வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
பல்வேறு மானுட வாழ்வுகளை காட்சிப்படுத்துகின்றது. வாசிக்கும் வாசகன் புனைவின் வழியே அத்தனை வாழ்வினை சந்தித்து மீள்கின்றான். அறம், பொருள்,இன்பம், வீடு என்ற வாழ்வின் நான்கு முக்கியமான இலக்குகளையும் வெண்முரசு பல கோணங்களில் அனுகுகின்றது. எதற்கும் நேரடியாக விடை கொடுப்பதில்லை, வாசகனிடத்து கேள்வியை வைத்து அணுகுகின்றது. வாசகன் தன்னுள்ளே self-inquiry அளிக்க இடம் கொடுக்கின்றது.
உதாரணத்துக்கு அர்ஜுனனுடன் வெண்முரசு வழியே அகப்பயணம் செய்பவர் அனைத்து அம்புகளையும் சம்பாதிக்க பாரத வர்ஷம் முழுதும் நடக்க வேண்டும். அகங்காரம் உடைய காட்டாளனிடம் அழ வேண்டும்,கொடுத்த வாக்கினை காப்பாற்ற தோழன் இளைய யாதவனுடன் களம் காண வேண்டும், அபிமன்யுவை இழந்து அழ வேண்டும், பழி வாங்க களம் கண்டு ஜெயத்ரதன் தலை கொள்ள வேண்டும், சிகண்டியின் பின் நின்று தாத்தாவான பீஷ்ம பிதாமகரை அம்பில் படுக்க வைக்க வேண்டும், உலூபி, சுபத்திரை, சித்ராங்கதை, திரௌபதி என அனைவருடனும் காதலில் விழ வேண்டும். அரிஷ்ட நேமியுடன் குதிரை பயணம் செய்ய வேண்டும், பலராமனின் கோபத்துக்கு ஆளாக வேண்டும், இந்திர பிரஸ்தம் என்னும் நகரை உருவாக்க வேண்டும், காண்டவ வனம் எரிக்க வேண்டும், சகோதரன் பகடையாட கட்டிய துணியுடன் அத்தனையும் விட்டு விட்டு காட்டுக்கு செல்ல வேண்டும், பேராண்மை மறைத்து நடனம் கற்பிக்க வேண்டும். முடிவில் வீடுபேறுக்கு தவமாய் தவமிருந்து ஈட்டிய அம்பினை கீழே வைத்து விட்டு செல்ல வேண்டும். அத்தனையையும் ஓரே வாசிப்பில் வாசிக்கையில் feel-good உணர்வுகள் உடைந்து நொறுங்கி போகும்.
அறம், பல்வேறு அற நிலைகளின் மோதல் என்பதால் வரும் சங்கடங்கள், பொருள் வழியாக அடையும் வெற்றிகள், கல்விகள், செல்வங்கள், அவை வருவதும், செல்வதும் என இருக்கும் தன்மை, தைரியம், அறிவு , யோகம், காதல் வழி அடையும் இன்பம் என அனைத்துக் காட்சிகளும் வெண்முரசில் வரும்
காவியங்களின் வாசிப்பின் முடிவில் உணர்வதை வெறுமை என சொல்லலாமா? வெறுமை என்பது நகை , அழுகை , இளிவரல் , மருட்கை , அச்சம் , பெருமிதம் , வெகுளி , உவகை , அமைதி என்பது நவரசங்களில் ஓன்றாக சொல்லப்படவில்லை. நல்லதொரு காவியம் படித்து முடிக்கையில் அமைதி சுவையை அளிக்கின்றது. மற்ற அனைத்து ரசங்களையும் காவியம் தன்னில் பொருத்தி உள்ளது. இறுதியில் அவற்றின் வழியே அது அமைதி சுவையை அளிக்கின்றது. ரசவாதம் சொல்லும் அமைதி என்பது “feel good” அல்லது “self-congratulatory” ஆக அன்றாடம் நாம் பிறருக்கு சொல்லும், நம்மிடம் பிறர் சொல் உருவாக்கும் ரசத்துக்கு மாற்றானது. அமைதி என்பதை நேரடியாக காவியங்கள் வழியாக மனக்காட்சியில் உருவாக்கிக் கொள்கையில் அதன் பிரமாண்டம் ஒரு நிலைக் குலைவை உருவாக்கும் வல்லமை உடையது.
வாழ்வினை அலகிலா பெரு ஆடலாக பார்க்க காவியம் கோருகின்றது. ஆடல் என்பது பொய்யான எதிர்பார்ப்புகளை மட்டும் முன்வைக்கவில்லை. மாறாக ஆடலில் நல்லதும், கெட்டதும் என நாம் அறியும் அனைத்தும் உண்டு. தன் கதைகளின் வழியே காவியம் நடந்த, நடப்பன அனைத்தினையும் அசைவில்லா மன உறுதியுடன் பெரு விளையாட்டாக காணும் வல்லமையை வாசகன் முன் வைக்கின்றது, அதனுள் அறம்,பொருள், இன்பம் என்னவென சொல்கின்றது. இனி எல்லாமே நலம், இனி இனிமை மட்டுமே என்ற பொய்யை சொல்வதில்லை. அது கேட்பவருக்கும் , சொல்பவருக்கும் பொய்யென தெரியும். மாறாக காவியம் இவ்வாறு நடந்தது என குரு வம்சத்தின் வாழ்வினை பெருந்திரையில் விரித்து காவியமாக அமைக்கின்றது. அதில் வாழ்வின் எல்லா சாத்தியங்களுமே காட்சிகளாக வருகின்றது. அதன் முழுமை அதை கேட்டவருக்கு, வாசித்தவருக்கு வாழ்வினை கையாளும் வல்லமையை அளிக்கின்றது. வல்லமை கொள்வதே வாழ்வின் வழி அல்லவா?