மாமயிடன் செற்றிகந்தாள் -கடிதம்

கொற்றவை மின்னூல் வாங்க

கொற்றவை வாங்க


கொற்றவையும் தமிழ்த்தேசியமும்

அன்புள்ள ஜெமோ,

கொற்றவையை தமிழின் தனிப்பெரும்தெய்வமாக கொற்றவை நாவல் முன்வைக்கிறது. தமிழ்ப்பண்பாட்டின் ஆழத்தில் உறையும் பேரன்னை என்னும் உருவகமே குமரியன்னையும் கொற்றவையும் ஆக மாறியது என்பதுதான் கொற்றவையின் கரு. அந்த அன்னைதான் கண்ணகியில் எழுந்தாள் என்று அந்நாவல் சொல்கிறது. இன்றைக்கு கொற்றவையில் நீங்கள் சொன்ன புனைவுகளை எல்லாம் வரலாற்று உண்மைகளாகச் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

கொற்றவைக்கு தமிழகத்திலுள்ள எல்லா சிலைகளுமே மகிஷாசுரமர்த்தனி சிலைகள்தான். மாமயிடன் செற்றிகந்த கொற்றத்தாள் என்றுதான் சிலப்பதிகாரமே சொல்கிறது. மகிஷாசுரமர்த்தனி என்றும் துர்க்கை என்றும் இந்தியா முழுக்க வழிபடப்படும் இந்து தெய்வம்தான் அது. அது எப்படி தமிழருக்கு மட்டுமான தெய்வமாக ஆகமுடியும்?

கிருஷ்ணகுமார் வெங்கடேஷ்

*

அன்புள்ள கிருஷ்ணகுமார்

இந்து தெய்வமாக இன்று இந்தியா முழுக்க உள்ளது என்பதில் மறுப்பில்லை. ஆனால் அது வேததெய்வம் அல்ல. பின்னர் இந்து மரபிலுள்ள எல்லா தெய்வங்களும் இந்தியப்பெருநிலத்தின் வெவ்வேறு பண்பாடுகளில் தோன்றி இணைந்து உருவானவையே. இந்து மரபிலுள்ள பெண் தெய்வங்கள் பெரும்பாலும் தென்னகத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்றே ஆகமநூல்களில் அவற்றுக்கான உருவ அமைப்பு, வழிபாட்டு முறை என்பதைக் கொண்டு ஊகிக்க முடிகிறது.

அவ்வாறு ஊகிக்கமுடிந்தால் போதும், புனைவுக்கு வேறு ‘ஆதாரம்’ தேவையில்லை. ஏனென்றால் நான் அந்தப் படிமம் வழியாக என் ஆழத்திற்கு, என் கனவுக்கு அப்பாலுள்ள ஆழ்நிலைக்குச் செல்லவே முயல்கிறேன். அதன் வழியாக என் குலதெய்வங்களை, பகவதிகளை, பேரன்னையரைச் சென்றடைய முயல்கிறேன். கொற்றவை ஓர் அரசியல் புனைவு அல்ல. அரசியல்நோக்கமும் அதற்கில்லை. அது ஒரு மெய்யியல்நூல். வெவ்வேறு தொன்மங்களை இணைத்து ஒரு ஆழ்வெளியை உருவாக்கிக்கொள்வது ஊழ்கத்தின் வழி.

ஜெ

முந்தைய கட்டுரைஅஜிதன் தன்யா- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅருண் மகிழ்நன்