அஜிதனின் இரு நாட்கள்.

அஜிதனின் திருமண ஏற்பாடுகளில் என் பங்களிப்பு என்பது அழைப்பிதழ் கொடுக்க அண்ணாவுடனும், நடராஜனுடனும், அகரமுதல்வனுடனும், செல்வேந்திரனுடனும் சென்றது மட்டுமே. மற்றபடி நான் என்ன செய்தாலும் அவர்களுக்கு இடர் என்பதே பொதுமுடிவாக இருந்தது. ஆகவே நான் என் பாட்டுக்கு இலக்கிய விழாக்களில் அலைந்துகொண்டிருந்தேன். இலக்கியவிழாக்கள் நடுவே எவரிடமாவது ‘என் பையனுக்குக் கல்யாணம்” என்பேன். “எப்போது?” என்பார்கள். ”இன்னும் ஒரு வாரம் கழித்து” என்றதும் வாய் திறந்துவிடும்

மாத்ருபூமி இலக்கிய விழாவில் வங்க எழுத்தாளர் கேட்டார், “உங்கள் மனைவி ஒன்றும் சொல்வதில்லையா?” நான் சொன்னேன். “அவள்தான் எங்காவது கிளம்பிப்போ  என்றாள்” என்றேன். இன்னொரு கன்னட இலக்கியவாதி சிந்தனையுடன் சொன்னார்  “நினைத்தேன்…” . அவர் முகத்தைப் பார்த்தபின் நான் கேட்டேன் “உங்கள் மனைவியும் அப்படித்தான் சொன்னார்களா?”. அவர் புன்னகையுடன் ஆமோதித்து தலையசைத்தார்

இளமையில் ஏராளமான திருமணங்களில் ஊர்ப்பங்களிப்பாளனாகவும், உறவினராகவும் கலந்து கொண்டிருக்கிறேன். அன்றெல்லாம் திருமணத்திற்கு பணம் கொடுத்து வைக்கும் ஊழியர் என்றால் சமையற்காரர்களும் அவருடைய சில உதவியாளர்களும் மட்டுமே. திருமணம் எல்லாமே வீட்டில்தான்.  மூன்று பந்தல்கள் போடுவார்கள்.வீட்டு முகப்பில் வரவேற்புப் பந்தல். பக்கவாட்டில் பந்திப்பந்தல். கொல்லைப்பக்கம் அரிவைப்புப்பந்தல் எனப்படும் சமையற்கொட்டகை. முந்தைய வாரம் முதல் வேலைகள் தொடங்கும். நாகர்கோயிலுக்கு ‘ஜவுளி’ வாங்கப்போவது குடும்பத்தினரே செய்துகொள்வார்கள்

பந்தல் போடுவது பெரும்பாலும் ஊரார்தான். அதற்கான நிபுணர்கள் உண்டு. சமையற்காரர் ‘குறிமானம்’ கொடுத்ததும் கோட்டாறு சந்தைக்கு மளிகை வாங்கப்போவது முதல் திருமணத்திற்கு முந்தையநாள் கருங்கல் சந்தைக்கு காய்கறி வாங்கப்போவது வரை எல்லாமே ஊரார் எனப்படும் இளைஞர்களின் பணி. முந்தையநாள் இரவு ‘காய்கறி வெட்டு’ எனப்படும் பணி முதல் திருமணம் முடிந்த மறுநாள் பாத்திரம் கழுவுதல், அடுத்தவாரம் பந்தல் அகற்றுதல் வரை ஊரார்ப்பணிதான்.

பல கதைகளில் அந்தச் சூழலை எழுதியிருக்கிறேன். சூழ்திரு, பிரதமன். என்  தொடக்க காலக் குறுநாவல்  கிளிக்காலம் முழுக்கவே திருமணநாள் இரவில் நிகழ்வது. அக்காலத்தில் உறவுகள் சந்தித்துக்கொள்ளும் அரிய தருணங்களால் ஆனது திருமணத்திற்கு முந்தைய நாள் இரவுகள். விடியற்காலையில் பிரதமன் திரண்டுவரும் மணமே பல திருமணங்களை நினைவுகூரச்செய்கிறது.

இப்போது திருமணங்கள் மாறிவிட்டன. திருமண மண்டபங்களிலேயே எல்லாமே ஒரே ஏற்பாடாகச் செய்துவிடலாம். திருமணங்களில் இன்றைய பெரிய பணி என்பது ‘ஷாப்பிங்’. பட்டுப்புடவைகள் எடுப்பது. ஆடைகள் வாங்குவது, வெவ்வேறு ஆடைகள் தைப்பது, நகைகள் வாங்குவது என அது நாட்கணக்கில் நீளும் பணி. லெஹங்கா, ஷெர்வானி என நான் முன்பு கேள்வியேபட்டிராத ஆடைகள். அவற்றை தைக்கும் நிபுணர்கள். அவர்களிடம் ‘அப்பாயின்மெண்ட்’ வாங்கவேண்டியிருக்கிறது.

மொத்தம் மூன்று ஊர்களில் ‘ஷாப்பிங்’. கோவை, சென்னை, நாகர்கோயில். இத்தனைக்கும் அப்படியொன்றும் பணத்தை அள்ளி வீசவில்லை. இப்போதெல்லாம் கோவை வட்டாரத்தில் பல திருமணங்கள் திருவிழாக்கள் அளவுக்கு பிரம்மாண்டமானவை என்று கேள்விப்பட்டேன். எங்கள் திருமண நிகழ்வின் ஒட்டுமொத்த பட்ஜெட்டே சாதாரணமாக திருமணத் துணிகள் வாங்கச் செலவாகும் என்றனர்.

எதிலும் நான் கலந்துகொள்ளவில்லை. ஆனால் செய்திகள் வந்துகொண்டே இருந்தன. ஷோப்பனோவர், காண்ட், ஹன்னா அரெண்ட் என்று உலாவிக்கொண்டிருந்த அதி உக்கிரமான அறிவுஜீவிகள் எல்லாம் லெஹங்கா டிசைன், ஷெர்வானி நிறம் என ஊக்கம் அடைந்தது கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது என்றாலும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

கோவை ஏற்பாடுகளை நடராஜன், செந்தில்குமார், மீனாம்பிகை, ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் ஆகியோர் செய்தனர். அவர்களிடம் எல்லாவற்றையும் பேசி கோரி, ஆணையிட்டு அருண்மொழி ஒருங்கிணைத்தாள். நான் பேசாமல் இருந்தால் “என்னன்னு ஒண்ணுமே கேக்காதே..நீ பாட்டுக்கு இருக்கே..” என திட்டு. சரி என்ன நடக்கிறதென்று கேட்போம் என்றால் “எல்லாம் நான் பாத்துக்கறேன். எதுக்கு நீ தொணதொணண்ணு உள்ளே வந்து கேட்டுட்டு இருக்கே” என்று திட்டு. ஆகவே மையமான ஒரு நிலைபாட்டை மேற்கொண்டேன்.

கோவையில் திருமணம் பெண்வீட்டார் ஏற்பாடு. எங்கள் தரப்பில் எங்கள் விருந்தினர் தங்குமிடம் ஏற்பாடு செய்வது மட்டுமே. அதை மீனாம்பிகை ஒருங்கிணைத்தார். பல ஆண்டுக்காலம் விஷ்ணுபுரம் விழாவை ஒருங்கிணைத்த அனுபவம் கொண்டவர். சென்னை ஏற்பாடுகளை அகரமுதல்வன் ஒருங்கிணைத்தார். நாகர்கோயில் ஏற்பாடுகளை ஷாகுல் ஹமீது ஒருங்கிணைத்தார்.

ஜி.எஸ்.எஸ்.வி.நவீன், அருள் ஆகியோர் நாகர்கோயில் வந்திருந்து அருண்மொழிக்கு உதவினர். அங்குமிங்கும் ஓடியாடிக்கொண்டிருந்தனர். ஆணைகள், செயல்பாடுகள். அவர்கள் என்னை பொருட்படுத்தவில்லை. ஒரு தனி உலகமாகவே அது சுழன்றுகொண்டிருந்தது.

நான் மாத்ருபூமி இலக்கிய விழா முடிந்து வந்தபின்னர்தான் கொஞ்சம் கொஞ்சமாக ‘ஆமாம், அஜிக்கு திருமணம்’ என்னும் உணர்வை அடைந்தேன். நடுவே பல இலக்கிய எழுத்து வேலைகள். சினிமா எழுத்து மிச்சப்பணிகள். 16 ஆம் தேதிதான் உண்மையில் கல்யாண மனநிலையை அடைதேன்.

பிப்ரவரி 16 மாலை கோவை எக்ஸ்பிரஸில் கிளம்பி கோவை. அங்கே சென்றபின் செய்வதற்கொன்றும் இல்லை. கம்ப்யூட்டர் கையில் இல்லை. ஆகவே சில மலையாள உரைகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். மாலைவரை அறையிலேயே இருந்தேன். மற்றவர்கள்தான் அங்குமிங்கும் ஓடி என்னென்னவோ செய்துகொண்டிருந்தார்கள்.

18 காலை எட்டு மணிக்கு அரங்குக்குச் சென்றோம். முறையான மாப்பிள்ளை அழைப்பு.  எட்டு மணி முதலே நண்பர்கள் வரத்தொடங்கினர். விஷ்ணுபுரம் விருது விழாவின் அதே உளநிலை. எக்கணமும் அரங்குகள் தொடங்கிவிடும் என்பதுபோன்ற நிலை. சுனில்கிருஷ்ணன் காலையிலேயே வந்திருந்தார். அவருடன் நீண்டநாட்களுக்குப் பின் ஓர் ‘ஆற அமர’ உரையாடல். வரவிருக்கும் விருதுகளுக்கு அவருடைய சிபாரிசுகளை கேட்டேன். அங்கே இங்கே யோசித்து குழம்பி மண்டை சூடாகி அமர்ந்திருந்தார்.

காலை 10 மணிக்கே காலைச்சடங்குகள் முடிந்தன. மாலை 3 மணிக்கு நிச்சயதாம்பூலம் நிகழ்வு. மதியம் வரை கல்யாண மண்டபத்தில் சும்மா இருந்தேன். அங்கே நண்பர்கள் வந்துகொண்டே இருந்தனர். மாலை மூன்றுமணி நிச்சயத்தாம்பூலச் சடங்குக்கும் ஏராளமான நண்பர்கள் வந்திருந்தனர். மாலை 6 30க்கு வரவேற்பு. மாலை ஐந்து மணிக்கே அரங்கு பாதி நிறைந்திருந்தது. மாலை  நிகழ்வுக்கு எண்ணூறுபேருக்கு மேல் வந்திருந்தார்கள் என்று சொன்னார்கள்.

நிகழ்வின் தொடக்கம் முதல் இறுதியில் ரயில் ஏறுவது வரை உடன்நின்று அனைத்தையும் பொறுப்பேற்றுச் செய்தவர் என் மகனுக்கு நிகரான யோகேஸ்வரன் ராமநாதன். அப்படி ஒவ்வொருவரும் ஏதேனும் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள். அவர்களுடனான என் உறவு என்பது உணர்வுபூர்வமான ஒன்று.

வந்திருந்தவர்களில் என் சொந்தக்காரர்களில் சிலர் தவிர மற்ற அனைவரையுமே மிக நன்றாக எனக்கு தெரிந்திருந்தது. குறிப்பாக அவர்கள் பற்றிய  அண்மைக்காலப் பகடிகள். கோவையின் முதன்மையான ஆளுமைகள் பலர் வந்திருந்தனர். கலையிலக்கிய உலகின் நட்சத்திரங்கள் என அறியப்பட்ட பலர் வந்திருந்தனர். என் காசர்கோடு நண்பர்கள் உட்பட நெடுந்தொலைவில் இருந்தெல்லாம் என் வாசகர்கள் வந்திருந்தனர். ஒவ்வொருவரும் எனக்கு முக்கியமானவர்கள். ஒவ்வொருவரிடமும் பேசவேண்டியிருந்தது, ஓரிரு சொற்களேனும் சொல்லவேண்டியிருந்தது.

நிகழ்வின் உணவு ஏற்பாடுகளை சாய்லட்சுமி (சாய்லட்சுமி ராம்நகர் கோவை) திருமணச் சமையல் நிறுவனம் பொறுப்பேற்று செய்தது. அவர்களே நின்று பரிமாறி அனைவரிடமும் விசாரித்து உபசரித்தனர். மிகச்சிறந்த சாப்பாடு என பலர் என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தனர். என் காசர்கோடு நண்பர்கள் ஒரு மாதிரி திகைத்துப்போய் என்னிடம் சொன்னார்கள். “தமிழ்நாட்டில் சைவ உணவும் டிபனும் நன்றாக இருக்கும் என்று சொல்லிக்கொண்டேதான் இருப்போம். இது அபாரம்…”. தன்யாவின் அப்பா ரமேஷிடம் சொல்லும்படிச் சொன்னேன். அவர்தான் அந்த திருமணத்தின் எல்லா சிறப்புக்கும் காரணம்.

மறுநாள் திருமணம் முடிந்ததும் ரயிலில் கிளம்பி நாகர்கோயில் வந்தோம். நான் ரயிலில் பின்னிரவு வரை தூங்காமலேயே இருந்தேன். இத்தனைக்கும் தொடர்ச்சியாகத் தூக்கமிழப்பு இருந்தது. காபி குடித்துச் சமாளித்துக் கொண்டிருந்தேன். ஆனால் உள்ளம் ஓடும்போது தூக்கம் வருவதில்லை. வழக்கம்போல ஏசுதாஸின் மலையாளப்பாடல்களை பின்னிரவு வரை கேட்டுக்கொண்டிருந்தேன். பின்னிரவில் கொஞ்சம் கண்ணசந்து வந்தபோது என் மாமனார் இன்னொரு பெட்டியில் இருந்து ஃபோனில் அழைத்து “கலியபெருமாளா? கலியபெருமாளா?” என்றார். அவருக்கும் ரயிலில் தூக்கம் வராது. குத்துமதிப்பாக கூப்பிட்டிருக்கிறார்.

இன்னும் ’அதிகாரபுர்வ’ புகைப்படங்கள் கைக்கு வரவில்லை. நண்பர்கள் பகிர்ந்த புகைப்படங்களைக் கொண்டு நிகழ்வுகளை நினைவில் மீட்டிக்கொண்டிருக்கிறேன்.  ஸ்ரீனிவாசன் சொன்னார். “ஒரு கல்யாணத்திலே இத்தனைபேர் எனக்குத் தெரிஞ்சவங்களா இருக்கிறது இப்பதான்” அதுதான் நிகழ்வின் சிறப்பு. விஷ்ணுபுரம் விழாக்கள் வழியாக தனிப்பட்ட முறை நெருக்கம் கொண்டவர்களே பெரும்பாலானவர்கள். ஆகவே பெரும்பாலான கல்யாணங்களில் முகம்காட்டி உடனே கிளம்பிவிடுவது போலன்றி எல்லா திக்கிலும் சிரிப்பும், அரட்டையும் நிறைந்திருந்தன.

ஆகவேதான் விருந்தின்போது இரைச்சலிடும் இசைநிகழ்வுகளோ நாதஸ்வரமோ ஏற்பாடு செய்யவில்லை. திருமண நிகழ்வின்போதுகூட தேவையான போது மட்டுமே மங்கல இசை. பேச்சுக்கு இடையூறாக சத்தமே தேவையில்லை என்று ஜிஎஸ்எஸ்வி நவீன் உட்பட்டோர் முடிவெடுத்திருந்தனர். வரவேற்பு நிகழ்வும் திருமண நிகழ்வும் முடிந்து அரங்கை அவர்கள் கேட்பது வரை காலிசெய்யாமல் கூட்டம் பேசிக்கொண்டே இருந்த நிகழ்வு அவர்கள் அறிந்து அரிதாகவே நிகழ்ந்திருக்கும்.

முந்தைய கட்டுரைநெல்லை ஆ கணபதி
அடுத்த கட்டுரைபுதுவை வெண்முரசுக்கூடுகை 68