(ஆமாம், சொந்தமொழி!)
கால்வின் ஆண்ட் ஹோப்ஸ் என்னும் ’சித்திரக்கதைப் பட்டை’ கடந்த பத்தாண்டுகளாக நான் தினமும் வாசிப்பது. ஆம், தினமும். எனக்கு அது மின்னஞ்சலில் pintrest நிறுவனத்தால் அனுப்பப்படுகிறது. நான் அதை திரும்பத் திரும்ப தேடி வாசிப்பதை அந்நிறுவனம் ஊக்கப்படுத்துகிறது. அது ஒவ்வொரு நாளையும் ஒரு காபி போல ஊக்கத்துடன் தொடங்கவைக்கிறது.
கால்வின் ஹோப்ஸை நான் தற்செயலாகக் கண்டடையவில்லை. எனக்கு சுசித்ரா பரிசாக அளித்த ஒரு சித்திரக்கதை நூல் அது. அதிலிருந்து ஆரம்பித்த வாசிப்பு. இந்தவகையான சித்திரக்கதை நூல்களுக்கு ஓர் அமைப்பு உண்டு. அவை அலட்சியமாக வரையப்பட்ட கோடுகள் என முதலில் தோன்றும். ஆனால் கவனிக்கும்தோறும் முகபாவனைகள், மன ஓட்டங்கள்கூட தெரியும் கண்கள் என மிகத்தேர்ந்த ஓவியர்களால் அவை வரையப்பட்டிருப்பது தெரியவரும். ஒரு கட்டத்தில் அந்தக் கதாபாத்திரங்கள் நமக்குத் தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களாக, நம்முடனேயே இருப்பவர்களாக ஆகிவிடுவார்கள்.
(ஒரு விடுப்புக் கடிதம்)
சித்திரக்கதைப் பட்டைகளின் இன்னொரு அம்சம், அவை திரும்பத் திரும்ப ஒரே வகையான கருக்களும், மாறாத குணச்சித்திரம் கொண்ட ஓரிரு கதைமாந்தர்களும் கொண்டவை என்பது. அந்த மாறாத தன்மையே அவற்றின் நகைச்சுவையை உருவாக்குகிறது. அந்தக் கதைமாந்தரின் குணச்சித்திரம் தெரிந்தாலொழிய நகைச்சுவை புரியாது. அவை கொஞ்சம் பூடகமாகவே அமைந்திருக்கும். சிலசமயம் சித்திரக்கதைத் துணுக்குகள் நடுவே ஒரு கதைத் தொடர்ச்சியும் இருக்கும்.
கால்வின் மற்றும் ஹோப்ஸ் கதையின் நாயகன் கால்வின். உண்மையிலேயே குழந்தை மேதை. அபாரமான கற்பனைத்திறனும் பிரமிக்கச்செய்யும் மொழித்திறனும் கொண்டவன். உருவாகவிருக்கும் பெரும் இலக்கியவாதி. முழுக்க முழுக்க கற்பனையிலேயே ஓர் உலகை உருவாக்கி அங்கே வாழ்பவன். கற்பனையில் வாழ்வதனால் நிஜவாழ்க்கையில் அனேகமாக நண்பர்களே இல்லை. சூசி என்னும் தோழி தவிர.
(வாழும் வரலாறு)
சூசிக்கும் கால்வின் என்னவகையான ஆள் என்று தெரியாது. மடையனான பக்கத்துவீட்டுப் பையன் என நினைப்பு. அவன் செய்வதெல்லாம் அவளை குழப்புகிறது. அவளால் அவன் பேசுவன எவற்றையும் புரிந்துகொள்ள முடிவதில்லை. பலசமயம் பெரும் அபத்தமாகவும் தெரிகிறது. அவனுடைய கற்பனையுலகில் அவளால் நுழையவே முடியவில்லை.
அவன் அவளுடன் பள்ளியில் படிக்கிறான், ஆகவே அவளுக்கு பலசமயம் துணைவன் அவனே. அவளை அவன் ஒழுங்காகப் படிக்க விடுவதில்லை. சாப்பிட விடுவதில்லை. சாப்பாட்டு டப்பாவை திறக்கையில்தான் அவன் அசிங்கமான, அருவருப்பான விஷயங்களைப் பேச ஆரம்பிக்கிறான். பள்ளியில் அவன் செய்யும் எல்லா பிரச்சினைகளுக்கும் அவளை ஆசிரியரிடம் மாட்டி விட்டுக்கொண்டே இருக்கிறான். ஒவ்வொரு நாளும் அவள் பொறுமையின் உச்சிக்கே செல்லவேண்டியிருக்கிறது. அவ்வப்போது வெடிக்கிறாள். சிலசமயம் ஓங்கி அவன் மண்டையில் போடுகிறாள்
(மாபெரும் தப்பி ஓட்டம்!)
ஆனால் சூசியால் கால்வினை விட்டு விலகவே முடியாது. அவனுடன் இருப்பதென்பது ஒரு ரோலர்கோஸ்டர் அனுபவம். அவன் அவளுக்கு வெளியே இருந்து அவளை ஈர்த்துக்கொண்டே இருக்கும் ஒரு மாபெரும் உலகம். ஆகவே வேறெவரிடமும் அவளுக்கு நெருக்கமில்லை. அவனுடைய நட்பு அவளை பாதாளங்களுக்கும் உச்சங்களுக்கும் இழுத்துச் சென்றுகொண்டே இருக்கிறது. அவனை விட்டு விலகிய மறுகணமே ஆவேசத்துடன் திரும்ப வருகிறாள்.
கால்வினின் அப்பா அவனை புரிந்துகொண்டு அவனுடைய கற்பனையுலகுக்குள் எளிதாக உள்ளே வருபவர். மழை எப்படி பெய்கிறது என்று அவன் கேட்டால், கடலில் அலைகள் அடிப்பதனால் என நம்பகமான ஒரு பதிலை அவர் சொல்லிவிடுவார். அவனுக்கும் அவருக்கும் நடுவே பல கொடுக்கல்வாங்கல்களும் உண்டு.
சாவுடா!
கால்வினின் பிரச்சினை அவனுடைய அபாரமான கற்பனை, அவனுடைய மொழிநுண்ணுணர்வு, அவனுடைய அகப்பயணங்கள் ஆகியவைதான். அதற்கு வாய்ப்பற்ற அனைத்திலும் அவனால் ஈடுபட முடிவதில்லை. அவை அவனுக்கு முட்டாள்தனமாகத் தோன்றுகின்றன. முதலாம் அலக்ஸாண்டர் மாசிடோனியாவை ஆட்சி செய்தால் அவனுக்கென்ன? முதலாம் அலக்ஸாண்டரால் வேற்றுக்கிரக வாசிகளை ஆட்சிசெய்ய முடிந்திருந்தால் அது தெரிந்து கொள்ளப்பட வேண்டிய விஷயம். ஒன்றும் ஒன்றும் எப்போதும் இரண்டே ஆகும் கணிதம் போல அசட்டுத்தனமான ஓர் அறிவுத்துறை இருக்க முடியுமா என்ன?
கால்வினிடம் எப்போதும் ஒரு விளையாட்டுத்தனமான குரூரமும், விளையாட்டுத்தனமான அசிங்கமும் இருந்துகொண்டே இருக்கிறது. “Drop Dead” என சூசியை வசைபாடும்போதும் சரி, “That is gross” என மகிழும்போதும் சரி அந்த முகபாவனையில் அபாரமான ஒரு தன்மகிழ்வின் இளிப்பு தென்படுகிறது. அதேசமயம் பள்ளியின் ரவுடியான Bully Moe அவனை மடக்கி மண்டையில் குட்டும்போது முற்றிலும் கைவிடப்பட்டு பரிதாபமாக தலைகுனிந்து நிற்கிறான்.
படைப்புச்சுதந்திரம்!
அவன் அம்மாவுக்கு அவனை மிக நன்றாகத்தெரியும். ஆனால் எப்படி அவனைப்போன்ற ஒரு சிக்கலான சிறுவனை கையாள்வது என்றும் தெரியும். தரதரவென ஒற்றைக்கையைப் பிடித்து தூக்கி பள்ளிவேனுக்குள் வீசுபவள் அவள். ”No You dont!” என அவள் சொல்லிவிட்டால் அதற்குமேல் பேச்சில்லை என கால்வினுக்கும் தெரியும். உண்மையில் அவள் சூசியின் இன்னொரு வடிவம். அவள் பொறுமையிழந்து கூச்சலிடாத நாளே இல்லை. அவன் அவளுடைய வாழ்வின் கெட்டகனவு. ஆனால் அவனே அவள் இன்பம். அவளுடைய உலகில் இன்னொரு மனிதரே இல்லை.
கால்வினின் ஆசிரியை வார்ம்வுட் கனிந்த முதியவர். அவனைப் போன்ற பல குழந்தைகளை கண்டுகண்டு தேர்ந்தவர். ஆகவே அவனுடைய உலகுக்குள் செல்வதில்லை. அவனை நடைமுறைக்கு கொண்டுவர முயன்றுகொண்டே இருப்பவர். கால்வின் அனேகமாக தினமும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் கொண்டுபோகப்படுபவன். அல்லது வெளியே காகிதத்தொப்பி அணிந்து அமரவேண்டியவன்.
’சிந்தனைச் சுதந்திரம்”
பள்ளி கால்வினுக்கு ஒரு கெட்டசொப்பனம். ஒவ்வொரு நாளும் பள்ளி வண்டியில் இருந்து தப்பியோட முயன்று பிடிபடுகிறான். ஏதேனும் காரணம் சொல்லி பள்ளியில் இருந்து திரும்பி வருகிறான். (ஒரு முறை பள்ளியை செவ்வாய் கிரகவாசிகள் அழித்துவிடுகிறார்கள்) ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று ஆவதன் மர்மம் கடைசிவரை பிடிகிடைக்கவில்லை. ஏன் மூன்றாக ஆகக்கூடாது? சரி, இந்த பூமியில் அப்படி. ஏன் வேற்றுக் கிரகங்களில் அப்படி இருக்கக் கூடாது? அது கணித ஆசிரியர்கள் சொல்ல மற்றவர்கள் நம்பும் ஒரு மரபு மட்டும்தானே? அப்படியென்றால் அது ஒரு மதம். கால்வின் ஒரு கணிதநாத்திகன்.
கால்வினின் தோழன் ஹோப்ஸ். அது உண்மையில் ஒரு துணியடைக்கப்பட்ட புலிப்பொம்மை. ஆனால் கால்வினுக்கு அது உயிருள்ள புலி. புலித்தோழன் கால்வினின் எல்லா உளநிலைகளையும் பகிர்ந்துகொள்பவன். எல்லா கற்பனைகளிலும் உடனிருப்பவன். எல்லா சொற்களையும் புரிந்துகொண்டு எப்போதுமே உரையாடிக்கொண்டிருப்பவன். கால்வினால் மிகச்சிக்கலான தத்துவங்களைப் புரிந்துகொள்ள முடியும் – அவை பள்ளிப்பாடங்களில் இடம்பெற்றிருக்கக் கூடாது, அவ்வளவுதான்
”ரொம்ப கருத்தா இருக்கானுக”
கால்வின் ஆண்ட் ஹோப்ஸ் சித்திரக்கதைப் பட்டை பில் வாட்டர்ஸன் (Bill Watterson) என்னும் சித்திரக்காரரால் 1985 நவம்பர் முதல் வரைந்து வெளியிடப்படுவது. உலகமெங்கும் 100 மொழிகளில் 2400 நாளிதழ்களில் தொடர்ச்சியாக மொழியாக்கம் செய்யப்படுகிறது. உலகமெங்கும் கால்வினுக்கு அணுக்கமான ரசிகர்கள் உள்ளனர்.
அந்த வாசகர்கள் கால்வின்கள் அல்ல, கால்வின்களின் பெற்றோர். கால்வின் போன்ற ஒரு பயலைப் பெற்று வளர்ப்பதன் உவகையையும், மண்டையை சுவரில் முட்டி உடைத்துக்கொள்ள வைக்கும் அவஸ்தையையும் அவர்களும் கொஞ்சமேனும் அறிந்திருப்பார்கள். ஏனென்றால் எல்லா சுட்டிப் பயல்களும் கொஞ்சமேனும் கால்வின்கள்தான்.
தந்தையின் ஞானப்பகிர்வு
கால்வினின் உலகத்தை உணர அவனை மிக அணுக்கமாக உள்ளத்தால் தொடரவேண்டியிருக்கிறது. கால்வின் வாழும் உலகம் எதிர்காலத்தில் வரவிருப்பது. நிகழ்காலத்தை உதறி அங்கே செல்லவேண்டும். அப்போது நிகழ்காலம் மாபெரும் அபத்தமாக தெரிய ஆரம்பித்துவிடும். வேலையும் சுற்றமும் எல்லாம் அபத்தமாக ஆகிவிடும். ஆகவே கால்வினின் அம்மா சூதானமாக இருக்கிறாள். கால்வினின் மெய்யுலகின் நங்கூரம் அவள். கால்வினின் அப்பா அவ்வப்போது அந்த சூறைக்காற்றால் மண்ணில் இருந்து கால் பெயர்கிறார்.
கால்வின் ஒருவழியாக வளர்ந்து, அவனுக்கான உலகை மெய்யாகவே உருவாக்கிக் கொண்டு விலகிச்செல்லும்போது அவனுடைய அப்பாவும் அம்மாவும் ‘அப்பாடா!’ என்னும் ஆழ்ந்த நிம்மதிப் பெருமூச்சுடன் சாய்வுநாற்காலியில் சாய்வார்கள். ஆனால் சட்டென்று அந்த வட்டச்சுழற்புதிர்ப் பாதையின் கணம் கணம் என ஓடிய திகில் பயண அனுபவத்தை எண்ணி, சென்று மறைந்த நாட்கள் ஒவ்வொன்றும் ஒளிகொண்டிருந்ததை எண்ணி, ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணீருடன் புன்னகைத்துக் கொள்வார்கள்.