அன்புள்ள ஜெ,
திரு பழ கருப்பையா அவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், உங்களுடைய உரையை நேரில் கேட்டேன்.
நேர நெருக்கடியிலும், பழ கருப்பையாவின் புத்தகத்தை முழுமையாக படித்து தாங்கள் ஆற்றிய உரை சிறப்பு.. பழ கருப்பையா அவர்கள் தோல்வி அடைந்த ஒரு அரசியல்வாதி என்று துவக்கி எவ்வாறு சமரசங்களினால் அரசியல் எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை விளக்கினீர்கள். குறிப்பாக Micro Politics மூலமாகவே இலக்கை அடைய முடியும் என்பதை உதாரணங்களுடன் விளக்கியது உங்களின் தளத்தை தொடர்ந்து வாசிப்பவனுக்கு உங்களுடனான உரையாடலின் நீட்சியாக இருந்தது..
திரு பழ கருப்பையாவும் தன்னுடைய ஏற்புரையில் உங்களின் பங்களிப்பை அங்கீகரித்து, லூயிஃபிஷரின் “The life of Mahatma Gandhi” புத்தகத்திற்கு இணையாக இன்றைய காந்தி புத்தகத்தை குறிப்பிட்டது நெகிழ்வாக இருந்தது. இன்றைய காந்தி நான் தினமும் ஒரு பக்கம் மறுவாசிப்பை நிகழ்த்தும் புத்தகம்.
மிக்க நன்றி
ஸ்நேகத்துடன்,
கோபால்
அன்புள்ள ஜெ
பழ கருப்பையா அரங்கில் நீங்கள் ஆற்றிய சிற்றுரை கண்டேன். நீண்ட பேருரை ஆனாலும் சிறிய உரை ஆனாலும் ஒரு கட்டமைப்பு உங்கள் உரைகளிலுள்ளது. உங்கள் உரைகளின் சிறப்பு அதுவே. முதல் பாதியில் பழ கருப்பையாவை முன்வைத்து இன்றைய அரசியலின் இயல்பைச் சொல்கிறீர்கள். எப்படி அதிகார அரசியலில் சேவை என்பதற்கு இடமில்லாமல் இருக்கிறது என விளக்குகிறீர்கள். அடுத்ததாக நுண்ணரசியல் (மைக்ரோ பாலிடிக்ஸ்) என்பதை முன்வைத்து அதன் நான்கு இயல்புகளை முன்வைத்து (ஓர் சிற்றலகுக்குள் செயல்படுவது, ஒரே தளத்தில் செயல்படுவது, நேர்நிலைத்தன்மை, நீண்டகால அளவில் செயல்படுவது) அதைச் செய்த இரு முன்னோடிகளையும் சொல்லி உரையை நிறைவடையச் செய்கிறீர்கள். அரிய உரை. நன்றி
அழ. சுப்ரமணியம்