அஜிதன் தன்யா- கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

நலம்தானே?

சென்னை ஹயாத் ரெஸிடென்ஸி  ஓட்டலில் நடைபெற்ற அஜிதன்- தன்யா திருமண வரவேற்புக்குச் சென்னையில் வந்திருந்தேன். ஓர் எளிய வாசகரான என்னை நினைவு வைத்திருந்து அழைத்தமைக்கு நன்றி. என்னுள் இருந்த பழையகால பத்திரிகையாளன் கண்விழித்துக் கொண்ட தருணம். Star studded என்பார்கள். அப்படிப்பட்ட விழா. நான் வியந்து பார்த்த சினிமா ஆளுமைகள், இலக்கிய நட்சத்திரங்கள், உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

மணி ரத்னம், சங்கர், மிஷ்கின், லிங்குசாமி, விஜய் சேதுபதி, ஏ.ஆர்.முருகதாஸ், வசந்த், வசந்தபாலன், பாலா, கௌதம் மேனன், நடிகர் குமரவேல், மித்ரன் ஜவகர், சுப்ரமணிய சிவா, சீனு ராமசாமி, இயக்குநர் தனா, இயக்குநர் கிங்ஸ்லின் ஆகியோரைப் பார்த்தேன்.

எழுத்தாளர்கள் சு.வெங்கடேசன், சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், இரா.முருகன், பா.ராகவன், யுவன் சந்திரசேகர், இளங்கோ கிருஷ்ணன், அமிர்தம் சூரியா, லக்ஷ்மி சரவணக்குமார், சுகா என்று ஏராளமான தெரிந்த முகங்கள். ஆட்சிப்பணி அதிகாரிகளிலேயே நாகராஜன் எனக்கு தெரிந்தவர். விசாலாட்சி, செங்கதிர், சமீரன் ஆகியோரை அறிமுகம் செய்துகொண்டேன். நடிகர் சிவகுமாரை அடையாளமே காணமுடியவில்லை. அவ்வளவு இளமையாக இருந்தார்.

மிகச்சிறப்பான உணவு. இசைநிகழ்ச்சி என்று காதை துளைக்கும் சந்தடி இல்லாமலிருந்தமையால் அனைவருடனும் ஓரிரு வார்த்தை பேச முடிந்தது. அனைவரையும் சந்திக்கவும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவும் முடிந்தது. ஆடம்பரமே இல்லாமல் ஓர் இனிய குடும்ப நிகழ்வாக இருந்தது.

நீங்களும் கோட் போட்டு பிரமாதமான தோற்றத்துடன் இருந்தீர்கள்.

மனமார்ந்த வாழ்த்துக்கள்

ராஜ்சேகர்

அன்புள்ள ராஜசேகர்,

நன்றி.

சென்னை விழா சென்னையைச் சேர்ந்த என் நண்பர்களுக்காக. பொதுவாக எனக்கு ஆடம்பரங்களில் ஈடுபாடில்லை. ஆனால் சென்னை சினிமா ஆளுமைகள் கலந்துகொள்ளவேண்டும் என்றால் ஒரு நட்சத்திர விடுதியில்தான் விழாவை நடத்த முடியும். ஆகவே ஹயாத் ஓட்டலில் ஏற்பாடு செய்தேன். இடம் தெரிவு செய்தது முதல் நடத்தி முடிப்பது வரை எல்லாமே அகரமுதல்வன், குறிஞ்சிபிரபா உள்ளிட்ட நண்பர்கள்தான்.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஹரணி வணக்கமுடன்.

இப்போதுதான் ஐயா வளவதுரையன் அவர்களின் புலனத்தில் அஜிதன் திருமண வரவேற்புக் குறித்த  தகவல் பார்த்தேன். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. என் மகளுக்கும் மகனுக்கும் திருமணம் முடித்தபோது ஒரு தகப்பனாக என்ன பெருமையை உணர்ந்தேனோ அதையே தகப்பனாகிய உங்களிடமும் உணர்கிறேன்.

எழுத்தில் எல்லா உச்சங்களையும் அடைந்துவிட்டீர்கள். தொடர்ந்து உங்களைப் பார்த்து வருகிறேன். சமீபத்தில் அந்த முகில் இந்த முகில் வாசித்தேன். நிறைவாக இருந்தது. இன்னும் வெண்முரசு வாசிக்கவில்லை. நிறைய பக்கங்களை வாசிக்க அலுப்பாக உள்ளது. என்றாலும் வாசித்துவிடுவேன்.

நான் சொல்ல வந்தது எழுத்தைத் தாண்டி இப்போது உங்களின் முழுமை என்று நான் நினைப்பது அஜிதனுக்கு அமைத்து தந்திருக்கும் வாழ்வைத்தான். புகைப்படத்தில் கோட் அணிந்து நிற்கிற உங்களிடம் அந்த முழுமையைப் பார்த்தேன்.

அஜிதன் மற்றும் மருமகள் வாழ்வில் எல்லா வளங்களையும் குறைவறப் பெற்று நீடு வாழ என் அகங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்

ஹரணி

தன்யாவின் பெற்றோர். திரு ரமேஷ், திருமதி சுந்தரி ரமேஷ், பாலாஜி

அன்புள்ள ஹரணி

வாழ்த்துக்களுக்கு நன்றி.

மெய்யாகவே ஓர் இல்லத் திருமணம் அளிக்கும் நிறைவை அறிகிறேன். இத்தனை நட்பும் சுற்றமும் உடனிருப்பதை கண்களால் நேரில் காண்பது மகத்தான விஷயம்

ஜெ

முந்தைய கட்டுரைபுத்தகமும் விக்ரகமும்
அடுத்த கட்டுரைமாமயிடன் செற்றிகந்தாள் -கடிதம்