சிற்றிதழ்க் கவிதைகளை வாசிப்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அனுபவம் இருக்கும். கவிதைப்பக்கங்களில் கவிஞர்களின் பெயர்கள் பக்கவடிவமைப்பின் இயல்பால் உடனே கண்ணில் படாதபடி அச்சிடப்பட்டிருக்குமென்றால் எந்தக் கவிதை எவர் ஆக்கியது என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. பலசமயம் ஒருவர் கவிதையை இன்னொருவர் கவிதையாக எண்ணி விடுவோம். காரணம், எல்லா கவிதைகளும் மொழியிலும் அமைப்பிலும் கூறுமுறையிலும் ஒன்றே போலிருக்கின்றன.
நவீனத்தமிழ்க்கவிதை நவீனத்துவக் கவிதையாகவே இருக்கிறது என்பது என் எண்ணம். தனிமனித அவ மன ஓட்டங்களை தத்துவார்த்தமான நிலையில் இறுக்கமான மொழியில் படிமங்களை பயன்படுத்திச் சொல்லும் கவிதைகளையே நாம் மீண்டும் மீண்டும் கண்டுகொண்டிருக்கிறோம். இதனாலேயே இன்று நம்மால் வசித்த கவிதைகளை நினைவில் நிறுத்திக் கொள்ள முடிவதில்லை. எவருடைய கவிதை எது என்று கூற முடிவதில்லை.
நவீனத் தமிழ் புனைகதை நவீனத்துவ இறுக்கங்களைத்தாண்டி வெகுதூரம் நடந்து வந்தபின்பும் கவிதை தன் இடத்திலேயே தத்துவக்குழப்பங்களை சொல்லடுக்குகளும் படிமங்களுமாக சமைக்கும் ஓயாத ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. ஓர் அங்கதத்தையோ நுண்சித்தரிப்பையோ நம் கவிதைகளில் காண்பதே அரிதாக இருக்கிறது.
இச்சூழலில் புத்தம்புதிய கவிமொழியுடன் வந்த முகுந்த் நாகராஜன் தமிழில் எப்போதும் பரவலாக விரும்பப்படும் இளம்கவிஞர். நவீனத்துத்துக்குப் பிந்தைய கவிதை என்று சொல்லத்தக்கவை அவரது கவிதைகள். தத்துவச் சுமையோ, படிமத்தொழில்நுட்பமோ, தனிமனித மன அவசமோ, அதீத மொழி இறுக்கமோ இல்லாத எளிமையான நேரடியான கவிதைகள் அவை.
இன்று உலகமெங்கும் நவீனக் கவிதையின் முக்கியமான கூறாக மாறியிருக்கும் ‘நுண்சித்தரிப்பு’ தான் அவரது கவிதைகளின் சிறப்பு. முகுந்த் நாகராஜன் சகமனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு துளியை தன் கவித்துவச் சட்டகத்துக்குள் பிடித்துவிடுகிறார். பெரும்பாலும் குழந்தைகளின் உலகம். அந்த நுண்சித்தரிப்பு தன் ஆழ்பிரதி வழியாக வாழ்க்கையின் நுட்பமான தளங்களை, வாழ்க்கை வழியாக ஓடிச்செல்லும் ஆழ்ந்த அர்த்தங்களை நமக்குக் காட்டுவதாக உள்ளது.
இத்தகைய கவிதை ஒரு குறிப்பிட்ட வகையான மொழி-வடிவப் பயிற்சியால் அடையப்படுவது அல்ல. வாழ்க்கையின் கரையில் கூர்ந்த நுண்ணுணர்வுடன் சதா காத்திருத்தல் ஒன்றையே கவிஞன் செய்ய வேண்டியிருக்கிறது. எதிராபாராத கணத்தில் ஒரு தருணம் திறந்துகொண்டு கவிதையைக் காட்டிக் கொடுக்கிறது, அவ்வளவுதான்.
முகுந்த் நாகராஜனின் பிரகாசமான உலகம் பிரியங்களின் மர்மங்களும் உறவுகளின் புதிரான ஆழங்களும் வாழ்க்கை என்னும் தற்செயல்பிரவாகத்தின் பேரர்த்தங்களும் நிரம்பியது. குறிப்பாக சிறுமிகள் மேல் அவரது தந்தைமை நிரம்பிய மனம் கவியும் விதம் தமிழ்க் கவிதையின் அழகிய நிகழ்வுகளில் ஒன்று
நீர் தெளித்து விளையாடுதல்
முன்பின் பழக்கம் இல்லாத
பயண வழி உணவுவிடுதியில்
சாப்ப்பிட்டுவிட்டு
கைகழுவப்போனேன்
சாதாரண உயரத்தில்
இரண்டு வாஷ் பேசின்களும்
மிகக்குறைந்த உயரத்தில்
ஒரு வாஷ்பேசினும் இருந்தன
கை கழுவும்போது
காரணம் தெரிந்துவிட்டது
குள்ள வாஷ்பேசின் முன்
இல்லாத குழந்தையின் மேல்
செல்லமாக தண்ணீர் தெளித்து
விளையாடிவிட்டு
விரைவாக வெளியே வந்துவிட்டேன்
முகுந்த் நாகராஜன் வலைப்பூ
http://veenaapponavan.blogspot.com/
கவிதைகள் –விமரிசகனின் சிபாரிசு
கேள்வி பதில் – 72 [கடந்த ஒரு வருடத்தில் வந்த கவிஞர்களை தயவுசெய்து பட்டியல் இடமுடியுமா]