பயிற்சிகளின் வழியே…

அன்புமிகு ஜெ,

எனக்கு காசநோய் ஆராய்ச்சி துறையில் (NIRT) வேலை கிடைத்துள்ளது. சென்ற பிப்ரவரியில் வேலையை விடும் போது பெரும் திருப்தி அடைந்திருந்தேன். ‘Matrix’ எனும் பிடியிலிருந்து வெளியே வந்துவிட்டோம். முதல் காரணம் நேரமின்மை. சராசரி பத்து மணிநேரம் வேலை பார்த்தால் மட்டுமே அவர்களின் ‘Target’ ஐ முடிக்க முடியும். போக்குவரத்து நெருக்கடி. இரவு நேர வேலை (விளைவாக உடல் சிக்கல்கள், தூக்கமின்மை). வீட்டிற்கு வந்து வாசிக்க எழுத நேரமிருக்காது. இரண்டாவதாகப் படைப்பூக்கம். ஒரு மாதத்திற்குள்ளாகவே வேலை சலித்துவிட்டது. இவ்வளவு தானா. பொறுத்துச் சென்றாலும் பிப்ரவரியில் பா.ராகவன் அவர்களின் எழுத்துப் பயிற்சி வகுப்பில் தூங்கித் தூங்கி விழுந்ததால் எனக்குள் எழுந்த “யாருக்காக வாழ்கிறோம்?” என்ற கேள்வி வேலையை உதறிவிட்டது.

அப்பொழுது எடுத்த முடிவு, நான் படித்த துறை (Biomedical Engineering) சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடலாமென்று. அதற்காக பெங்களூரில் இருமாத பயிற்சி வகுப்புக்குச் சென்றேன். ஏப்ரல் மாதம் வெள்ளியங்கிரி போகும் திட்டம் ஏனோ அது கைவிட்டுப் போக நண்பன் தர்ஷனுடன் வெள்ளிமலை வர நேர்ந்தது. அந்த மூன்று நாட்கள் – மேடையுரை முகாம். என் நல்லூழ். வாழ்க்கையை மாறுதலடையச் செய்த மிக முக்கிய நாட்கள் அவை. அதுவரை உங்களை கேள்விப்பட்டிருந்தேன். நாரோயில் காரர் என்பதால் சிறு நெருக்கம். ஆனால் முகாம் முடித்து வந்ததிலிருந்து உங்கள் குரல் மட்டுமே மனதில் கேட்டுக் கொண்டிருந்தது. நடைப்பயிற்சியில் எழும் கற்பனையில் நான் உங்கள் குரலில் மேடையில் பேசிக் கொண்டிருந்தேன். என் சிந்தனையில் உங்களுடைய தாக்கம் அலாதி. பல காணொளிகள் இலக்கிய வாசிப்பு தொடர்பான புத்தகங்கள் தினம் தளத்தில் வரும் கட்டுரைகள், நான் பார்க்காத இடங்களை காட்டின.

பெங்களூர் பயிற்சி வகுப்பு எனக்கு ஏமாற்றத்தையே அளித்தது. எட்டுமணி நேர வேலைக்கான உருப்படிகள் தான் அங்கும் தயாராகிக் கொண்டிருந்தன. வீட்டிற்கு வந்து இலக்கியம் படித்துக் கொண்டிருந்தேன். கேட்டால் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று பொய் சொன்னேன். அந்நேரத்தில் ‘தன்மீட்சி’ படிக்க நேர்ந்தது. வேலையை விட்டிருக்கக் கூடாதோ என்றொரு எண்ணம். “கனவிற்காக உலகியலைத் துறந்தால், உலகியலுக்காகக் கனவினை துறக்க வேண்டி வரும்” எனும் வரி பயத்தை உண்டாக்கியது. எழுதிப் பிழைக்க முடியாது. எளிய உலகியல் வாழ்க்கையின் அவசியம் புரிந்தது. மனதில் பெரும் குழப்பம். என்ன செய்வது. அந்நேரத்தில் காப்பீடு வேலைக்கான பரீட்சை அறிவிப்பு வந்தது. ஓரளவிற்கு என் துறை சார்ந்தும் அதிக சம்பளமும் இருந்ததால் தீவிரமாக அதில் ஈடுபட்டேன். செப்டம்பர் மாதம் தேர்வு எழுதினேன். ஆனால் பல குளறுபடிகள் வடக்கு மாநிலங்களில் நிகழ்ந்தமையால் ரத்தாகி காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

வீட்டில் வேலையின்மையின் அழுத்தம் அதிகரித்தது. எதாவது சின்ன வேலைக்குப் போய்க் கொண்டே படி என்றார்கள். மறுத்தேன். ஜோதிடம் பார்த்து வந்து ஒனக்கு இருவத்தி அஞ்சு வயசு வர கவர்மன்ட் பரீச்ச எழுதுனா கெடைக்காது என்றார்கள். கத புக்கு படிக்கனால தான் வேலைக்கு போவாம கெடக்கானோ என்றார்கள். மாடித்தோட்ட வேலைகள் செய்யும் போது, செடி வைக்கதுக்காண்டி தான் வேலைக்கு போவாம கெடக்கானோ என்பார்கள். பரீட்சை பற்றிய அறிவிப்புகளும் வந்தபாடில்லை. பல முகாம்கள் இதன் மூலம் போக முடியாமல் ஆயிற்று. அக்டோபர் மாதம் தியான முகாம் அறிவிப்பு வந்ததும் வீட்டில் அடம் பிடித்தேன். நம்ம இருக்க நெலமைல இதெல்லாம் முடியுமா என்றார்கள். அதற்கு முந்தைய வாரம் தான் கோவில் கொடைக்கு லட்சத்தில் செலவு செய்தார்கள். நான், கோயிலு கெட்டட்டா அப்பயாவது தருவியளா என்றேன்.

சிறுவயது முதலே பகல் கனவிற்கு நான் அடிமை. விதவிதமாக கற்பனை செய்வேன். கவனம் சற்றும் இறாது. ஒருமுறை வங்கி செல்லானில் இடப்பக்கம் என் பெயரையும் வலப்பக்கம் அப்பாவின் பெயரையும், இருபத்தோராயிரம் பதிலாக இருபதாயிரம் எனவும், ஒருபக்கம் கணக்கு எண் எழுதாமலும் சமர்ப்பிக்க எத்தனித்தேன். பின் கூர்ந்து கவனிக்கையில் மிகவும் பயந்தேன். அடுத்த வாரம் உளக்குவிப்பு முகாம் பதிவு செய்திருந்தது ஆறுதல் அளித்தது.

தில்லை அவர்கள் கற்றுத் தந்த பயிற்சிகள் தத்துவங்கள் கருவிகளை மெல்ல நடைமுறைப் படுத்தினேன். சாப்பிடும் பொது மொபைல் நோண்டுவதை, நடைப்பயிற்சியில் பாட்டுக் கேட்பதை, முடிந்த அளவு கவனச்சிதறல்களை தவிர்த்தேன். யோகா நித்ரா மூலம் உடல் சோர்வு அற்றுப் போனது. உடலை உலகை கவனிக்க ஆரம்பித்தேன். எல்லாம் லேசானதை உணரமுடிகிறது. அச்சமயத்தில் NIRT பரீட்சைக்கான அறிவிப்பும், அடுத்த சில தினங்களில் பாடத் திட்டமும் பரீட்சை நடைபெறும் தினமும் அறிவித்திருந்தார்கள். நான் ஆசைப்பட்ட என் துறை சார்ந்த ஆராய்ச்சி ரீதியான வேலை. ஆனால் இரு வாரங்கள் தான் கெடு. எப்படி திட்டம் வகுப்பது என்கிற குழப்பம். தூங்கும் நேரத்தைக் குறைத்தேன். ஒரே நம்பிக்கை தியானப் பயிற்சிகள். இலக்கியத்துடனான தொடர்பை துண்டித்துக் கொண்டேன். இனி வேலை கிடைத்த பிறகு தான் எல்லாம் என்றொரு அந்தரங்கச் சூளுரை.

இருவேளை தியானப் பயிற்சிகள் மற்றும் ChatGPTஐ சரியாகப் பயன்படுத்தியதன் மூலம் நன்கு படிக்க முடிந்தது. நாள் நெருங்க நெருங்க பயம். பரீட்சை அன்று காலை தளத்தில் “இலக்கியவாதியைக் காதலித்தல், கடிதம்” வாசிக்கையில் ‘நம் முயற்சிக்கு அப்பால் வேறொன்று நிகழ்கிறது’ எனும் வரி மனச்சுமையை இறக்கிவைத்தது (ஆண்டவன் மீது பாரத்தைப் போடுதல் என்பது இது தானோ). பரீட்சை ஆரம்பிப்பதற்கு கால் மணி நேரம் முன்பு பிராணயாமா செய்ய நினைத்தேன். கூச்சத்தில் வெறுமென கண்களை மூடி சில நிமிடங்கள் ஆழ மூச்சிழுத்து விட்டேன். பரீட்சையையும் சுலபமாக எழுதிவிட்டேன்.

“ரசவாதி” நாவல் படித்தது முதல் சகுனங்களைக் கவனிக்கும் ஆர்வம் உண்டு. அப்படி கவனித்த சில சகுனங்கள் மூலம் ‘NIRT’ மீது அசைக்க முடியாத நம்பிக்கை உருவானது. எந்த அளவிற்கு என்றால், சென்னையிலிருந்து வீட்டிற்கு வந்ததுமே ரத்தான காப்பீடு பரீட்சைக்கான தேதி வெளியிட்டிருந்தார்கள். ஒரே ஒரு வாரம் கெடு. எள்ளளவும் படிக்கத் தோன்றவில்லை. பயமில்லை. அதை எழுதும் பொது கூட அக்கறையில்லாமல் தான் எழுதினேன். ஆனால் வீட்டிற்கு வந்ததும் ஒரு எண்ணம் ‘ஒருவேளை இரு பரீட்சையிலும் தோல்வி அடைந்துவிட்டால். பெரும் மனக்குழப்பம். எல்லா வாசல்களும் மூடியது போன்ற பிரமை. பித்துப் பிடித்தது போலானேன். நாட்களை வீணாகக் கழித்தேன். தியானப் பயிற்சிகள் செய்யவில்லை இலக்கியம் படிக்கத் தக்க செய்தி வரவில்லை நாட்குறிப்பு கூட எழுதவில்லை. வெறும் ஜடம் சோர்வுடன் உலவ மட்டும் செய்தது. ஒரு நாள் இரவு அம்மா புது காலண்டரை பார்த்துக் கொண்டிருந்தாள்.

என்ன பாக்குறீய.

கவர்மென்டு லீவு பாத்துட்டு இருக்கேன். ஒருவேள வேல கெடச்சா டிக்கெட்டு போடனும்லா என்றாள்.

எனக்கு அளவுபடாத ஆச்சரியம். நான் ஏன் நம்பிக்கை இழந்தேன். மறுநாளே தியானப் பயிற்சிகளைத் தொடர்ந்தேன். என்ன படிக்கலாம் என்று பார்க்கையில் ‘ஏழாம் உலகம்’ எடுத்தேன். ஒரு அத்தியாயத்தோடு நிறுத்திய குறுநாவலுக்கு இரண்டாம் அத்தியாயம் எழுதிப் பார்த்தேன்.

தினமும் NIRT தளத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருப்பேன். இப்போ வந்துருக்குமோ. வருடத்தின் இறுதி நாள் காலை. இன்றும் வந்திருக்காது என சும்மா தளத்தை பார்க்கையில் பரீட்சை முடிவுகளை வெளியிட்டிருந்தார்கள். சில நொடிகள் அதையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். படபடப்பு. பயம். பெயர் இருக்குமா. உள்ளே சென்றேன். இருந்தது. SIVA KISHORE S.

உடலும் உள்ளமும் ஓரிடத்தில் நிலைகொள்ளாது துள்ளின. அம்மா ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். நண்பர்களுக்கு சொந்தங்களுக்கு செய்தி அனுப்பினேன். ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தினேன். தில்லை அவர்களுக்கு ‘இவ்வருடத்தின் நாட்குறிப்பில் வேலையின்மை காரணமாக சந்தோஷமான நாட்கள் அதிகம் இல்லாவிடினும் நான் சந்தித்த இரு முக்கிய நபர்கள் ஜெ மற்றும் நீங்கள்’ என எழுதினேன்.

உங்களைச் சந்தித்த பின் தான் இலக்கியத்தில் இருக்கும் குறியீட்டுத் தன்மை, வாசக இடைவெளி, அணுகும் முறை என பல விஷயங்கள், கலைச் சொற்கள் தெரிந்து வருகிறேன். என் சிந்தனை பண் பட்டிருப்பதை உணர முடிகிறது. முன்பைவிட.

வருடத்தின் மொத்த கவலையும் இறுதி நாள் ஓடிற்று. புத்தாண்டு உண்மையிலேயே புதியதாகிப் போனது. மத்திய அரசாங்க உத்தியோகம் எனும் மூன்று சொற்களால் பாமர சமூகத்தைப் புறந்தள்ளி என் இலட்சிய பாதையில் இறங்குகிறேன். தன்னறத்தை தொடர்கிறேன்.

இப்பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன். அன்று நீங்கள் இனிமேல் மேடையுரை முகாம் நிகழாது என்றீர்கள். அன்று கலந்துகொண்டது என் நல்லூழ்.

ஆம், நம் முயற்சிக்கு அப்பால் வேறொன்று நிகழ்கிறது.

எல்லாவற்றிற்கும் நன்றி சொல்லி உங்களை வணங்குகிறேன்.

‘என்ன செய்து கொண்டிருக்கிறாய் இப்போ? என்று நானும் இனிமேல் கேட்கலாம். எனக்கு வேலை கிடைத்துவிட்டது.

– வண்ணதாசன்.’

அன்புடன்

சிவா கிஷோர்

அன்புள்ள சிவா

வாழ்த்துக்கள்

எந்தப் பயிற்சியும் ஆளுமைப் பயிற்சியே என்று ஒரு சொல்லை நித்ய சைதன்ய யதி சொல்வதுண்டு. ஒரு மேடையுரைப் பயிற்சி, ஒரு தியானப் பயிற்சி மட்டும் அல்ல; ஒரு சிறு கைத்தொழில்பயிற்சி கூட நம்மை அறியாமலேயே நம் ஆளுமையை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது. அந்தப் பயிற்சி உண்மையான ஆசிரியர்களால் அளிக்கப்படவேண்டும். அதை நாம் நம்மை அளித்துக் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைபின்நவீனத்துவமும் பிந்தைய எழுத்தும்…
அடுத்த கட்டுரைவீரான்குட்டி- கடிதம்