புத்தகமும் விக்ரகமும்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

அன்புள்ள ஜெ,

வெண்முரசு நூல்கள் முழுத்தொகுப்பாக வெளிவரும் செய்தி அறிந்தேன். போதுமான அளவுக்கு முன்பதிவுகள் வரும் என நினைக்கிறேன். நூல்கள் வெளிவந்த காலத்திலேயே முன்பதிவுசெய்து வாங்கியவர்களில் ஒருவன். மீண்டும் ஒரு தொகுதியை என் பெற்றோருக்காக வாங்கலாமென நினைக்கிறேன். என் வாழ்த்துக்கள்

ராஜசேகர் பொன்னம்பலம்

அன்புள்ள ராஜசேகர்,

இணையத்திலேயே வெண்முரசு முழுமையாக வாசிக்கக் கிடைக்கிறது. வெண்முரசின் ஒலிநூல்கள் யூடியூபில் ஏராளமாகவே கிடைக்கின்றன. வெண்முரசுக் கதைகளைச் சொல்லிப் பதிவுசெய்யப்பட்ட வடிவங்களும் பல உள்ளன. நூல்களாக வெளியிடுவது வணிக நோக்கில் அல்ல. அவை நூல்வடிவில் நூலகங்களிலும் தனியார்ச் சேமிப்புகளிலும் இருக்கவேண்டும் என்பதற்காக.

நான் சில ‘செண்டிமெண்டு’களில் நம்பிக்கை உடையவன். நூல் என்பது வாசிப்பதற்கான ஒரு பொருள் மட்டும் அல்ல. அது ஓரு தனி இருப்பு (entity). தெய்வம் எங்குமுள்ளது.வழிபடுவதற்கொரு பெயரோ தோத்திரமோ போதும். ஆயினும் விக்ரகம் தேவையாகிறது. அங்கிருக்கிறது என உணர. தொட்டு அறிய. அதைப்போலத்தான் நூல்களும். ஆகவேதான் நான் கம்பராமாயணத்தையோ சீவகசிந்தாமணியையோ நூல்களாகவும் வைத்திருக்கிறேன்.

அதைப்போன்ற ஒன்றே பெருநூல்களின் இருப்பும். ஒவ்வொரு முறை நாம் கடந்துசெல்கையிலும் நம் கண்களுக்கு அவை படவேண்டும். தங்கள் தோற்றத்தாலேயே நம் அகத்துக்கு அவை சிலவற்றை உணர்த்துகின்றன. நம் அன்றாடத்தின் அற்பவாழ்க்கைக்கு அப்பால் சில உள்ளன என்று. நாம் அங்கே செல்ல ஒரு வழி அருகே உள்ளது என்று. நாம் இங்குள்ள எளிய வாழ்வில் உழன்று இப்படியே முடியவேண்டியவர்கள் அல்ல என்று. ஓர் அறையை அவை முழுமைசெய்வதுபோல வேறெந்த அலங்காரப்பொருளும் செய்வதில்லை. பல ஆயிரம் ரூபாய்ச் செலவில் ஓவியங்களையும் சிற்பங்களையும் வாங்குபவர்கள் கூட இந்த மதிப்பை உணர்வதில்லை.

நண்பர் ஒருவர் சொன்னார், அதன் விலை அதிகம் என. அவர் கையில் ஒன்றரைப் பவுன் மோதிரம் போட்டிருந்தார். சிவந்த கல் கொண்ட மோதிரம். அவருக்கான கல் பவளம். அது அவருக்கு ஒரு நிறைவை அளிக்கிறது என்றார். நான் சொன்னேன், வெண்முரசு மொத்தத் தொகுதிகளின் விலை முக்கால் பவுனுக்கான விலைதான். உண்மையில் இன்று விற்கப்படும் பொருட்களில் மெய்யாகவே விலை மலிவானது புத்தகம்தான். அதற்கு இன்று காகிதத்திற்கான விலை மட்டுமே போடப்படுகிறது. அதன் அறிவுமதிப்புக்கு விலை போடப்படுவதே இல்லை. ஓர் அடையாளமாக, icon ஆக வெண்முரசு போன்ற நூலின் மதிப்பு அந்த மோதிரத்தைவிட பற்பல மடங்கு.

ஜெ

முந்தைய கட்டுரைஉடைவும் மீள்வும்
அடுத்த கட்டுரைஅஜிதன் தன்யா- கடிதங்கள்