கொற்றவையும் தமிழ்த்தேசியமும் -கடிதம்

கொற்றவை மின்னூல் வாங்க

கொற்றவை வாங்க

அன்புள்ள ஜெமோ

இப்போது சென்ற ஒரு பத்தாண்டுகளாக தமிழ்த்தேசியம், தமிழர் மெய்யியல் பேசுபவர்கள் கொற்றவையை ஒரு தூய தமிழ்த்தெய்வம் என்று முன்வைக்க ஆரம்பித்துள்ளனர். ஐந்தாண்டுகளாக அந்த பேச்சு சாதாரண அரசியல் களங்களுக்கும் சென்று சேர்ந்துவிட்டது. நான் அண்மையில் இதைப்பற்றி முகநூலில் வாசித்துக் கொண்டிருந்தபோது ஆனால் இதற்கெல்லாம் தொடக்கம் என்பது 2003ல் நீங்கள் எழுதிய கொற்றவை அல்லவா என்று நினைத்துக் கொண்டேன். அன்றைக்கு அந்தப் புதினத்தை  இந்துத் தொன்மங்களை முன்வைக்கும் நாவல் என்று வசைபாடியவர்களே இன்றைக்கு அதிலுள்ள தொன்மங்களை எல்லாம் அப்படியே பயன்படுத்துகிறார்கள்.

இன்று தமிழ்த்தேசியவாதிகள் பேசும் பெரும்பாலான எல்லா முதன்மைப்படிமங்களும் கொற்றவை என்ற ஒரே நாவலில் இருந்து எடுக்கப்பட்டவை. இப்போது கொற்றவையை வாசிக்கையில் வியப்பாகவே உள்ளது. சிவன், விஷ்ணு, முருகன், பிள்ளையார் எல்லாம் தமிழர்களின் மூதாதைகள் என்று அந்நாவல்தான் புனைந்தது. அதற்கான வார்த்தைகளையும் உருவாக்கியது. ‘முப்பாட்டன் முருகன்’ என்ற பேச்செல்லாம் அதற்குப்பிறகுதான் வந்தன.  உலகம் முழுக்க தமிழின் பரவல் இருப்பது அந்நாவலில் ஒரு புனைவாக் இருக்கிறது. அந்த கதையை அப்படியே ஒரு உண்மையான நிகழ்வாக ஒருவர் மேடையில் பேசியதைக் கேட்டேன்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது ஆசீவகம் என்பதும் கொற்றவையில்தான் முதன்மையாக முன்வைக்கப்பட்டது. அதற்கு முன் சில  அறிஞர்கள் அதை ஓர் ஊகமாக முன்வைத்தாலும் அது முழுக்க முழுக்க ஒரு தமிழ்ச்சிந்தனையாகவே பலராலும் கருதப்பட்டது. அது ஆசீவகம், ஆனால் ஆசீவகமே தமிழ்ச்சிந்தனைதான் என்று கொற்றவைதான் சொல்லியது. இளங்கோவடிகள்தான் ஐயப்பன் என்று கொற்றவையில் சொல்லப்பட்டதைத்தான் இன்னும் யாரும் முன்னெடுக்கவில்லை. ஆனால் அதுவும் உடனே நிகழும்.

ஆனால் இன்று அதைப்பேசுபவர்களுக்கு கொற்றவை நாவல்தான் தங்கள் சிந்தனைகளுக்கு மூலம் என்று தெரியாது. அந்நாவலை கொண்டாடிய தமிழ்த்தேசியர்களான கோவை ஞானி, குமரிமைந்தன். சோதிப்பிரகாசம், கரு.ஆறுமுகத்தமிழன் போன்ற பலர் எழுதியும் பேசியும் அதை பரவலாகக் கொண்டு சேர்த்தனர். கோவை ஞானியின் தமிழ்நேயம் என்னும் இதழ் கொற்றவை நாவலுக்காக ஒரு சிறப்பிதழையே வெளியிட்டது என்பது என் ஞாபகம். அதில் எழுதிய பலர் கொற்றவையிலுள்ள புனைவுகளை எல்லாம் உண்மைகளாக அப்படியே எடுத்துக்கொண்டு எழுதியிருந்தனர்.

ஒரு புனைவாக கொற்றவையை நீங்கள் முன்வைத்தாலும் தமிழ் அரசியலுக்குரிய ஒரு தொன்மக்களஞ்சியத்தை அளித்துவிட்டீர்கள். அந்நாவல் அன்றைக்கு நினைத்திருக்காத இடங்களில் எல்லாம் முளைத்துக்கொண்டே இருக்கிறது. நேரடியாகவே பொதுமக்கள் அரசியலுக்கு வந்துவிட்டது. அதிகம்பேர் படிக்கமுடியாத ஒரு நுண்ணிலக்கியம் எப்படி இவ்வளவு பெரிய கருத்துச் செல்வாக்கை உருவாக்கும் என்பதும் விந்தையானது.  வெஓர் இலக்கியப் படைப்பு இப்படி பேருருவம் கொள்ள முடியும் என்பது ஆய்வுக்குரியது என்றாலும் இது எந்த அளவுக்குச் சரி என்றும் ஐயமாக உள்ளது. இப்படித்தான் எல்லா பண்பாடுகளும் தங்கள் தொன்மையான குறியீடுகளை திரட்டி மறுஆக்கம் செய்துகொண்டு அடுத்த காலகட்டத்தைச் சந்தித்திருக்கின்றன என்றும் தோன்றுகிறது

இளமாறன் மாணிக்கம்

முந்தைய கட்டுரைஅன்பின் அடிப்படைகள்
அடுத்த கட்டுரைகட்டண உரை, கடிதம்