கொற்றவை மின்னூல் வாங்க
கொற்றவை வாங்க
அன்புள்ள ஜெ
கொற்றவை நாவலை துளித்துளியாக வாசித்து முடித்தேன். ஒரு நாவல் ஒரு முழு வாழ்க்கையையும் வாழ்ந்து முடித்த அனுபவத்தை அளிக்கும் என்பதை இந்நாவலை வாசித்து முடிப்பது வரை நம்பியிருக்க மாட்டேன். இதனால்தான் அந்தக் காலத்தில் காவிய வாசிப்பே வாசிப்புகளில் உச்சமானது என்று சொன்னார்கள் என்று தெரிகிறது. இதற்கு முன் பல நூல்களை வாசித்திருக்கிறேன். அவையெல்லாமே ஒருவகையில் கதையையும் கதைமாந்தர்களையும் வாசித்து அறியும் பயணமாகவே இருந்துள்ளது. கொற்றவை வரிவரியாக வாசிக்கவேண்டிய நூல். ஒவ்வொரு வரியும் கவிதையாக அமைந்த நூல்.
முதலில் அந்த கவிதையின் மனநிலை அமைய கொஞ்சம் தத்தளித்தேன். அதன்பின் அதிலேயே மூழ்கிக்கிடந்தேன். ஒரு மாதம் வேறு நினைப்பே இல்லாமல் அந்த நாவல் காட்டும் உலகிலேயே வாழ்ந்தேன். நீரரமகளிர் நெளிந்துகொண்டிருக்கும் ஆழத்தில் பெருஞ்சிலையாக விரிந்து கிடக்கும் பேரன்னை என் கனவிலேயே ஏழெட்டுமுறை வந்துவிட்டாள். ஒரு இலக்கியப்படைப்பு இப்படி கனவுக்குள் புகுந்து ஆட்கொள்வது என்னைப் பொறுத்தவரை இதுவேம் முதல்முறை. ஏனென்றால் இதுவரை நான் வாசித்த எல்லா படைப்புகளையும் அறிவால் கட்டுடைத்தே வாசித்தேன். இந்நாவலை கட்டுடைக்கவேண்டும் என்றால் நானே என்னையும் என் கனவையும் கட்டுடைக்கவேண்டும். அது என்னை நான் கண்டுபிடிப்பதுபோன்ற ஒரு விளையாட்டுதான்.
நல்ல இலக்கியம் நம் கனவுடன் பேசுவது என்று இன்றைக்குத்தான் தெரிந்துகொண்டேன். நம் ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் அன்னை வாழ்கிறாள். அவளையே நாம் கண்ணகி என்றோ நம் வீட்டிலுள்ள அம்மா என்றோ மகள் என்றோ கண்டுகொள்கிறோம். ஒரு புனைவிலக்கியத்தின் வேலை என்பது வரலாற்றை எழுதுவது அல்ல. வரலாற்றின் இடைவெளிகளை நிரப்புவதும் அல்ல. அதெல்லாம் அறிவுப்பயிற்சி. வரலாறு என்பது ஒரு நனவு. பண்பாடு என்பது ஒரு கூட்டுக்கனவு. அந்தக் கனவை மாற்றியமைப்பதுதான் பேரிலக்கியம் செய்யும் பணி. தமிழ்ப்பண்பாடு என்ற கனவு பதிவான ஒரே நவீன இலக்கியம் கொற்றவைதான். வணக்கம்
கதிர்வேல் மாணிக்கம்
*