தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -2

முந்தையபகுதி தொடர்ச்சி தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -1


ஆயிரம் ஊற்றுகள் சிறுகதைத் தொகுதி போலவே படையல் தொகுதியும் வரலாற்றுப்புனைவுதான். நாயக்கர் – மராட்டியர் கால வரலாற்றின் கதைகள் அவை. இத்தகைய வரலாற்றுப்புனைவுகளை எப்படி அணுகுவது, ஏன் அவை எழுதப்படுகின்றன, அவற்றுக்கும் வரலாற்றுக்கும் இடையேயான உறவாடல் என்ன என்பதை விளக்கவே இதை எழுதுகிறேன்.

வரலாறு என்றால் ஒரு பொருள் போல திட்டவட்டமாக வெளியே இருப்பது, முழுமையாக நிறுவப்பட்ட உண்மைகளால் ஆனது என்ற உளமயக்கம் நமக்கு பெரும்பாலும் உண்டு. ஏனென்றால் நாம் கல்விநிலையங்களில் வரலாற்றை அப்படித்தான் படிக்கிறோம். வரலாறு ஒரு விவாதக்களம். ஆனால் பாடநூல்களில் அது தரவுகளின் தொகுப்பாகவே கிடைக்கிறது. வரலாற்றெழுத்து என்பதை பலவகை வரலாறுகள் எழுதப்படும் ஓர் அறிவுக்களம் என புரிந்துகொண்ட பின்னரே மேற்கொண்டு பேசமுடியும்.

தொல்வரலாறு ஆழமாக வேரூன்றியவை இந்தியா போன்ற தொன்மையான சமூகங்கள். இங்கே நவீன வரலாறு வந்துசேர்ந்து இருநூறாண்டுகள் ஆகின்றது. கல்விநிலையங்களில் நவீன வரலாறு கற்பிக்கப்படுகிறது. தொல்லியல்துறை போன்ற அரசுத்துறைகள் நவீன வரலாற்றாய்வுக்காகச் செயல்படுகின்றன. நவீன வரலாற்றை ஒட்டியே இன்றைய ஆட்சிமுறையும் நிர்வாகவும் நிகழ்கின்றன. ஆயினும் இங்கே தொல்வரலாறே மக்கள் உள்ளத்தில் முந்தி நிற்கிறது.

இந்தியாவில் நவீன வரலாறுக்கு மக்கள் உள்ளத்திலும் சரி, மக்களின் மனப்போக்குக்கு ஏற்ப உருவாகும் அரசியல் விவாதங்களிலும் சரி பெரிய இடம் இல்லை. சொல்லப்போனால் இந்தியாவில் நவீன வரலாறென்பதே கல்வித்துறை சார்ந்து, அறிஞர்களின் உலகுக்குள் புழங்கும் ஒரு அறிவுத்துறை மட்டுமே. வரலாறாக இங்கே மக்களிடையே திகழ்வதும், அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படுவதும் எல்லாமே தொல்வரலாறுதான்.

ஆனால் இங்கே எவரிடமும் நவீன வரலாறு பற்றிய புரிதல் இல்லை. ஆகவே இங்குள்ள அரசியல்வாதிகள், மதவாதிகள், சாதியவாதிகள், இனவாதிகள் அனைவருமே  தாங்கள் சொல்லும் தொல்வரலாற்றை நவீன வரலாறாகவே நம்பி முன்வைக்கிறார்கள். நவீன வரலாற்றுக்குரிய கலைச்சொற்களை பயன்படுத்துகிறார்கள். நவீன வரலாற்றாய்வு உருவாக்கிக் கொண்ட தரவுகளையும், பேச்சுமுறையையும்கூட அவர்கள் எடுத்தாள்கிறார்கள்.

ஒரு வரலாறு நவீன வரலாறல்ல, தொல்வரலாறுதான் என எப்படிக் கண்டடைவது? அதற்கான விதிகள் என சிலவற்றைச் சொல்லலாம்

அ. தொல்வரலாற்றெழுத்தில் எப்போதுமே உணர்ச்சிகரமான பற்றுகள் இருக்கும். ஏனென்றால் அது ஒரு சமூகம் தன்னைப்பற்றிச் சொல்லிக்கொள்ளும் வரலாறு. இது என் வரலாறு, நம் வரலாறு என்ற உணர்ச்சி இருந்தாலே அது நவீன வரலாறு அல்ல. வரலாற்றுப் பெருமிதங்கள், வரலாற்றுக் காழ்ப்புகள் இரண்டில் எது இருந்தாலும் அது நவீன வரலாறு அல்ல. நவீன வரலாற்றுக்கு உணர்ச்சிகள் இல்லை. அது அறிவியலாய்வு போன்ற ஒன்று.

ஆ. ஒரு வரலாற்றுச்சித்திரம் ஓர் இனத்தை, சமூகத்தை, வட்டாரத்தை ஒன்றாகக் கட்டி நிறுத்தும் நோக்கம் கொண்டிருந்தாலே அது நவீன வரலாறு அல்ல. அதேபோல ஒரு வரலாற்றுச் சித்திரம் பிறன் அல்லது மாற்றான் என ஒரு தரப்பை உருவகித்தாலே அது நவீன வரலாறு அல்ல. நவீன வரலாறுக்கு அப்படிப்பட்ட நோக்கங்கள் இல்லை.

இ. ஒரு வரலாற்றெழுத்து தன் முடிவுகளை உலகத்தின் நவீன வரலாற்றுச் சித்திரத்தில் எந்த அளவுக்கு பொருத்துகிறதோ அந்த அளவுக்குத்தான் அது நவீன வரலாறு. தனக்கு மட்டுமாக ஒரு வரலாற்றை எழுதிக்கொண்டு, தாங்கள் தனித்தவர்கள் என சொல்லிக்கொண்டிருந்தால் அது நவீன வரலாறல்ல, நம்பிக்கை சார்ந்த தொல்வரலாறு

ஈ. ஒரு வரலாற்றெழுத்து தன் முடிவுகளை தர்க்கப்பூர்வமாக பொதுவில் வைத்து பொய்ப்பித்தலை கோரினால் மட்டுமே அது நவீன வரலாறு. அதை எதிர்ப்பவர்கள்தான் அதன் மெய்யான அறிவுச்சுற்றம். அவர்கள் ஏற்றுக்கொண்டால்தான் அது வரலாற்று உண்மை. மாறாக எதிர்ப்பவர்களை எதிரிகளென காணும் மனநிலை தொல்வரலாறு எனும் நம்பிக்கை வரலாற்றின் இயல்பு.

ஏன் இந்தியாவின் வரலாற்றுமனநிலை பெரும்பாலும் தொல்வரலாறு சார்ந்ததாக உள்ளது? இன்று வடஇந்தியா முழுக்க இந்துப்பண்பாடு சார்ந்து மூர்க்கமான ஒரு நம்பிக்கைத் தொகுப்பையே வரலாறென்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மகாபாரதம் இரும்புக் காலகட்டத்தைச் சேர்ந்தது என நான் சொன்னபோது ஓர் சர்வதேச இலக்கிய அரங்கில் எழுந்து எதிர்க்குரல் எழுப்பி அது ‘பல லட்சம்’ ஆண்டுகள் தொன்மையானது என்று ஒரு பேராசிரியர் சொன்னார். புராணங்களை நேரடியான வரலாறாகவே எடுத்துக் கொள்வது இன்றும் பொது வழக்கமாக உள்ளது. தமிழகத்தில் அதேபோன்ற மூர்க்கமும் மூடத்தனமும் தமிழ்த்தொன்மை சார்ந்து உள்ளது.

படையல் வாங்க

படையல் மின்னூல் வாங்க 

இதற்கான காரணங்களை இப்படி தொகுத்துக்கொள்வேன்.

அ. இந்தியாவில் மிக அழுத்தமாக வேரூன்றிய தொல்வரலாறு இருக்கிறது. அது தொன்மங்களாகவும் நம்பிக்கைகளாகவும் உள்ளது. மதம் சார்ந்த கதைகளாக, இலக்கியமாக அது நம் பண்பாட்டில் வேரூன்றியிருந்தது. நம் சிந்தனை அதைச்சார்ந்தே நிகழ்கிறது.

ஆ. நவீன வரலாற்றெழுத்து முறை நமக்கு காலனியாதிக்கவாதிகளால் உருவாக்கித்தரப்பட்டது. ஆதிக்கவாதிகளின் கோணத்திலேயே அது முதலில் எழுதப்பட்டது. ஆதிக்க நோக்கமும் கொண்டிருந்தது. ஆகவே இயல்பாகவே நாம் அதை ஐயப்பட்டோம். அந்த ஐயம் நீடிக்கிறது.

இ. நவீனக் கல்விமுறை நமக்கு வாழ்க்கைப் பார்வையை ஊடுருவுமளவுக்கு அழுத்தமானதாக இல்லை. அது நம்மை ‘வேலைக்குத் தயார் செய்யும்’ ஒரு பயிற்சியாக மட்டுமே உள்ளது. மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மறந்துவிடுகிறோம். பாடங்களுக்கு அப்பால் நான் எதையும் படிப்பதில்லை. ஆகவே நம்மிடம் கல்வி பரவினாலும் அறிவியல்மனநிலை, அறிவியல் சார்ந்த சிந்தனைமுறை உருவாகவே இல்லை. நம் கல்விநிலையங்களில் வரலாற்றாய்வு நிகழும் முறை கற்பிக்கப்படுவதில்லை. வரலாற்றாய்வு எப்படி தரவுகள், தர்க்கங்கள் வழியாக ஒரு விவாதக்களத்தில் நிறுவப்படுகிறது என நாம் அறிவதே இல்லை. வரலாறாக நாம் அறிவது தகவல்களை மட்டுமே. ஆகவே வரலாற்றாய்வை நிகழ்த்தும் மனப்பயிற்சியே நம்மில் இல்லை. எனவே வரலாற்றாய்வை நம்மால் புரிந்துகொள்ளவும் முடியவில்லை.

ஈ. மக்களிடையே தொல்வரலாற்று மனநிலையே உள்ளது. ஆகவே மக்களை திரட்டி அதிகாரம் பெற எண்ணும் அரசியல் கட்சிகள் தொல்வரலாற்று மனநிலையையே வளர்த்து அவற்றையே பயன்படுத்துகின்றன. அந்த அரசியல்கட்சிகளின் ஆதிக்கம் கல்வித்துறைக்குள் ஊடுருவும்தோறும் நவீன வரலாற்றாய்வுமுறை தேய்ந்து மறைகிறது.

இக்க்காரணங்களால் இந்தியாவில் நவீன வரலாற்றெழுத்து என்பது அனேகமாக இல்லை என்ற நிலையே உள்ளது. இந்துப்பெருமித வரலாறு, திராவிடப்பெருமித வரலாறு, தமிழ்ப்பெருமித வரலாறு, சாதிப்பெருமித வரலாறுகளையே நாம் காண்கிறோம். ஒன்றுக்கு மாற்று இன்னொன்று எனப்படுகிறது. இந்துப்பெருமிதத்தை எதிர்ப்பவர்கள் திராவிடப் பெருமிதத்தை முன்வைப்பார்கள். அதை எதிர்ப்பவர்கள் தமிழ்ப்பெருமிதத்தை முன்வைப்பார்கள். உண்மையில் இவை அனைத்துக்கும் மாற்றுதான் நவீன வரலாறு. அதைச் சொல்லும் அறிஞர்கள் அருகி வருகிறார்கள். அவர்களை ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து தாக்குகிறார்கள். அரசியல்கட்சிகளால் அவர்கள் கல்வித்துறையில் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உயர்பதவிகள் மறுக்கப்பட்டு அரசியல்கட்சிகள் முன்வைக்கும் இனவாத, மொழிவாத, மதவாத வரலாறுகளைச் சொல்பவர்களே முன்நிறுத்தப்படுகிறார்கள்.

இந்திய வரலாற்றெழுத்தின் மூன்று காலகட்டங்களைப் பற்றி நான் முன்னரே சொல்லியிருக்கிறேன் ( நாம் ஏன் வரலாற்றை எழுதவில்லை?) இந்திய வரலாற்றெழுத்தின் முதல் காலகட்டம் காலனியாதிக்க வரலாறு. அதிலுள்ள ஆதிக்க நோக்கத்தை மறுக்கும்பொருட்டு நாம் எழுதிக்கொண்டது தேசியவரலாறு. அதன்பின் அதில் உட்பிரிவுகளாக துணைத்தேசியவரலாறுகள் இங்கே எழுதப்பட்டன. தேசியவரலாற்றெழுத்து பண்டைய பேரரசுகளின், அரசர்களின் வரலாறு. அதை மறுத்து இங்கே மக்கள் வரலாற்றை சமூகப்பொருளியல் கோணத்தில் எழுதப்பட்டது மார்க்ஸிய வரலாறு.

இந்த மூன்று வரலாற்றெழுத்தும் இன்று கடந்துசெல்லப்பட்டு நுண்வரலாறு (Micro History) எழுதப்படுகிறது. அது வட்டாரங்களின் வரலாறாகவோ (உதாரணம், கன்யாகுமரி மாவட்ட வரலாறு), இனக்குழுக்களின் சமூக வரலாறாகவோ (உதாரணம் ,மண்டிகர் வரலாறு), பொருளியல் அலகுகளின் வரலாறாகவோ (உதாரணம், வடசேரி சந்தையின் வரலாறு), பண்பாட்டுக்கூறுகளின் வரலாறாகவோ (உதாரணம் தெக்கன் பாட்டுகள் வரலாறு) இருக்கலாம். (இந்த எல்லா வகைமைகளிலும் அ.கா.பெருமாள் அவர்களின் நூல்கள் உள்ளன)

காலனியாதிக்க வரலாற்றில் ஆதிக்க நோக்கம் இருந்தது என்றால் அதை எதிர்த்து தேசியவரலாற்றை எழுதியவர்கள் தேசியப்பெருமிதத்தின் அம்சங்களை வரலாற்றில் இணைத்துக்கொண்டனர். ஆகவே அவர்கள் தொல்வரலாற்றுக் கூறுகளை தேசியவரலாற்றில் ஊடுருவவிட்டனர். இந்திய வரலாற்றில் பெரிய கதைநாயகர்களை உருவாக்கினர். அசோகன் முதல் அக்பர் வரை, கரிகால்சோழன் முதல் வீரபாண்டிய கட்டப்பொம்மன் வரை அப்படி நம் வரலாற்றில் வரலாற்றுத்தர்க்கத்தை மீறிய பெருவடிவம் கொண்டார்கள்.

உண்மையில் இன்று நவீன வரலாற்றுக்கு எதிராக அரசியல் சார்ந்த மனநிலை உருவாவதற்கான அடித்தளம் நம் தேசிய வரலாற்றாசிரியர்களாலேயே போடப்பட்டுவிட்டது. அவர்கள் இந்திய வரலாற்றில் பெருமிதம் அளிக்கும் அம்சங்களை கண்டு முன்வைக்க ஆரம்பித்தனர். மெல்ல மெல்ல அது பெருமிதத்தின்பொருட்டே வரலாற்றை திரித்து எழுதுவது, பெருமிதத்தின்பொருட்டு வரலாற்றை செயற்கையாக உருவாக்கிக்கொள்வது என்னும் நிலையை அடைந்தது. இன்று வரலாறு என இந்துத்துவர்களும் திராவிடத்துவர்களும் தமிழியர்களும் சொல்வது பழங்குடிகள் தங்களைப் பற்றி தாங்களே சொல்லிக்கொள்ளும் குலக்கதைகளுக்கு குறைவில்லாத அபத்தங்கள் கொண்டவை.

வரலாற்றுப் புனைவெழுத்து என்பதை இந்த வெவ்வேறு வரலாற்றெழுத்துக் காலகட்டங்களுடன் இணைத்துத்தான் புரிந்துகொள்ளவேண்டும். அது எப்போதும் ஒரே வகையானது அல்ல, ஒரே நோக்கம் கொண்டதும் அல்ல

(மேலும்)

முந்தைய கட்டுரைதிலக பாமா
அடுத்த கட்டுரைவெண்முரசுக்கு ஒரு கோனார் உரை