அண்ணா ஹசாரே மீண்டும்

அண்ணாஹசாரே அவர்கள் நடத்திய உண்ணா விரதப் போராட்டத்தில் டெல்லி அரசு அடக்குமுறையைக் கையாள்வதும், சில நாட்களுக்கு முன் பிரதமர் இவ்விசயத்தில் பொறுப்பில்லாமல் பதில் அளித்ததும் பார்க்கும் போது ஹசாரே குழுவினரின் வேண்டுகோளை முற்றிலும் நிராகரிக்கும் எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது,

இருந்தாலும் தடையை மீறி உண்ணாவிரதப்போராட்டம் நடத்த இருக்கும் ஹசாரே அவர்களைக் கைது செய்து 7 நாட்கள் காவலில் வைப்பதாக அறிவித்த போலீஸ் நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பால் அவர் இன்று விடுதலை செய்யபடுவதாகத் தெரிகிறது, கூடிய விரைவில் ஹசாரே குழுவினரை அரசு அழைத்துப் பேசலாம், அகிம்சைப் போராட்டத்தின் பலம் என்ன என்பதை இப்போது புரிகிறது, காந்தியின் அகிம்சைப்போராட்டத்தின் மீது இப்போது உள்ள இளைய தலைமுறைக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதாக இருக்கிறது,

“சத்யாக்கிரகப்போராட்டம் என்பது ஒரு எதிர்ப்புக்கருத்தை மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்லவும் மக்களிடையே அந்தக்கருத்து செல்வாக்குப் பெறும்போது அதை ஒரு முனையில் குவிக்கவும் உதவக்கூடிய ஒரு போராட்ட வழிமுறை. அவ்வாறு குவிக்கப்படும் வெகுஜனக்கருத்து என்பது ஒரு பொருண்மையான அதிகார சக்தி. அது எந்த அரசதிகாரத்தையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது”
ஜெவின் இந்த வரிகள் கண்முன் நடப்பது தெரிகிறது,

கார்த்திகேயன் [குழுமத்தில்]

அன்புள்ள கார்த்திகேயன்,
காந்தியின் முதல் எதிரி பிரிட்டிஷ் அரசு அல்ல, இந்தியர்களிடம் இருந்த அச்சம்தான். அவர் அந்த அச்சத்தை எதிர்த்தே இருபதாண்டுக்காலம் போராடினார், அதன்பின்னரே அவரால் பிரிட்டிஷ் அரசை எதிர்க்க முடிந்தது.

அண்ணாவின் முதல் எதிரி இந்திய அரசு அல்ல. நம்மில் உள்ள அவநம்பிக்கைதான். அண்ணா அவரது போராட்டத்தை ஆரம்பித்தபோது, நம் அறிவுஜீவிகள் உருவாக்கிய அவநம்பிக்கைப் பிரச்சாரத்தைக் கவனியுங்கள். நம் சிற்றிதழ்களில் நம் சில்லறைஅறிவுஜீவிகள் எழுதிய தலையங்கங்களை வாசியுங்கள். எவ்வளவு அவநம்பிக்கை. அதிலிருந்து எவ்வளவு இளக்காரம், எவ்வளவு நக்கல்!

அந்த அவநம்பிக்கையின் ஊற்றுமுகம் எது? நம் சிற்றிதழ்களின் தரம் என்ன? கடந்த ஆட்சியில் நூலக ஆணைக்குழுவைக் கையில் வைத்திருந்தார் என்பதற்காகவே தமிழச்சி என்ற பெண்மணியைக் கவிஞர் எனக் கற்பிதம் செய்து அட்டையில்போட்டு மகிழ்ந்த சிற்றிதழ் ஒன்று அண்ணா ஹசாரேயை நையாண்டிசெய்து கட்டுரை வெளியிட்டது. கனிமொழி வழிபாட்டில் மூழ்கியிருந்த சிற்றிதழ்கள் அண்ணாவை நடுத்தர வர்க்கத்தின் போலிநாயகன் என ஏளனம்செய்தன.

எந்த சமரசத்துக்கும் துணிந்த சுயநலவாதிகளான க.திருநாவுக்கரசு, எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்ற அரசியலெழுத்தர்கள் சிற்றிதழ்களில் கட்டுரை எழுதி தங்களை அனல் கக்கும் புரட்சியாளர்களாகக் காட்டிக்கொண்டார்கள். இவர்களுடைய அன்றாட அயோக்கியத்தனங்கள் , சரிவுகள் இவர்களுக்குத் தெரியும். ஆகவே இவர்களால் ஒரு நல்ல விஷயத்தை உண்மையிலேயே நம்ப முடியவில்லை என்பதே உண்மை.

அப்படித்தான் இருக்கிறார்கள் இந்திய இதழாளர்கள். அரசியல் தரகர்களாக, அரசியல் கையாட்களாக, வெளிநாட்டு நிதிக்கு ஏற்பக் கருத்துக்களை உருவாக்கி முன்வைப்பவர்களாக இருப்பவர்களே நாம் இதழாளர்களில் மிகப்பெரும்பாலானவர்கள். இவர்களே நம் சிந்தனையை இன்று தீர்மானிப்பவர்களாக நடந்துகொள்கிறார்கள்.

நேற்று தினமணி சிறப்பிதழில் ஒரு இதழாளர் எழுதியிருந்ததை வாசித்து மொத்த இதழையே கிழித்து குப்பைக்கூடையில் போட்டேன். அண்ணா யோக்கியமானவரல்ல என்கிறார். காரணம் அந்த நிருபரும் அண்ணா ஹசாரேயும் ஜீ தொலைக்காட்சி நிறுவனத்துக்குச் சென்றார்களாம். அண்ணாவை அவர்கள் உடனே உள்ளே அழைத்துச்சென்றார்களாம், இந்த மாமேதை பாதுகாப்புமுறைகளைக் கடைப்பிடித்துக் காத்திருக்க நேரிட்டதாம். இவர் கேட்ட ’ஆழமான’ தத்துவக் கேள்விகளை அண்ணா அறிவுபூர்வமாக எதிர்கொள்ளவில்லையாம். இருந்தாலும் அண்ணா பரவாயில்லை என்கிறார் கடைசியில்.

இந்த அசட்டு அற்பர்களால் நிறைந்திருக்கிறது நம் ஊடகம். அண்ணாவின் மிகப்பெரிய பலவீனம் என்பது அவர் வேறுவழியில்லாமல் இதைச் சார்ந்திருக்கிறார் என்பது. காந்தியைப்போலத் தனக்கென ஒரு மக்கள் தொடர்பை அண்ணாவால் உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. அதற்கான சாத்தியம் இன்று உள்ளதா என்றும் தெரியவில்லை.
இந்த மூடுவலையை மீறியே அண்ணா போன்ற சிலர் எழுந்து வருகிறார்கள். அண்ணா அவரது தகுதியை நிரூபித்தவர். பல ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களை வெற்றிகரமாக ந்டத்தியவர். தகவலறியும்சட்டம் போன்றவற்றின் வழியாக வெற்றிகளைக் காட்டியவர். ஆயினும் அவர் சந்தித்த ஏளனங்கள் எவ்வளவு!.

நம் அயோக்கிய அறிவுஜீவிகள் உருவாக்கும் பிம்பங்களில் இருந்து, நம் சொந்த அவநம்பிக்கையில் இருந்து நாம் வெளிவர வேண்டியிருக்கிரது. நம்மாலும் சில செய்யமுடியும் என்ற நம்பிக்கை, ஜனநாயகம் ஆற்றலுள்ளதே என்ற நம்பிக்கை நம்மில் நிகழ்வேண்டியிருக்கிறது. அண்ணா மலையளவு பிரயத்தனப்பட்டு அந்நம்பிக்கையை மயிரிழையளவு உருவாக்கியிருக்கிறார். அது எவ்வளவுதூரம் நீடிக்கும் என்பதைப்பொறுத்தே வெற்றி இருக்கிறது

அந்நம்பிக்கையைக் குலைக்கவே காங்கிரஸ் முயல்கிறது. அண்ணாவும் பிற அரசியல்வாதிகளைப் போன்றவரே என்று காட்ட மோசடிகளில் ஈடுபடுகிறது. அவர் மேல் ஊழல், மதவாத முத்திரைகளைப் போடுகிறது. இடதுசாரிகள் அவரைச் சிறுமைப்படுத்த முயல்கிறார்கள், அவர்கள் காந்தியையே சிறுமைப்படுத்திய பாரம்பரியம் கொண்டவர்கள். பத்துரூபாய் சில்லறையை நீட்டினால் ஓடிப்போய்க் கவ்வும் நம் இதழாளர்களும் எதிர்காலத்தில் அந்தப்பிரச்சாரத்துக்கு விலைபோவார்கள் என்றே நான் நினைக்கிறேன். அதைமீறி இந்நாட்டு மக்களின் மனசாட்சி சிந்திக்கத் துணியவேண்டும். இளைஞர்கள் அவர்களின் அலட்சியம், அவநம்பிக்கையை மீறி இதயத்தால் இதைப் பார்க்கமுடியவேண்டும்.

காந்தியப்போராட்டம் என்பது எதிரிக்கு எதிரானது அல்ல. நம்முடைய உள்ளே உள்ள பலவீனத்துக்கு எதிரானது. உடனடிப்புரட்சி அல்ல. மிக மெல்லப் படிப்படியாக நிகழும் ஒரு மாற்றம் அது. இந்த லோக்பால் மசோதாவுக்கான போராட்டம்மூலம் நிகழ்ந்துகொண்டிருப்பது என்னவென்றால் மெல்லமெல்ல இந்திய சமூகம் ஊழலுக்கு எதிராகப் போராடும் மனநிலையை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கிறது என்பதே. அந்நகர்வு இன்னும் வெகுதூரம் செல்லவேண்டும். லோக்பால் மசோதா அண்ணா கோரியபடியே அப்படியே நிறைவேறினால்கூட காந்திய வழிமுறைகளின்படி உடனே அடுத்த போராட்டம் அடுத்த நடைமுறைக்கோரிக்கையுடன் ஆரம்பிக்கப்படவேண்டும். தொடர்ச்சியாக இலக்கை நோக்கிப் பிடிவாதமாகச் சென்றபடியே இருக்கவேண்டும்.

அது நடக்கும் என நம்புவோம். காந்திய வழி வெற்றிகரமானதா என்பதை நாம் விவாதிக்கலாம். ஆனால் அதைவிட்டால் வேறு வழியே இல்லை என்பதில் மட்டும் விவாதிப்பதற்கே ஏதுமில்லை

ஜெ

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1

முந்தைய கட்டுரைசிங்காரவேலர் – ஒருகடிதம் ,விளக்கம்.
அடுத்த கட்டுரைஅசோகமித்திரன் பேட்டி