ஒரு பிரம்மாண்டமான பிரார்த்தனை

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

அன்புள்ள ஜெ,

இல்லங்களில் மகாபாரதம் கட்டுரை வாசித்தேன். வெண்முரசு இசைக்கோலம் நான் ஒவ்வொருநாளும் கேட்கும் இசை. கமல்ஹாசனின் முழங்கும் குரலுடன் சைந்தவியின் கொஞ்சும் குரல் இணையும் இடம் தமிழில் அமைந்த அற்புதமான இசைச்சாதனை. சைந்தவி அப்போது கருவுற்றிருந்தார். ஆகவே கண்ணனுக்கான கொஞ்சம் அவருடைய முகத்திலும் கண்களிலும் திகழ்ந்தது. வெண்முரசின் நிறைவு என்பது இந்த இசைக்கோலம்தான். கண்ணன் பிள்ளைத்தமிழில் முடியும் வெண்முரசு ஒரு மாபெரும் மங்கலநூல் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆறாண்டுகளாக ஒவ்வொருநாளும் குடும்பத்துடன் வாசிக்கிறோம். முடித்தபின் மீண்டும் தொடங்கி இன்று கார்கடல் வரை மீண்டும் வந்துள்ளோம்.

ஸ்ரீனிவாஸ் ராமானுஜம்

அன்புள்ள ஸ்ரீனிவாஸ்

ஆம், ஓர் அரிய இசைக்கோலம். வெண்முரசு ஒரு மரம் எனில் நீலம் அதன் வசந்தகால மலர். இந்தியப் பருவத்தில் இளவேனில் வசந்தம். ஆனால் மழைக்குப்பின் இன்னொரு துணைவசந்தம் வரும். உபவசந்தம் என்றே நூல்கள் சொல்வது அது. முதலாவிண் முடியுமிடம் ஒரு துணைவசந்தம்.

ஜெ  

அன்புள்ள ஜெ,

’வெண்முரசை வீடுகளில் படிக்கலாம். குடும்பத்தினருடன் அமர்ந்தே பயிலலாம். மங்கலமே பெருகும்’ என்னும் வரியை நான் முழுமனதுடன் ஆதரிக்க வேண்டியிருக்கிறது. உங்களுக்கும் தெரியும், பெரும் வீழ்ச்சியில்தான் நான் வெண்முரசு வாசிக்க ஆரம்பித்தேன். கோவிட் காலகட்டத்தில் என் வாழ்க்கை தொழில் எல்லாமே முடிவுக்கு வந்தநிலை. அப்போது வாசிக்க ஆரம்பித்தேன். மனதை எதிலாவது செலுத்தவேண்டுமே என்பதற்காக.

இன்று வெற்றியும் மகிழ்ச்சியும் மட்டும்தான் என் வாழ்க்கையில். திரும்பிப் பார்க்கையில் கோவிட் காலகட்டம் எங்கோ அதலபாதாளத்தில் இருப்பதுபோல் உள்ளது. வெண்முரசு என்னை மீட்டது. எதிலும் கலங்காமல், ஆனால் முழுமூச்சுடன் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான ஆற்றலை அதுதான் அளித்தது. என் வாழ்க்கையில் எல்லாமே வெண்முரசு அளித்ததுதான்.

எஸ்.

*

அன்புள்ள எஸ்,

வெண்முரசு தொடங்கப்பட்டபோது அதனுடன் இருந்த, ஒவ்வொருநாளும் வாசித்த என் நெருக்கமான நண்பர்கள் பலர் இதை இப்படியே சொல்லக்கூடும். அவர்கள் ஒவ்வொருவரும் இன்று அடைந்துள்ள உயரங்களும் நிறைவும் அனைவரும் அறிந்தவை. அனைத்துக்கும் மேலாக அதை எழுதியவன் வாழ்வில் எண்ணிய பெருஞ்செயல்கள் ஒவ்வொன்றும் மும்மடங்கு நேர்த்தியாக நிறைவேறின என நண்பர்கள் அறிவர். நிகழ்ந்த ஒவ்வொன்றும் நிறைவும் வெற்றியுமாகவே இருக்கின்றன.

ஏனென்றால் வெண்முரசு ஒட்டுமொத்தமாக ஒரு மாபெரும் பிரார்த்தனை. மனிதர் செய்யக்கூடுவது அது மட்டுமே

ஜெ 

முந்தைய கட்டுரைஇல்லங்களில் மகாபாரதம்
அடுத்த கட்டுரைதேவியின் பாதம் -கடிதம்