தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -2
இந்தியாவில் நவீன வரலாற்றெழுத்து தொடங்கியபோதே நவீன வரலாற்றுப்புனைவெழுத்தும் தொடங்கிவிட்டது. சொல்லப்போனால் இரண்டும் இணையாக, ஒன்றோடொன்று ஊடாடியபடி நிகழ்ந்தன. ஐரோப்பிய வரலாற்றை எடுத்துக் கொண்டால்கூட அங்கும் நவீன வரலாற்றெழுத்தும் நவீன வரலாற்றுப் புனைவெழுத்தும் ஒரே சமயம் உருவாகி, ஒன்றோடொன்று இணைந்து வளர்ந்தவை என்பதை புரிந்துகொள்ள முடியும்.
ஆச்சரியமான ஒன்றுண்டு, தொல்வரலாற்றெழுத்தில் இருந்து நவீன வரலாற்றெழுத்து உருவாகி வந்த பொயு 16 ஆம் நூற்றாண்டிலேயே, தொடக்ககால வரலாற்று நூல்களை உடனடியாக புனைவாக ஆக்கும் போக்கு தொடங்கிவிட்டது. ராஃபேல் ஹோலின்ஷெட் ( Raphael Holinshed ) எட்வர்ட் ஹால் (Edward Hall) ஆகியோரின் அயர்லாந்து, ஸ்காட்லாந்து வரலாற்றுநூல்களை தழுவி உடனடியாக ஷேக்ஸ்பியர் தன் நாடகங்களை அமைத்தார். அலக்ஸாண்டர் டூமா பிரெஞ்சு வரலாற்றெழுத்தாளர் பியர் டி ல எஸ்தோல் (Pierre de L’Estoile) போன்றவர்களின் எழுத்தையே புனைவாக்கினார்.நவீன வரலாற்றெழுத்துடன் புனைவிலக்கியம் பிரிக்கமுடியாமல் பிணைந்தே ஐரோப்பாவெங்கும் காணக்கிடைக்கிறது.
இந்திய நவீன வரலாற்றெழுத்து பதினெட்டாம் நூற்றாண்டில் தொடங்குகிறது. வங்காளத்தின் வரலாறு எழுதப்பட்ட தொடக்ககாலத்திலேயே பங்கிம் சந்திர சட்டர்ஜியின் கபாலகுண்டலா, ஆனந்த மடம் போன்ற நாவல்கள் வந்துவிட்டன.கேரள வரலாற்றின் ஒரு முதல்வரைவு உருவானதுமே சி.வி.ராமன்பிள்ளையின் மார்த்தாண்டவர்மா நாவல் வந்துவிட்டது. கர்நாடகவரலாற்றெழுத்தின் தொடக்க காலத்திலேயே கே.வி.ஐயர் எழுதிய சாந்தலா போன்ற நாவல்கள் வந்துவிட்டன. தமிழில் வரலாற்றெழுத்தின் தொடக்கத்திலேயே, தொடக்ககால வரலாற்றாசிரியர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்த தி.த.சரவணமுத்துப் பிள்ளை (மோகனாங்கி) கல்கி (பார்த்திபன் கனவு) ஆகிய தொடக்ககால புனைவுகள் வந்துவிட்டன.
இந்தியாவெங்கும் தொடக்க கால நாவல்கள் பெரும்பாலும் வரலாற்றுப் புனைவுகள்தான். ஐரோப்பிய இலக்கிய வரலாற்றிலும் தொடக்ககால எழுத்துக்கள் பெரும்பாலும் வரலாற்றுப் புனைவுகள்தான். வரலாறும் புனைவெழுத்தும் இணைந்தே உருவானவை. நாம் பொதுவாக நம்புவதுபோல வரலாறு உருவாகி நிலைபெற்ற பின் அவற்றை புனைவெழுத்தாளர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. புனைவெழுத்து வரலாற்றெழுத்துக்குள் நுழையும் அத்துமீறலோ ஊடுருவலோ அல்ல. அது வரலாற்றெழுத்தின் உடன்பிறந்து, உடன்நிகழும் பிரிக்கமுடியாத அறிவுச்செயல்பாடு.
ஆயிரம் ஊற்றுக்கள் மின்னூல் வாங்க
ஏன் புனைவெழுத்து வரலாற்றெழுத்தின் ஒரு பகுதியாக உடன்நிகழ்கிறது? பல காரணங்களை யோசிக்கலாம்.
அ. தொல்வரலாறு புனைவுடன் கலந்தே இருந்தது. இந்திய புராணங்கள் மட்டுமல்ல மேற்கத்திய காவியங்களும் வரலாறாகவும் இருந்தன. நவீன வரலாறு புறவயத்தன்மைக்காக கற்பனையை அகற்றிவிட்டது. தரவுகளும் தர்க்கமும் மட்டுமே அதில் எஞ்சின. அவ்வாறு விலக்கப்பட்ட புனைவு அம்சம் தனியாக வரலாற்றுப் புனைவிலக்கியமாக வரலாற்றெழுத்தை பின்தொடர்ந்து வந்தது.
ஆ. வரலாற்றை உருவகித்துக் கொள்வதில் புனைவின் தேவை முதன்மையாக தரவுகளை இணைத்து ஒரு மொழிபை (Narration) உருவாக்குவதில் உள்ளது. வெறும்தரவுகள் தர்க்கபூர்வமாக அடுக்கப்பட்டால் வரலாறாவதில்லை. வரலாற்றுக்கே ஒரு சித்தரிப்பு தேவையாகிறது. சோழர்காலத்துத் தரவுகளை இணைத்து அன்றைய அரசியல்சூழல், சமூகச்சூழல் ஆகியவற்றை ஒரு மொழிபாக ஆக்கவேண்டியுள்ளது. இலக்கியம், கலை, நிர்வாகவியல், போர்வெற்றிகள் என பலவற்றை இணைப்பது அந்த மொழிபுதான். அதில் புனைவம்சம் தேவை. எந்த கறாரான வரலாறும் ஒரு புனைவும்கூடத்தான். அந்தப் புனைவால்தான் இந்திய வரலாற்றில் குப்தர் காலமும் தமிழக வரலாற்றில் சோழர் காலமும் பொற்காலங்கள் என சித்தரிக்கப்படுகிறது.
இ. வரலாற்றில் ஆளுமைகள் இல்லை- வெறும் தரவுகளே உள்ளன. வரலாற்றாளுமைகள் புனைவால்தான் உருவகிக்கப்படுகின்றன. ராஜராஜசோழன் என்னும் ஆளுமை வரலாற்றால் உருவாக்கப்படும் புனைவுதான். வரலாற்றிலேயே அந்த புனைவம்சம் உள்ளது. அந்த புனைவம்சத்தை கொஞ்சம் நீட்டிக்கொண்டு வரலாற்றுப்புனைவுகள் உருவாகின்றன. கல்கியின் பொன்னியின் செல்வனாகிய ராஜராஜசோழன் உண்மையில் நீலகண்டசாஸ்திரியால் உருவகிக்கப்பட்டு கல்கியால் விரித்தெடுக்கப்பட்ட ஆளுமை.
ஈ. வரலாற்றில் விழுமியங்கள் இல்லை. வரலாறு எதையும் முன்வைப்பதில்லை. வரலாற்றில் விழுமியங்களை ஏற்றிக்கொள்ள அதை புனைவாக ஆக்கவேண்டியிருக்கிறது. சோழர் வரலாற்றில் ராஜராச சோழன் தன் சிறியதந்தைக்காக அரசை விட்டுக்கொடுத்த செய்தியை ஊகிக்கமுடிகிறது, அதை ஒரு சோழர்கால அரசவிழுமியமாக ஆக்கியவர் கல்கி. அதன்பொருட்டே வரலாற்றுப் புனைவு தேவையாகிறது.
இக்காரணத்தால் வரலாற்றுடன் இணைந்தே புனைவும் செயல்பட்டாகவேண்டியிருக்கிறது. இதற்கு அப்பால் நவீனப் புனைகதையிலக்கியம் ஏன் வரலாற்றுச்செய்திகளை புனைவாக்கம் செய்கிறது என்பதற்கும் சில காரணங்களைக் கண்டடைய முடியும்.
அ. புனைவுக்கு தொன்மங்கள் தேவையாகின்றன. தொன்மங்கள் மக்கள் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றிவிட்ட படிமங்கள். அவற்றைக்கொண்டு அடிப்படையான தரிசனங்களை நிறுவவும் மறுபரிசீலனை செய்யவும் முடியும். அழுத்தமான உணர்வுநிலைகளை உருவாக்க முடியும். தொன்மங்களுக்காக இலக்கியங்கள் மதத்தை அணுகுவதுபோலவே வரலாற்றையும் அணுகுகின்றன. அர்ஜுனன் போலவே ராஜராஜசோழனும் தொன்மம்தான். வரலாற்றெழுத்து அத்தகைய தொன்மத்தை உருவாக்கி அளிக்கையில் இலக்கியம் அதை எடுத்தாள்கிறது.
ஆ. தீவிர இலக்கியத்திற்கு மட்டுமல்ல, வணிக இலக்கியத்திற்குக் கூட புனைவுநிலம் மிக உதவியானது. சமகால வாழ்க்கையைச் சொல்லும்போது கூட அதை புனைவுநிலமாகவே இலக்கியப்படைப்புகள் மாற்றிக்கொள்கின்றன. வரலாறு உருவாக்கும் பழைய காலகட்டங்களில் புனைவுநிலத்தை மிகச்சிறப்பாக உருவாக்கிக் கொள்ள முடியும். கதை கும்பகோணத்தில் நடப்பதை விட பழையாறையில் நடந்தால் வாசகனின் கற்பனை விரிகிறது.
இ. வரலாற்றெழுத்து எப்போதுமே பொதுவான புரிதலை உருவாக்குகிறது. வரலாறு என்பது எந்நிலையிலும் பெரும்பாலானவர்களால் ஏற்கப்படுவதுதான். இலக்கியத்தின் வழி என்பது பொதுவான புரிதல்களுக்கு அப்பாலுள்ள அரிய உண்மைகளை நாடிச்செல்வது. அந்நிலையில் வரலாற்றிலுள்ள இடைவெளிகளை கண்டடைந்து புனைவினூடாக விரித்துக்கொள்வதென்பது இலக்கியத்தின் மெய்காண்முறைகளில் ஒன்றாக உள்ளது.
இக்காரணத்தால் எப்போதுமே இலக்கியம் வரலாற்றுப்புனைவுக்கு முதன்மையான இடம் அளிக்கிறது. வரலாற்றுப்புனைவில் இலக்கியத்தின் அணுகுமுறை அச்சமூகத்தின் வரலாற்றின் இயல்பை ஒட்டி மாறிக்கொண்டும் இருக்கிறது
(மேலும்)
வரலாற்றெழுத்தில் நான்கு மாறுதல்கள்
எரிக் ஹாப்ஸ்பாம்- வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை
வரலாற்றெழுத்தும் மையக்கருத்தும்