வட்டார வழக்கும் ஆங்கிலமும்

அன்புள்ள ஜெயமோகன்,

அண்மையில் ஒரு விஜய் டிவி நிகழ்ச்சியில் தன் பேச்சை வைத்து தன் சாதியைகண்டுபிடிக்கிறார்கள் என்றும் அதனால்தான் ஆங்கிலம் போல வேறு மொழியில் பேசினால் இப்பிரச்சனை இல்லை என்றும் ஒரு பெண்கூறினார்.

அதற்கு பதில் சொல்லும் பொழுது கரு.ஆறுமுகத்தமிழன் ஒரு வட்டாரத்திலிருந்து வருபவர் எல்லோரும் ஒரே மாதிரிதான்தமிழ் பேசுகிறார்கள் என்றும் அதை வைத்து சாதியைஅடையாளம் காண்பது அத்தனை எளிதானது அல்ல என்றும் கூறினார்.ஆகவே இதுகுறித்த தங்கள் எண்ணத்தை அறிய ஆவல்.

ஒரு வட்டாரத்திற்குள் சாதிக்கு தனியான தமிழ் புழங்குவது சரியா? அவற்றைஅந்த பெண் கூறியதை போன்று அழிக்க வேண்டுமா? அது அவர்கள்பண்பாட்டு அடையாளம் அல்லவா? அப்படியென்றால் தமிழின் வட்டார வழக்குகளையும்அழிக்க வேண்டும் என்று கூறுகிறார்களா?

ஆறுமுகத்தமிழன் கூறுவதைப்போன்று வட்டாரத்திற்குள் சாதியை கண்டுபிடிப்பதுகடினமா?அது உண்மையெனில் நாகர்கோயிலில் ஒருவர் ஒருவார்த்தை சொன்னாலே நம்மால் சாதியை கண்டுபிடிக்க முடிகிறதே,இந்த தன்மைகுமரி மாவட்ட தமிழில் மட்டும்தானா?அவ்வாறெனில் இதுகுமரி மாவட்ட தமிழில் மட்டும் எவ்வாறு நடந்தது?

கோ ஜெயன்

ஜெயன்

உண்மையில் சென்னையில் பிராமணர்களில் கணிசமானோர் ஆங்கிலம்பேசுவது அவர்கள் பேசி அறிந்த பிராமணத்தமிழை மறைக்கவே என்பதைக் கண்டிருக்கிறேன். அதை சிலர் என்னிடம் சொல்லியும் இருக்கிறார்கள். அது பிராமணர் என்பதை மறைப்பதற்காக அல்ல. காரணம் அது எப்படியும் எளிதில் தெரிந்துவிடும் என அவர்களுக்கும் தெரியும். ஒரு பொதுச்சூழலில் அந்த பிராமண வட்டார வழக்கு கொடுக்கும் சித்திரம் சரியானது அல்ல என்பதனால்தான். அதைப்பேசுபவர் மிகவும் சம்பிரதாயமான ,பழைமைவாத நோக்குள்ளவர் என்ற எண்ணம் எழுந்துவிடுகிறது. மைய மொழிக்கு வெளியே விலகி நிற்பதனால் கொஞ்சம் வேடிக்கையானதாகவும் அது பார்க்கப்படுகிறது.

குடும்பத்துக்கு வெளியே ஆங்கிலம்பேசும் பள்ளிகளில் மட்டுமே புழங்கிய சென்னைப் பிராமணர்கள் பலருக்கு இச்சிக்கல் இருக்கிறது. வாயைத்திறந்தால் சரியான ’அம்பித்தமிழ்’தான் வரும். ஆனால் அவர்கள் மனஅளவில் கொஞ்சம்கூட பழைமைவாதமோ சாதியநோக்கோ இல்லாத நவீன மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.  பலசமயம்  முற்போக்கான அரசியல் கொண்டவர்களாகவும்  இருப்பார்கள்.   பலர் ஆசாரங்களற்றவர்களாகவும் மரபுவழிப்பட்ட நம்பிக்கைகள், கடவுள்நம்பிக்கைகூட,  இல்லாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் பேச்சுமொழி அவர்களுக்கு சம்பந்தமில்லாத ஒரு சித்திரத்தை அளிக்கிறது. ஆகவே ஆங்கிலத்திலேயே  பேசுகிறார்கள்.

இதேபிரச்சினை தென்தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேறுவகையில் இருக்கிறது.  சென்னைச்சூழலில் இந்த ‘தென்னகநெடி’ ஒருவகை நகைச்சுவைச்சின்னமாக ஆகிவிட்டிருக்கிறது.  அலுவலகங்களில் ‘ஏம்ல, என்னலே சொல்லுகே ?’ என்று பேசமுடிவதில்லை. இதை எதிர்கொள்ள சிறந்தவழி ஆங்கிலம்தான்.

சொல்லப்போனால் எனக்கே இந்தச்சிக்கல் உண்டு. நான் குமரிமாவட்ட வட்டாரவழக்குச் சொற்களை மிகக் கவனமாக தவிர்த்துவிடுவேன். ஆனாலும் சொற்றொடர்களின் ராகம் ,பல சொற்களை  கொஞ்சம் மென்மையாக்கிச் சொல்வது போன்றவை குமரிவாசனையுடன் இருக்கும். மேடையில் அதற்காக முதலிலேயே மன்னிப்பு கோரிவிடுவேன். நேர்ப்பேச்சுகளில் தனித்தமிழை கலந்து தப்பிப்பேன். இதை பலர் செய்வதை கவனித்திருக்கிறேன், ஆங்கிலம்பேசுவதை விட இது மேல்.

கண்டிப்பாக ஒரு வட்டார உச்சரிப்புக்குள் சாதிகளுக்குரிய தனி உச்சரிப்பு இருந்துகொண்டேதான் இருக்கிறது. இது தமிழ்நாட்டின் சமூகப்பொதுமையாக்கலில் பெரிய பிரச்சினையாகவே உள்ளது. வட்டார வழக்கே உள்ளது, சாதிய வழக்கு இல்லை என ஆறுமுகத்தமிழன் சொல்வது மிகப்பிழையான ஒரு புரிதல். பெரும்பாலான வட்டாரவழக்கைக் கொண்டு எந்த வட்டாரம் என்று ஊகிப்பதுடன் எந்தச் சாதி என்றும் ஊகித்துவிடமுடியும். அந்த வட்டாரத்தைச்சேர்ந்த ஒருவர் இன்னும் எளிதாகச் சாதியை ஊகிக்கமுடியும்.

குமரிமாவட்டத்தில் உள்ள நாடார், வேளாளர், மீனவர்கள், முஸ்லீம்கள் ஆகியோரின் வட்டாரவழக்கு , உச்சரிப்பு வேறுபாடுகள் மிக துல்லியமாக மாறுபடுபவை. அதை குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மிகச்சாதாரணமாக அறிகிறோம். என்னால் தஞ்சையில் உள்ள சாதிகளையும் ஊகிக்கமுடியும், நான் தஞ்சையின் மருமகன் என்பதனால். இதேபோல நெல்லை,மதுரை,தஞ்சை என பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அந்தந்த பகுதிகளின் சாதியவழக்குகளை எளிதாகவே கண்டடைகிறார்கள்.

ஆனால் சிறிய சாதிகளை ஊகிப்பது கடினம். உதாரணமாக குமரிமாவட்டத்தில் பொற்கொல்லர் போன்றவர்களின்   தமிழை இங்குள்ள வேளாளர்களின் தமிழில் இருந்து வேறுபடுத்திப்பார்ப்பது கடினம். சிறிய சாதிகள் அவர்கள் அடையாளம் காணவிரும்பும் பெரிய சாதிகளுடன், அவர்கள் அதிகமாகப்புழங்கும் பெரிய சாதிகளுடன்  மானசீகமாக இணைந்து அவர்களின் வழக்கை தாங்களும் பின்பற்றுகிறார்கள்.

வட்டாரவழக்கு சாதிய அடையாளத்துடன்தான் இருக்கிறது.  மக்கள் கல்வி, வியாபாரம் ஆகியவற்றால் பொதுக்களத்துக்கு வரும்போது இந்த தனிப்பட்ட மொழியடையாளம் ஒரு தேவையற்ற சிக்கலாகவே இருக்கிறது. என் பையன் சொல்வதை வைத்துப்பார்த்தால் இளைஞர்களுக்குக் கல்லூரிக்குச் செல்லும்ப்போது சந்திக்கவேண்டிய முக்கியமான சிக்கலாகவே இது இருக்கிறது. ஆங்கிலம் பேச முடிந்தால் அதிலிருந்து எளிதில் தப்பமுடிகிறது.

ஆனால் ஆங்கிலம்தான் ஒரே மாற்றுவழி என நான் நினைக்கவில்லை. ஆங்கிலம் மேலதிகமாக சில பிம்பங்களை அளிக்கிறது. ஆங்கிலம் பேசும்போது படித்த,நவீனமான,நகர்ப்புற மனிதர் என்ற பிம்பம் உருவாகிறது. மிகப்பிற்போக்கான, அசட்டுத்தனமான கருத்தைக்கூட ஆங்கிலத்திலே சொன்னால் சூழலில் அது ஏதோ அறிவார்ந்த கருத்து என்கிற மனச்சித்திரம் உருவாகும் ஆச்சரியத்தை கவனித்திருக்கிறீர்களா?

உண்மையில் இந்தச் சிக்கலை அரைநூற்றாண்டாக தமிழகம் பொதுவான ஒரு பேச்சுமொழியை உருவாக்குவதன்மூலம் சமாளித்துவருகிறது. அதை உருவாக்குவதில் சினிமா பெரும்பங்கு வகித்தது. இப்போது தொலைக்காட்சி. இப்போது கோவையில் கோவைத்தமிழ் பேசுபவர்கள் மிகமிகக் குறைவு. எல்லா வட்டாரத்தையும் சேர்ந்த என் நண்பர்கள் ஒரு அறையில் கூடினால் பொதுமொழியில்தான் பேசுகிறோம்

காலப்போக்கில் சாதிய,வட்டார நெடிகொண்ட தமிழ் அழிந்துவிடும் என்றே நான் நினைக்கிறேன். அதற்குப்பதில் பொதுவான பேச்சுமொழி ஒன்று வந்துவிட்டிருக்கும். ஆனால் வட்டார தனித்தன்மைகள் வேறு வடிவில் அந்த பொதுத்தமிழுக்குள் இருந்துகொண்டிருக்கும்

ஜெ

முந்தைய கட்டுரைமனமே-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்- 6