மனித உரிமை – ஓர் வரலாற்றாவணம்

நானும் நீதிபதி ஆனேன். நீதிபதி சந்துரு. அருஞ்சொல் பதிப்பகம்

கேரளத்தின் சிறந்த முதல்வர்களில் ஒருவராகவும், கல்வியாளராகவும், மனிதாபிமானியாகவும் பொதுவாகக் கருதப்படுபவர் மறைந்த சி.எச்.முகமது கோயா சாகிப். கோழிக்கோடு பல்கலையை நிறுவியவர். இந்திய முஸ்லீம் லீக் சார்பில் கேரளத்தின் முதல்வராக இருந்த ஒரே ஆட்சியாளர். இஸ்லாமிய சமூகத்திற்கு வெளியே உள்ளவர்களால் ஏற்கப்பட்ட ஒரே இஸ்லாமியத் தலைவரும்கூட. இன்றும்கூட அவருடைய ஏராளமான மேற்கோள்கள் அரசியலில் புழக்கத்திலுள்ளன, பல வேடிக்கைக்கதைகளும்.

ஒருமுறை முகமதுகோயா சாகிப் சட்டச்சபையில் ஒரு காவல்துறை வன்முறையை நியாயப்படுத்திப் பேசியபோது சொன்னார். “காவல்துறை வன்முறையுடன் இருக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் பொதுவான அகவிருப்பம். ஆனால் அந்த வன்முறை பிரச்சினையாக ஆகும்போது அதே பொதுமக்கள் மனித உரிமை ஆர்வலர்களாக ஆகிறார்கள். ஏதேனும் குற்றமோ, ஒழுங்கின்மையோ உருவானால் போலீஸ் என்ன செய்துகொண்டிருக்கிறது, போலீஸ் கையிலுள்ள துப்பாக்கி முதுகு சொறிவதற்கா என்பார்கள். போலீஸ் நடவடிக்கை எல்லை மீறுவதாகத் தோன்றினால் உடனே சீறி எழுவார்கள். போலீஸுக்கும் பொதுமக்களுக்கும் அந்த எல்லை தெரியாது”

நேரடியான உண்மை இது. இந்தியச் சூழலில் நீதிமன்றங்களால் அல்ல, போலீஸால்தான் சட்டம் ஒழுங்கு நிலைகொள்கிறது. போலீஸின் வன்முறையை மட்டுமே பொதுவாகக் குற்றவாளிகள் அஞ்சுகிறார்கள். எந்தக் கொடுங்குற்றவாளியையும் ஒரு மாதத்திற்குள் ஜாமீனில் அனுப்பி, அப்பட்டமான குற்றங்களில்கூட தீர்ப்பளிக்க பற்பல ஆண்டுகள் இழுத்தடித்து, தாக்கியவனையும் பாதிக்கப்பட்டவனையும் ஒரேபோல அலைக்கழித்து, கடைசியில் மிகப்பெரும்பாலான குற்றவாளிகளை விடுதலையும் செய்துவிடும் நீதிமன்றங்களால் இங்கே எந்தச் சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்ட முடியாது, சாமானியர்களை குற்றவாளிகளிடமிருந்து பாதுகாக்கவும் முடியாது என்பதே அப்பட்டமான நடைமுறை உண்மை.

இங்கே உள்ள யதார்த்தத்தை சந்துரு போன்ற நீதிபதிகள் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் வாழும் களம் வேறு. அவர்களுக்கிருக்கும் பாதுகாப்புகளும் நமக்கில்லை. இங்கே ஒவ்வொரு ஊரிலும் ஒரு குற்றவாளிக்கூட்டம் அப்பகுதியை மிரட்டி ஆள்கிறது. அவர்களை எவரும் எதுவும் செய்யமுடியாது. பலர் போதையடிமைகள். பலர் அரசியல் பின்னணி கொண்டவர்கள். ஒவ்வொரு சாலைச்சந்திப்பும் இரவுக்குப் பின் குடிகாரப் பொறுக்கிகளின் மையமே. இரவில் ஒரு பெண் நடமாடக்கூடிய இடங்கள் அனேகமாக தமிழகத்தில் எங்குமில்லை. பார்வதிபுரம் பற்றியே இதைத்தான் சொல்வேன். ஒவ்வொருநாளும் போலீஸ் ரோந்துவருகிறது என்பதே மனிதர் நடமாடக்கூடிய பகுதியாக இதை ஆக்குகிறது.

இன்னொரு பக்கம், நம்முடைய திரள்மனநிலை. பத்துபேர் சேர்ந்துவிட்டால் முற்றிலும் கட்டற்ற பொறுக்கிக்கூட்டமாக ஆவது நம் இயல்பு. ஓர் அரசியல் நிகழ்வென்றால் செல்லும் வழியிலுள்ள கடைகளைச் சூறையாடுவார்கள். போலீஸ் நேரடியாக வந்து நின்று தடியும் துப்பாக்கியுமாக கட்டுப்படுத்தாவிட்டால் இங்கே எந்தத் திரளும் அழிவுத்தன்மை கொண்டதுதான்.

இங்கே ஒரு சாமானியக்குடிமகன் போலீஸை நம்பி மட்டுமே வாழ்கிறான். போலீஸார் எல்லாம் நல்லவர்கள் என எவரும் சொல்ல மாட்டார்கள். இரண்டு அடிப்படைகளில் போலீஸால் இங்கே சட்டம் ஒழுங்கு பேணப்படுகிறது. போலீஸிடம் ஓர் ’ஈகோ’ உள்ளது. அதைச் சீண்டும் குற்றச்செயல்களை அவர்கள் அனுமதிப்பதில்லை. இரண்டு, அரசியல்வாதிகள் சட்டம் ஒழுங்கு குலைந்தால் மக்களாதரவை இழக்கநேரிடும் என அஞ்சி போலீஸை பயன்படுத்துகிறார்கள்.

போலீஸ் வன்முறையானதுதான். அந்த வன்முறையே இங்குள்ள சமூகக் குற்றவாளிகள், கட்டற்ற கும்பல்களிடமிருந்து சாமானியர்களைக் காக்கிறது. ஆகவே போலீஸின் ஊழலும் வன்முறையும் மக்களால் பொறுத்துக்கொள்ளப்படுகிறது.  நான் உட்பட சாமானியன் போலீஸ் மீது அச்சம் கொண்டிருந்தாலும் நம்பிக்கை கொண்டிருக்கிறான், ஆனால் நீதிமன்றம் மீது மிக ஆழமான அவநம்பிக்கையே கொண்டிருக்கிறான். நீதிமன்றம் எவருக்கும் எந்த நியாயத்தையும் அளிக்காது என்பதை அறியாத ஒரு சாமானியன்கூட இங்கில்லை.

ஆனால் போலீஸின் வன்முறை எதுவரை அனுமதிக்கப்பட முடியும்? ஓர் அமைப்பை வன்முறை நிறைந்ததாக உருவாக்கிவிட்டு அதன் வன்முறைத் தன்மையை எந்த அளவுக்கு கண்டிக்க முடியும்? போலீஸ் குற்றவாளிகளுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்துகிறது. குற்றவாளிகள் என ஐயம் கொள்பவர்கள் மேலும் வன்முறையை பயன்படுத்துகிறது. அவ்வப்போது அப்பாவிகள் மீதும் வன்முறையைச் செலுத்துகிறது.

போலீஸிடம் நீதிவிசாரணை முறைமைகள் இல்லை. போலீஸ் அமைப்பு அதன் எல்லா உறுப்பினர்களையும் கட்டுப்படுத்த முடியாது. போலீஸ் அமைப்பு பொதுவாகவே ஊழலின் வழியாகவே செயல்பட முடியும். அதற்கு ஒதுக்கப்படும் நிதியும் குறைவு. பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் முதலே போலீஸார் ஊழல் செய்யட்டுமே என்னும் எண்ணமே ஆட்சியாளர்களிடம் உள்ளது.

இன்றும் போலீஸ் நிர்வாகம் உண்மையில் செலவிடும் தொகையில் முக்கால்பங்கு ஊழலில் ஈட்டப்படுவதுதான். போலீஸாரின் மெய்யான ஊதியமும் ஊழல்பணமே. அதாவது ஊழலை அனுமதிப்பதே போலீஸை அரசுக்கு நம்பகமாகச் செயல்படச்செய்கிறது என பிரிட்டிஷார் அறிந்திருந்தனர். இந்தியர்களாலான போலீஸ் இந்தியர்களுக்கு எதிராக பிரிட்டிஷாரை ஆதரித்து நின்றது ஊழலின்பொருட்டே. இன்றைய ஆட்சியாளர்கள் வரை நீடிப்பது அந்நம்பிக்கையே

போலீஸ் மக்களுக்கு எதிராக அத்துமீறுவது என்றும் நிகழ்வது.போலீஸ்த்துறையினர் போலீஸ் மீதான நம்பிக்கை மக்களிடம் அழிந்துவிடலாகாது, போலீஸ் மீதான அச்சம் தளர்ந்துவிடக்கூடாது என்னும் பதற்றமும் கொண்டிருக்கின்றனர். ஆகவே போலீஸ் செய்யும் குற்றங்களை போலீஸ் பெரும்பாலும் தண்டிப்பதில்லை. மிக எளிமையான சில தண்டனைகளுடன் போலீஸ்த்துறைக் குற்றவாளிகள் தப்பிச்செல்கிறார்கள்.

போலீஸ்த்துறையை நம்பியே அரசுகள் செயல்படுகின்றன. எந்நிலையிலும் போலீஸை அவை பகைத்துக்கொள்ள முடியாது. போலீஸ் ஒத்துழைப்பு இல்லையேல் அரசுகள் ஸ்தம்பித்துவிடும். அத்துடன் போலீஸை தீவிரமாக பயன்படுத்தி சட்டம் ஒழுங்கை கைக்குள் வைத்திருக்கும் அரசு மக்களால் விரும்பப்பட்டு வாக்களிக்கவும் படுகிறது – ஜெயலலிதாவின் அரசு எப்போதுமே போலீஸ் அரசுதான். ஆனால் அதனால்தான் அதற்குப் பெண்கள் வாக்களித்தனர். இன்றும் பெண்கள் ஜெயலலிதா பாணி நிர்வாகத்தையே புகழ்ந்து சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

போலீஸின் வன்முறைக்கு எதிரான மனித உரிமை இயக்கம் சென்ற நாற்பது ஆண்டுகளாகவே மெல்ல மெல்ல உருவாகி சென்ற இருபதாண்டுகளில் வலிமை பெற்றுள்ளது. பொதுப்பணியாளர்கள்,சட்டத்துறையினர் இணைந்து அந்த இயக்கத்தை முன்னெடுத்தனர். அவர்களில் பொதுப்பணி, சட்டப்பணி என்னும் இரு களங்களிலும் தமிழக மனித உரிமை இயக்கத்தின் முன்னணி முகமாகத் திகழ்ந்த முன்னாள் நீதிபதியும் வழக்கறிஞருமான கே.சந்துருவின் (கிருஷ்ணசாமி சந்திரசேகரன்) பொதுப்பணி அனுபவங்களின் பதிவு அருஞ்சொல் பதிப்பக வெளியீடான ‘நானும் நீதிபதி ஆனேன்’

இந்த நூலை ஒரு வாழ்க்கை வரலாறாக மட்டும் வாசிக்க முடியாது. சென்ற ஐம்பதாண்டுக்கால தமிழக அரசியல்களம் இந்நூலில் நேர்மையான பதிவு கொண்டுள்ளது. அந்த களத்தில் அரசும் போலீஸும் ஒருபக்கமும் பொதுப்பணியாளர்களும், மனிதநேயர்களான நீதித்துறையினர் இன்னொரு பக்கமுமாக அமைந்து , அவர்களின் இழுபறிப்போராட்டம் வழியாக மெல்ல மெல்ல மானுட உரிமைகள் குறித்த பிரக்ஞையும், அது குறித்த சட்டங்களும், அதற்கான அமைப்புகளும் உருவாகி வந்த வரலாறு படிப்படியாக விரிந்து வருகிறது. அவ்வகையில் ஒரு முதன்மையான அறவியல் ஆவணம் என இந்நூலைச் சொல்லமுடியும்.

ஶ்ரீரங்கத்தில் 1951ல் பிறந்த கே.சந்துரு இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மாணவர் அணியின் செயல்பாட்டாளராகவும் தொழிற்சங்கப் பணியாளராகவும் தன் இளமையை தொடங்கினார். அரசியல்பணியின் ஒரு பகுதியாகவே சட்டத்துறைக்கு வந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழ்பெற்ற மனித உரிமை வழக்கறிஞராகப் பணியாற்றினார். நீதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு இந்திய வரலாற்றில் மிக அதிகமான வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கினார். முக்கியமான முற்போக்கு, மனித உரிமைத் தீர்ப்புகளை வழங்கினார்,

மிகவிரிவான ஆவணத்தொகையான இந்நூலை நான் இந்திய அரசியல்- இந்திட அரசு நிர்வாகம்- சட்டத்துறை- சமூகம் என்னும் நான்கு சக்திகளுக்கிடையேயான அதிகாரப்போரின் பெருஞ்சித்திரமாகவே வாசித்தேன். அரசியல் சார்ந்த சார்புநிலைகளும், எளிமையான கருத்துநிலைகளும் இல்லாமல் இந்நூலை வாசிப்பவர் அடையும் பல தரிசனங்கள் உண்டு.

உதாரணமாக, இந்நூல் 1971ல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உதயகுமார் போலீஸாரால் கொல்லப்பட்ட வழக்குடன் தொடங்குகிறது. எழுபதுகள் உலகமெங்கும் பொருளியல் தேக்கமும், அதற்கெதிரான கிளர்ச்சிகளும் நிகழ்ந்த காலகட்டம். இந்தியாவில் இந்திராகாந்தி தலைமையிலான ‘சமையலறை நிர்வாகம்’ இந்தியாவின் எல்லா துறைகளிலும் சீரழிவையும், பொருளியலில் இந்தியாவின் இதுவரையிலான வரலாற்றிலேயே மோசமான அழிவையும் உருவாக்கியிருந்தது.

சிவப்புநாடா முறையால் தனியார்த்துறை அனேகமாக இல்லை என்ற நிலை நிலவியது. அரசுத்துறை தேங்கிக்கிடந்தது. ஆகவே வேலைவாய்ப்புகளே இல்லை. வாகன உற்பத்தி, சாலை அமைப்பு ஆகியவற்றின் தேக்கநிலையால் போக்குவரத்து வசதிகள் அனேகமாக இல்லை என்னும் நிலை. மின்னுற்பத்தியில் மிகப்பெரிய வெறுமை. ஆகவே கைத்தொழில்கள் அழிந்துவிட்டிருந்தன.விளைவாக வேலையில்லாமை தேசத்தை கொந்தளிக்கச் செய்தது. ஆங்காங்கே மாணவர் கிளர்ச்சிகள் நிகழ்ந்து வந்தன. ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் அந்த கிளர்ச்சிகள் ஒன்றாகத் திரண்டபோதுதான் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார்.

இச்சூழலில் இந்திராகாந்தியுடன் கூட்டணிவைத்து ஆட்சியைப் பிடித்த மு.கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தார். அவருக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுக்க முடிவெடுத்தது. அதனால் எரிச்சலடைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகளும், காமராஜ் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் மாணவர் அமைப்புகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலையில்லாத் திண்டாட்டத்தின் மேல் கவனத்தை ஈர்க்கும்பொருட்டு ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை திட்டமிட்டன.

அந்நிகழ்வு ஒரு சிறிய அளவிலான குறியீட்டுச் செயல்பாடுதான். ஆனால் அதை மு.கருணாநிதி தனிப்பட்ட முறையில் ஆணவப்பிரச்சினையாக எடுத்துக்கொண்டார். அவரது ஆணைப்படி போலீஸார் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் மேல் பட்டமளிப்பு விழாவுக்கு முந்தையநாள் மிகக்கடுமையான ஒடுக்குமுறையை நடத்தினர். மாணவர் விடுதிகள் உடைக்கப்பட்டு மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு, பிடித்துக்கொண்டுசெல்லப்பட்டு, பல கிலோமீட்டர் தொலைவில் விடப்பட்டனர். அந்த வன்முறையில் உதயகுமார் என்னும் மாணவர் பலியானார். அவர் உடலை அங்குள்ள நீர்நிலையில் வீசினர். மு.கருணாநிதி டாக்டர் பட்டம் பெற்றுக்கொண்டார், அதன்பின் டாக்டர் கலைஞர் என அழைக்கப்பட்டார்.

அந்தச் சடலம் கண்டடையப்பட்டபோது அந்த போலீஸ் வன்முறை அரசியல் பிரச்சினையாக ஆகியது. போலீஸார் உதயகுமாரின் சடலத்தை அவருடைய பெற்றோருக்கு தெரியாமல் எரித்துவிட்டனர். ஆனால் தினத்தந்தியின் புகைப்படம் மற்றும் சடலத்துடன் இருந்த பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இறந்தவர் உதயகுமார் என்னும் மாணவர் என அடையாளம் காணப்பட்டார். அவர் தந்தை பெருமாள்சாமி மகனை அடையாளம் கண்டார்.

ஆனால் அந்த வழக்கை போலீஸும், திமுகவும் மேலும் மூர்க்கமாக எதிர்கொண்டார்கள். மாணவர்கள் அனைவரும் நக்சலைட்டுகள் என்றும், அவர்கள் முதல்வரை கொல்ல திட்டமிட்டிருந்தனர் என்றும், போலீஸ் அந்தச் சதியை முறியடித்தது என்றும் போலீஸ் சொன்னது. நாடெங்கிலும் அப்போது போலீஸார் ஒடுக்குமுறை நடைபெற்றுக்கொண்டிருந்தது

போலீஸ் தரப்பைச் சட்டச்சபையில் தன் தரப்பாகவும் முன்வைத்த மு.கருணாநிதி இறந்துபோன மாணவர் உதயகுமார் அல்ல என்றும், அவர் ஓர் விபத்தில் இறந்தார் என்றும் சொன்னார். உண்மையான உதயகுமார் காணாமல் போய்விட்டார் என்றார். ‘காணாமல்போனவர்களுக்கெல்லாம் நானா பொறுப்பு?” என்று சட்டச்சபையில் சீறினார். தன்னைக்கொல்ல முயன்றவர்களை அரசு கலைத்தது தவறில்லை என்றார். நீதிகேட்பவர்கள் வன்முறையாளர்கள்,தேசவிரோதிகள் என்று குறிப்பிட்டார்.

கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸ்காரர்களும் உதயகுமாருக்காகப் போராடினர். நெருக்கடி முற்றவே அரசு ஒருநபர் விசாரணைக் கமிஷனை நியமித்தது. அதற்கு பணியுறுதிக்காக அரசின் ஒப்புதலை எதிர்நோக்கியிருந்தவரான நீதிபதி என்.எஸ்.ராமசாமி நியமிக்கப்பட்டார். அவர்மீது நம்பிக்கை இல்லை என கம்யூனிஸ்டுகள் முறையிட்ட மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

விசாரணையில் உதயகுமாரின் தந்தை பெருமாள்சாமி இரண்டு கட்சிக்காரர்கள் நடுவே அமரவைக்கப்பட்டு நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டார். நீதிமன்றத்தில் அந்தச் சடலம் உதயகுமார் அல்ல என்று அவர் சொன்னார். முன்னர் அவர் சொன்னவற்றை மறுதலித்தார். அவர் கட்சிக்காரர்களால் அம்பாசிடர் காரில் கொண்டுவரப்பட்டதை சந்துரு கேட்டபோது தான் பேருந்தில் வந்ததாகச் சொல்லி டிக்கெட்டையும் காட்டினார்.

போராட்டக்குழுவினர் போலீஸ் வன்முறைக்கு எதிராக எல்லாவகையான ஆதாரங்களையும் திரட்டினர், சாட்சிகளை கொண்டுவந்தனர். அந்த சாட்சிகள் மேல் தாக்குதல் நடந்தது. பலர் மேல் வழக்குகள் பதிவாயின. சாட்சிகள், ஆதாரங்கள் எதையும் கருத்தில் கொள்ளாத ஆணையம் போலீஸார் சொன்னவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு தீர்ப்பு சொன்னது. எப்படி இந்த விஷயங்கள் முடியுமோ அப்படி எல்லாம் முடிந்தது. எவரும் தண்டிக்கப்படவில்லை.

அந்த ஆணையத்தின் முன் அரசுக்காக சாட்சி சொன்னவர்களில் ஒருவர் அன்று வட்டார வருவாய் அலுவலராக இருந்த தியானேஸ்வரன். திமுக ஆதரவாளரான அவர் திமுகவால் ஐ.ஏ.எஸ் தகுதி அளிக்கப்பட்டார். பின்னர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் கனிமவளத்துறை தலைவராக இருந்த தியானேஸ்வரன் பெரும் ஊழல்குற்றச்சாட்டுகளால் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

தியானேஸ்வரன் இல்லத்தில்தான் அன்றுவரையிலான இந்திய சரித்திரத்திலேயே அதிகமான கணக்கில் வராத நிதி கைப்பற்றப்பட்டது. ஆனால் தியானேஸ்வரன் தண்டிக்கப்படவில்லை. திமுக அரசால் கட்டாய ஓய்வில் செல்ல வைக்கப்பட்ட அவர் ஜெயலலிதா மீண்டும் பதவிக்கு வந்தபின் மேல்முறையீடுகளில் விடுதலை ஆனார்.

மு.கருணாநிதியே போலீஸை பாதிக்கப்பட்டவரின் பார்வையில் புரிந்துகொள்ள உடனே வாய்ப்பமைந்தது. 1976ல் நெருக்கடி நிலை வந்தது. அதில் திமுக அரசு கலைக்கப்பட்டது. திமுகவினர் கைதுசெய்யப்பட்டனர். கடுமையான அடக்குமுறைக்கு ஆளாயினர். மு.கருணாநிதியின் மகனாகிய இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவ்வாறு தாக்கப்பட்டவர்களில் ஒருவர்.

நெருக்கடிநிலை முடிந்து ஜனதா அரசு பதவிக்கு வந்தபோது பொறுப்பேற்ற கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி அக்காலகட்டத்தின் சிறைவன்முறைகளை விசாரிக்க இஸ்மாயீல் கமிஷனை நியமித்தார். கறாரான, நேர்மையான நீதிபதியான இஸ்மாயீல் (கம்பராமாயண அறிஞரும்கூட) நெருக்கடிகால சிறைக்கொடுமைகளை விரிவாக ஆவணப்படுத்தினார். சிறைத்தலைவர் வித்யாசாகர், காவல்துறை தலைவர் பொன்.பரமகுரு ஆகியோருக்கு எதிராக நேரடியான தீர்ப்புகள் இருந்தன.

1972 ல் மு.கருணாநிதியுடன் முரண்பட்டு எம்.ஜி.ராமச்சந்திரன் கட்சியை விட்டு வெளியேறினார். அவரும் உதயகுமார் சாவுக்கு நீதிகேட்டு போராடினார். உதயகுமார் சாவின்போது எதையும் சொல்லாமல் அமைதியாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க அமைந்து எம்.ஜி.ஆர் 1977ல் பதவிக்கு வந்தார்.

இந்திரா காந்தி மீண்டும் பதவிக்கு வர, அவருடன் கூட்டணி அமைந்த்திருந்த பதவிக்கு வந்த எம்.ஜி.ஆர் இஸ்மாயீல் கமிஷன் அறிக்கையை தூக்கி வீசினார். அதில் சுட்டிக்காட்டப்பட்ட குற்றவாளிகள் எவர்மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத்தனைக்கும் சிறைவன்முறையால் பாதிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் மு.கருணாநிதியுடன் அவர் நட்பாக இருந்த காலகட்டத்தில் அவர் மடியில் வளர்ந்த குழந்தை, கொல்லப்பட்ட சிட்டிபாபு அவருக்கு நெருக்கமான அரசியல்வாதி. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. நேரடியான கடும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான வித்யாசாகர் பதவி உயர்வும் பெற்றார்.

இதுதான் இந்நூல் உருவாக்கிக் கொண்டே செல்லும் ஒட்டுமொத்தச் சித்திரம். போலீஸை நம்பிய மு.கருணாநிதி போலீஸின் அத்தனை மூர்க்கத்தையும் தானும் அனுபவிக்க நேர்ந்தது. ஆனாலும் அவர் போலீஸை நம்பித்தான் இருந்தார். அவருடைய எல்லா ஆட்சிக்காலத்திலும் போலீஸ் வன்முறைகள் நிகழ்ந்தன. அவர் அவற்றை நியாயப்படுத்தவும் செய்தார். அப்படிச்செய்யாமல் ஆட்சி செய்ய முடியாது. தூத்துக்குடிச் துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்ப்பேற்கவேண்டிய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்த இன்றைய திமுக அரசு வரை அந்த கோட்டை இழுக்கலாம்

இதுவே அரசு செயல்படும் விதம். வன்முறைமேல் கட்டப்பட்டுள்ளது அது. அடிப்படையில் ஒடுக்குமுறை கொண்டது. மனித உரிமைகளை அதற்குப் பயிற்றுவிப்பதென்பது காட்டுயானையைப் பழக்குவது போல. மிகமிக மெல்ல ஏராளமான தோல்விகளுடன் தமிழகத்தில் அந்த மாற்றம் நிகழ்வதை இந்த நூல் காட்டுகிறது.

அந்த மாற்றத்திற்கு வழிகோலியவை தமிழக பொதுமனசாட்சியை உலுக்கிய பல போலீஸ் வன்முறை வழக்குகள். சிதம்பரம் அண்ணாமலை நகரில் நந்தகோபால் என்பவரை காவலர் அடித்துக் கொலைசெய்து அவர் மனைவி பத்மினியை பாலியல் வன்கொடுமைச் செய்த வழக்கு ( 1992), 1993-ல் கடலூர் முதனை எனும் ஊரில் ராஜாக்கண்ணு என்பவரை போலீஸ் அடித்துக் கொலை செய்த வழக்கு (ஜெய்பீம் என்னும் படமாக வெளிவந்தது) , கொல்லப்பட்டவரே உயிருடன் வந்த பாண்டியம்மாள் வழக்கு என பல வழக்குகளை சந்துரு பட்டியலிட்டபடியே செல்கிறார்.

அவற்றில் எந்த காரணமும் இல்லாமல் கைதுசெய்யப்பட்டு, சிறையில் கடும் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி, அதன்பின் பிணைவிடுதலை பெற்று, காவல்நிலையத்தில் கையெழுத்திடச் சென்று அங்கு மேலும் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி, காவல்நிலையத்திலேயே தீக்குளித்த மதுரை பாண்டியன் என்னும் திருநம்பியின் கதை திகைக்கச்செய்வது. தற்கொலைசெய்துகொண்ட அவர்மேல் போலீஸ் தற்கொலை முயற்சி வழக்கையும் பதிவுசெய்கிறது.

ஒவ்வொன்றிலும் நிகழ்ந்த வன்முறை, அவற்றுக்கு எதிரான சட்டப்போராட்டம், அவற்றில் அவருடைய பங்களிப்பு, இறுதியில் எஞ்சிய நீதி என செல்கின்றன அந்த சித்தரிப்புகள். சட்டப்போர்களின் விரிவான சித்திரத்தை சந்துரு அளிப்பதில்லை என்றாலும் போலீஸும் அரசும் சாத்தியமான எல்லா வகைகளிலும் வழக்கை தாமதம் செய்கின்றன, இணைவழக்குகளை உருவாக்குகின்றன, சாட்சிகள் மேல் புதுவழக்குகளை தொடுக்கின்றன, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் மேலும் மேலும் மேல்முறையீடு செய்கின்றன என்பதைக் காணமுடிகிறது.

பல வழக்குகளின் முடிவுகள் இன்றைய வாசிப்பில் சோர்வளிப்பவை. பெரும்பாலான வழக்குகளில் காவல்அதிகாரிகள் விடுதலை ஆவதையே காணமுடிகிறது. நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன. பெரும்பாலும் ஆணையங்கள் காவல்துறையினரின் தரப்பை அப்படியே ஏற்று, அரசு விரும்பிய அறிக்கையை அளிக்கின்றன. காலம்தாழ்த்தும் நோக்கமே பெரும்பாலும் ஆணையங்களுக்கு உள்ளது. அரிதாக நேரடியான, கடுமையான குற்றச்செயல்கள் சுட்டிக்காட்டப்பட்டால் அரசு அந்த அறிக்கைகளை மூழ்கடித்துவிடுகிறது. ஒன்றும் நிகழ்வதில்லை

மெல்ல மெல்ல குறைந்தபட்சம் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு பெற்றுத்தர முடிகிறது. நீதிபதி இஸ்மாயீல், நீதிபதி பி.கே.மிஸ்ரா, நீதிபதி ஏ.பி.ஷா என தமிழகத்தில் மனித உரிமைச்செயல்பாடுகளில் பெரும்பங்களிப்பாற்றிய சட்டவல்லுநர்களின் பணிகள் இந்நூலில் வந்தபடியே உள்ளன. காவலர்கள் தண்டிக்கப்படுவது அரிதாகவே நிகழ்ந்தாலும் அவர்களின் சம்பளப்பணத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அளிக்கப்படும் தீர்ப்புகள் தமிழகக் காவல்துறையினரிடம் மெல்ல மெல்ல மாறுதலை உருவாக்கும் சித்திரம் இந்நூலில் உள்ளது.

அதேசமயம் இந்நூலில் சந்துரு ஏராளமான சட்டவல்லுநர் அறிக்கைகள் அரசுகளால் புதைக்கப்பட்டு விட்டதை, ஏராளமான தீர்ப்புகள் உதாசீனம் செய்யப்படுவதை சொல்லிக் கொண்டும் இருக்கிறார். நம் அரசுகள் மனித உரிமைகளை மதிப்பவையாக மாறுவதற்கான பயணம் எத்தனை நீண்டது என்பதை இந்நூல் காட்டுகிறது

மனித உரிமைகள் மீறப்படும் இன்னொரு இடம் சிறை. கைதுசெய்யப்பட்டவர்கள் வெறுமே குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆயினும்கூட அவர்கள் மனிதர்களாக நடத்தப்படுவதில்லை. திகைப்பூட்டும் ஒரு செய்தி, விசாரணைக் கைதிகள் நீதிமன்றம் கொண்டுசெல்லப் படும்போது வழியில் அவர்களுக்கு உணவு அளிக்கப்படுவதில்லை என்பது. முழுநாளும் அவர்கள் பட்டினியாக இருந்தாகவேண்டும். அதற்கு எதிரான வழக்கில் அவர்களுக்கு உணவு வழங்க நிதி ஒதுக்கீடு இல்லை என சிறைத்துறையின் சார்பில் சொல்லப்படுகிறது.

நெருக்கடி காலத்தில் கொல்லப்பட்ட சிட்டிபாபு பின்னர் இஸ்மாயில் கமிஷன் மின் முதன்மைச் சாட்சியமாக அமைந்த அவருடைய டைரியில் திமுக அரசின் சட்டம் சிறைத்துறை அமைச்சர் மாதவனை குற்றம் சாட்டுகிறார். அதிகாரத்துக்கு வந்தபின் சிறையை மேம்படுத்த நாம் எதையுமே செய்யவில்லை என்றும், அச்சிறைகளில் நாமே வந்து சேர்ந்துள்ளோம் என்றும் சொல்கிறார். அதை சுட்டிக்காட்டுகிறார் சந்துரு. ஆட்சியாளர்களின் உள்ளம் அத்தகையது, அவர்களே சிறைக்கு வரக்கூடும் என அவர்கள் எண்ணுவதே இல்லை. மு.கருணாநிதி ஆயினும் ஜெயலலிதா ஆயினும்.

ஜெயலலிதா சிறையுண்டபோது கைதிகளை உறவினர், நண்பர் சந்திக்கலாம் என்று இருந்த சட்டவிதியை திருத்தி நண்பர் என்னும் சொல்லை நீக்கம் செய்கிறது திமுக அரசு. அதன்படி சசிகலா ஜெயலலிதாவைச் சந்திக்க முடியவில்லை. பின்னர் அந்த சொல்நீக்கத்திற்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி நண்பர் என்னும் சொல்லை சேர்க்கவைக்கிறார் சந்துரு. அந்த சேர்க்கை பின்னர் மு.கருணாநிதிக்கே தேவைப்பட்டது.

கரும்பாறை போன்றது அரசு. நாம் காணும் இன்றைய அரசு பல ஆயிரமாண்டுகளாக மெல்ல மெல்ல பரிணாமம் அடைந்து வந்தது. அதில் ஒரு மாற்றம் என்பதும் மிகமிகக் கடுமையான அழுத்தம் வழியாக மிகமிக மெல்லவே நிகழக்கூடுவது. அந்தப் பெரும்போராட்டத்தை முன்னெடுக்கும் சட்ட நிபுணர்கள், சமூகப்பணியாளர்கள் ஒவ்வொருவரும் போற்றத்தக்கவர்கள். சென்ற ஐம்பதாண்டுகளில் அக்களத்தில் நின்ற ஒவ்வொருவரும் எவ்வகையிலோ இந்நூலில் நினைவுகூரப்பட்டுள்ளனர் என்பதே இதை ஓர் அரசியல் ஆவணமாக ஆக்குகிறது.

இன்று மெல்ல உருவாகியுள்ள மனித உரிமை விழிப்புணர்வுக்கு காரணம் தொடர் அழுத்தங்கள் உள்ளிருந்தும் வெளியே இருந்தும் வந்ததன் விளைவாக அரசு கண்டடைந்த சில வழிகள்தான். மனித உரிமை ஆணையம் போன்ற அரசு சாரா அதிகார அமைப்புகள் வழியாக போலீஸார், சிறைத்துறையினர் மேல் நடவடிக்கை எடுக்கமுடிகிறது. (நான் என்ன பண்றது? நானே ஆணையத்த பயந்துட்டு இருக்கேன் என்று சொல்லிவிடுவார்கள் போலும்).

மனித உரிமை ஆணையம் காவலர் நடுவே அவர்களின் அதிகாரம் வரம்பற்றது அல்ல என்னும் எண்ணத்தையும் உருவாக்கியுள்ளது. அரசு அவர்களை கைவிடாமல் இருந்தாலும் ஆணையம் சும்மா விடாது. ஆணையம் தண்டிக்காமல் இருந்தாலும் அதன் சட்டச்சிக்கல்களில் சிக்கி உழன்று மீள்வதெ பெருந்தண்டனை என அவர்கள் இன்று அறிந்திருக்கிறார்கள்.

இந்நூலில் உள்ள பெரும்பாலும் எல்லா செய்திகளும் நான் அறிந்தவையே. அவற்றை இன்னொரு கோணத்தில் சந்துரு தொகுத்துரைப்பதே ஒரு வரலாற்றுத்தரிசனமாக ஆகிறது. ஆனால் நானறியாத பல செய்திகள் உள்ளன. அதிலொன்று, தமிழகத்தில் நெருக்கடிநிலைக் காலகட்ட ஒடுக்குமுறைகளில் காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்.பக்தவத்ஸலம் ஆற்றிய பங்கு. அவர் அந்த அத்துமீறலுக்காக இஸ்மாயீல் ஆணையத்தால் விசாரிக்கப்பட்டார், கடுமையாகக் குற்றம்சாட்டவும்பட்டார் என்பது நானறிந்திராதது.

நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகார சக்தியாகத் திகழ்ந்தார் பக்தவத்ஸலம். நேரடியாக சிறைவன்முறைகளுக்கு ஆணையிட்டார். சிறைவன்முறைகளை முன்னின்று நடத்தி, இஸ்மாயீல் ஆணையத்தால் கடுமையாக கண்டிக்கப்பட்டு ,தண்டனைக்கு பரிந்துரைக்கப்பட்ட வித்யாசாகர் என்னும் அதிகாரி பக்தவத்ஸலத்தின் சாதிக்காரர், அவரால் பதவி பெற்றவர். அவரை பாதுகாத்து கடைசிவரை நிலைகொண்டார் பக்தவத்ஸலம்.

தமிழகத்தின் தொழில், கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது என்பதனால் காங்கிரஸ் மேல் எனக்கு ஒரு மதிப்பு இருந்தது. ஆகவே திராவிட இயக்கத்தின் வெற்றி ஒரு சரிவு என்னும் எண்ணமும் இருந்தது. அது சுந்தர ராமசாமி போன்றவர் அளித்த உளப்பதிவும்கூட. ஆனால் காங்கிரஸ் இரண்டு. காமராஜ் தலைமையிலான காங்கிரஸின் சாதனைகள் நான் சொல்பவை. பக்தவத்ஸலம் தமிழக வரலாற்றின் ஓர் இருண்டபக்கத்தை உருவாக்கிய ஒட்டுண்ணி என இன்று தோன்றுகிறது. அவரை நீக்கம் செய்தது வழியாக திராவிட இயக்கம் தமிழகத்திற்கு நலம்புரிந்தது என்றுகூட இந்நூல் எண்ணச்செய்கிறது.

அரசியல் களப்போராளி, சட்டவல்லுநர், நீதிபதி என்னும் நிலைகளில் மனித உரிமை சார்ந்து இடதுசாரிப்பார்வை கொண்டவரான சந்துரு அந்நோக்கில் தன் பணியை மகத்தான முறையில் ஆற்றியுள்ளார் என்பதற்கான சான்று இந்நூல். ஆனால் இந்தியச் சூழலில் சட்டத்துறையின் ஏற்கவே முடியாத தாமதமும், பொறுப்பின்மையும், ஊழலும்தான் இங்கே இந்த அளவுக்குக் குற்றம் மலிவதற்கான முதன்மைக் காரணம் என்பதை அவர் உணர்ந்திருப்பதை இந்நூல் வழியாகக் காணமுடியவில்லை.

நீதிமன்றம் மீதான அவநம்பிக்கையே மக்கள் காவல்துறை வன்முறையை கையிலெடுக்கவேண்டும் என விழைவதற்கான காரணம். பெரும்பாலான ‘என்கவுண்டர்’களில் மக்கள் அதை ஆதரிக்கிறார்கள். திரைப்படங்களிலேயே காவலர்களின் வன்முறை காட்டப்படும்போது மக்கள் கொண்டாடுகிறார்கள். உயர்நீதிமன்ற நீதிபதியாக சந்துரு அவர்கள் தன் வரையில் வழக்குகளை விரைந்து முடித்தமைக்கும், பல புரட்சிகர தீர்ப்புகள் அளித்தமைக்கும் அப்பால் நீதிமன்றச் செயல்பாடுகளை நியாயமானவையாக ஆக்க ஏதேனும் செய்ய முடிந்துள்ளதா? சந்துரு கீழமை நீதிமன்ற நீதிபதிகளை தண்டிக்கும் அதிகாரம்கொண்ட Portfolio Judge பதவியில் இருந்தவர். அவர் எவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக இந்நூலில் இல்லை. அதற்கான சூழலே அவருக்கு அமையவில்லையா?

முந்தைய கட்டுரைதூயவன்
அடுத்த கட்டுரைபாலைநிலவன் விருது நிகழ்வு