வெண்முரசு வழிகாட்டிகள்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

அன்புள்ள ஜெ,

ஐரோப்பிய இலக்கியத்தில் மிகப்பெரிய படைப்புகளை வாசிப்பதற்கான பல்வேறு வழிகாட்டி நூல்கள் உள்ளன. அவற்றை நாம் மூலத்தை நோக்கிச் செல்லும் பாதைகளாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். வெண்முரசு வாசிக்கையில் அந்த தேவையை உணர்ந்தேன். அதில் சம்பிரதாயங்களும் தொன்மங்களும் ஏராளமாக உள்ளன. இன்று அவை பெரும்பாலும் எவருக்கும் தெரியவில்லை.

நான் வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவன். ஆனால் எங்களுக்குள்ளேயே பெரும்பாலானவர்களுக்கு சில அடிப்படைச்செய்திகளும் நம்பிக்கைகளும் மட்டும்தான் தெரியும். அதற்குமேல் ஆளுக்காள் விருப்பப்படிச் சொல்லிக்கொள்வதுதான். புராணங்களெல்லாம் ஒருவர் தன் தியானத்தில் விரித்து எடுத்துக்கொள்ளவேண்டியவை என தெரியும். ஆனால் எப்படி என்று தெரியாது. வயதானவர்கள் புராணங்களை அப்படியே நம்புபவர்கள்தான். தத்துவ அறிமுகம் இல்லை. தத்துவ அறிமுகம் என்று போனால் உடனே நம்பிக்கை ஆசாரம் எல்லாம்தான் சொல்லித்தரப்படும். இதை எப்படி சொல்லிக்க்கொள்வது என்பது பெரிய சிக்கல்தான்

வெண்முரசு வைணவ சம்பிரதாயத்திற்குள் மட்டுமில்லாமல் சைவம்,சாக்தம், ஜைனம் என்று எல்லா சம்பிரதாயங்களுக்குள்ளும் சென்று பல்வேறு செய்திகளைச் சொல்கிறது. அவற்றை ஒன்றையொன்று திட்டும்படித்தான் நாங்களெல்லாம் கற்றிருக்கிறோம். அவற்றை ஒன்றாக இணைத்து ஒரு ஆத்மிக ஞானமாக புரிந்துகொள்ள எங்களிடம் ஏதுமில்லை. ஆகவே வெண்முரசும் வாசிக்க குழப்பமாக உள்ளது. அதற்கான வழிகாட்டிகள் இன்று தேவைப்படுகிறது

ஆர்.பத்மநாபன்

அன்புள்ள பத்மநாபன்

அத்தகைய வழிகாட்டிகளை ‘அதிகாரபூர்வமாக’ உருவாக்க முடியாது. ஏனென்றால் வெண்முரசு ஓர் இலக்கிய ஆக்கம். தத்துவ- மத நூல் அல்ல. புராணங்களும் இலக்கியங்களே. அவற்றுக்கு உரைகள் இல்லை என்பதைக் கவனிக்கவும். சுதந்திரமான வாசிப்பே நிகழவேண்டியது. அந்த வாசிப்பு பல திசைகளுக்கு விரியும்போது அவை பதிவாகவேண்டும். அந்த உரையாடல் புதிய வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்

https://venmurasudiscussions.blogspot.com/ என்ற இணையதளத்திலுள்ள கடிதங்கள் வாசிப்பை மேம்படுத்த உதவியாக இருக்கும். பல்வேறு விவாதங்கள், உரைகள் இணையத்த்தில் கிடைக்கின்றன. அவையும் உதவியானவையாக இருக்கும்

ஜெ

முந்தைய கட்டுரையானையில் இருந்து யானைக்கு…
அடுத்த கட்டுரைஎன் சகோதரனுக்கு நான் காவலனோ?