தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு

 வணக்கம் திரு.ஜெயமோகன்

அண்மையில் ஆயிரம் ஊற்றுகள் சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். சென்ற வருடம் உங்களது ஒரு சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வாங்க வேண்டும் என்றபோது, திருவாதிங்கூர் ராஜ குடும்பத்தை ஒட்டிய கதைகள் என்ற வகைமை எனக்கு தேர்ந்தெடுக்க எளிமையாக இருந்தது. திருவிதாங்கூர் ஆட்சியைப் பற்றியும், அதன் இராஜாக்கள் இராணிகள் பற்றியும் (நிலவரை செய்திவெளிச்சம் வருவதற்கு முன்னிலிருந்தே) ஆர்வம் கொண்டிருந்தேன். சமஸ்தான வரலாறுகளை கருத்தில் கொள்ளாது இந்திய வரலாற்றைப் பற்றிய சித்திரம் முழுமை கொள்ளாது என்பது என் கருத்து.

இதற்கு முன் நான் வாசித்திருந்த சமஸ்தான ராஜாக்கள் சம்பந்தமான சொற்பமான நூல்கள் ஒன்றாவது இராஜாக்கள் பற்றிய கேலிச் சித்திரத்தை அளிக்கும், அல்லது அவற்றை துதிபாடும். திருவாங்கூர் அதில் ஒரு விதிவிலக்காகவே கருதியிருந்தேன். திருவிதாங்கூர் ராஜாக்களில் கணிசமான பேர் எப்படி இசை,ஓவியம் என்று பலவேறு கலைத்துறையில் மிளிர்ந்தார்கள் என்பது பற்றி எல்லாம் வியந்து நண்பர்களுடன் விவாதிப்பதுண்டு. அதனால் இப்புத்தகத்தை எளிமையாக தேர்வு செய்ய முடிந்தது. இராஜாக்கள் அல்லாது, முக்கிய அதிகாரிகள் குறிப்பாக தளவாய் வேலுத்தம்பி, பத்மநாபன் தம்பி, மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை பற்றிய கதையில் வரும் செய்திகள் தொடர் தேடலுக்கும், வாசிப்புக்கும் வழிவகுத்ததுஅதை முன்வைத்து இரண்டு கேள்விகள்:

கேள்வி 1: 

திருவிதாங்கூர் சமஸ்தானம் என்பது மாளிகைகளும், கோவில்களும், விழாக்களும், பெரும்செல்வமும் என்பதைக்கடந்து, கொட்டாரங்களின் நான்கு சுவர்களுக்குள் நடைபெற்ற நிகழ்வுகளைப் படிக்கக் கிடைத்தது மகிழ்ச்சி. ஆனாலும் புனைவென்பதால் சற்று விலகி இருந்து இது பொய்யாகவும் இருக்கலாம் என்று அசிரீரியொன்று கூறாமலும் இல்லை. ராஜ குடும்பத்தின் சிறுமைகள் சிலவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்த போதும், ஒரு வகையில் அவர்களின் ஆளுமையை மெச்சுவது போலவே மிக்கவாறும் எல்லா கதைகளும் அமைந்திருந்தது. எனது கேள்வி, ஒரு திருவாதங்கூர் பிரஜை இன்னும் உங்களில் இருக்கிறாரா? மொத்தமான வரலாற்றுப் பார்வையில்: பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்டு ராஜியத்தை இழப்பதைக் காட்டில், அவர்களிடம் கணக்கு காண்பித்து, ரேஷன் பெற்று, மன்னிப்புக் கடிதங்கள் எழுதி ராஜவம்ச தொடர்ச்சியை தக்கவைத்துக் கொள்வது மேல் என்ற திருவிதாங்கூர் ராஜவம்சத்தின் பார்வையை நீங்கள் விமர்சனத்துடன் பார்க்கிறீர்களா அல்லது அந்த நிலைப்பாட்டிற்கு அனுக்கமாக உணர்கிறீர்களா

கேள்வி 2: 

சரித்திரத்தை பின்புலமாகக் கொண்ட புனைவு என்ற போதும், அதில் எது கற்பனை எது உண்மைச் செய்தி என்று பிரித்தறிய முடியாத வண்ணம் கதைகள் உருவாக்கப்பட்டிருந்தன. இப்படிப்பட்ட கதைகள் புனையப்படுவதன் தொழில்நுட்பம் குறித்தது சொல்லுங்கள். உண்மை நிகழ்வையும் கற்பனையயும் எப்படி ஒன்றை ஒன்று மீறாமல் அது நிகழ்கிறது?  

துணைக்கேள்வி: திருவிதாங்கூர் சமஸ்தானத்தைப் பற்றிய இத்தகைய விரிவான சரித்திரத்தை அறிந்துகொள்ள எந்தெந்த நூல்களை பரிந்துரைப்பீர்கள். மனு பிள்ளையின் ஐவரி த்ரோன்ஸ் (Ivory Thrones) பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன

நன்றி

பிரவீன் நற்றில்

ஆயிரம் ஊற்றுக்கள் மின்னூல் வாங்க

ஆயிரம் ஊற்றுகள் வாங்க

அன்புள்ள பிரவீண்,

வரலாறு என்பது என்ன என்ற சிந்தனைகள் பல கோணங்களில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. சொல்லப்போனால் நவீனச் சிந்தனையில் முக்கியமான ஒரு கேள்வியே வரலாறென்பது என்ன என்பதுதான். வரலாற்றுக்குச் செவ்வியல் விளக்கம், நவீனத்துவ விளக்கம், பின்நவீனத்துவ விளக்கம், பின்னைபின்நவீனத்துவ விளக்கம் என பல படிநிலைகள் உள்ளன.

நாம் இன்று பயிலும் வரலாற்று அணுகுமுறை என்பது என்பது என்றும் இருந்துகொண்டிருக்கும் ஓர் அறிவுமரபு அல்ல. நவீனக் காலகட்டத்தில்தான் இது உருவானது. ஒரு வசதிக்காக  தொல்வரலாறு, நவீன வரலாறு என பிரிக்கலாம்.

தொல்காலத்தில் வரலாறு என்பது அதிகாரத்தின் பொருட்டு எழுதப்பட்டது. ஒரு மக்கள் திரள் தங்களை ஒரு சமூகமாக உணர தங்களுக்கான வரலாற்றை எழுதிக்கொண்டது. ஒரு நிலப்பகுதி ஒரு நாடாக தன்னை உணர வரலாற்றை எழுதிக்கொண்டது. ஓர் அரசகுடி தன்னுடைய ஆட்சியுரிமையை நிலைநாட்ட தன் மரபுத் தொடர்ச்சியை வரலாறாக எழுதிக்கொண்டது. ஓர் அரசன் தன் புகழ் காலத்தில் நிலைகொள்ள வரலாற்றை பதிவுசெய்தான்.

அத்தகைய வரலாற்றுக் குறிப்புகள் நமக்கு வரலாறு தொடங்கிய காலம் முதலே கிடைக்கின்றன. வரலாற்றின் தொடக்கம் எனத்தக்க எகிப்திய, மெசபடோமிய நாகரீகங்களிலேயே வரலாற்றுப் பதிவுகள் உருவாகி விட்டன. கல்வெட்டுகள், களிமண்பலகைப் பதிவுகள், பாப்பிரஸ் நூல்கள் என அவை  நமக்குக் கிடைக்கின்றன. எழுத்துமொழி இல்லாத ஆப்ரிக்கப் பழங்குடிகளிலேயே வாய்மொழி வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. தொல்சமூகங்களில் தங்கள் வரலாற்றை பாடி நினைவில்  பதிவுசெய்யும் குலப்பாடகர்கள் (Bards) எனப்படும் வரலாற்றாளர்கள் இருந்தனர். தொல்வரலாற்றில் மிக முக்கியமான சில வரலாற்றாசிரியர்கள் உள்ளனர். ஹெரொடொடஸ்  (Herodotus) துசிடிடஸ் (Thucydides) போன்றவர்களை கிரேக்க வரலாற்றெழுத்தின் முன்னோடிகள் என்பதுண்டு.   

ஆனால் பதினேழாம் நூற்றாண்டு முதல் நாம் இன்று காணும் நவீன வரலாற்றெழுத்துமுறை (Historiography) ஐரோப்பாவில் உருவாகி வந்தது. முதன்மையாக பிரிட்டிஷ் அறிஞர்களால் அதன் இயல்புகளும் நெறிகளும் திரண்டு உருவாயின. அது வலுவடைந்தபின் காலனியாதிக்க காலத்தில் உலகமெங்கும் கொண்டுசெல்லப்பட்டது. காலனியாதிக்கத்திற்கு அந்த நவீன வரலாற்றெழுத்து மிக உதவியானதாக இருந்தது. பிற நாட்டு மக்களை கைப்பற்றவும் ஆட்சி செய்யவும் ஐரோப்பியர்களுக்கு வரலாறு ஒரு முக்கியமான கருவியாக இருந்தது.

இவ்வாறாக காலனியாதிக்கவாதிகள் கீழைநாடுகளின் வரலாற்றை எழுதினர். அவை ஒன்றோடொன்று இணைத்து தொடுக்கப்பட்டன. ஒன்றுடன் ஒன்று ஒப்பிடப்பட்டன. மெல்லமெல்ல உலகவரலாறு என ஒன்று திரண்டு வந்தது.

அவ்வாறு உலகவரலாறு திரளும்தோறும் அதன் நெறிகள் மேலும் துலக்கம் கொண்டன. அந்த நெறிகளையே நாம் இன்று நவீன வரலாற்றெழுத்தின் அடிப்படைகளாகக் கருதுகிறோம்.

நவீன அறிவியல் உருவான காலகட்டத்தில்தான்  நவீன அறிவியல் வளர்ச்சி அடைந்து வரலாற்றாய்வுக்கான தரவுகளைக் கண்டடையும் முறைகள் உருவாகி வந்தன. மூன்று அடிப்படை அறிவுத்துறைகள் நவீன வரலாற்றாய்வின் அடித்தளமாக மாறின.

அ. தொல்லியல் ஆய்வு. அகழ்வாய்வுகள், அகழ்ந்து எடுக்கப்பட்ட பொருட்களை வேதியியல் துணைகொண்டு ஆராய்தல் ஆகியவை வரலாற்றாய்வை முற்றிலுமாக மாற்றியமைத்தன.

ஆ. அச்சுமுறை, பதிப்புமுறை. பண்டைய நூல்களை அச்சில் பதிப்பித்தல், அவற்றை ஒப்பிட்டு ஆராய்தல், மொழியாக்கம் செய்தல் ஆகிய செயல்பாடுகள் வரலாற்றாய்வில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தின

இ. புள்ளியியல் மற்றும் நில அளவையியல். இவ்விரு அறிவுத்துறைகளும் ஒன்றாகவே உருவாயின. நவீனப் புள்ளியியல் வரலாற்றாய்வில் பெரும் மாறுதல்களை உருவாக்கியது. மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள், சமூகவியல் செய்தித்தொகுப்புகள், பொருளியல் தரவுத்தொகுப்புகள் ஆகியவற்றுடன், நில வரைபட உருவாக்கங்கள் ஆகியவை வரலாற்றாய்வின் முறைமைகளையே மாற்றியமைத்தன.

தொல்வரலாற்றெழுத்துக்கும் நவீன வரலாற்றெழுத்துக்கும் என்ன வேறுபாடு? முதன்மையான வேறுபாடு இதுதான். தொல்வரலாறு ஒரு சமூகம் தனக்காக தன் வரலாற்றை எழுதிக்கொள்வது. நவீன வரலாறு என்பது ஒரு சமூகத்தின் வரலாறு அவர்களாலோ பிறராலோ உலகத்தோர் அனைவருக்குமாக எழுதப்படுவது. தொல்வரலாறு அகவயமானது. நவீன வரலாறு புறவயமானது.

தொல்வரலாற்றெழுத்து அகவயமானது என்பதனால் அதற்குச் சான்றுகள் தேவையில்லை. ஒரு சமூகம் தன் வரலாற்றை தானே எழுதி, அதை அவர்கள் ஏற்றுக்கொண்டாலே போதும். அந்த வரலாறு நம்பிக்கையால் ஏற்கப்பட்டு நம்பிக்கையால் நீடிப்பது. தொன்மமாக மாறி நிலைகொள்வது. அதை பிறர் ஏற்காவிட்டாலும் அந்த சமூகம் அதை தங்கள் வரலாறாகச் சொல்லிக்கொண்டிருக்கும். தொல்வரலாறுக்கு நிரூபணமுறைமையே இருக்காது.

நவீன வரலாற்றெழுத்து புறவயமானது. அந்த புறவயத்தன்மையை உருவாக்கவே அதற்கு தரவுகள், அத்தரவுகளை தர்க்கபூர்வமாக முன்வைக்கும் முறைமைகள் ஆகிய இரண்டும் தேவைப்படுகின்றன. உலகிலுள்ள அனைவருக்கு முன்பாகவும் நிரூபிக்கப்படும் ஒன்றே நவீன வரலாறு. நவீன வரலாற்றின் ஆய்வுமுறை – விவாதமுறை இரண்டும் நவீன அறிவியலுக்குரியவை. வரலாற்றுத்  தரவுகள் அறிவியல் முறைமைப்படி  சேகரிக்கப்படவேண்டும், அவை அறிவியல் முறைமைப்படி பரிசீலிக்கப்படவேண்டும். பொதுவாக உலகமெங்கும் ஏற்கப்பட்ட முறைமைப்படி (methodology)  தொகுத்து முன்வைக்கப்படவேண்டும்.

நவீன அறிவியலில் போலவே  நவீன வரலாற்றிலும் முன்வைக்கப்பட்ட எந்தக் கருத்தும் பொய்ப்பித்தலுக்கான அழைப்புதான். அவற்றை பொய் என நிரூபிக்க முயல்வதே எதிர்த்தரப்புகள் அனைத்தும் செய்தாகவேண்டிய கடமை. அந்த பொய்ப்பித்தல் முயற்சிகளை வென்று, தங்களை உண்மை என நிலைநாட்டிக் கொள்வனவற்றுக்கே இங்கே உண்மையின் மதிப்பு உண்டு.

தொல்வரலாறு என்பது ஒரு மக்கள்திரள் தங்களைப் பற்றி தங்களுக்காகவும் பிறருக்காகவும் எழுதிக்கொண்ட இனவரலாறும், தொன்மங்களும், பிறரைப் பற்றி அவர்கள் கொண்டுள்ள உளப்பதிவுகளும் அடங்கியது. நவீன வரலாறு என்பது ஒவ்வொரு பகுதியைப் பற்றியும் அவர்களாலும் பிறராலும் எழுதப்பட்ட வரலாறுகள் புறவயமாக பரிசீலிக்கப்பட்டு பொதுவாக ஏற்கப்பட்டு ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு உலகவரலாறு என்னும் ஒற்றைப்பெரும் வரலாறாக ஆன ஒன்று.

ஐரோப்பியச் சூழலில் நவீன வரலாற்றெழுத்துமுறை மட்டுமே உள்ளது. தொல்வரலாற்றெழுத்துமுறை அங்கே முழுமையாகவே மறைந்துவிட்டது. ஆனால் இந்தியா போன்ற பழைமை நிலைகொள்ளும் நாடுகளில் தொல்வரலாற்றெழுத்துமுறை இன்னும் முதன்மையாக நீடிக்கிறது. இங்கே இந்துத்துவக் கொள்கையாளர்களும் சரி, தமிழ்ப்பழமை கன்னடப்பழமை போல தனித்தேசியம் பேசுபவர்களும் சரி, சாதிவரலாறுகளை எழுதுபவர்களும் சரி தொல்வரலாற்றின் மனநிலைகளையும் ஆய்வுமுறைகளையுமே கொண்டிருக்கின்றனர்.

தொல்வரலாற்று மனநிலைகளே கீழைநாடுகளெங்கும் முதன்மையாக உள்ளன என்று சொல்லலாம். உதாரணமாக மலேசியா, இந்தோனேசியா முதலிய நாடுகளில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இஸ்லாம் அங்கே வந்தபின்னரே வரலாறு தொடங்குகிறது என்னும் மனநிலையே நிலவுகிறது. அதற்கு முந்தைய காலகட்டத்தை ‘இருண்டகாலம்’ என மறைக்க முயல்கிறார்கள்.

உதாரணமாக, மலேசியாவில் கெடா போன்ற இடங்களிலுள்ள தொல்தமிழ் வரலாற்றுச்சான்றுகள் மறைக்கப்படுகின்றன. நான் முதலில் 2006-ல் அங்கே சென்றபோது கெடா அருங்காட்சியகத்தில் இருந்த சிலைகள் எவையும் இப்போது அங்கே இல்லை. அங்கே ஒரு காணொளியில் பேசிய ஆய்வாளர் அங்குள்ள எல்லா கலாச்சாரமும் அரேபியா, பாரசீகத்தில் இருந்து வந்தது என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

கம்போடியாவில் இன்னொருவகைச் சிக்கல். அங்குள்ள மாபெரும் ஆலயமான ஆங்கோர்வாட்  கெமர் இனத்து ஆட்சியாளன் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது. ஆனால் அவனுக்கு முன்னும்பின்னும் அங்கே தாய்லாந்து வியட்நாம் நாடுகளிலிருந்து வந்த மன்னர்களின் ஆட்சியும் அவர்களின் பங்களிப்பும் உள்ளது. அது கூட்டுப்பண்பாடு. ஆங்கோர்வாட்டில் உள்ள இந்து மதமே தாய்லாந்து வழியாக வந்ததுதான். ஆனால் பெரும்பாலான கம்போடிய மக்கள் அங்கோர்வாட் காட்டும் மொத்தக் கலைச்சாதனைகளும் கெமர் இனத்தவருடையது மட்டுமே என சித்தரிக்க விரும்புகின்றனர் (சந்தடி சாக்கில் இங்கே சிலபேர் அது சோழர்கள் கட்டியது என்கிறார்கள்)

ஏன், கேரளத்திலேயே பொதுவாக அத்தனை வரலாற்றாசிரியர்களும் மலையாள மொழியும், இன்றைய கேரள ஆட்சியாளர்களும் உருவாகிவந்த 16 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய வரலாற்றையே திரும்பத் திரும்பப் பேசுகிறார்கள். அதற்கு முன்பு அங்கே இருந்த சோழர் ஆட்சி, அதற்கும் முன்பிருந்த தொல்தமிழ் வரலாறு பற்றி ஆய்வுகளே இல்லை. வரலாற்றாசிரியர்களுக்குக் கூட பெரிதாக ஒன்றும் தெரியாது. தொல்லியல் ஆய்வுகளிலேயே அங்குள்ளோர் ஆர்வம் காட்டுவதில்லை.    

இந்தியாவிலெங்கும் தொல்வரலாற்று மனநிலை கொண்டவர்கள் நவீன வரலாற்றெழுத்திலுள்ள முறைமையை எதிர்க்கின்றனர். நவீன வரலாற்றாசிரியர்கள் தேசிய அளவிலும் சரி, உள்ளூர் அளவிலும் சரி அஞ்சி வாய்மூடச் செய்யப்பட்டுள்ளனர். நவீன வரலாற்றாய்வில் ஓர் இரக்கமற்ற கறார்தன்மை உள்ளது. ‘ஆதாரம் காட்டு, நிரூபி’ என அது அறைகூவிக்கொண்டே இருக்கிறது. அது தொல்வரலாறு பேசுபவர்களுக்கு தங்கள் பெருமையையும், தொன்மையையும் மறுக்கும் திமிராகத் தெரிகிறது. நவீன வரலாற்று முறைமையை முன்வைப்பவர்களை அவர்கள் எதிரிகளாக முத்திரையடிக்கிறார்கள்.   நவீன வரலாற்றெழுத்துமுறைக்கும் தொல்வரலாற்றெழுத்துமுறைக்கும் இடையேயான போராட்டம் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது

(மேலும்)

முந்தைய கட்டுரைஓ.ரா.ந.கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைஇமைக்கணக் காட்சி