யானமும், நம் முதிர் வாசகர்களும்- கடிதம்

யானம் (சிறுகதை)

அன்புள்ள ஜெயமோகன்,

ஒரு கேள்வி. “யானம்” என்ற உங்கள் சமீபத்திய கதை சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படும் விதத்தை ஒட்டி. அமெரிக்க வாழ்க்கைமுறையை நீங்கள் புரிந்துகொள்ளாமல் விமர்சிக்கிறீர்கள் என்று தொடங்கினாலும் அந்தப் பதிவுகளும் அதற்கு வரும் எதிர்வினைகளும் தொடர்ச்சியாக சுற்றிச்சுற்றிப் பேசுவது அந்தக் கதையில் இடம்பெறும் கள்ள உறவைப் பற்றி.

அதன் மூலம் நவீன வாழ்க்கையைப் பற்றி குறிப்புணர்த்தப்படுவது என்ன என்பதல்ல அவர்களுடைய விவாதம். கள்ள உறவு. மிட்டாய் சப்புவது போல் அதைப் பேசுவது. கதை அதற்கு ஒரு சாக்கு. அதற்கு வெவ்வேறு பாவனைகளை. கதாநாயகியை மலையாளியாக காட்டுவதன் அரசியல் என்ன இந்தியாவில் திருமண உறவுகளின் நிலை என்ன என்று என்ன பேசினாலும் அவர்களுடைய ஆர்வம் எங்கே என்று அப்பட்டமாக தெரிகிறது. இந்த சப்ஜெக்டில் கதை வந்தால் உடனே “எவ்வளவு நுட்பம்” என்று சிலாகிக்க ஒரு கூட்டம் கூடிவிடுகிறது (வயதில் அடிப்படையில் அவர்களை பூமர் என்றோ அங்கிள் என்றோ சுட்டுவது அநீதியாக இடுப்புக்குக் கீழே அடிப்பதாக இருக்கும் – அதையெல்லாம் தாங்க மாட்டார்கள்)

இதே தான் “வெற்றி” கதைக்கு நிகழ்ந்தது. ராஜேந்திர சோழனின் தஞ்சை பிரகாஷின் கதைகள் பேசப்படுவது இதனால் தான். வண்ணதாசன் தி.ஜானகிராமன், கு.ப.ரா… உண்மையில் புன்னகைக்க வைக்கிறது. அந்தக் கதைகள் தன்னளவில் நல்ல கதைகளா இல்லையா என்பது அல்ல விஷயம். ஆனால் இந்த “தேர்ந்த வாசகர்களின்” தேர்வு – இவர்கள் உண்மையில் எதைத் தேர்கிறார்கள்? இவர்கள் ‘நுட்பம்’ என்று சொல்வது எதை? இவர்களுடைய தேடல் தான் என்ன? இவர்கள் தான் இங்கே இலக்கிய அழகியலை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்களா? இவர்களைப் போன்றவர்கள் பெண்ணெழுத்தையோ (அல்லது வேறு வகை எழுத்தையோ) நிராகரித்தால் அதை ஏன் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும்?

நூறாண்டு நவீன தமிழ் இலக்கிய அழகியலை தீர்மானித்தது இது போன்ற “தேர்ந்த” வாசகர் கூட்டம் தான் என்றால் அதை முறையாக மறுபரிசீலனை செய்ய காலம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

பணிவன்புடன்,

நீலி

*

அன்புள்ள நீலி

ஏற்கனவே நீங்கள் அந்த நீலி என எண்ணி ஒரு பதில் எழுதியிருந்தேன். அவர் அல்ல நீங்கள் என அறிந்துகொண்டேன். மகிழ்ச்சி.

இந்த ‘தேர்ந்த வாசகர்கள்’ பற்றி நான் முன்னரும் எழுதியிருக்கிறேன். இவர்களை அனுதாபத்துடன் மட்டுமே பார்க்கவேண்டும். யானம் கதையில் சொல்லப்படுவது போல சிறு குமிழிகளுக்குள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டவர்கள் அவர்கள். மிகக்கடுமையான பாலியல் வறட்சியே அவர்களின் அடிப்படை இயல்பு.

பாலியல் வறட்சி என்பது உடல் சார்ந்தது அல்ல- உளம் சார்ந்தது. காதல், அதன் கொண்டாட்டம், அவர்கள் அறிந்தே இராதது. ஆகவே முழுக்க முழுக்கக் கற்பனைதான். அகத்தே விடலைப் பருவத்தில் இருந்து விடுபடுவதே இல்லை. காமம், காமமீறல் தவிர எதுவுமே அவர்களுடைய மூளையை தீண்டுவதில்லை.

ஆனால் அதை அப்படியே பேச தயக்கம். அதற்கு கலைநுட்பம், உளவியல் அலசல், சமூகவியல் ஆய்வு என பலவகை பாவலாக்கள் தேவைப்படுகின்றன. அதன் பொருட்டே இவர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் சில எழுத்தாளர்களும் உண்டு. அந்த எழுத்தாளர்களின் மெய்யான மதிப்பை விட இவர்கள் அவர்களுக்கு ஏற்றியிருக்கும் மதிப்பு மிகுதி. அதேபோல சில நல்ல எழுத்தாளர்களில் இவர்கள் காமக்கிளுகிளுப்பை மட்டுமே கண்டு அதை மட்டுமே முன்வைத்து அவர்களைச் சிறியதாக்கியுமிருப்பார்கள்.

பாலியல் வறட்சியின் இன்னொரு முகமும் உண்டு. அது இதற்கு நேர் எதிரானது. ஒரு கற்பனையான தளத்தில் மிகையான பாலியல் மீறல்களை- வன்முறைகளை கற்பனை செய்துகொள்வது. கட்டற்ற ஒரு கற்பனை உலகை உருவாக்கிக் கொள்வது. அங்கே வாழ்வதாக எண்ணிக்கொள்வது. அவர்களுக்கு இங்கே அன்றாடத்தில் நிகழும் உறவுச்சிக்கல்கள், உளநுட்பங்கள் பொருள்படுவதில்லை. ’லைஃப் எங்கியோ போய்ட்டிருக்கு’ என்பார்கள்.

ஆனால் அவர்களும் அந்த குமிழிவாழ்க்கைக்குள் மீட்பின்றி அடைபட்டவர்கள்தான். அவர்கள் எங்கோ நிகழும் ’அதிநவீனவாழ்க்கை’ என எண்ணிக்கொள்வது அவர்களின் பிரமைதான். உண்மை அது அல்ல. இவர்கள் உருவாக்கும் வாசிப்புத் திரிபுகளும் நம் சூழலுக்குள் ஓரளவு செல்வாக்குடனுள்ளன.

யானம் கதை நூறு சதம் பிழையற்ற அமெரிக்கச் சித்தரிப்பு அல்லது நவீனவாழ்க்கைச் சித்தரிப்பு என்பதில் எனக்கு ஐயமில்லை – அது எவரை ஏன் சீண்டுகிறது என்பதும் தெரியும். ஆனால் அது எங்கும் உள்ள யதார்த்தமே. அக்கதையின் அதே யதார்த்தமே அனேகமாக எல்லா இந்தியப் பெருநகர்களிலும் இன்றுள்ளது.

நவீன வாழ்க்கை கட்டற்ற சுதந்திரம் என்னும் வாய்ப்பை அளிக்கின்றது. நவீன வாழ்க்கையின் இன்பங்களை அடைய அதை விரும்புவோர் கட்டுகள் இன்றி இருந்தாகவேண்டும். ஆனால் அதற்கு விலையாக உறவுகளை அளித்தாகவேண்டும். குடும்பம் எனும் அமைப்பை அளித்தாக வேண்டும். கட்டற்ற நுகர்வு – கேளிக்கை பற்றிய ஏக்கமும், கூடவே உறவுகளை விடமுடியாத தவிப்பும் இருபக்கமும் அலைக்கழிக்க சின்னஞ்சிறு குமிழிகளுக்குள் வாழ்பவர்களே இன்றைய நவீன வாழ்க்கையில் மிகுதி. அது அமெரிக்காவானாலும் இந்தியப்பெருநகர் ஆனாலும்.

நான் இந்திய உயர்குடி, தொழில்துறை உயர்மட்டம் போன்று ஒரு தளத்தை கதைகளில் எழுதும்போதெல்லாம் ஒரு சிறுகூட்டம் வந்து அது ‘ஆதெண்டிக்’ அல்ல என சொல்வதுண்டு. சொல்பவர்கள் எவர் என்றால் எளிய உயர்நடுத்தர வர்க்கத்தினர். ஏதேனும் நிறுவனத்தில் கொஞ்சம் சுமாரான பதவிகளில் உள்ளவர்கள். ஒரு தொழிலதிபர் அல்லது உயர்நிர்வாகி அவர்களை ஏவலர் என்றே அணுகுவார். இவர்கள் என்னை அவர்களின் வட்டத்தினர் என நினைத்துக்கொள்கின்றனர். நான் குமரிமாவட்டக் கிராம வாழ்க்கையை எழுதுவதனால் அச்சூழலைச் சார்ந்தவன் என்னும் பாமரக் கற்பனையும் பலரிடமுண்டு.

நான் புழங்கும் உலகம், நான் அறிந்த உயர்மட்டங்கள் இவர்களால் கற்பனை செய்ய முடியாதவை. உயர்மட்ட சினிமா, உயர்மட்ட அரசியல், உயர்மட்ட தொழில் வழியாக அன்றி இங்கே மெய்யான மேல்மட்டத்துள்  எவரும் நுழையவே முடியாது. வெளியே இருந்து அடையும் பிரமைகளுக்கு அவ்வுலகுக்கும் சம்பந்தமே இல்லை. இங்கே பலர் ஒரு மெய்யான உயர்மட்டப் ‘பார்ட்டியில்’ ஒருபோதும் பங்கெடுத்திருக்க மாட்டார்கள். தமிழில் என் தலைமுறையில் உயர் மட்டங்களை நேரிலறிந்து எழுதும் வாழ்க்கைப்புலம் உடைய இன்னொரு எழுத்தாளர் இன்றில்லை. மிகக்கீழ்மட்டத்தை, பிச்சைக்காரர்களின் உலகை, உடன் வாழ்ந்து அறிந்து எழுதும் இன்னொருவரும் இல்லை.

ஜெ

முந்தைய கட்டுரைஇலக்கியத்தேநீர்
அடுத்த கட்டுரைஜான் கோஸ்ட்