யோகமெனும் அறிதல்- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

டிசம்பர் மாதம் 22, 23, 24 ஆகிய 3 நாட்கள் நடைபெற்ற யோக முகாமில் பங்கேற்றேன்.  (ஒன்றை கற்கும் பொருட்டு) எந்த எதிர்பார்ப்புமின்றி சென்ற முதல் பயணம்.  யோகப் பயிற்சியின் மூன்றாம்படி நிலையாகிய ஆசனங்களை மட்டுமே பயின்று பயிற்சி செய்து கொண்டு வந்தேன்.  பொதுவகுப்புகள் என்னும் பட்சத்தில், மேலோட்டமான விஷயங்களை கற்றுத்தரும் சில வகுப்புகளிலும் கலந்துகொண்டதுண்டு.  வெள்ளிமலை யோக முகாம் என்பது முற்றிலும் மாறுபட்ட அனுபவம்.  மரபார்ந்த யோகத்தின் அணுகுமுறை என்பதே இதில் மிக முக்கியமானது.  அதனுடைய வரலாறு மிக நீண்டது.  யோகம் என்பது சில ஆசனங்களையும், மூச்சுப் பயிற்சிகளை மட்டுமே கொண்டதல்ல.  அதில் இலக்கியம், வரலாறு, தற்கால அறிவியில், எதிர்கால மனிதர்களின் உடல், மன, உள சிக்கல்களை அறிந்து, அதற்கான ஆராய்ச்சிகள் மற்றும் தீர்வு வரையில் தன்னுள் அடக்கியது.  இந்த புரிதலை முதல் வகுப்பிலேயே கொடுத்தது, வந்து சேர்ந்த இடத்தின் மதிப்பை புரிய வைத்தது.

 

குருஜி கற்றுக் கொடுக்க தேர்வு செய்த பாடத்திட்டத்தின் வடிவம் மிக தெளிவான அழகை உள்ளடக்கியது. (அந்தர் மௌனா, யோக நித்ரா, மூச்சுப்பயிற்சி மற்றும் ஆசனங்கள்). எல்லா வயதினரும் பங்கேற்கும் வகுப்பில், அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலும், பயிற்சி செய்ய ஊக்கமும் கொடுத்தது.  குருஜி உபயோகித்த வார்த்தைகளின் தெளிவும், கேள்விகளுக்கு நிதானமாக பதிலளிக்கும் விதமும் அவரின் அனுபவத்தை சொல்லாமல் சொல்லிச் சென்றது.  கற்றுத்தரக்கூடிய பயிற்சிகளை அனைவரும் பழகும்படி ஒவ்வொருவரையும் கவனித்து சரியான வழிகாட்டுதல் மூலம் மாணவரை முதற்படி நிலையில் ஏற்றிவிட்ட நற்தொடக்கமாகும்.

 

பொதுவாக, மனிதன் உடல், மனம், உள சிக்கல்களில் சுழல்வதும், அதில் மீண்டு வர முயற்சிப்பதும் வழக்கம்.  அதை குரு நித்யா Psycho-Somatic மற்றும் Somato-Psychic என இரு வகையில் அனைத்து இன்னல்களும் அடங்கும்படியாக உள்ளது எனவும்,  இத்தகைய உடல் மற்றும் மன சமநிலையின்மை நிகழ்ந்துகொண்டே இருக்கக்கூடியது, இதுவே இயற்கை, இதற்கு பயம் கொள்ளவோ, நினைத்து வருந்தி தேங்கி நிற்கவோ அவசியமில்லை.  இயற்கை நம்மை படைத்த அழகியல் அடங்கியுள்ளதும் அதிலே தான்.  ஆனால், மனிதன் தேங்கிவிட காரணம் அவனுள்ளே இருக்கும் “Imaginary Fear”.  இத்தகைய சிக்கலின் தீர்வையும் இயற்கை நம்மிடமே வடிவமைத்துள்ளது என்று குருஜி விளக்கி, அதற்கான பயிற்சிகளை கற்று தெளிவுபடுத்தியது எனக்கு தனிப்பட்ட முறையில் முக்கிய தருணமாகும்.   மேலும், யோகப்பயிற்சிகளை முறையாக கற்க விரும்புபவர்களுக்கு தேவையான அனைத்துவித தகவல்களையும் கூறினார்.

 

அன்றாடங்களினால் ஏற்படும் மனச்சோர்வு, செயலூக்கமற்ற மந்தமான நிலை, எண்ணிலடங்கா எண்ணங்களின் எழுச்சி என இரண்டு, மூன்று வருடங்கள் எனக்கு கழிந்தன.  அதற்கான தீர்வை பெறவே, யோகப்பயிற்சிகளை கற்க முயன்றேன்.  நான் சென்ற இடங்களில் எனக்கு பரிந்துரைக்கப்பட்டது தியானம்.  சரி, தியானம் எப்படி செய்வது? என்ற என் கேள்விக்கு தெளிவான பதில் கிடைத்ததே இல்லை.  அதற்கான நடைமுறை சிக்கல்கள் என்பது பலவிதமாக இருந்தது.  ஒருவருடமாக முயற்சித்தும் என்னால் அமரவே முடியாது.  எண்ணங்களின் எண்ணிக்க அவ்வளவு.  ஒரு கட்டத்தில் முயற்சிக்கவே கூடாது என்று முடிவெடுத்தேன்.  ஆனால், ஆரம்பகால தியானப்பயிற்சியில், “Guided Meditation” மட்டுமே உதவும் என்று குருஜி பயிற்றுவித்த விதமே, அந்த பயிற்சி அனுபவமாக மாறியது.  நான் குருவை உணர்ந்த தருணமும் அதுதான்.  நடைமுறை சிக்கல்களை அதற்கான வழிகாட்டலுடன் தியானம் செய்ய கற்றுத்தந்தார்.  தியானத்தினால் ஏற்படும் மனத்தெளிவு பத்து நாட்கள் மேலாகியும் பயிற்சியை தொடர்ந்து செய்யவும் வழிவகுக்கிறது.

 

எனக்கு இந்த பயணமே யோகம் தான்.  நான் சந்தித்த நண்பர்கள், அவர்களுடனான உரையாடலும் அமைந்த விதமும் அப்படி.  குருகுல கல்வியைப் பற்றியும் மனனம், ஸ்வாத்யாயனம், தியானம் பற்றிய உங்களுடைய கருத்துக்களை நண்பர் சூர்யபிரகாஷ் பேசியதும், அது தொடர்பாக தோழி பாக்யா தங்களுடைய விவாதபட்டறை வகுப்பில் எதிர்தரப்பு வாதங்களை மனனமாக தெரிய வேண்டும், அதன்பின் நம் கருத்துகளை தெரிவிப்பதே முறை என்று, தங்களது வகுப்புகளில் நடந்த உரையாடல்களை பற்றி பேசியது இந்த முகாமில் கிடைத்த மற்றொரு வாய்ப்பாகும்.  ஆரம்ப வாசகியான எனக்கு அறிமுக நண்பர்களிடமிருந்து நிறைய புத்தகங்களின் அறிமுகம் கிடைத்தது.  இலங்கை வவுனியா-லிருந்து முகாமிற்கு வந்திருந்த நண்பர் அருள் தங்கள் ஊரில் தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் புத்தகங்கள் கிடைக்காது எனவும், புத்தகங்கள் வாங்குவதற்காகவே சென்னை புத்தககண்காட்சிக்கு செல்லவிருப்பதாக கூறியது வாசிப்பு ஆர்வத்தை தூண்டியது.  ஊருக்கு திரும்பியவுடன் தங்களது புறப்பாடு நாவல் வாங்கி வாசித்துக்கொண்டிருக்கிறேன்.  கர்நாடக இசை மேல் சற்று ஆர்வம்.  அதன் மேல் மேலும் ஆர்வத்தை வரவழைத்தது அங்கு அறிமுகமான நண்பர்களினால் தான்.  இதுபோன்ற பல பரிமாணங்களை இந்த பயணம் எனக்கு அறிமுகப்படுத்தியது.  இவை அனைத்திற்கும் மேலாக குருவை கண்டடைந்தது முக்கியமானது.  குருஜி அவர்களுக்கு நன்றி.

 

அந்தியூர் மணி அண்ணா எங்கள் அனைவரையும் நன்றாக கவனித்து, அனைத்து தேவைகளையும் சரியான நேரத்தில் அமைத்து கொடுத்தார்.  உணவு சுடச்சுட மிக அருமையாக இருந்தது.  உணவு தயாரித்தவர்களுக்கும் என் நன்றிகள்.  இத்தனை அனுபவங்கள் எனக்கு கிடைக்கும் வகையில் அமைந்ததும், யோகம், விவாதப்பட்டறை, இசை போன்ற கலைகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற தங்களது எண்ணங்களுக்கும், தங்களுக்கும் எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது ஜெ.

 

மனமார்ந்த நன்றிகளுடன்

நிஹிதா

முந்தைய கட்டுரைதொடங்கும் வெளி
அடுத்த கட்டுரைகவிதைகள் இதழ்