அண்மையில் நித்ய சைதன்ய யதியின் ஒரு வகுப்பை சம்பந்தமில்லாமல் நினைவுகூர்ந்தேன். அதுவும் காலைநடை செல்லும்போது புழுதிபறக்க எட்டுவழிச்சாலை அமைக்கும் மாபெரும் எர்த்மூவர்களை பார்த்துக்கொண்டிருந்தபோது. “கவிதை என்பது சொற்களை தவறாகப் பயன்படுத்தும் கலை” (Poetry is an art of misusing words).
ஆச்சரியமான வரி. நித்யா அவர் பாட்டுக்கு பேசும்போது எதையெல்லாமோ சொல்லிச் சென்றிருக்கிறார். எத்தனை உண்மை! நாம் நினைவில் கொண்டாடும் எல்லா நல்ல கவிதைவரிகளும் நாமறியாத, நமக்கு வழக்கமில்லாத பொருளில் இணைவுகொண்ட சொற்கள் அல்லவா? உடனே கண்ணிநுண்சிறுதாம்பு என்னும் சொல்லாட்சி நினைவில் எழ அன்றைய நாள் ஒளிகொண்டது.
ஆகவேதான் இலக்கணவாதிகளுக்கும் கவிதைக்கும் ஒத்துப்போவதில்லை. இலக்கணம் படித்தாலே கவிதை வராமலாகி விடுகிறது. நினைவில் மீண்டும் ஒரு வரி. இது சுந்தர ராமசாமி சொன்னது. ‘கற்புள்ள பெண் நடனமாடமுடியாது என்று என் அப்பா அந்தக்காலத்தில் சொல்வார்’. சுந்தர ராமசாமி ஒரேசமயம் அவர் அப்பாவையும் சேர்த்தே நையாண்டி செய்தாலும் அது ஓரளவுக்கு மெய்தான். நடனத்தின்போது தற்காலிகமாகவாவது சிலம்பு சொல்லும் அந்தக் கடும் கற்பைக் கொஞ்சம் ரத்துசெய்யாவிட்டால் விரகதாபத்தை எப்படி ஆடிக்காட்டுவது? கவிதை என்பது மொழியின் நடனம்.
இலக்கணம் என்பது குறைந்தபட்ச வரையறை. நேற்று அடையப்பட்ட உச்சங்களை உள்ளிட்டால்கூட அது குறைந்தபட்ச வரையறைதான். அதிகபட்சமே கலையின் இலக்கு. ஆகவே கவிதை ஒருகையில் அனலும் மறு கையில் துடிதாளமும் கொண்டு நடனமிடும்போது காலடியில் இலக்கணம் முயலகனாக கிடந்தாகவேண்டும். ஆனால் இலக்கணம் இல்லாமல் கவிதை இல்லை. எந்தக் கலையும் இலக்கணம் இல்லாமல் இயல்வதல்ல. மிதிபடுவதற்காகவாவது இலக்கணம் இருந்தாகவேண்டும்.
எந்தக் கல்விநிலையமும் ஏதேனும் ஒரு துறையின் இலக்கணத்தையே கற்பிக்கிறது. தொடக்கக் கல்வி மொழியின், எண்களின் தொடக்க இலக்கணத்தைக் கற்பிக்கிறது. அதற்கு முன் இங்கே நாம் ‘சமூகமனிதன்’ எனச் சொல்லும் ஓர் உருவகத்தின் இலக்கணத்தைக் கற்பிக்கிறது. களிமண்ணைச் செங்கலாக்கும் மாபெரும் தொழிற்சாலை. வேறு வழியே இல்லை. கட்டிடம் கட்டியே ஆகவேண்டும்.
யோசித்துப் பார்த்தால் திகிலாக இருக்கிறது. மூன்று வயதுக்குள் என்னவெல்லாம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. முதல் விஷயமாக காலம் என்னும் பூதம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்பின் அலுவலகம், தொழில், பயணம் என வாழ்நாள் முழுக்க உடனிருந்து ஆணையிட்டு ஏவல்செய்ய வைக்கும் இரக்கமற்ற ஆட்சியாளன் அது. அதன்பின் சீருடை. அத்தனைபேரும் ஒரே உடை அணியவேண்டும் என உலகம் எப்போது கண்டுகொண்டது? கால்வின் புழங்கும் வேற்றுக்கிரகத்து மனிதனாகிய நெபுலார் இங்கே வந்து பார்த்தால் திகைத்துப் போகலாம். ‘அங்கே பூமியில் எவருக்கும் தனி உடை இல்லை. அத்தனைபேருக்கும் ஒரே வகையான உடைகள்’ என அவன் டைரி எழுதலாம்.
வரிசையாக செல்வது, வரிசையாக அமர்வது, கேள்வி கேட்டபின் பதில் சொல்வது, அனுமதி பெற்றபின் சிறுநீர் கழிப்பது என எத்தனை கட்டளைகள். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரே ஒரு பயன்பாடு கட்டாயப்படுத்தப்பட்டு சுமத்தப்படுகிறது. நோட்டுப்புத்தகம் எழுதுவதற்கு மட்டுமே, காகிதக்கப்பல் செய்வதற்கு அல்ல. டிபன்பாக்ஸ் என்பது சாப்பாட்டுக்கிண்ணம் மட்டுமே, ஒரு சக்கரமாக அதன் பயன்பாடு ஒடுக்கப்படுகிறது. கழுத்தில் கட்டப்பட்டுள்ள டையால் மூக்குசிந்துவது தண்டிக்கப்படுகிறது.
அத்தனை வன்முறைகள் வழியாக உருவாக்கப்படும் அந்த ‘மனிதன்’ மிகச்சரியாக எல்லாவற்றிலும் பொருந்தியாகவேண்டும். ஆனால் அது நடப்பதுமில்லை. மிகப்பெரும்பாலானவர்கள் எங்கோ முரண்டிக்கொண்டும் மீறிக்கொண்டும் இருக்கிறார்கள்; மிகச்சரியாக பொருந்துபவர்களால் எந்தப் பயனுமில்லை. அவர்கள் செல்லமாகக் குமரிமாவட்டத்தில் கிழங்கன்கள் என அழைக்கப்படுகிறார்கள்
கல்விமுறை என்பது கால்வின்களை கால- இட-சமூக வெளியில் பொருத்துவதற்கான முயற்சி. காலமும் இடமும் அற்ற பெருவெளியில் புழங்கும் மூளைகளை சதுரமோ உருளையோ என ஆக்குவதற்கான பயிற்சி. கால்வின்கள் காலையில் எழும்போது முற்றிலும் புதிய பிரபஞ்சம் அவர்களுக்காக காத்திருக்கிறது. அதை நோக்கி அவர்கள் பாய்வதை தடுத்து, ஏற்கனவே உறைகுத்தி புளிக்க வைத்திருக்கும் நேற்றைய பிரபஞ்சத்தை நாம் அளிக்கிறோம். அதைக் கடைந்து நெய்யை எடுத்து வீசிவிட்டு எஞ்சியதை அளிக்கும் இடமே பள்ளி எனப்படுகிறது.
கால்வின்கள் பிறந்து கல்விமுறை மேல் மோதிக்கொண்டே இருக்கிறார்கள் என்றாலும் கல்விமுறை மேலும் மேலும் இறுகிக்கொண்டேதான் செல்கிறது. ஒருவேளை கால்வின்களின் இடைவிடாத தாக்குதல்களால் அப்படி அது ஆகியிருக்கலாம். நல்ல நோக்கம் கூட இருக்கலாம். கால்வின்கள் உருவாக்கிய வாசல்கள் வழியாக கால்வின் அல்லாதவர்கள் வெளியேறிவிடக்கூடாது. ஆகவே உருவான வழிகள் எல்லாம் அடைக்கப்படுகின்றன. கால்வின்கள் மெய்யாகவே கால்வின்கள் என்றால் அவர்கள் தங்களுக்கான துளையை தாங்களே போட்டுக்கொள்வார்கள்.
கால்வின்களை பள்ளிக்கு அனுப்புதல் ஒவ்வொரு பெற்றோரும் எதிர்கொள்ளும் கொடுங்கனவு. தோராயமாக ஆண்டுக்கு இருநூறு நாட்கள் என்னும் மேனிக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு இரண்டாயிரத்திநாநூறு நாட்கள் பள்ளி நடக்குமென்றால் குறைந்தது நாலாயிரத்தி எண்ணூறு புதிய காரணங்களை கண்டு அறியவேண்டும். நாளொன்றுக்கு ஒரு காரணமும், கூடுதலாக எழும் வினாவுக்கு இன்னொரு காரணமும். ஆனால் அவை மதியத்திற்குள் காலாவதியாகி கால்வின்கள் பின்மதியத்தில் வீடு திரும்புவது வழக்கமாக நிகழ்வது.
கால்வின்கள் பள்ளிகளில் இருந்து கற்றுக்கொள்வதெல்லாம் கல்வியின் மறுபக்கங்களையே. கல்வி என்பது இலக்கணம் எனில் கால்வின்கள் கற்பது வழூஉக்களை மட்டுமே. கடையெழு வள்ளல்களில் ராமலிங்க வள்ளலாரை ஏன் சேர்க்கலாகாது என்பது அதற்கு முன் எவரிடமும் தோன்றியிருக்காது. உண்ணும் உணவு இதயத்துக்குச் செல்லவில்லை என்று எவரால் அறுதியாகச் சொல்லிவிடமுடியும்? அல்ஜிப்ரா இல்லாமலேயே இந்த பிரபஞ்சம் இயங்கமுடியும் என்பது பொய் என எவர் மறுக்க முடியும்?
கால்வின்களின் கல்வி என்பது ஒரு மாபெரும் போராட்டம்- கால்வின்களை தவிர அனைவருக்கும். ரத்தமும் கண்ணீரும் தோய்ந்தது. அந்தப் போராட்டம் வழியாகவே மானுட சமூகம் வளர்ந்து உருவாகி வந்துள்ளது. கல்வி என்பது சமூகம் என்ன உத்தேசிக்கிறது என்பதை ஒட்டி அமைந்துள்ளது. கால்வின்கள் அதை அவர்கள் உத்தேசித்துள்ள வகையில் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த முரணியக்கத்தின் நடுவே உயவுப்பொருளாக சிலர் பயிற்றுவிக்கப்பட்டு அமைக்கப்படுகிறார்கள். அவர்களை ஆசிரியர்கள் என்று சொல்வது மரபு.
கால்வின்களின் சிக்கல் என்பது அவர்களே இயல்பானவர்கள் என்பது. மானுட மூளை ஏதேனும் ஒரு துறையில் மட்டுமே அதிகூர் கொள்ள முடியும். ஆனால் எல்லா துறைகளிலும் இணையாக செயல்பட்டாலொழிய கல்விமுறை ஒப்புக்கொள்வதில்லை. ஒவ்வொன்றிலும் வேறொருவகையில் நுழைய முடியும் என்ற அறிதல் அளவுக்கு கால்வின்களை கிளர்ச்சியடையச் செய்வது வேறில்லை. ஆனால் பானையின் அடியில் போடப்படுவது வாய் அல்ல ஓட்டை என்று புரிந்துகொள்ளும் அமைப்பு கால்வின்களை கூர்ந்து நோக்கி மிரட்டிக்கொண்டு நின்றுள்ளது.
கால்வின்களைக் கையாள்வதற்குக் கற்றுக்கொள்வதன் வழியாகவே சமூகங்கள் பண்பட்டதாகின்றன. பண்பட்ட சமூகங்களில் சற்றும் பண்படாத புதியவகைக் கால்வின்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். கவிதை எழுதுகிறார்கள். இலக்கியம் படைக்கிறார்கள். மலைச்சிகரங்களில் ஏறுகிறார்கள். குழம்பி, பிறரையும் குழப்பி, தெளிந்து, அதன் வழியாக பிறரை மேலும் குழப்பி இங்கே திகழ்கிறார்கள். அதுவரைச் சொல்லப்பட்ட அனைத்தையும் பொய் என நிறுவ இடைவிடாது முயன்றுகொண்டிருக்கிறார்கள்.
குரு நித்யா சொன்னதை நினைவுகூர்ந்தேன். “எந்தக் கல்வியிலும் ஒரு வன்முறை உண்டு” அது அவர் நான் கேட்ட படைப்பூக்கம் நிறைந்த கேள்விக்காக என்னை வெளியே சென்று பனியில் நிற்கவைத்த அன்று. “ஏனென்றால் மனித மூளை கட்டற்று பாயும் தன்மை கொண்டது. அதை ஒருவழிப்படுத்தாவிட்டால் சிந்தனை என்பது நிகழவே முடியாது. கல்வி என்பது மூளையை முறைப்படுத்துவதே. எந்தக் கல்வியானாலும்”
“ஆனால் கவிதைக்கு கல்வி உண்டா? இலக்கணம் உண்டா?” என்றேன். “கவிதையை விடக் கட்டற்றது தியானம். அதற்கும் உண்டு இலக்கணமும் கல்வியும்” என்று நித்யா சொன்னார். “வரையறுப்பது மீறல்களை தனித்தறியவே. இருப்பனவற்றைப் பயில்வது தனக்கேயான புதியனவற்றைக் கண்டடைவதற்காகவே. கல்வி என்பது ஒரு வகை தன் வதையும்கூட. அடைதலின் இன்பத்தால் நிகர்செய்யப்பட்டது”
எனில் கால்வின்களின் மூளையின் அந்த நிரப்பமுடியாத துளை என்னாகும்? வானின் வெற்றுப்பெருவெளி நோக்கித் திறந்த அவற்றை எது நிறைவு செய்யும்? “மெய்யான கல்வி எல்லா பழக்கப்பட்ட வாசல்களையும் சன்னல்களையும் மூடிவிட்டு ஒரே ஒரு வெளியேறும் வழியை மட்டும் திறந்து வைக்கிறது”