நூறிருப்பு

என் பெரியம்மா காளிவளாகத்து வீட்டில் தாட்சாயணி அம்மா சென்ற 1 மார்ச் 2024 அன்று மறைந்தார். 1924ல் பிறந்த அவருடைய நூறாவது அகவை நடந்துகொண்டிருந்தது. மறைவதற்கு நான்குநாட்கள் முன்புவரை நன்றாகவே இருந்தார். சிற்சில உடல் உபாதைகள், தற்காலிக மறதி தவிர வேறு நோய் என ஏதுமில்லை.

என் அம்மாவுடன் பிறந்தவர்களில் மூன்றாமவர் பெரியம்மா. வேலப்ப பிள்ளை, கேசவபிள்ளை, தாட்சாயணி அம்மா, மீனாட்சியம்மா, கங்காதரன் பிள்ளை, விசாலாட்சி அம்மா, பிரபாகரன், காளிப்பிள்ளை என அவர்கள் எட்டுபேர். மூன்றுபேர் பெண்கள்.

அந்த வரிசையில் இறுதியாக மறைந்தவர் பெரியம்மாதான். அவருக்கு முன்னால் கடைக்குட்டிச் சகோதரர் ஆன காளிப்பிள்ளை எனும் மணி மாமா சென்ற ஆண்டு மறைந்தார். முதலில் மறைந்தவர் கம்யூனிஸ்டுக் கட்சியின் தொடக்ககாலச் செயல்பாட்டாளரும், குமரிமாவட்ட நூலக இயக்கத்தில் பணியாற்றியவரும், நில அளவையாளருமான கேசவபிள்ளை. அதன்பின் மூத்தவரான வேலப்ப பிள்ளை. அதன் பின் என் அம்மா.

பெரியம்மா எல்லா சாவுகளையும் பார்த்தார். கேசவபிள்ளை மாமாவின் சாவு அவருக்கு பெருத்த அடியாக இருந்தது. என் அம்மாவின் சாவும் பெரிய அளவில் பாதித்தது. பேசும்போதே தொண்டை இடறி கண்ணீர் மல்குவதுண்டு. அதன்பின் எதையும் பொருட்படுத்தாத ஒரு விலக்கம் அவரில் உருவானது. ஒரு கட்டத்தில் கோயில் தவிர எந்த இடத்திற்கும் செல்லாதவராக ஆனார். எந்த நல்ல, கெட்ட நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதில்லை. பேரர்கள், கொள்ளுப்பேரர்கள் பற்றிய செய்திகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வதுடன் சரி.

பெரியம்மாவின் வாழ்க்கையை ஒரு வெற்றி என்றும் நிறைவாழ்க்கை என்றும் சொல்லலாம். ஆனால் வாழ்க்கையின் பெரும்பகுதி போராட்டமாகவும் சென்றது. அவர் கணவர் பெரிய செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் எந்த வேலையும் செய்யாமல், சொத்தை அழித்து நாடோடியாகி மறைந்தார். பெரியம்மா தன் மகளுடனும் மகனுடனும் அண்ணனின் நிழலில் பிறந்தகத்திலேயே வாழவேண்டியவரானார்.

ஆனால் தமிழகம் போலன்றி கேரளத்தில் பெண்களுக்கு நிலவுரிமை இருந்தமையால் பெரியம்மா அனாதையாக இருக்கவில்லை. அவருக்கான சொத்துக்கள் இருந்தன. இல்லத்தில் இருந்தபடியே அவற்றை பராமரித்தார். விவசாயத்தை மேற்பார்வையிட்டார். நிலத்தின் வருமானத்தில் வாழவேண்டும் என்றால் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். ஒரு பைசாகூட சிந்தாமல் சேர்த்துக்கொண்டே இருக்கவேண்டும். அத்துடன் விழித்தெழுவது முதல் இரவு படுப்பது வரை கடும் உடலுழைப்பும் இருக்கும்.

பெரியம்மா தன் எட்டு வயதில் தன் அம்மா நட்டாலம் காளிவிளாகத்து வீட்டில் பத்மாவதியம்மாவை இழந்தார். அவர் அப்பா பரமேஸ்வர பிள்ளை இல்லப்பொறுப்பையோ விவசாயத்தையோ கவனிக்கத்தெரியாத ஒரு வெள்ளந்தி மனிதர், பழையபாணி அறிஞரும்கூட. இல்லப் பொறுப்பை அன்று 12 வயதான மூத்த மாமா வேலாயுதன் பிள்ளை ஏற்கவேண்டியிருந்தது. அந்த வயதிலேயே நட்டாலம் இல்லப்பொறுப்பை பெரியம்மா ஏற்றார். சமையல், வேளாண்மை மேற்பார்வை. ப்திருவிதாங்கோட்டில் வாழ்ந்த தன் பெரியம்மாவின் துணையுடன் பெரியம்மாவே தன் தம்பி தங்கைகளை வளர்த்தார். மறைந்த வயதை கணக்கிட்டுப்பார்த்தால் ஏறத்தாழ 90 ஆண்டுகள் பெரியம்மா குடும்பத்தலைவிப்பொறுப்பில் இருந்திருக்கிறார்.ஒரு நூற்றாண்டு!

பெரியம்மாவின் திருமணம் முடிந்தபின் அவர் உடன்பிறந்தார் மணமுடித்தனர். தங்கை, தம்பிகள் மணமுடித்துச் சென்றனர். அவர்களுக்கு குழந்தைகள் பிறந்து வளர்ந்தன. பெரியம்மாவின் மகள் பிரேமா அக்கா நாகர்கோயிலில் சுகாதாரத்துறை அதிகாரியான கோபாலகிருஷ்ணனை மணமுடித்துச் சென்றார். பெரியம்மாவின் இரு வாரிசுகளுமே வசதியான வாழ்க்கையை அடைந்தனர். பிரேமா அக்கா நாகர்கோயிலில் நிலைகொண்டார். மகன் கிருஷ்ணபிள்ளை பெங்களூரில் ஒரு லாரி நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமான தொழில்முனைவோர் ஆனார். பெரியம்மாவின் பொருளியல் நெருக்கடிகளெல்லாம் அவருக்கு அறுபது வயது அமைவதற்குள்ளாகவே முற்றிலும் இல்லாமலாயின.

தன் மகன் கிருஷ்ண பிள்ளையை பி.ஏ.படிப்பு படிக்கவைக்க வேண்டும் என பெரியம்மா கனவு கண்டார். பெரும் முயற்சியில் அந்த இலட்சியத்தை எட்டினார். அன்றெல்லாம் நட்டாலத்தில் இருந்து இரண்டு பேருந்துகள் பிடித்து மார்த்தாண்டம் வந்து கிறிஸ்தவ ( இன்றைய நேசமணி நினைவு ) கல்லூரியில் பயிலவேண்டும். என் அண்ணா கிருஷ்ண பிள்ளை தன் விசிட்டிங் கார்டில் கிருஷ்ணபிள்ளை பி.ஏ என போட்டிருப்பார். ‘பி.ஏ எல்லாம் அப்படி போடுவது வழக்கமில்லை, எம்.ஏ என்றால்தான் போடவேண்டும்’ என நான் ஒருமுறை சொன்னபோது பெரியம்மா சீற்றம் கொண்டார். “எனக்கு அது பெரிய விஷயம்…அந்த பட்டத்தை அவன் போட்டுக்கொண்டே ஆகவேண்டும்” என்று ஆணித்தரமாகச் சொன்னார். அது பெரியம்மாவின் வாழ்நாள் சாதனை.

நான் பெரியம்மாவை அவருக்கு 55 வயது இருக்கையில்தான் நேரில் சந்தித்தேன் என் அப்பாவுக்கும் அம்மாவின் குடும்பத்திற்கும் இருந்த பகையால் எங்களை அவர் நட்டாலம் பக்கமே விட்டதில்லை. 1982ல் நான் கல்லூரி போக ஆரம்பித்தபின் எவருக்கும் தெரியாமல் நட்டாலம் சென்று என் பெரியம்மாவைச் சந்தித்தேன். நான் வீட்டை நோக்கி நடந்து செல்லும்போது திண்ணையில் இருந்த பெரியம்மா என்னை கண்கள்மேல் கை வைத்து கூர்ந்து பார்த்தார். குழப்பமாக பார்த்துக்கொண்டே இருந்தார். சட்டென்று இறங்கி என்னை நோக்கி ஓடிவந்து அணைத்துக்கொண்டார்

நான் எவர் என்று சொல்வதற்கு முன்னரே “விசாலாட்சியின் மகனா? ராஜனா ஜெயனா?’ என்று கேட்டார். நான் “ஜெயன், இரண்டாமன்” என்றேன். கண்கலங்கி அழத்தொடங்கினார். “எப்போதாவது வருவாய் என்று தெரியும்…எவ்வளவு காலம் காத்திருந்தேன்!” என்றார். என்னை பெரியம்மா அதற்குமுன் பார்த்தது குமாரகோயிலில் ஒரு திருமணத்தில், எனக்கு 8 வயது இருந்தபோது.

அம்மாவின் பிறந்தவீட்டில் அம்மா இருபது வயதுப்பெண்ணாக இருந்தபோது ஒரு கையகல முகம்பார்க்கும் கண்ணாடியை வாங்கி சுவரில் தோண்டி பதித்து வைத்தார். புதுவீட்டின் சுவரை தோண்டியதற்காக மூத்த அண்ணா அம்மாவை கண்டித்தார். அம்மா மூன்றுநாட்கள் உணவில்லாமல் அடம்பிடிக்க இறுதியில் மூத்த அண்ணா வந்து அம்மாவிடம் மன்னிப்பு கோரினார். மூத்த அண்ணாவுக்கும் என் அம்மாவுக்கும் இடையே இருபது வயது வேறுபாடுண்டு.

அந்நிகழ்வைச் சொன்ன பெரியம்மா “அப்படிப்பட்ட திமிர்கொண்ட யட்சி உன் அம்மா… “ என்று சொல்லி அந்த சிறு கண்ணாடியை காட்டினார். கொஞ்சம் ரசம் உதிர்ந்தாலும் அந்தக் கண்ணாடி அங்கேதான் இருந்தது. நான் அதில் என் முகத்தைப் பார்த்தேன். என் அம்மாவை பெரியம்மா யட்சி என்றுதான் சொல்வார். அழகும் அபாரமான கூர்மையும் அறிவுத்திமிரும் கொண்ட பெண். நட்டாலம் போன்ற ஒரு சிற்றூரில் இருந்துகொண்டே மூன்றுமொழிகளில் இலக்கியம் வாசிப்பவர்.

அன்று அம்மாவிடம் பெரியம்மாவைப் பார்த்ததைப் பற்றிச் சொன்னேன். அம்மா வீட்டின் வெளியே ஒட்டுத்திண்ணையில் வழக்கம்போல கால்நீட்டி இருண்ட வானத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். சுற்றிலும் இரவின் ரீங்காரம்.நான் அந்தக் கண்ணாடியைப் பற்றிச் சொல்லி முடித்ததும் என்னை தடவிக்கொண்டு பேசாமல் அமர்ந்திருந்தார். பின்னர் “ஒருமுறை அந்த வீட்டு திண்ணையில் போய் அமரவேண்டும். அக்கச்சியின் பேச்சை கேட்கவேண்டும். அதன்பின் செத்தாலும் சரி” என்றார். முகத்தில் கண்ணீர் இல்லை. ஆனால் குரலில் அக்கண்ணீர் இருந்தது

1986 ல் காளிப்பிள்ளை மாமா ஒரு விபத்தில் சிக்கி கால்முறிந்து மருத்துவமனையில் இருந்தபோது அம்மா அவரைப் பார்க்கச் சென்றார். அங்கே தன் அக்காவைப் பார்த்தார். பார்த்ததாக ஒரே ஒரு சொல் மட்டும் என்னை நேர்நோக்காமல் சுவர் பார்த்துச் சொன்னார். என்ன நடந்தது என்று சொல்லவே இல்லை. அடுத்த ஆறுமாதத்தில் அம்மா தற்கொலை செய்துகொண்டார். அவர் ஏங்கியதுபோல் பிறந்தவீட்டின் அந்தத் திண்ணையில் அவர் அமரவே இல்லை. அந்த சிறு கண்ணாடியில் முகம்பார்க்கவே இல்லை.

பின்னர் வீடு பழுதுபார்க்கப்பட்டபோது அந்தக் கண்ணாடி அங்கிருந்து அகன்றது. நான் அந்த வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் அந்தக் கண்ணாடி அங்கிருக்கிறதா என்றுதான் பார்ப்பேன். பெரியம்மா தன் மகனுடன் பெங்களூரில் முதுமையில் இருந்தார். பின்னர் தன்னுடைய அந்த வீட்டுக்கே வந்தாகவேண்டும் என அடம்பிடித்து வந்துசேர்ந்தார். கிருஷ்ண பிள்ளை அண்ணா ஒரு வேலைக்காரியை ஏற்பாடு செய்து எப்போதும் உடன் தங்க வைத்தார். பெரியம்மா தனிமையில் மகிழ்ச்சியாக அங்கே இருந்தார்.

சில நாட்களுக்கு முன் அஜிதனின் திருமணத்திற்கு அழைப்பு கொடுக்க பெரியம்மாவை பார்க்கச் சென்றேன். என்னை முதன்முதலில் சந்தித்த நாளைப்பற்றிச் சொல்லிச் சிரித்தார். என்னை அடையாளம் கண்டு ஓடிவந்ததைச் சொல்லி மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே இருந்தார். எந்த நிகழ்வுக்கும் செல்வதில்லை என்று சொல்லி அஜிதனை வாழ்த்தினார்.

அன்று திரும்பி வரும்போது பெரியம்மா சில மாதங்களில் நூறாண்டை கடந்துவிடுவார் என்று சொன்னேன். ’இல்லை தொண்ணூற்றெட்டுதான் ஆகிறது’ என்றார் அண்னா. நூறாண்டு என்று சொல்ல ஒரு தயக்கம். அது ஒரு முடிவுபோல. ’இன்னும் இரண்டு ஆண்டு இருப்பார், நூறாண்டு காணாமல் மேலே போகமாட்டா’ர் என்று சொன்னால் அவர் இன்னும் வாழ்வார் என ஓர் எதிர்பார்ப்பு

பெரியம்மா முன்பெல்லாம் ‘என் பிள்ளை விசாலாட்சி’ என என் அம்மாவைப் பற்றிச் சொல்லும்போதே அழுவார். பெரியம்மாவை விட ஏழுவயது இளையவர் என் அம்மா. ஆனால் பெரியம்மாவே அம்மாவாக இருந்து என் அம்மாவை வளர்த்தார். ஏழுவயதான அம்மாவின் மகள் என் அம்மா. ஆனால் பின்னர் அம்மாவைப் பற்றிச் சொல்லும்போது பெரியம்மா சாதாரணமாக ‘அவள் விதி அது” என்றார். எதனாலும் பாதிக்காதவராக, எல்லாவற்றையும் கருவறைக்குள் நின்று வெறுமே பார்த்துக்கொண்டிருக்கும் கற்சிலைத்தெய்வம் போல இருந்தார்.

இங்குள்ள எல்லாமே முற்றிலும் பொருளிழந்துபோவதைக் காண்பது வரை வாழ்வதுதான் நூறாண்டு அகவை நிறைவு என்பது.

முந்தைய கட்டுரைபொன் கோகிலம்
அடுத்த கட்டுரைஇரண்டாம்நிலை தத்துவ வகுப்புகள்