பேசுவதும் சிந்திப்பதும்…

அன்பிற்குரிய ஆசிரியர்க்கு

ஒரு இளம் வாசகனாகிய நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம் இது. நான் பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். தினமும் காலை ஒரு மணி நேரம் பொதுக்கூடுகை நடக்கும். அதன் நோக்கம் நேற்றைய தினத்தில் என்னென்ன தவறுகள் நிகழ்ந்தன என்றும் அந்த தவறுகள் குறித்து விவாதிப்பதும் மேற்படி அந்த தவறுகள் நிகழாதிருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் விவாதிக்கப்படும். இதில் தலைமை மேலாளர் முதல் அனைவரும் இதில் கலந்துக்கொள்வார்கள். முதலில் ஒருவர் தொடங்குவார். அவர் ஒரு இரண்டு நிமிடம் பேசுவதற்கு முன்னே இன்னொருவர் தன் தலையை நீட்டுவார். அவர் சம்மதமே இல்லாமல் premise யை தாண்டி பேசிக்கொண்டிருப்பார். இப்படியாக   ஒருவர்பின் ஒருவராக ஒருமையின்றி விவாதம் நடந்து கொண்டிருக்கும். இறுதியில் பொதுக்கூடுகை யின் நோக்கம் தவிர்த்து அனைத்தும் அங்கு நிகழ்ந்து முடிவு பெறும். சமீபமாக எனக்கு இது மிகப்பெரிய சலிப்பூட்டியது. 

இதன் நீட்சி யாக நண்பர்களுடன் சிறுது நேர உரையாடலியே சலிப்பு வருகிறது. காரணம் ஒருமை இல்லாத பேச்சு சலிப்பை தரும். தினமும் வாசிப்பது என் வழக்கம். நான் வாசிக்கும்போது என் நண்பர்கள் என்னை கிண்டல் செய்வார்கள். கதை புத்தகம் படித்து என்ன செய்யப் போகிறாய் ஏதேனும்  part time வேலை செய் பணமாவது கிடைக்கும் என்பார்கள். உண்மையில் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது. இங்குள்ள பெரும்பாலான இளைஞர்களுக்கு சிந்தனை என ஒன்று இருப்பதே மறந்துவிட்டது.  By end of the day money alone matters என்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். உண்மையில் நம் பள்ளி முதல் கல்லூரி வரையிலும் நம் சிந்தனையின் ஒரு மிகப்பெரிய தேக்கம் ஏற்பட்டுள்ளது. சிந்தனையை ஊக்குவிக்கும் கல்வி இங்கு அமைவதில்லை. Most of the educations are ending with only employees based systems. 

சத் தர்ஷனில் தாங்கள் நிகழ்த்திய ஏழு நிமிட உரை பயிற்சி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அன்று முதல் நான் வாசிக்கும் ஒவ்வொரு நாவலுக்கும் சிறுகதைகளுக்கும் அதை பொறுத்தி பார்ப்பேன். அதன் மூலம் என் வாசிப்பு விரிவதை காண்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஏழு நிமிட உரை வாசித்த புத்தகத்தை நினைவில் வைத்துக்கொள்ள மட்டுமின்றி என் சிந்தனையிலும் மிகப்பெரிய மாறுதலை ஏற்பட்டிருப்பதை காண்கிறேன். மேலும் இதுபோல் வகுப்புகள் இன்னும் நடந்தால் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன். உண்மையில் ஒரு போதாமை இருப்பதாக உணர்கிறேன். மேலும் சிந்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு அதிக வகுப்புகள் நிகழ்ச்சி தங்களை வேண்டுகிறேன்

அன்புடன்

அசோக்

ஊட்டி   

அன்புள்ள அசோக்,

அமெரிக்காவில் வேலைபார்த்துவிட்டு ஒருவகை இலட்சியவாத நோக்குடன் இந்தியா திரும்பும் சூட்டிகையான தொழில்நுட்ப ஊழியர்கள் பலர் ஓரிரு ஆண்டுகளில் பதறி அடித்து திரும்பிச்செல்வதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று,  இங்குள்ளகான்ஃபரன்ஸுகள்மற்றும்மோட்டிவேஷன் ஸ்பீச்சுகள்’. என்னிடம் பல நண்பர்கள் அதைப்பற்றி வேடிக்கையாகவும் வருந்தியும் சொன்னதுண்டு. சென்ற வாரம் கூட ஒருவர் நண்பர் சந்திப்பில் அதைப்பற்றிச் சொன்னார். 

ஒவ்வொரு வாரமும்  நிகழும் அந்த மொக்கைப்பேச்சுக்கள் அளிக்கும் உளச்சோர்வும் எரிச்சலும் அந்த வாரத்தையே நரகமாக ஆக்கிவிடுவதைப் பற்றிப் புலம்பிக்கொண்டே இருக்கிறார்கள். இத்தனைக்கும் அந்தப் பேச்சுகளை நிகழ்த்துபவர்கள் பலரும் உயர்மட்ட நிர்வாகிகள்.தொழிலதிபர்கள். ஆகவே தவிர்க்க முடியாது. ஆனால் அவர்களுக்கு என்ன பேசவேண்டும், எப்படிப் பேசவேண்டும் என்று தெரியாது. ஐந்து நிமிடத்தில் சொல்லவேண்டியவற்றைச் சுற்றிச்சுற்றி மணிக்கணக்காகப் பேசுவார்கள். சம்பந்தமில்லாமல் தாவித்தாவிச் செல்வார்கள். (ஒருவர் எல்லா உரையிலும் எந்த தொடர்பும் இல்லாமல் அவருடைய இளமைக்கால ஐரோப்பா எப்படி இருக்கும் என்று பேச ஆரம்பிப்பார் என்று ஒரு நண்பர் நடித்துக் காட்டினார்) 

இவர்களுக்கு கேட்பவர்கள் கவனிக்கிறார்களா என்று கவலை இல்லை. அந்தப் பேச்சினால் என்ன பயன் என்னும் கணிப்பே இல்லை. கேலிப்பொருள் ஆவதைப்பற்றிக்கூட கவலை இல்லை. தன்குரலை தானே கேட்கும் ஆசை. கேட்டேயாகவேண்டிய நிலையில் சிலர் முன்னால் அமர்ந்திருக்கின்றனர் என்னும் மிதப்பு. இந்தியச் சூழலில் இந்த வகை நேரவீணடிப்பு எப்படியோ எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள்கூட இதே வகையில்தான் உள்ளன என்கின்றனர்.

விவாதங்கள் இன்னும் கொடுமையாக இருக்கும். எந்தச் சம்பந்தமும் இல்லாமல் பேசுவார்கள். நாலைந்துபேர் பேசியதும் பேச்சுப்பொருள் எங்கெங்கோ சென்று எப்படியெப்படியோ ஆகிவிடும். பெரும்பாலானவர்கள் மூளையை ஆஃப் செய்து, கண்களை கொட்டக்கொட்ட விழித்துக்கொண்டு, அமர்ந்திருப்பார்கள். அந்தப் பயிற்சி நமக்கு கல்லூரி முதல் அமைந்துள்ளது. அதை வேலையின் ஒரு பகுதியாக எண்ணிக்கொண்டால் ஒரு பிரச்சினையும் இல்லை. சொல்லப்போனால் சோம்பலுக்கு நல்ல வாய்ப்பு. 

ஆனால் நேரத்தை வீணாக்க விரும்பாதவர்களுக்கு அது பெரிய வதை. தொடர்ச்சியான சிந்தனைகளும், திட்டங்களும் கொண்ட ஆக்கபூர்வமான மனிதர்களுக்கு அங்கே அமர்ந்திருக்கும் ஒவ்வொரு கணமும் நரகம். இதெல்லாம் இப்படியேதான் அரசுத்துறைகளிலும் நிகழும். ஆனால் ஒரே ஒரு வேறுபாடு. மையமாக உள்ள அதிகாரியை பிறர் புகழ்ந்துகொண்டே இருப்பார்கள். ஆம், அதேபொன்மனச்செல்வி, புகழுடைத்தலைவி, புரட்சித்தலைவி, அம்மா அவர்கள் …” பாணி. ஆனால் அதைவிட பல படிகள் கீழ்நிலையில் இருக்கும் புகழ்ச்சிகள். 

ஒருங்கிணைந்த, ஆக்கபூர்வமான சிந்தனை கொண்டவர்களின் பெருந்துயர் என்பது ஒருங்கிணைவில்லாமல் தாவிச்செல்லும் பேச்சை கேட்பதுதான். ஏனென்றால் நாம் கேட்பவனவற்றை உடனே தொகுத்துக்கொள்கிறோம். அவற்றை சுருக்கி வகுத்துக் கொள்கிறோம்.நம்மூர்வளவளர்கள்  பேச்சை கவனிக்கும்போது நாம் அவற்றை அள்ளித்தொகுக்க முயன்று தோற்றுக்கொண்டே இருக்கிறோம். நம் மூளை சலித்துக்கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு பிரச்சினை இல்லை, பேசித்தள்ளி விடுவார்கள். ஆனால் கேட்கும் நமக்கு அது பல மடங்கு மூளை உழைப்பு. ஒரு கட்டத்தில் களைத்துப்போய் முயற்சியைக் கைவிடுகிறோம். 

ஆனால் அதே பேச்சை அதேபோன்ற இன்னொரு வளவளர் எந்த சலிப்பும் இல்லாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறார். பேசும் வளவளர் பலமுறை ஒன்றே சொல்லி முடித்தபின் இவர் அதையே திரும்பச் சொல்வதும் உண்டு. ஒருவர் குடித்துவிட்டு உளறினால் குடிக்காதவரால் அதை கவனிக்க முடியாது. முன்பின் அற்ற அந்த உளறல் உளறல் என நமக்கு எவ்வளவு நன்றாகத் தெரிந்தாலும் அந்தப் பேச்சை தொகுத்துப் புரிந்துகொள்ள நம்மையறியாமலேயே நம் மூளை முயன்றபடியேதான் இருக்கும். ஆகவே விரைவிலேயே சலிப்புற்று எரிச்சலடைந்துவிடும். இன்னொரு குடிகாரர் கவனிப்பதே இல்லை. தொகுக்கும் மூளையும் அவரிடம் செயல்படுவதில்லை. ஆகவே அவருக்குப் பிரச்சினை இல்லை. நம்மில் மிகப்பெரும்பாலானவர்கள் குடிக்காவிட்டாலும் குடிகாரர் போல உளறுபவர்கள்தான். 

சிந்திக்கும் மனிதர்களால் சொல்விரயத்தை தாளமுடியாது. நாம் ஒன்றை புரிந்துகொண்ட பிறகும் ஒருவர் பேசிக்கொண்டிருப்பார் என்றால் அது பெரும் துன்பம். கூறியது கூறல் இங்கே நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. என்னால் பெரும்பாலான மேடைப்பேச்சுகளைக் கேட்கமுடியாமலிருப்பது அதனால்தான் 

(என்னிடம் புகழ்பெற்ற மேடைப்பேச்சாளர் ஒருமுறை சொன்னார். நம் மேடையில் ஒவ்வொரு வரியையும் மூன்றுமுறை சொல்லவேண்டும், அப்போதுதான் நம் அரங்கினர் புரிந்துகொள்வார்கள். நான் பேசும்போது வேகமாக ஓடிச்செல்கிறேன் என்றார். அதாவது இப்படிப் பேசவேண்டும். ‘இந்தியாவுக்கு தந்தை காந்தி. காந்தியை இந்தியாவின் தந்தை என்கிறார்கள். இந்தியாவின் தந்தை என்று சொல்லப்படும் காந்தி ஒரு முறை சொன்னார்….. என்ன சொன்னார் என்றால் அகிம்சையே விடுதலைக்கு வழி என்றார். அகிம்சையால்தான் விடுதலை கிடைக்கும் என்பது காந்தி சொன்னது. காந்தி சொன்ன அந்த அகிம்சை என்பது என்ன?…. இப்படி முழுப்பேச்சும் ஓடும். இந்த வகையான பேச்சுமொழி நமக்கு பழகியிருக்கிறது)

ஆனால் இதே வளவளர்கள் ஒரு செறிவான உரையை அல்லது கட்டுரையைநீளமா இருக்கு’ ‘வளவளன்னு போய்ட்டே இருக்குஎன்பதையும் காணலாம். அவர்களால் சுருக்கமாக, செறிவாக, சீராகச் சொல்லப்படும் ஒன்றை புரிந்துகொள்ள முடியாது. ஒரு கருத்தில் இருந்து இன்னொரு கருத்துக்கு செல்ல முடியாது. நாம் ஒரு வரி என்பது அவர்களுக்கு பல பத்திகளாக இருக்கவேண்டும். ஆகவே எவர் நம் கணக்கில் நன்றாகப் பேசுகிறாரோ அவரைஅறுக்கிறான்என்பார்கள்.   

சிந்திப்பதற்கு பயில்வதென்பது பேசப்பயில்வதன் வழியாகவே இயலும். சிந்தனையை தனியாகப் பயிலமுடியாது. அது அகவயமானது. பேச்சு புறவயமானது. அதைப் பயின்றால் தானாகவே சிந்தனை ஒழுங்காக, சீராக அமையும். ஒருவர் தொடர்ச்சியற்றுப் பேசுகிறார் என்றால் அவர் தொடர்ச்சியற்று சிந்திக்கிறார் என்றுதான் பொருள். ஆழ்ந்த சிந்தனையாளர், ஆனால் சீராகப் பேச வராது என ஒருவர் இல்லை. சிலர் மேடையில் பேசாதவர்களாக இருக்கலாம். ஆனால் நல்ல சிந்தனையாளர் நல்ல உரையாடல்காரராகவே இருப்பார். விதிவிலக்காக எவரையும் நான் இது வரை கண்டதில்லை. இக்காரணத்தால்தான் மேலைக்கல்வியில் வகுப்பில் எழுந்து சுருக்கமாகப் பேசுவதை ஒரு கட்டாயப் பயிற்சியாகக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கே நம் கல்விமுறையில் அப்படி ஒரு பயிற்சியே இல்லை.ஆகவே உயர்கல்வி கற்றவர்கள்கூட  இங்கேநான் என்ன சொல்லவர்ரேன்னா?’ ‘ஆக்சுவலி, இப்ப பாத்தீங்கன்னா…’ ‘ அட் த என்ட் ஆஃப் த டே…’ என்றெல்லாம் தேய்வழக்குகளாக அடுக்கி உளறித்தள்ளுகிறோம். நம் தொழில், வணிகம் ஆகியவற்றைக்கூட பெருமளவுக்கு இந்த பேச்சுத்திறனின்மை பாதிக்கிறது. ஆனால் நம்மிடம் இப்படி ஒரு குறை இருப்பதையே நாம் அறிவதில்லை. தொடர்ச்சியாக இளைஞர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பேச்சே வரவில்லை.

ஆகவேதான் பயிற்சிகளை தொடங்கினோம். அவை பங்கேற்றவர்களுக்குப் பெரும்பயன் அளிப்பது கண்கூடாக தெரிந்தது. ஆனால் அப்படி ஒரு குறைபாடு தங்களிடம் இருப்பதை நம் இளைஞர்கள் அல்லது பிறர் புரிந்துகொண்டால்தானே அப்பயிற்சிக்கு வரமுடியும். அதை அவர்களிடம் கொண்டு சேர்க்க எங்களால் முடியவில்லை. ஆகவே அப்பயிற்சிகளைத் தொடரவில்லை.

என் நேரம் மிகுந்த மதிப்பு மிக்கது. பொருள்ரீதியாகவும் மிகுந்த மதிப்புள்ளது. என்னைப்போல திரைத்துறையில் பரபரப்பாக இருக்கும் ஒருவர் மூன்றுநாட்களை அளிப்பதென்பது ஒரு கொடை.  நான் அதை இலவசமாகவே கற்றுக்கொடுத்தேன். ஆனால் போதிய பங்கேற்பாளர் இல்லை என்றால் அமைப்புச்செலவுக்கு இழப்பு ஏற்படும். கைக்காசையும் செலவிட்டு, நேரத்தையும் வீணடிக்கவேண்டியதில்லை என முடிவெடுத்தேன்.

ஜெ

முந்தைய கட்டுரைசக்திதாசன் சுப்ரமணியன்
அடுத்த கட்டுரைபனிவெளியின் கதைகள்