசிரியர் முயல்வதில்லை. நிகழ்வுகள், உரையாடல்கள் வழியாக வெளிப்படும் அகம் மட்டுமே நாவலில் உள்ளது. 

ஒன்றோடொன்று தொடர்பற்ற பல்வேறு கதைமாந்தர்களின் வாழ்க்கையை தனித்தனியாகவே பின்னிச்செல்கிறது நாவல். இத்தகைய திரைப்படங்கள் பலவற்றை நம் ஏற்கனவே கண்டிருக்கிறோம்.வணிகத்திரைப்படங்களிலேயே இந்த உத்தி வந்து இப்போது சற்றுப் பழையதும் ஆகிவிட்டிருக்கிறது. இக்கதாபாத்திரங்கள் தற்செயலாக ஒருவரையொருவர் கடந்துசெல்லவும் செய்கிறார்கள்.

லத்தீன் அமெரிக்க நாவலான The Bridge of San Luis Rey (தமிழில் -முறிந்த பாலம்) இத்தகைய உத்தியை நீண்டகாலம் முன்னரே வெளிப்படுத்திய இலக்கிய ஆக்கம், அதன் கதைமாந்தர் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். அந்த வாழ்க்கைகள் எல்லாம் அந்த பாலத்தால் இணைக்கப்படுகின்றன. அந்தப்பாலத்தின் உடைவால் அவர்களின் வாழ்க்கை ஒரே கதையென ஆகிறது. அத்தகைய ஓர் இணைப்பு இந்நாவலில் உள்ள கதைமாந்தர் நடுவே இல்லை. அவர்களெல்லாம் ஒரே கட்டிடத்தில் வாழ்பவர்கள் என்பது மட்டுமே இணைப்பாக உள்ளது. அது மிக மேலோட்டமான ஒன்று, எந்த தனிப்பொருளையும் நமக்கு அளிப்பதில்லை.

தொடர்பற்ற வெவ்வேறு கதைகள். ஹமீத் என்னும் புகைப்படக்கலைஞனுக்கும் ஐரோப்பாவில் மேல்படிப்புக்குச் சென்றுள்ள மெஹ்னாஸுக்குமான காதலில் புகைப்படம் எடுக்கவந்த நெகார் என்னும் பணிப்பெண்ணின் முகம் நுழைகிறது. காதலியின் சாயலால் நெகார் மேல் இணையான காதல்கொள்ளும் ஹமீத் அந்த உச்சத்தில் இருந்து பின்னகர்கிறான்.

சவ்சன் என்னும் விபச்சாரிக்கும் அவளை நேசிக்கும் கவிஞனுக்குமான உறவு இன்னொரு கதை. அவனை முதலில் கேலியாகப் பார்க்கும் சவ்சன் மெல்ல மெல்ல அவன்மேல் பித்துக்கொள்கிறாள். ஆனால் அவன் அவளை அடைவதற்கரிய தொலைவில் வைத்து மட்டுமே நேசிக்க விழைபவன். அவள்  என் ஆத்மாவை எரியூட்டிக்கொள்கிறேன்என்னும் அவன் வரியை தன் வரியெனக் கொள்கிறாள்

சீமின் தன் கணவன் முசின் அறிவுச்செயல்பாட்டால் தன்னை உதாசீனம் செய்வதாக உணர்ந்து விவாகரத்து கோருகிறாள். அதனால் அவர்களின் மகள் டொர்னா பாதிக்கப்படுகிறாள். அவர்கள் மூவருமே வெவ்வேறு வகைகளில் தங்கள் உள்ளாழத்தை தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள்.

பணத்துக்காக நவ்ஸரும் கூட்டமும் செய்யும் கொலை இன்னொரு நிகழ்வு. சிறுவனான இல்யாஸின் நோய் அவன் பெற்றோரான முனைவர் முபீத் மற்றும் அப்சானா இருவரையும் தகிக்கவைக்கிறது. ஓர் அற்புதத்துக்காக அவர்கள் ஏங்குகிறார்கள். அது நிகழக்கூடும் என்னும் ஓர் மெல்லிய எதிர்பார்ப்பை உருவாக்கி முடிகிறது நாவல்.

முனைவர் இர்ஃபான், மொழிபெயர்ப்பாளர்

ஈரானிய மொழியில் எழுதப்பட்டு அரபுலகம் முழுக்க பெருவாரியாக வாசிக்கப்பட்டு ஓர் இலக்கியச்சாதனையாகக் கருதப்படும் இந்நாவல் ஒரு தமிழ் இலக்கிய வாசகனுக்கு பெரிய அளவில் கிளர்ச்சியையோ ஈர்ப்பையோ அளிக்காது. ஏனென்றால் தமிழில் இதை விட நுட்பமும் தீவிரமும் கொண்ட பல படைப்புகள் எழுதப்பட்டுவிட்டன.  ஆனால் இந்நாவலின் கச்சிதமும், மிகையின்மையும் இதை ஓர் நல்ல வாசிப்பனுபவமாக ஆக்குகின்றன.

ஆனால் இந்த வாழ்க்கைச் சித்திரங்களில் ஈரானியத்தன்மை அனேகமாக இல்லை. இவை எந்த ஒரு பெருநகர் அடுக்குமாடி இல்லத்திலும் நிகழக்கூடியவையாகவே உள்ளன. பலநூறு ஐரோப்பிய, அமெரிக்க நாவல்களில் எழுதப்பட்டுவிட்ட வாழ்க்கைகள் இவை. இந்த கதைமாந்தரின் குணச்சித்திரத்தில்கூட ஈரானியத் தனித்தன்மை என ஏதுமில்லை. எந்தப்பெருநகரிலும் உலகமெங்கும் காணத்தக்கவர்களாகவே தெரிகின்றனர். 

இந்த வாழ்க்கைச்சித்திரங்கள் ஒரு தரிசனத்தால், ஒரு தத்துவநோக்கால் இணைக்கப்பட்டு ஒரே வினாவாகவோ விடையாகவோ பார்வையாகவோ பிரச்சினையாகவோ முன்வைக்கப்படவில்லை. இநத வாழ்க்கைச்சித்திரங்கள் எவையும் படிமமாக ஆகி கவித்துவமான ஆழத்தையும் அடையவில்லை. இவை பேசும் வாழ்க்கைப்பிரச்சினைகள் எவையும் அசாதாரணமானவையோ புதிய கோணத்தை முன்வைப்பவையோ அல்ல. அவற்றில் அந்த கொலை மிகச்சாதாரணமாகவே எழுதப்பட்டுள்ளது. ஆகவே ஓர் இலக்கியச் சாதனையென இந்நாவல் தோன்றவில்லை. வாசிக்கத்தக்க நல்ல ஆக்கம் எனலாம்.

முந்தைய கட்டுரைசூர்யகாந்தன்
அடுத்த கட்டுரைஅறச் சிக்கல் மூட்டிய முதற்கனல்