கலையறிதல் – கடிதம்

வணக்கம்

நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நேற்று நடந்துமுடிந்த ஆலயக்கலை வகுப்பு அத்தனை பரவச உணர்வுகளை கொடுத்தது. இதனை சாத்தியப்படுத்திய JK அண்ணாவிற்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

காலை மென் கதிரொளியில் நித்தியவனத்திற்குள் நுழைகையிலே கடந்த யோக முகாம் மற்றும் தங்களின் தத்துவமுகாம் குறித்த நினைவுகள் சூழ்ந்துகொண்டன.

JK அண்ணா சுந்தரர் தேவாரம் பாடி மகா மங்களமாக வகுப்பை தொடங்கினார். முதல் வகுப்பிலேயே ஆலயம் என்பது வெறும் வழிபாட்டு, சடங்கு நோக்கில் மட்டுமின்றி கலை மற்றும் பண்பாட்டு ரீதியிலும் நம் மரபில் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொன்மம் என்பதை குறித்த ஒட்டுமொத்த சித்திரத்தை அளித்தார். Setting the tone என்பது போல முதல் ஒரு மணி நேரத்திலேயே அனைவரும் வகுப்பிற்கு மனதளவில் தயாராகிவிட்டோம்.

முதலில் எழுத்து, பின் சொல், பின் வாக்கியம், சொற்றொடர்கள், அதன் பின் கவிதை என மொழியை அறியும் அதே Template இலேயே நமது வகுப்பும் அமையப் போகிறது என்று சொல்லி ஒரு வரைவை அளித்தார். ஆகமங்கள், இறை வடிவங்கள், உருவங்களின் வகைப்பாடுகள் என்று வகுப்புகள் அமைந்தன. ஈசனின் லிங்கம் மற்றும் நடராசர் இரண்டு உருவங்களை மட்டுமே அறிந்திருந்தேன். 20க்கும் மேற்பட்ட வடிவங்களை அதன் புராண கதைகளோடு தொடர்பு படுத்தி விளக்கியது அற்புதமாக அமைந்தது.

திரிபுராந்தகர் வடிவத்தின் போது, திருவாரூர் தேர் தொடக்கத்தில் சற்றே ஈசனின் திருவுருவை திருப்புகையில் போடப்பட்டும் மூன்று வெட்டுகள் மும்மலங்களை ஈசன் எரிப்பதன் குறியீடு என்று குறிப்பிட்டு சொன்னார். வகுப்பு உச்சம் அடைந்த தருணம் என்பது அண்ணா இதை விளக்கும் பொது செய்து காட்டிய மூன்று சுடக்குகள். 100 முறை திருவரங்கத்திற்கும் 1000 முறை திருஆனைக்காவிற்கும் சென்று வந்திருக்கிறேன். ஆனால் Iconography வகுப்பில் பங்கேற்ற பின் ஒவ்வொரு சிற்பத்தையும் புதிய பரிமாணத்தில் காண முடியும்.

JK அண்ணா சொன்னதுபோல் அத்தனை தகவல்களும் ஒரு PDF யிலேயே வசித்துக்கொள்ளலாம் என்றாலும் அதன் Aesthetics உடன் விரித்து புரிந்துகொள்வதற்கு நம் ஆலய கலை வகுப்பு மாபெரும் நல்வாய்ப்பாக அமைந்தது. மலைக்கோட்டை கோயிலில் உள்ள பல்லவர்கால குடைவரையின் கல்வெட்டை இன்னும் ஆயிரம் முறை JK விவரிக்க கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும். ஒவ்வொரு முத்திரைகளும், சிற்பத்தின் அமைப்பும், கருக்கு உருவங்களும் ஆபரண விவரணைகளும் முன் எப்போதும் நின்று பார்த்திராத பல அதிசயங்களை கற்று கொடுத்தது.

குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் அரும்பணிகளை தமிழ் விக்கியில் படித்ததோடு இப்போது JK விவரித்த பணிகள் மேலும் ஆர்வமூட்டுவதாக அமைந்தது. ராஜராஜேஸ்வரம் மற்றும் தமிழக கோபுரக்கலை மரபு ஆகிய புத்தகங்களை வாசிக்க இருக்கிறேன்.

வழக்கம் போல இரண்டு நாட்களும் இரவு வகுப்பு முடிந்தபின் இரவு பட்டும் பேச்சுமாக மிகுந்த உற்சாகமான மன நிலையில் இருந்தோம். மென்பொருள் உலகில் உழன்று கொண்டிருக்கும் நான் அன்றாடம் சந்திப்பது என்னை போன்றே அச்சில் வார்த்து எடுக்கப்பட்ட மற்றுமொரு படியை. அவரிடம் நான் கற்றுக்கொள்வதும் விவாதிப்பதும் ஒரு எல்லைக்கு மேல் நிகழும் தருணம் அமைவதில்லை. பெங்களூருவின் concrete செல்களுக்குள் சிக்கி உழன்றிருந்த எனக்கு ஒவ்வொரு முறையும் நித்தியவனம் புதிய மனிதர்களும் அவர்களது வாழ்க்கை அனுபவங்களுமாக புதிய மூச்சுக்காற்றை எனக்குள் நிரப்புகிறது.

JK ராஜா sir வீட்டில் அவரை சந்தித்த நிகழ்வை உணர்ச்சி பொங்க கூறியபோது நெகிழ்ந்துபோனோம். இரண்டாம் நாள் காலை வெள்ளை வேட்டி குர்தாவில் திருநீறு அணிந்து உணவு கூடத்தில் நுழைந்த காட்சி இருவிழித்திரைக்குள் நிறைந்து நிற்கிறது. JK என் சமகாலமும் வரும்காலமும் நிச்சயம் நினைவில் வைத்துகொள்ளப்போகும் ஒரு ஆளுமை.

ஆலயம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒரு அறுபடாத அறிவை கையளித்து கொண்டிருக்கும் வரலாற்று பெட்டகம். அதனை அறிவதென்பது எம் முன்னோரை. அப்பரை, சுந்தரரை,  ராசராசனை, மஹேந்திரவர்ம பல்லவனை ஒட்டுமொத்த பாரதத்தை அறிவது. இத்தனை அறிவுசேகரத்தை அறிமுகம் செய்த குருவான உங்களுக்கு லட்சம், லட்சம் நன்றிகளும் வணக்கங்களும் ஜெ.

அன்புடன்,

மனோஜ், திருவானைக்காவல்

முந்தைய கட்டுரைஎழுத்தாளனாக விரும்பும் இளைஞனுக்கு…
அடுத்த கட்டுரைஇலக்கியவிழாக்கள், கடிதம்