பிப்ரவரி 09.02.2024, 10.02.2024 மற்றும் 11.02.2024 தேதிகளில் எழுத்தாளர் டாக்டர்.சுனில் கிருஷ்ணன் அவர்களின் ஆயுர்வேத அறிமுக முகாமில் கலந்து கொள்ள ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகம் சென்றடைந்தோம்.
டாக்டர்.சுனில் கிருஷ்ணன் அவர்களுடன் காரில் நான்கு பேர் நித்தியவனம் நோக்கி 6 மணி அளவில் பயணத்தை துவக்கினோம். அறிமுகத்திற்கு பின் ஈரோடு பகுதியில் புதிதாக முன்னெடுத்துள்ள கல்லூரி இளைஞர்களுக்கான வகுப்புகள் குறித்து உரையாடல் தொடங்கியது. மலைப்பாதை துவங்கியவுடன் வழியில் மான்கள், காட்டு எருதுகள். அந்தியூரில் இரு மாலைகள் புத்தருக்கும், தேவிக்கும். பின்னர் தேநீருக்கு நிறுத்தம். நடுவழியில் தாமரைக்கரை தாண்டியவுடன் ஒரு திருப்பத்தில் பத்து அடி தூரத்தில் ஒரு ஒற்றை யானை. காரை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்தது. முன் இருக்கையில் ஓட்டுநருக்கு அருகே டாக்டர். அனைவருக்கும் திகில். காரை பின்னோக்கி செலுத்திய ஓட்டுநர் 100 முறைக்கு மேல் வந்திருப்பினும் அன்றுதான் யானையை பார்த்ததாக தெரிவித்தார். பின்னர் எதிரே இருசக்கர வாகன ஓட்டிகளிடம் யானை சென்று விட்டதை உறுதி செய்து பயணத்தை தொடர்ந்து நித்தியவனம் அடைந்தோம்.
திரு.அந்தியூர் மணியின் அதே புன்னகையுடன் வரவேற்பு. டிராக் பேண்ட், டீ சர்ட்டில் இருந்து வண்ண வேட்டி முழுக்கை சட்டைக்கு மாறியிருந்தார். புதிதாக துயில் கூடம். வழக்கம் போல் மூன்று வேளையும் நல்ல உணவு. மாலை 5 மணிக்கு குளிர் தொடங்கி காலை 8 மணி வரை நீடித்தது.
ஆயுர்வேதம் குறித்து அடிப்படைகள், முக்குற்றங்கள், பிரிவுகள், அடிப்படை மெய்யியல்கள், மூலிகை அறிவியல், ஆயுர்வேத சிகிழ்சை குறித்த கற்பிதங்கள் மற்றும் அறிவியல் நிரூபணத்திற்கான போதாமைகள் குறித்த வகுப்புகள் நடைபெற்றது. கலந்து கொண்ட அனைத்து வாசகர்களுக்கும் வாதம், பித்தம், கபம், கபபித்தம், வாதகபம் என தொண்ணூறு கேள்வி பதில் மதிப்பெண்கள் அடிப்படையில் தனித்தனியே உடல் வகைகளை அடையாளம் கண்டு அதற்குரிய பயன்படுத்த வேண்டிய / பயன்படுத்தக் கூடாத பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பயிர் வகைகள், கிழங்கு வகைகள், விதைகள், கீரைகள், பால் பொருட்கள், எண்ணெய் வகைகள் என விரிவான பத்திய முறைகள் வழங்கப்பட்டன.
வகுப்புக்களுக்கு இடையேயும், இரவும் வழக்கம் போல் உரையாடல்கள். திரு.அந்தியூர் மணியுடன் சைவ சித்தாந்தம், சைவ திருமுறை. திரு.சுனில் கிருஷ்ணன் அன்னாரது சிங்கப்பூர் பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். மேலும் இலக்கிய உரையாடல்கள் (ஜெ எப்படித்தான் இடைவெளி இல்லாமல் மணிக்கணக்கில் பேசுகிறாரோ, வாய் வலிக்கிறது). குழு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு 11.02.2024 அன்று ஒரு மணி அளவில் நித்தியவனத்தில் இருந்து விடைபெற்றோம்.
இந்த வாய்ப்பை அளித்த ஆசிரியர் அவர்களுக்கும் டாக்டர். சுனில் கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி!
சந்தானராஜ்
சென்னை.