ஞானம் என்பது ஒரு நம்பிக்கை மட்டும்தானா?

அன்புள்ள ஜெ,

ஞானம்அடைதல் என்பது ஏன் ஒரு நம்பிக்கையாக இருக்கக் கூடாது?

ஞானம் அடைந்ததாகச் சொல்லப்படும்ஞானிகளைநம் சமூகம் கொண்டாடுவதைக் காணும் போது ஓர்ஆன்மீக மேட்டிமைவாதம்” (spiritual hegemony) தவிர்க்க இயலாததாகத் தெரிகிறதே?

அன்புடன்,

கிருஷ்ணமூர்த்தி

அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,

சரி, அறிவை  அடைதல் ஏன் ஒரு நம்பிக்கையாக இருக்கக்கூடாது? அறிஞர்கள் மதிக்கப்படுகிறார்கள். அறிஞர்கள் ஆணவத்துடன் இருப்பதும் காணக்கிடைக்கிறது. 

ஒரு பாமரரின் பார்வையில் ஆராய்வோம். ஓர் அறிஞனின் அறிவை மதிப்பிடுபவர்கள் இன்னும் சில அறிஞர்கள்தானே ஒழிய பொதுமக்கள் அல்ல. எந்த அறிஞனையும் பொதுமக்களில் பெரும்பான்மை ஏற்றுக்கொள்கிறதா என்று நாம் பார்ப்பதில்லை. அறிஞர்களே சேர்ந்து ஒருவரை அறிஞர் என்கிறார்கள். இன்னொருவரை அறிஞர் அல்ல என்கிறார்கள்.

சரி, அவர்களனைவருமே ஒன்றாகச் சேர்ந்து ஒருவரை அறிஞர் என்கிறார்களா என்றால் அதுவுமில்லை. ஒருவரை மாபெரும் அறிஞர் என்று பலர் சொன்னால்கூட அவர்களுக்குள்ளேயே சிலர் அவரெல்லாம் அறிஞரே அல்ல என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.  வெளியே நிற்பவர்கள் எந்த முடிவையும் எடுக்க முடிவதில்லை.

கலை என்பதே ஒரு நம்பிக்கையாக ஏன் இருக்கக் கூடாது? ஒரு கலைஞர் கொண்டாடப்படுவது அவரைச் சார்ந்த ஒரு கூட்டத்தால்தானே?  அதற்காக அவருக்கு பெரும் பணம் வந்துசேர்கிறது. அவருடைய கலையை ரசிக்கும் கொஞ்சபேர் அவரை பெரும் கலைஞர் என்கிறார்கள். இன்னொரு கூட்டம் அவரை கலைஞர் அல்ல என்று மறுக்கிறது.

ஒரு மேடையில் ஒருவர் அமர்ந்து ஒரு மரத்தாலான பெட்டியில் இழுத்துக் கட்டப்பட்ட கம்பிகளை சுண்டி ஒலியெழுப்பிக் கொண்டே இருக்கிறார். சுற்றி இருப்பவர்கள்அடாடா! அற்புதம்! இது மாபெரும் இசை. இவர் மாபெரும் இசைமேதை!” என்கிறார்கள். இசையறியாத ஒருவருக்கு இது ஒரு ஒருவகையான கூட்டுப்பாவலாவாகத்தானே தோன்றும். ‘என்னடா ஏமாத்துறீங்க? நானும்தான் கேட்டேன். எனக்கு ஒண்ணுமே தோணலையே…’ என்றுதானே சொல்வார்?

ஓர் அறிஞரையோ கலைஞரையோ அந்த அறிவுத்துறையை நாமே அறியாமல், கலையை நாமே ரசிக்காமல் மதிப்பிட முடிவதில்லை. எண்ணிப்பாருங்கள், புத்தகமே வாசிக்காத ஒருவரால் தமிழகத்தில் இன்றுள்ள நல்ல எழுத்தாளர் எவர் என்று எப்படி சொல்ல முடியும்? யார் பெயர் அடிக்கடி ஊடகங்களில் வருகிறதோ அவரே நல்ல எழுத்தாளர் என்று அவர் சொல்வார். அது பலசமயம் அபத்தமாக இருக்கும். 

அன்பு, நீதியுணர்ச்சி உட்பட எல்லா விழுமியங்களையும்  எல்லாமே அதைப்போல ஒரு நம்பிக்கையாக மட்டுமே இருக்கலாமே. ஏனென்றால் இவையெல்லாம் அகவயமானவை. இவற்றுக்கு புறவயமான அளவுகோல்கள் இல்லை. இவற்றை அளந்து மதிப்பிட முடியாது. வரையறை செய்ய முடியாது. நிரூபிக்க முடியாது. 

ஆனால் நம் வாழ்க்கையே இவற்றை நம்பித்தான் நடந்துகொண்டிருக்கிறது. இவை உண்மையில் இல்லை என்றால் நம்மால் ஒருநாளை கடத்த முடியாது. ஒரு முறை தெருவிலிறங்கி நடக்கவும் முடியாது. நாம் ஒவ்வொருவருக்கும் நமக்கான அறிவு, நமக்கான கலை, நமக்கான விழுமியங்கள் உண்டு.

அறிவு, கலை, விழுமியங்கள் இவை அவற்றை  அறிபவர்களாலும் உணர்பவர்களாலும் மட்டுமே தங்கள் இருப்பை நிறுவிக்கொள்ளக்கூடியவை. உணராதவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் அவை இல்லாதவைதான். 

இதைநோக்கர்வட்டம்என்பார்கள். peer circle என்பார்கள். அறிவியல், சட்டம், பொருளியல் போன்ற நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் ஏராளமான பயனுறு தளங்களில் கூட நோக்கர்வட்டம்தான் பல அடிப்படைகளை தீர்மானிக்கிறது. அதற்கு வெளியே இருப்பவர்களுக்கு அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள், ஏன் முடிவெடுக்கிறார்கள் என்றே தெரிந்துகொள்ள முடியாது.

நோக்கர்வட்டம் எப்படி உருவாகிறது? அதற்கு ஏதாவது விதிகள் உண்டா? ஏதாவது கட்டமைப்பு உண்டா? அதுவும் இல்லை. அது ‘தானாகவே’ திரள்கிறது. ஒரு நோக்கர் வட்டம் அதுவாகவே தன்னை திரட்டிக்கொள்கிறது. அதில் சிலரை சேர்க்கிறது. சிலரை சேர்ப்பதில்லை. சிலரை வெளியே தள்ளவும் செய்கிறது. அதிலுள்ளவர்கள் பொதுவாக ஒருவரை அதற்குள் இருப்பவர் என்று ஏற்றுக்கொள்வதே அதன் செயல்முறை.

அந்த நோக்கர் வட்டம் கல்வித்துறை, சட்டத்துறை போன்றவற்றில் ஓர் அமைப்பாக அல்லது குழுவாக கூடி வெளிப்படையாக விவாதித்து முடிவெடுக்கிறது. ஆனால் இசை, தத்துவம் போன்றவற்றில் அப்படி ஒரு நோக்கர்வட்டம் இருப்பதே வெளியே தெரியாது. மண்ணுக்குள் வேர்போல அது இருக்கும். அதுதான் முடிவெடுக்கும், ஆனால் திட்டவட்டமாக யார் எங்கிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

உதாரணமாக, எம்.டி.ராமநாதன் மாபெரும் இசைமேதை என எவரும் கூடி முடிவெடுக்கவில்லை. எந்த அமைப்பும் தீர்மானம் போடவில்லை. அது காலப்போக்கில் தானாகவே முடிவாகியது. ஆங்காங்கே எழுதப்பட்ட உதிரி கருத்துக்களே, ஆங்காங்கே பேசப்பட்ட அபிப்பிராயங்களே அதை முடிவு செய்தன.  அக்கருத்துக்களில் இருந்த  மதிப்பீடு அதேபோன்ற பிறரால் ஏற்கப்பட்டது. ஏற்கவைக்கும் தன்மை அக்கருத்துக்களில் இருந்தது, அவ்வளவுதான். அதை ரசனைக்கூர்மை, தர்க்கபூர்வத்தன்மை எனறெல்லாம் சொல்லலாம். அவற்றைச் சொன்னவர்கள், ஏற்றவர்கள் அடங்கியதே நோக்கர் குழு.

நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும் ஓர் அடிப்படையைத் தகர்க்கவே இதைச் சொன்னேன். இங்கே பொது விவாதங்களில் ஏதேனும் ஒரு மதிப்பீடு, அல்லது கருத்து முன்வைக்கப்பட்டதுமே நாலைந்துபேர் பாய்ந்து வந்து “இதை யார் முடிவு செய்தது? இதைச் சொல்ல இவர்களெல்லாம் யார்? இப்படிச் சொல்ல என்ன ஆதாரம்? இதற்கெல்லாம் ஏதாவது கணக்கெடுப்பு உண்டா?” என்பார்கள்.சிலர் “இதையெல்லாம் மக்கள் முடிவெடுக்கவேண்டும்” என்பார்கள். இன்னும் சிலர் “இதெல்லாம் இப்போது சொல்ல முடியாது. காலம்தான் சொல்லவேண்டும்” என்பார்கள்.

அறிவுத்துறைகள், கலைத்துறைகள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அடிப்படையே தெரியாத முழுமையான அறியாமையில் இருந்து வருபவை மேற்கூறிய வரிகள். அவற்றில் ஏதேனும் ஒன்றைச் சொன்னால்கூட சொல்பவர் பாமரர் என்றுதான் பொருள், நான் அவரிடம் மேற்கொண்டு எதையுமே விவாதிக்க மாட்டேன். அவருக்கு எந்த விவாதத்திலும் இடமில்லை, ஏனென்றால் நோக்கர் வட்டம் என ஒன்றிருப்பதையே அறியாத அவருக்கு அதற்குள் நுழைவு அனுமதியே இல்லை.

பாமரர் அவர்கள் அறிந்து நம்பிக்கொண்டிருக்கும் எல்லா கருத்துக்களுமே ‘உண்மை’கள் என நினைக்கிறார்கள். அவை ‘நிரூபணமானவை’ என்று நம்புகிறார்கள். ‘உலகமே’ அவற்றை ஏற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்கள். நிரூபண உண்மை (Empirical truth) என்பதற்கும் ஒரு கருத்துக்கும் (Concept) இடையேயான வேறுபாடே அவர்களுக்குத் தெரியாது. தங்கள் வாழ்க்கையில் தாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் பெரும்பாலான நிலைபாடுகள் கருத்துக்களே ஒழிய நிரூபண உண்மைகள் அல்ல என்று அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

ஆகவேதான் பாமரர் கருத்துக்கள் மேல் மூர்க்கமான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அவை மறுக்கப்பட்டால் பெரும்சீற்றம் அடைகிறார்கள். மறுப்பவர்களை எதிரி என நினைக்கிறார்கள். அவர்கள் மேல் வெறுப்பும் காழ்ப்பும் கொண்டு தாக்குகிறார்கள். அக்கருத்துக்கள் அவர்களே சிந்தனை செய்து அடைந்தவை அல்ல என்றும், அவர்களுக்கு அவை அளிக்கப்பட்டவை என்றும் அவர்கள் உணர்ந்திருப்பதில்லை. அவர்கள் அக்கருத்துக்களை ஒட்டியே தங்கள் பார்வையை உருவாக்கிக்கொண்டிருப்பதனால் அக்கருத்துக்களே அவர்களின் வாழ்வென அமைந்து , உலகமெனச் சூழ்ந்திருக்கும். அக்கருத்துக்களை மறுப்பதென்பது அவர்களின் உலகையே நாம் நிராகரிப்பதுதான்.ஆகவேதான் அச்சீற்றம்.

அந்தக் கருத்துக்கள் பெரும்பாலும் மதம், அரசியல் ஆகிய அதிகார அமைப்புகளால் அவர்களுக்கு அளிக்கப்பட்டவையாக இருக்கும். பெரும் பிரச்சார வல்லமையுடன் கொண்டுசென்று சேர்க்கப்பட்ட கருத்துக்களே பெரும்பாலான பாமரரின் கருத்துக்களாக அமைந்திருக்கும். அல்லது அவை மெல்ல மெல்ல வாழ்க்கையில் ஊறி, அன்றாடமென ஆகி, மரபுவழியாக வந்துசேர்ந்த கருத்துக்களாக இருக்கும்.அவை உண்மையில் அந்தப் பாமரருக்கு தெரியவே தெரியாத  நோக்கர் குழுக்களால் உருவாக்கப்பட்டவை என்பதை அவர் அறிவதே இல்லை. 

கருத்துருவங்கள் (Concepts) எல்லாமே அதற்குரிய அறிவுத்தளத்தில், அதற்குள் செயல்படுபவர்களால் மட்டுமே உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப் படுபவை. அவை அந்த அறிவுத்தளத்திற்குள் மட்டுமே விவாதிக்கப்படுகின்றன, ஏற்கவோ மறுக்கவோ படுகின்றன. அவை உருவாகி நிலைகொள்வதில் ஒரு முரணியக்கம் (Dialectics) உள்ளது. அதாவது ஏற்பும் மறுப்பும் மோதி ஒரு பொதுப்புரிதலாக காலப்போக்கில் அவை நிலைகொள்கின்றன. அந்த நோக்கர்குழுவில் இருந்து அவை பொதுச்சமூகத்திற்குச் சென்று சேர்கின்றன.அப்படித்தான் பாரதியும், புதுமைப்பித்தனும் அரைநூற்றாண்டில் நவீனத் தமிழிலக்கியத்தின் தலைமகன்களாக ஆனார்கள்.

எல்லா கருத்துக்களும் எல்லா விழுமியங்களும் அவ்வாறே உருவாகி நிலைகொள்கின்றன. ஒருவர் ஒரு கருத்தை முன்வைக்கையில் அந்த நோக்கர் குழுவுக்குள் அவர் செல்கிறார். நோக்கர் குழுவால் அவர் ஏற்கப்படலாம், அல்லது நிராகரிக்கப்படலாம். ஒருவர் ‘சாண்டில்யனே தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்’ என்று சொன்னால் நான் அவரிடம் ‘சொல்ல நீ யார்?’ என்று சண்டை போடமாட்டேன். ‘உங்கள் தரப்பை முன்வையுங்கள்’ என்பேன்.

அதைச் சொல்பவர் புதுமைப்பித்தன் முதல் நவீனத் தமிழிலக்கியத்தை அறிந்தவராக இருந்தால், உலக இலக்கிய அறிமுகம் கொண்டவராக இருந்தால், அவருடன் விவாதிப்பேன். அவ்வாறு அவர் இல்லை என்றால் அவர் தரப்பை முழுமையாகவே நிராகரித்துப் பேசாமலிருப்பேன். ஏனென்றால் அவர் நோக்கர் குழுவுக்குள் இல்லை. அப்படி வெளியே பல்லாயிரம் கருத்தும் தரப்பும் இருக்கலாம். கருத்துத்தளத்தில் அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. அவர் தன்னை தயாரித்துக்கொண்டு, தன் தகுதியை ஈட்டிக்கொண்டு வந்து கருத்து சொல்லவேண்டும்.

ஓர் அறிவுத்தளக் கருத்து வெவ்வேறு நோக்கர் குழுக்களால் எதிர்கொள்ளப்படும். உதாரணமாக ஒரு வரலாற்று கருத்தை வரலாற்றாய்வாளர்கள் ஆராய்வார்கள், அவர்களே முதல் நோக்கர் குழு. அதை பண்பாட்டு ஆய்வாளர்கள் ஆராய்வார்கள். அவர்கள் இரண்டாம்கட்ட நோக்கர் குழு. அதை எழுத்தாளர்கள் ஆராயலாம், அது மூன்றாம் கட்ட நோக்கர் குழு. ஒருவர் எந்த நிலையில் தான் இருக்கிறார் என தானே அறிந்து அதன் அடிப்படையில் தன் கருத்தை முன்வைக்கவேண்டும். ஒரு பண்பாட்டு ஆய்வாளர் வரலாற்றாசிரியரின் மொழியில் பேசலாகாது. எழுத்தாளர் எழுத்தாளர் என்னும் நிலையிலேயே பேசவேண்டும். இதெல்லாம் அறிவுத்தள பொதுநெறிகள்.

இப்போது, இந்த விரிவான களத்தை உருவாக்கியபின் உங்கள் கேள்விக்கே வருகிறேன். ஞானம் என்பது ஒரு நம்பிக்கை மட்டுமாக இருக்கக்கூடுமா? ஒரு பாவலாவாக இருக்கக்கூடுமா? அதை முடிவு செய்ய வேண்டியவர்கள் அந்த தளம் சார்ந்த நோக்கர்களே. மெய்யியல், மதம், தத்துவம் மற்றும் இலக்கியம் சார்ந்த வெவ்வேறு நோக்கர்குழுக்கள் இயல்பாகவே இன்று இங்கே உள்ளன. அவர்களே ஞானம் என்பதையும் ஞானி என்பதையும் முடிவுசெய்கின்றனர்.

ஞானி என்று எவரும் எவரையும் சொல்லலாம். வணிகநோக்குடன் ஞானி எனச் சொல்லப்படும் ஆளுமைகளும் உண்டு. வெறும் அடையாளமாகவே சிலர் ஞானி என முன்னிறுத்தப்படலாம்.  ஆனால் அந்தக் கருத்து வெவ்வேறு நோக்கர் குழுக்களால் பரிசீலிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு மெல்ல மெல்ல ஒரு வகையான கருத்தொருமிப்பாகத்தான் நிலைகொள்கிறது. அது ஓரு கருத்துருவாகவே இருக்கும், நிரூபிக்கப்பட்ட உண்மையாக ஒருபோதும் ஆகாது.

ஞானி என்றால் வாழ்க்கையை முழுதறிந்தவர், அந்த அறிதலே தன் ஆளுமையாக ஆனவர் என்பது ஒரு பொதுவாக ஏற்கப்பட்ட வரையறை. அவ்வண்ணம் உலகமெங்கும் ஏற்கப்பட்ட ஞானிகள் உள்ளனர். வர்த்தமான மகாவீரர், புத்தர், லவோட்சு, கன்பூசியஸ், ஏசு என ஞானிகளின் மாபெரும் நிரையை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அவ்வாறு ஏற்க அவர்களை எவ்வகையிலேனும் உணர்ந்த நோக்கர்களின் கருத்தே ஆதாரம். அவர்களை மறுப்பவர்களும் என்றும் இருப்பார்கள்.

ஞானம் என்பது ஓர் உருவகம். ஞானி என்பதும் ஓர் உருவகமே.ஆகவே அறுதியான ஞானம் என ஒன்று இல்லை. கடைசிக்கட்ட ஞானி என்று ஒருவரும் இல்லை. மனிதன் வாழ்க்கையை, இயற்கையை, பிரபஞ்சத்தை அறிந்துகொண்டே இருக்கிறான். அவை துண்டுபட்ட அறிதல்கள், ஒரு தளம் சார்ந்த அறிதல்கள். அவற்றை இணைத்து இணைத்து மனிதன் இன்னும் பெரிய அறிதல் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறான். அந்தப் பாதையில் அவன் உருவகிக்கும் முழுமையான அறிதலே ஞானம் எனப்படுகிறது.

உதாரணமாக,  ஒரு பொருளியல் பிரச்சினையை புரிந்துகொள்ள பண்பாட்டுக் காரணிகளையும், தனிமனித உளவியல் காரணிகளையும், அரசியல் காரணிகளையும், புவியியல் காரணிகளையும் எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியென்றால் இவையனைத்துமே இணைந்த முழுமையான அறிதல் என ஒன்று இருக்கவேண்டும்தானே? அதுதான் ஞானம்

அது ஓர் உருவகம்தான். ஓர் இலட்சியம்தான். ஆனால் அப்படி ஒன்றை உருவகிக்காமல் இருக்க நம்மால் இயலாது. அதை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கிறோம். நம் அறிவை இன்னும் இன்னும் நுட்பமாகவும், மேலும் மேலும் முழுமையாகவும் ஆக்கிக்கொண்டே இருக்கிறோம். அதுவே மானுடப்பிரக்ஞை என்பதன் செயல்முறை.

எதனாலோ, எப்படியோ இந்தப் பூமியில் மானுடப்பிரக்ஞை என்னும் மாபெரும் கூட்டியக்கம் உருவாகிவிட்டது. அது தன்னை எல்லா திசைகளிலும் விரித்துக் கொண்டே இருக்கிறது. அதன் மையத்தில் தன்னை தொகுத்துக் கொண்டும் இருக்கிறது. அந்த விரிதலே அறிவியக்கம். அந்த மையச்செறிவே  ஞானம். அவ்விரு செயல்பாடுகளும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும்.

ஏதேனும் ஒருவகையில் அறிதலுடன் தொடர்புடையவர்களுக்கே அவ்விரு செயல்பாடுகளும் அர்த்தமுள்ளவை ஆகின்றன. எஞ்சியோருக்கு அவை இரண்டுமே பொருளற்றவை. பாமரர்களுக்கு அறிவியக்கமே கேலிக்குரியதாக தெரியும். ஒருவர் இரவுபகலாக ஆராய்ச்சி செய்வது, வாழ்க்கையையே கற்றலாக ஆக்கிக்கொள்வது அவர்களின் பார்வையில் அர்த்தமற்றது. பணம் ஈட்டி வாழ்க்கையை நுகர்வதே அர்த்தமுள்ளது. தன் மகனோ மகளோ அறிவியக்கச் செயல்பாட்டில் இருந்தால் முழுமூச்சாக அவர்களை தடுக்க முயல்வார்கள்.

அதேபோல பாமரர்களுக்கு ஞானம் என்பதும் அர்த்தமில்லாததாகவே தெரியும். இங்கே ஒருவரை பாமரர் ஞானி என எப்படிச் சொல்கிறார்கள் என்று பாருங்கள். தங்கள் வாழ்க்கையின் எளிய அன்றாடத்தில் அந்த ஞானியால் என்ன பயன் என்று மட்டுமே பார்ப்பார்கள். ‘அவரு பெரிய ஞானிங்க. முக்காலமும் உணர்ந்தவர். நம்ம பிரச்சினையச் சொன்னா உடனே வழி சொல்லிடுவார். அவர் சும்மா பாத்தாலே நம்ம நோயெல்லாம் நீங்கிடும். நம்ம சகலை ஒருத்தனுக்கு வயித்திலே கட்டி. அவரு தொட்டாரு, அப்டியே சரியாப்போச்சு’. அல்லது தங்களால் முடியாத செயல்களைச் செய்பவர். ‘ஒரே சமயத்திலே மூணு ஊர்லே இருப்பாருங்க அவரு” அதாவது அவர்களைப் பொறுத்தவரை ஞானம் என்பது ஒரு வகை மாயமந்திரம்.

மானுடப்பிரக்ஞை செயல்படுவதன் இயல்பை கொஞ்சம் அறிந்தவர்களுக்கு மட்டுமே ஞானம் என்பதன் மதிப்பு தெரியும். ஆனால் விரிதல் குவிதல் என்னும் இரு தளங்களிலும் இங்கே இயங்கிக்கொண்டிருக்கும் மானுடப்பிரக்ஞையின் விளைகனிகள் அந்த பாமரருக்கும் சேர்த்தேதான் அளிக்கப்படுகின்றன. இங்குள்ள கோடானுகோடி சாமானியர் அவர்களால் கொஞ்சம்கூட புரிந்துகொள்ளமுடியாத, அவர்களால் ஏளனம் செய்யப்படுகிற அறிஞர்களும் ஞானிகளும் உருவாக்கி அளித்த உலகில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைசுந்தரபுத்தன்
அடுத்த கட்டுரையுவன் கனடாவில்…