சித்பவானந்தர்-ஒருகடிதம்

’இன்று 14,ஆகஸ்ட் 2011 அன்று அவ‌ர் தளத்தில் ‘சிங்காரவேலரின் பிராமண எதிர்ப்பு’ என்ற பதிவு வந்துள்ளது. அதில் சுவாமி சித்பவானந்தரை ராமகிருஷ்ண இயக்கம் வெளியேற்றியது என்றும் அதற்கு பிராமண மேட்டிமைத்தனம் அல்லது அவ்வியக்கத்தில் பிராமணர்களின் பின்புல மேலாண்மைதான் காரணம் என்றும் எழுதியுள்ளார். நித்ய சைதன்ய ய‌திக்கும் இது ஏற்பட்டதாக எழுதியுள்ளார். சுவாமி சித்பவானந்தர் இதுபற்றி எதாவது எழுதியுள்ளாரா? அதற்கு என்ன ஆதாரம்?

சுவாமி சித்பவானந்தர் சுமார் 20 இளைஞர்களைத் தன் திருப்பராய்த்துறை தபோவனத்தில் பேளூர் மடத்தின் அனுமதி பெறாமல் வைத்துத் தன் முறையில் பயிற்சி அளித்து வாந்தார். அவ‌ர்களுக்கு ஒரு ராமகிருஷ்ண ஜெயந்தி அன்று சன்யாசம் அளிக்க வேண்டும் தலைமைப்பீடத்திற்கு எழுதினார்.தலைமைப்பீடம் ஒரு அகில உலக நிறுவனமானதால் அவர்களுக்குசில வழி முறைகள் உண்டு. அதன்படி அவருடைய மாணவர்களைத் தங்கள் வசம் வைத்திருந்து அங்குள்ள பயிற்சிகளையும் அளித்துப் பின்னர் சன்யாசம் அளிப்பதாகத் தலைமை கூறியது.சுவாமி சித்பவனந்தர் தானே அவர்களுக்கு சன்யாசத்தை அளித்துவிட்டார். இது தலைமைப் பீடத்ததினை மீறிச் செயல் பட்டதாகக் கொள்ளப்பட்டது.ஒவ்வொரு சன்யாசியும் அவ்வாறு சன்யாசம் அளிக்க ஆரம்பித்துவிட்டால் இயக்கம் என்ற அமைப்பு வலுவிழக்கும் என்று தலைமை கருதியது.அதனைத் தலைமை சித்பவானந்தருக்குக் கூறியபோது  அவர் கோபித்துக்கொண்டு வெளியேறினார். சுவாமி சித்பவானந்தருக்கும், அன்று இயக்கத்தின் த‌லைவராக இருந்த சுவாமி வீரேஸ்வரான‌ந்தருக்கும் நடந்த கடிதப்போக்குவரத்து சுவாமி சித்பவானந்தரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இன்றும் தபோவனத்தில் கேட்டால் கிடைக்கலாம்.

(சித்பவானந்தரால் உருவாக்கப்பட்ட சன்யாசிகள் அனைவரும் துண்டுதுண்டாகச் சிதறிப்போய்த் தனிப்பட்ட சன்யாசிகள் ஆகிவிட்டார்கள்.தபோவனத்திற்கும் கரூர்ஆசிரமத்திற்கும் பெரிய வழக்கு நடந்தது.இப்படி ஆகக் கூடாது என்பதுவே தலைமையின் கட்டுப்பாடுகளுக்குக் காரணம்)

இதில் சித்பவானந்தரை வெளியேற்ற பிராமணர்கள் செய்தது என்ன என்று திரு ஜெயமோஹன் சற்று சிந்தித்து விளக்க வேண்டும்.’

Dear sir, I have copy pasted my poster to your knowledgeable self about the detailed reply in your site today.This letter was exchanged between me  and  my friend .Both of us read your site daily and exchange views. if you have any writings of Swami Chithbavananda telling Brahmin domination was the cause for his quitting/ousting from RK Mutt, please provide the reference to me.

As for as I know the following statement of mine was the cause of his parting company wih the RK Mutt.
With regards,
K.Mhuramakrishnan.

 

அன்புள்ள ராமகிருஷ்ணன்,

உங்கள் கடிதம்

ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எண்பதுகளில் சிலநாட்கள் நான் சித்பவானந்தா ஆசிரமத்தில் இருந்திருக்கிறேன். அவரது சில சத்சங்கங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். சித்பவனாந்தரைப்போன்ற ஒருவர் சாதி சார்ந்த விஷயங்களைப் பதிவுசெய்வார் என்று நான் நினைக்கவில்லை. அமைப்பின் உட்பூசல்களை அவர் பெரிதாக எண்ணுவார் என்றும் நினைக்கவில்லை. தன் அமைப்பில் சாதிக்காழ்ப்பு உள்ளே நுழையாதபடியே அவர் கடைசிவரைவைத்திருந்தார். எவ்வகை சாதிக்காழ்ப்பும்-  மேல் நோக்கியோ கீழ் நோக்கியோ.

சித்பவானந்தர் ராமகிருஷ்ணரின் நேரடிச்சீடர்.சுவாமி சிவானந்தரால் தீட்சை கொடுக்கப்பட்டவர். 1930-40 வரை ஊட்டி ராமகிருஷ்ணமடம் தலைவராக இருந்தார். சிவானந்தர் இருந்தபோதே சித்பவானந்தருக்கு நெருக்கடிகள் இருந்தன. சிவானந்தர் 1934இல் சமாதியானதும் நெருக்கடிகள் முற்றின. இரு வருடங்கள்கூட சித்பவானந்தர் மடத்தில் நீடிக்கமுடியவில்லை. 1936 இறுதியில் மடத்தைவிட்டு நடைமுறையில் விலகினார்.

தன் மடத்துக்குச் சொந்தமான கடைசிப்பணத்தையும் எண்ணிக் கணக்கிட்டுக் கடிதமெழுதி ஒப்படைத்ததாகவும் ‘ரயில்செலவுக்கு மட்டும் பணம் எடுத்துக்கொள்கிறேன், நான் திருட்டுரயிலில் பயணம்செய்தால் அது மடத்துக்கு இழுக்கு’ என்று அக்கடிதத்தில் சொல்லியிருந்ததாகவும் அவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். கைலாசத்துக்குப் பயணமானபோதே அவர் மடத்திலிருந்து விலகிவிட்டார். ஊட்டி மடம் சித்பவானந்தரின் குடும்பச்சொத்தால் அமைக்கப்பட்டது என்பதும் கவனிக்கத்தக்கது

அவருக்கு நெருக்கடி அளிக்கப்பட்டமைக்குக் காரணமாக அமைந்த நிகழ்வுகள் பலவும்பல நூல்களில் சிதறிக்கிடக்கின்றன. எவரேனும் உண்மையான ஆய்வை மேற்கொண்டு எழுதினால்தான் உண்டு. ஒன்று, அவர் ஊட்டி மடத்தின் தலைவராக இருந்தபோது தி.சு.அவினாசிலிங்கம் ஏற்பாட்டில் காந்தி அங்கே வருகைபுரிந்தார். அப்போது அவர் ஆலயப்பிரவேச இயக்கத்தை நடத்திக்கொண்டிருந்தார். காந்தியின் வருகையால் சென்னைவாழ் பிராமணப்புரவலர்கள் அதிருப்திகொண்டு சித்பவானந்தர்மேல் கல்கத்தாவுக்கு நிறையப் புகார்கள் அளித்தனர். மடத்தின் கல்விப்பணிகள் பல நின்றுவிடும் என அச்சுறுத்தினர்.

அதைவிட 1926ல் நாராயணகுரு ஊட்டி ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றதும் அங்கே அவருக்குப் பிறதுறவிகள் பாதபூஜைசெய்ததும் சென்னை பிராமணப் புரலவலர்களிடையே கசப்பை உருவாக்கியது. அவர்களும் சித்பவானந்தர்மேல் புகார்களைத் தொடர்ந்து தெரிவித்துவந்தனர். இச்செய்திகளை நித்ய சைதன்ய யதி சொல்லியிருக்கிறார்.

1936ல் ராமகிருஷ்ண பரமஹம்சரின் நூற்றாண்டுவிழாவை ஒட்டி சித்பவானந்தர் சீடர்களுக்கு தீட்சை அளிக்கப் பரிந்துரைத்ததுதான் பிரச்சினையாக்கப்பட்டு அவர்மேல் புகார்கள் அளிக்கப்பட்டன. அதுவே கடைசி நெருக்கடி. இது நான் அறிந்தது

ஊட்டி மடத்திலிருந்து முற்றிலும் விலகியபின் சித்பவானந்தர் தன் சொந்த ஊரிலும் கோவையிலுமாகத் தங்கியிருந்திருக்கிறார். 1940ல் ஒரு திருவிழாவுக்காக திருப்பராய்த்துறைக்குச் சென்றபோது அங்கே உள்ள பிரமுகர்கள் சிலருடன் உறவு ஏற்பட்டது. தாயுமானவர்கோயிலில் திருவாசக உரை நிகழ்த்தியும் கீதை உரைகள் நிகழ்த்தியும் திருச்சியில் இருந்தார். திரு ராமநாதன் செட்டியார், கானாடுகாத்தான் திரு.அருணாச்சலம் செட்டியார் ஆகியோரின் உதவியால் 1942இல் தனியாக, திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனம் அமைத்தார். இதுதான் நான் அறிந்த வரலாறு.

நானறிந்தவரை, ராமகிருஷ்ண மடத்தில்  அந்த மடத்தின் தலைவரே தீட்சை அளிப்பது வழக்கம். இப்போதும் அப்படியே. அதற்கான அனுமதியை மட்டுமே மேலிடத்தில் கோருவார்கள். அந்த அனுமதி அளிக்கப்படுவதும் சாதாரணமான நிகழ்வே. அதையே சித்பவானந்தர் செய்திருக்கிறார். அது பிரச்சினையாக்கப்பட்டது, அவருக்கு அதற்கான தகுதி இல்லை என்ற பேச்சு கிளம்பியது. அவர் உடனே  அதற்காக ‘கோபித்துக் கொண்டு’ கிளம்பவில்லை. அவர் அத்தகைய ஒரு சில்லறை மனிதரும் அல்ல. அவர் வெளியேறியாக வேண்டிய சூழல் பலகாலமாகவே இருந்தது.

மேலும் ராமகிருஷ்ண மடத்தின் வரலாற்றில் நூற்றுக்கணக்கான பேர் பிரிந்து சென்றிருக்கிறார்கள். பலநூறு பிளவுகள் நிகழ்ந்துள்ளன.   தமிழக ராமகிருஷ்ண மடம் மயிலையில்  தேங்கி நின்றது. அதன் தேக்கநிலை அங்கிருந்த பிராமண ஆதிக்கம் மீண்டும் உடைக்கப்பட்டபின்னரே ஓரளவேனும் நீங்கியது. இதுவே வரலாறு. ஆனால் சித்பவானந்தரின் ராமகிருஷ்ண தபோவனம் என்ற இயக்கம் இவர் சொல்வதுபோலச் சிதறிச்செல்லவில்லை.  தொடர்ச்சியாக வளர்ச்சியும் விரிவும் பெற்றுத் தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பாற்றியது. சென்னை தவிர்த்த தமிழகத்தைப்பொறுத்தவரை இன்றும் ராமகிருஷ்ண-விவேகானந்த இயக்கம் என்பது சித்பவானந்தரின் நிறுவனம் மட்டுமே.

மயிலை ராமகிருஷ்ண மடம் அந்நாட்களில் சென்னை பிராமணசமூகத்தைப் புரவலர் வட்டமாகக் கொண்டிருந்தது. அதை நித்ய சைதன்ய யதியும் அவரது சுயசரிதையில் பதிவுசெய்கிறார். டாக்டர் ராதாகிருஷ்ணனை எதிர்த்து, கீதை ஒரு மதநூல் அல்ல தத்துவநூலே என எழுதியமைக்காக, அந்த பிராமணப்புரவலர்வட்டத்தால் அவர் வெளியேற்றப்பட்டதை விவரிக்கிறார். நான் அவரை எடுத்த பேட்டியிலேயே அதைக் குறிப்பிட்டிருக்கிறார்.  ஆகவே இயல்பாக ஒரு சித்திரம் முழுமையடைந்து வருகிறது.

இந்த அமைப்புகளுடன் ஓரளவு தொடர்புள்ளவர்கள் அனைவருமே சாதாரணமாக அறிந்த விஷயங்கள்தான் இவை. ஆனால் புறவயமாக நிரூபிக்கவேண்டுமென்றால் மேலதிக தகவல்களை அவற்றுக்குள் உள்ளவர்களிடம் சென்று , கடிதங்களைக் கண்டு, ஆராய்ச்சி செய்து எழுதினால்தான் உண்டு. நான் சொல்லியிருக்கும் தகவல்கள் சம்பந்தப்பட்ட பலர் நேரில் சொன்னவை, நான் இந்து இயக்கங்களில் பணியாற்றிய காலகட்டங்களில் கேட்டு அறிந்தவை.

ஜெ

முந்தைய கட்டுரைஅறிவியலுக்கென்ன குறை?
அடுத்த கட்டுரைதூக்கு -கடிதங்கள்