வாழ்வும் வாசிப்பும் -மூன்று படிநிலைகள்

யாப்பு

யானமும் முதிர்வாசகர்களும்

அன்பு ஜெ,

யாப்பு கட்டுரையில் இவ்வாறு (தமிழய்யாவின் கூற்றாக) குறிப்பிட்டிருந்தீர்கள். “இப்பம் சொன்னா உங்களுக்கு மனசிலாவாது. இடுப்புக்குக் கீழயாக்கும் சந்தோசம் இருக்குண்ணு நெனைச்சிட்டு அலையுத பிராயம்லே மக்கா அதெல்லாம் எண்ணை தீந்து அணையுத வெளக்குலேநெஞ்சுக்குள்ள உள்ள வெளக்குக்கு ஆத்மாவாக்கும் எண்ணை கேட்டுக்கிடுங்க.” 

முன்னரும் கூட இந்த இடுப்புக்கு கீழான வாழ்க்கை என்ற வரியை வாசித்திருக்கிறேன். அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. இந்த வயதில் இங்கு நின்று கொண்டு சுற்றி எங்கு நோக்கினாலும் அதுவே தென்படுகிறது போன்ற பிரமை இருந்தது. ஒரு குறிப்பிட்ட வயதில் அந்தச் சுடர் எதனாலோ நம்மில் சுடர்விட ஆரம்பிக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயதில் அதைப் பற்றிய புரிதல் வருகிறது. பெரும்பாலான ஆண்களுக்கு அது புரிய மிக நீண்ட காலம் தேவைப்படுகிறது. அல்லது எண்ணெய் தீர்ந்து விளக்கு அணையும்போதே பிடிபடுகிறது. பெண்களுக்கு பெரும்பாலும் குழந்தைப்பேற்றில் புரிய ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறேன். அதுவல்லாமலும் இருக்கிறது. அதைப் பற்றிய மிகையான கற்பிதங்களும், தேவைகளும் சூழலில் திணிக்கப்பட்டுக் கொண்டே இருப்பதும் அதிலிருந்து விலக முடியாதபடிச் செய்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் உடல் சார்ந்த இன்பத்துக்கு நீங்கள் எண்ணெய் தீர்ந்து அணையும் விளக்கு என்ற  படிமத்தை  அளித்த போது தான் சரியாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

இன்னும் சரியாக அதற்கு இணையாக அல்லது எதிர்த்தட்டில் வைக்க வேண்டியது சொல்லப்படாமல் அது நிறைவு கொள்வதில்லை. வைக்கப்படவேண்டியது கல்வி, கலை, இலக்கியம், கவிதை என வெறுமே சொல்லியிருந்தால் கூட அத்தனை திருப்திகரமாக இருந்திருக்காது. அதற்கு நீங்கள் கொடுத்த படிமமே அதை ஏற்றுக் கொள்ளும்படியாகச் செய்கிறது. நாம் இறந்து போனால் மட்டுமே உடலை விட்டு நீங்கும் ஆத்மாவை எண்ணையாகக் குறிப்பிட்ட போது தான் அந்த துலாத்தட்டு நிகராகிறது.

சமீபத்தில் அம்ரிதா ப்ரீத்தம் பற்றிய பதிவுக்காக தேடிக் கொண்டிருந்தபோது அவர் மிகவும் காதலித்த சாஹிர் லூதியான்விற்காக எழுதிய காதல் கவிதைகளை வாசிக்க நேரிட்டது. உருக்கமான கவிதைகள்சாஹிரால் கைவிடப்பட்டு பின்னர் இம்ரோஸைக் காதலித்து ஆன்மிகம் நோக்கி வந்து அமைந்த அம்ரிதா சென்று தொட்ட வெற்றியின் உச்சங்களும் அதிகம்மிகப் பெரிய பெண் ஆளுமைகளுக்குப் பின் இருக்கும் இத்தகைய காதல் கதைகளை முன்பு வாசிக்கும்போது உணர்ச்சிவசம் அடைந்திருக்கிறேன். இப்போது அப்படி பெரிய உணர்வெழுச்சி எதுவும் இல்லை. வெறுமே பார்த்துக் கொண்டிருந்தேன்.

முன்பு எம்.எஸ். சுப்புலட்சுமி பதிவுக்கான தேடலில் ஜி.என்.பிக்கு  அவர் எழுதிய காதல் கடிதத்தை வாசித்து அழுது கொண்டிருந்தேன். அன்று வேறு எதுவும் செய்யவே முடியவில்லை. ஜி.என்.பி மேல் சரியான கோபம். அவர் ஒரு பெண் விரும்பி என்று தெரிந்த பின்னர் அதற்கு மேல் அங்கு சென்று முறையிட ஏதுமில்லை என்று தோன்றி அமைதியானேன். இது தெரியாமல் அத்தனை உணர்ச்சிகரமாக எழுதிக்குவித்த எம்.எஸ். –ன் கடிதங்களை அவர் எவ்வளவு எளிமையாக அணுகியிருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்ஜி.என்.பி கைவிட்ட பின் வாழ்ந்த எம்.எஸ்.-ன் வாழ்க்கை என்று யாவற்றையும் பார்க்கும் போது அந்த வாழ்க்கை வேறொன்றாகத் தெரிந்தது எனக்கு.

அதை விட ஒரு படி மேலாக கே.பி. சுந்தராம்பாள் கிட்டப்பாவுக்கு எழுதிய கடிதத்தின் போது கவலைப்பட்டேன். “அடியாள் அநேக கோடி நமஸ்காரங்கள்என்று வாசிக்கும்போதெ கண்களில் நீர் திரண்டிருக்கும். இறுதியாக அவருடைய மனைவி அவரை ஒழுங்காகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எழுதி முடித்திருப்பார். கே.பி எவ்வளவு பெரிய ஆள். இதை நான் வீழ்ச்சி என்று எடுத்துக் கொள்வதா அல்லது கள்ளமற்ற தூய காதல் என்று எடுத்துக் கொள்வதா என அப்போது புரியவில்லை.

மிகப் பெரிய ஆளுமை பிம்பங்களின் வழியாக நுழைந்து சென்று அந்த எளிய பெண்ணை தரிசிக்கும் போது தான் அவர்கள் கைவிட்டுக் கடந்து வந்த அந்த ஒன்றைப் பார்க்க முடிந்தது. பெரும்பாலும் இவர்கள் இறுதியில் சென்று அடைந்திருக்கும் பாதை ஆன்மிகமாக இருந்தது. ஏன் என்ற கேள்வி இருந்தது.

அத்தனை அன்பும் ஊறி வந்திருக்கும் ஊற்று அவர்களிடமே இருந்தது என அவர்கள் உணர்ந்திருப்பார்கள். அதை முழுமையாகத் தாங்கிக் கொள்ளத் திராணியுள்ளவன் அளவிலாளனான இறைவன் மட்டுமே என்று கண்டடைந்திருக்கலாம். எளிய மானுடரால் தாளவியலாத உணர்வுகள் அவை என்று உணர்ந்திருக்கலாம். கலையில்அறிவில், தேடலில், செயலில் என அவ்வாறு கரைத்துக் கொண்ட பலரை நினைத்துக் கொண்டேன்.

உடல் சார்ந்தும் முடிவில்லாமல் தேடிச் சென்று கொண்டே இருந்த பெண் ஆளுமைகளையும் கண்டிருக்கிறேன். அவர்களை நோக்கி எளிய புன்னகையைத் தவிர எதுவும் செய்ய இப்போது என்னால் இயல்வதில்லை. நடக்கும்போது எதுவுமே புரிவதில்லை ஜெ. விலகி நிற்கும் போது தொலைவு அதிகரிக்கும் போது யாவற்றையும் சரியாகப் பார்க்க முடிகிறது. கன்னியாகுமரியின் விமலாவை இப்போது வேறொன்றாகப் பார்க்க முடிகிறது. இங்கிருந்து நித்யா ஒருவர் மீது அல்லாமல் அனைவர் மீதும் காட்டும் அளவற்ற அன்பை உணர முடிகிறது.

நண்பர் ரஃபீக்கின் அன்பெனும் பெருவெளி ஆவணப்படத்தில் கரு. ஆறுமுகத்தமிழன் ஐயா அருள் பற்றி குறிப்பிடும்போதுஅன்பு என்பது தெரிந்தோர்மாட்டுச் செல்வது. தெரியாதவர்களிடத்திலும் வருவது அருள்என்றார். அருளுடைமை அதிகாரத்திலிருந்து வள்ளலார் வரை அழகாக வந்து சேர்ந்தார். ”அருட்பெருஞ்ஜோதிஎன்பது பெரிய பொருளைத் தந்து விரிவதை அவர் வழியாகவும் அந்த ஆவணப்படத்தின் வழியாகவும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இவர்கள் யாவரும் ஆத்மாவுக்கான எண்ணையைத் தீராமல் பார்த்துக் கொண்டவர்கள். புரிகிறது ஜெ. எல்லாம் அறிந்து கொண்டுவிட்டால் மட்டும் முழுமையாக விடுதலை அடைய முடிவதில்லை. அதை வாழ்வாக்கும்போது சாத்தியப்படலாம்அணைந்து விடக்கூடிய தீயை அல்ல உடல் விழும்போது மட்டுமே அணையக்கூடிய விளக்குக்கான எண்ணையைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று புரிகிறது. முயற்சி செய்கிறேன்.

பிரேமையுடன்

ரம்யா.

*

அன்புள்ள ரம்யா,

‘ஒவ்வொன்றும் முக்கியமானதே, எதுவும் அவ்வளவு முக்கியமானதல்ல’ (Everything is important, nothing is so important) என்ற சொல்லாட்சி க.நா.சுவுக்கு பிடித்தமானது. அது குரு ஆத்மானந்தரின் வரி. உலகியல் சார்ந்த எதற்கும் அதைச் சொல்லலாம். அவ்வப்போது சொல்லிக்கொள்ளாமல் நம்மால் வாழ்க்கையை கடக்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொன்றும் அந்தந்த தருணங்களில் பல்லாயிரம் கைகள் கொள்கின்றது. கடல்போல் வந்து சூழ்ந்து கொண்டு ஆழ்த்திக் கொள்கிறது. விடுபட்டு விடுபட்டு முன்னகர்ந்து கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. அறிதல் என்பது விடுபடுதலுக்கான வழி.

வாழ்வின் ஒரு காலகட்டம் காமத்தாலானது. முதிரா இளமை முதல் முதிரிளமை வரை அப்போது உறவுகள் அனைத்தும் காமத்தால் வரையறை செய்யப்படுகின்றன. அப்போது அதுவே உலகமெனத் தோன்றும். காமத்தை நுட்பமாகச் சொன்னால் அதுவே இலக்கியம் என்று தோன்றும். அத்தனை தத்துவசிந்தனைகளை கொண்டும் காமத்தையே வரையறை செய்யவேண்டும் என நினைப்போம். உண்மையிலேயே அப்படித்தான் அனைத்தும் நம் பார்வைக்குக் காட்சியளிக்கும். அது சிந்தனையின் முதற் காலகட்டம். 

அதை இயல்பாகவே கடந்தால் வேறுவகை உறவுப் பின்னலால் இவ்வுலகம் உருவாகியிருப்பதை காண்கிறோம். கொடுக்கல் வாங்கல்கள், ஏற்பு மறுப்புகள், சமரசங்களால் ஆன இன்னொரு வெளி அது. ஏற்கும், செலுத்தும் அதிகாரங்களால் ஆன மாபெரும் வலைப்பின்னல். ஆட்கொள்ளல், அடிமைப்படுத்தல், வழிகாட்டல், நலம் நாடல் என அதன் முகங்கள் மிகச்சிக்கலானவை. சமூகம், அரசு, வரலாறு, குடும்பம், மதம் என அதிலுள்ள அமைப்புகளும் ஏராளமானவை.

அதை நவீன தத்துவம் ஒற்றைச் சொல்லால் அதிகாரம் என குறிப்பிடும். ஆதிக்கம் என்பது இன்னும் சரியான சொல். will. அதற்குச் சரியான சம்ஸ்கிருதச் சொல் திருஷ்ணை. ஆன்மிகம், மதம், அரசியல், சமூகவியல், பண்பாடு, தனிமனித உறவுகள், மானுட அகம் எல்லாமே திருஷ்ணையின் ஆடல்கள் மட்டுமே எனத் தோன்றும். ஒருவர் அகவையால் நாற்பதைக் கடந்து, கொஞ்சம் வாழ்க்கையையும் பார்த்துவிட்டார் என்றால் உலகமே அதிகாரத்தால் இயங்குவதாக உணர்வார். அதிகாரத்தை எழுதுவதே இலக்கியம். அதிகாரத்தை வரையறைசெய்வதே தத்துவம் என்று தோன்றும். 

ஒரு வேடிக்கையாக முதற்காலகட்டத்தை இன்ஸ்டாகிராம் காலகட்டம் என்று சொல்லலாம். இரண்டாம் காலகட்டத்தை ஃபேஸ்புக் காலகட்டம் என்று சொல்லலாம். அந்தந்த அகவையும் மனநிலையும் கொண்டவர்கள் அதற்குரிய ஊடகங்களில் குழுமியிருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் அரசியல் இல்லை, ஃபேஷனும் புகைப்படங்களும்தான். முகநூல் முழுக்கமுழுக்க அரசியலும் ஆதிக்கப்போட்டியும்தான். (இடம் மாறி உலவுபவர்களும் இல்லை என்பதில்லை)

இவ்விருநிலைகளையும் நாம் கடக்கும் காலமொன்றுண்டு. அப்போது ஒட்டுமொத்தமான ஒரு சித்திரம் உருவாகிறது. அதுவரை அறிந்த அனைத்தையும் அவற்றுக்கான இடங்களில் வைக்கையில் உருவாகும் மாபெரும் சமநிலை ஒன்றை காண வாய்க்கிறது. அதுவே மானுடதரிசனம்.

அந்த தரிசனத்தை ‘நூற்றுக்கிழவனின் வாழ்க்கைப்பார்வை’ என்று நான் சொல்வதுண்டு. அதற்கு நூறாண்டு வாழவேண்டியதில்லை. கலைஞனுக்குரிய இயல்பான நுண்ணுணர்வால் வாழ்க்கையை கற்பனையில் வாழ்ந்து அறியலாம். அதை மிக இளமையிலேயே வெளிப்படுத்துபவர்களே பெருங்கலைஞர்கள், பேரிலக்கியவாதிகள். தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, விக்டர் ஹ்யூகோ, தாமஸ் மன், ஜார்ஜ் எலியட், மேரி கெரெல்லி, நிகாஸ் கஸண்ட்ஸகிஸ், ஹெர்மன் ஹெஸ், தாராசங்கர் பந்த்யோபாத்யாய, விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய, சிவராம காரந்த், ஆஷாபூர்ணா தேவி, குர்ரதுல்ஐன் ஹைதர்,வைக்கம் முகமது பஷீர் போன்று ஒரு வரிசை உண்டு. அவர்களே பெருநாவல்களை உருவாக்க முடியும்.

அவ்வாறன்றி வாழ்க்கையின் அந்தந்த காலகட்டத்து உண்மைகளில் முழுமையாக சிக்கி நிலைகொண்டு அவற்றையே எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் உண்டு. முதற்கட்டமாகிய காமத்திலேயே நிலைகொண்டவர்களில் அதற்கான உச்சத்தை எழுதியவர்கள் என டி.எச்.லாரன்ஸ், ஆல்பர்ட்டோ மொரோவியோ, விளாடிமிர் நபக்கோவ், யூ.ஆர்.அனந்தமூர்த்தி, தி.ஜானகிராமன் என பலரை உதாரணம் சுட்டமுடியும். அவர்களுக்குரிய கூர்மையான அவதானிப்புகளும், பார்வைகளும் அப்படைப்புகளில் உண்டு. அவையும் இலக்கிய வெற்றிகளே. ஆனால் எல்லைக்குட்பட்டவை.

அடுத்தகட்டத்தில் வாழ்க்கையின் விரிவான வலைப்பின்னலை எழுதியவர்கள் உண்டு. அரசியல், வரலாறு ஆகியவற்றை கருத்தில்கொண்டு பெருஞ்சித்திரங்களை உருவாக்கியவர்கள். ஆனால் முழுமைக்கு ஒரு படி முன்னதாகவே நின்றுவிட்டவர்கள். சார்ல்ஸ் டிக்கன்ஸ், ஹெர்மன் மெல்வில்,மார்சல் புரூஸ்ட், மிகயீல் ஷோலகோவ், அதீன் பந்த்யோபாத்யாய, தகழி சிவசங்கரப்பிள்ளை, எஸ்.எல்.பைரப்பா ஓ.வி.விஜயன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் என அப்பட்டியலும் முக்கியமானதே.

வாசகர்களிலும் பல படிகள் உண்டு. அவரவர் உளநிலைக்கும் தேடலுக்கும் ஏற்ப அவரவருக்குரியதை தெரிவு செய்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இலக்கிய வாசிப்புக்கு வருவது முதிரா இளமையில். இன்பம் இடுப்புக்குக் கீழே என எண்ணிக்கொண்டிருக்கும் அகவையில். அதற்குரிய வாசிப்பு அவர்களிடமிருக்கும். பலர் அந்த எல்லையை கடப்பதே இல்லை – வாழ்க்கையின் கடைசிநிமிடம் வரை அங்கேயே நின்றுவிடுவார்கள். சிலர் அதைக் கடந்து அடுத்த கட்டத்தை அடைவார்கள். முழுமையை இலக்கியம் வழியாக நாடுபவர்கள் இலக்கியவாசகர்களிலேயே மிக அரிதானவர்களே.  பேரிலக்கியங்கள் அவர்களுக்காக மட்டுமே எழுதப்பட்டு நூலகங்களில் காத்திருக்கின்றன.

வாழ்க்கையின் முதல் எரிபொருள் விழைவே. அதன்பின் அதிகார விழைவு. அதன்பின் முழுமைக்கான தேடல். ஓர் எரிபொருள் எரிந்து முடித்தபின் அந்த முடிவுக்கணமே இன்னொன்றைப் பற்றவைக்கிறது என்று எண்ணிக்கொள்கிறேன். அனைத்துநிலைகளையும் கற்பனையால் பற்றவைத்துக்கொண்டு ஒருபக்கம் எரிந்துகொண்டும் மறுபக்கம் முற்றணைந்தும் இருப்பவர்களே பேரிலக்கியவாதிகள். இலக்கியம் என்னும் கலையின் நோக்கமே வாழாது வாழ்வனுபவங்களை அளிப்பதுதான். ஆகவே வாசகர்களும் வாசிப்பினூடாகவே அந்த நிலையை அடையமுடியும்.

ஜெ

முந்தைய கட்டுரைதெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர்
அடுத்த கட்டுரைபீஷ்மரின் அறம்