எய்துதலின் நிறைவில்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

அன்புள்ள ஜெ,

பத்தாண்டுகளுக்கு முன்பு வெண்முரசு தொடக்கவிழாவில் எடுக்கப்பட்ட காணொளியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனம் விம்மிக்கொண்டே இருந்தது. எவ்வளவு பெரிய சாதனை. அப்போதே எப்படிப்பட்ட பெரியவர்கள் எல்லாம் அந்த சாதனை நிகழ்வதற்கு முன்பே அதன் மதிப்பென்ன என்று உணர்ந்து வந்து வாழ்த்தியிருக்கிறார்கள். இளையராஜா, அசோகமித்திரன், கமல்ஹாசன், பிரபஞ்சன்  எல்லாம் வந்திருக்கிறார்கள். பாலகுமாரன் ஒரு பார்வையாளராக வந்து அமர்ந்திருக்கிறார். இன்றைக்கு வெண்முரசு வரலாறாக மாறிவிட்டது. நான் அந்த விழாவில் கலந்துகொண்டேன். ஆனால் 6 ஆண்டுகளுக்கு பிறகுதான் புத்தகங்களாக வெண்முரசு வாசித்தேன். முடித்தும் விட்டேன்.

இன்றைக்கு வெண்முரசு ஒரு பெரும் தொகுப்பாக உள்ளது. நான் எந்த அயல்மொழி நண்பரிடம் பேசினாலும் மகாபாரதத்தின் மிகப்பெரிய வடிவம் என் மொழியில் உள்ளது என்று சொல்வேன். ஒரு ஹங்கேரி நண்பரிடம் அதைச் சொன்னபோது நாலைந்து வட இந்தியர்கள் அருகே இருந்தனர். அவர்கள் திகைத்துவிட்டனர். “இப்போதும் பெருங்காவியங்கள் உங்கள் மொழியில் எழுதப்படுகின்றனவா?” என்று ஹங்கேரி நண்பர் கேட்டார். “ஆமாம். எங்கள் மொழி காவியங்களுக்குரிய மொழி….” என்றபோது அவர் ஒரு வரி சொன்னார். அற்புதமான வரி அது. “ஆமாம், மழைக்காடுகளில் மரங்களெல்லாம் மிகப்பெரியவையாக இருக்கும்” அவர் வால்பாறையில் ஒரு வாரம் தங்கியிருந்ததனால் அப்படிச் சொன்னார். ஆனால் வெண்முரசுக்கும் தமிழுக்கும் அது மிகப்பெரிய ஒரு அங்கீகாரம் என நினைத்துக்கொண்டேன்.

நான் வெண்முரசு நூல்களை வாங்கி என் அலுவலகத்தில் என் அறையிலேயே ஒரு நூலகம் போல அமைத்து உள்ளேயே வைத்திருக்கிறேன். அறைக்கே ஒரு கம்பீரம் வரும். என்ன நூல் என்று கேட்பார்கள். உடனே ஓரிரு வரிகள் சொல்வேன். வட இந்திய கிளையண்ட்ஸ் உடனே தீவிரமான ஒரு மனநிலைக்குச் செல்வதை உணரமுடிகிறது. வெண்முரசு உள்ளே இருப்பது ஒரு பெருந்தந்தை அல்லது முனிவர் இருந்து ஆசீர்வாதம் செய்வதுபோல என்று உணர்கிறேன்.

வெண்முரசு தொடக்கம் அப்படி ஓர் அற்புதமான நிகழ்வாக இருந்தது. அதன் நிறைவு அதைவிடச் சிறப்பாக கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு நிகழ்வே நடைபெறவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

ஆர். எஸ். ரங்கராஜ்

அன்புள்ள ரங்கராஜ்,

வெண்முரசு நிறைவின்போது கோவிட் காலம். ஆகவே விழாக்கள் நிகழவில்லை. சூம் நிகழ்வாக நடத்தினோம். இப்போதும் குருபூர்ணிமா நாளை வெண்முரசு நாளாகக் கொண்டாடுகிறோம்.

வெண்முரசு தொடக்கவிழா அப்போது என் மேல் பிரியம் கொண்டிருந்த பாலசுப்ரமணியம் முத்துசாமி என்னும் நண்பர் அவருடைய சொந்த முயற்சியால் முன்னெடுத்தது. அதன்பின் அப்படி எவரும் முன்வரவில்லை. நானே ஒன்றை நிகழ்த்தும் எண்ணம் இல்லை. நூலையும் எழுதிவிட்டு அதற்காகச் செலவும் செய்வதென்பது அபத்தம். 

இப்போது வெண்முரசு முழுத்தொகுப்பு போடவிருக்கிறோம். அதற்கு ஆதரவு இருக்கவேண்டும் என்பதே இன்றைய எண்ணம்.

என்னைப் பொறுத்தவரை வெண்முரசை எழுதி முடித்ததும் நான் அடைந்த நிறைவே எனக்கான வெகுமதி. அதன்பொருட்டு வேறெதையும் எதிர்பார்க்கவில்லை. அடுத்தடுத்த பெருங்கனவுகளுக்குச் சென்றுவிட்டேன். ஆச்சரியமாக, வெண்முரசின் கொடை என அவை ஒவ்வொன்றும் எண்ணியவாறே நிகழ்ந்து  இன்று எண்ணிய எல்லைகளையும் எளிதாகக் கடந்துகொண்டிருக்கின்றன. ஆகவே வெண்முரசில் நான் இன்று இல்லை. அதிலிருந்து நெடுந்தொலைவு வந்துவிட்டேன். 

ஜெ

முந்தைய கட்டுரைகோவை சொல்முகம் கூடுகை, 54
அடுத்த கட்டுரைகனவை புனைந்தெடுத்தல் – கடிதம்