உருகும் படிமங்கள்

 

கொற்றவை மின்னூல் வாங்க

கொற்றவை வாங்க


கொற்றவையும் தமிழ்த்தேசியமும்

மாமயிடன் செற்றிகந்தாள் 

அன்புள்ள ஜெ

கொற்றவையை தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். கொற்றவை முன்வைக்கும் தொன்மங்கள் எல்லாமே உருமாற்றம் அடைந்திருக்கின்றன. கிருஷ்ணரின் கதை, புத்தரின் கதை, ராதையின் கதை (நப்பின்னை) எல்லாமே மாறியிருக்கின்றன. இதை எந்த அளவுக்கு வரலாறு என எடுத்துக்கொள்வது? எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்தவும் தமிழில்கொண்டுவந்து சேர்க்கவும் நீங்கள் முயல்வதாகத் தோன்றுகிறது. ஏன் இதை இன்றைக்கு ஓர் எழுத்தாளன் செய்யவேண்டும்? இப்படி தொன்மங்களை மாற்றிப்புனைவதனால் என்ன நன்மை? அது ஓர் இலக்கிய உத்தியா என்ன?

ஶ்ரீராம் கிருஷ்ணமூர்த்தி

அன்புள்ள ஶ்ரீராம்,

ஒரே ஒரு புள்ளியில் இருந்து தொடங்குகிறேன். நப்பின்னை என்னும் தொன்மம்தான் வடக்கே சென்று ராதையாக மாறியது என்று ராஜாஜி உள்ளிட்டோர் எழுதியுள்ளனர். ராதை என்னும் கதைநாயகி மகாபாரதம், பாகவதம் எதிலும் இல்லை. அவள் பக்தி இயக்கம் உருவான பின்னர் வடக்கே சென்று சேர்ந்த தொன்மம். நப்பின்னையை ஏன் ராதையாக மறுபுனைவு செய்யவேண்டும்? அதே காரணமே கொற்றவை செய்யும் மறுபுனைவுக்கும்.

அதை பண்பாட்டு உரையாடல், பண்பாட்டுக் கலப்பு என்றெல்லாம் விளக்கலாம். பண்பாட்டு ஆதிக்கம் என்று அரசியல்வாதிகள் விளக்கலாம். மெய்யியலில் அதன் பணி முற்றிலும் வேறானது. மெய்யியல் ஒருவர் ஊழ்கம் வழியாக தன் ஆழத்தை ஊடுருவி, தன்னை ஆக்கிய அடிப்படைகளை, தன்னை ஏந்தியிருக்கும் ஒட்டுமொத்தத்ததை அறிவது. அந்தப் பயணத்தில் தொன்மங்கள் என்பவை பயன்பாட்டுப்பொருட்கள், கருவிகள்தான்.

அல்லது இப்படிச் சொல்வேன். பயணம் செய்பவனின் கையிலுள்ள பணம் போல. அவற்றை வெவ்வேறு பொருட்களாக மாற்றிச் செலவழித்தபடியேதான் அவன் முன் செல்ல முடியும். பணத்தைச் செலவழிக்கலாகாது என எண்பவன் எங்கும் செல்லமுடியாது. ஊழ்கத்தில் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எல்லா தொன்மங்களும், எல்லா விக்ரகங்களும், எல்லா அடையாளங்களும் உருமாறிக்கொண்டேதான் இருக்கும்.அதுவே அதன் வழி.

அவ்வாறு உருமாற்றிக்கொண்டு நான அடைந்த ஊழ்கப்பயணம் கொற்றவை. என் ஊழ்கம் மொழியில், இலக்கியத்தில் நிகழ்கிறது. ஆகவே அது இலக்கியப்படைப்பாகிறது. இலக்கியம் வழியாக ஊழ்கப்பயணத்தை நிகழ்த்துவோர் என்றுமுள்ளனர். அவர்களுக்காகவே காவியங்களும் புராணங்களும் எழுதப்படுகின்றன. கொற்றவை அவர்களுக்கான படைப்பு.

அந்நாவல் வெளிவந்த காலகட்டத்தில் டிரான்ஸ்மாடர்னிசம் என்னும் பின்னைப்பின்நவீனத்துவம்  உருவாகிக கொண்டிருந்தது என இன்று அறியமுடிகிறது. கொற்றவை போன்ற படைப்புகள் அந்த அழகியலை தன் பயணத்தினூடாக தமிழ்ச்சூழலில்  உருவாக்கிக்கொண்டவை.

ஜெ

முந்தைய கட்டுரைபோருக்கு முன்…
அடுத்த கட்டுரைதிருமுறை வகுப்பு – கடிதம்