இலக்கியவிழாக்கள், கடிதம்

டெல்லியும் திருவனந்தபுரமும்

ஜெய்ப்பூர் இலக்கிய விழா 2024

அன்பு ஜெ.,

நலம்தானே? உங்களின் இலக்கிய விழாக்களின் பதிவுகளை பார்த்தேன்ஜெய்ப்பூர், தில்லி, திருவனந்தபுரம் விழாக்கள். இரண்டுமே அற்புதமான பதிவுகள். எப்பொழுதும் போலவே அருமையான கட்டுரைகள். உங்களை அறியாவிட்டால் நானும் இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் ஒரு பெரும் புனித இலக்கிய தீர்த்தங்களாக நினைத்திருப்பேன். ஒரு மாயையையில் சிக்கி இருப்பேன். தி ஹிந்து ஆங்கில இதழ் வகையறா இலக்கிய விமர்சனங்கள், மதிப்புரைகளுக்கு ஒரு காலத்தில் பெரும் பக்தனாக இருந்தேன் நான். உங்களின் எழுத்துக்களும், நமது விஷ்ணுபுரம் விழா நிகழ்வுகளும் அசலான இலக்கிய மதிப்பு என்றால் என்ன என்று அறியவைத்தன. என்னை இன்றளவும் வழி நடத்திக்கொண்டு இருக்கின்றன.  தெலுங்கில் நான்வீரபத்ருடு அவர்களை கண்டுகொண்டதும் அந்த மதிப்பீடுகளின் வழியாகத்தான்!

எனக்கு இலக்கிய ஆர்வங்கள் உண்டு என்று தெரிந்த என் சக ஊழியர்கள் சிலர்நீ ஏன் ஹைதராபாத் இலக்கிய விழாவுக்கு போவது இல்லை?’ என்று கேட்பார்கள். ‘ஜெ.வை வாசித்தால் அதெல்லாம் இலக்கிய விழாவே அல்ல என்று தெரியும்என்று சொல்வேன். வெறும்ஒரு பொருட்காட்சியாக, உணவு விடுதிகளின் சங்கமமாக அதை ஆக்கி வைத்துநடுவே இன்றைய அரசியல் சரிகளை பேசிக்கொண்டு ஒப்பேத்துகிறார்கள். அங்கு நிகழும் மேட்டிமை வாதமும், பொய் பாவனைகளும் எரிச்சலைத்தான் தரும்! (மாத்ருபூமி விழா விதிவிலக்காக இருக்கலாம். நேற்று ஏதோ ஒரு செய்திக்காக மாத்ருபூமி மலையாள இனைய இதழை நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தேன். விழாவில் உங்களின் உரையை பெரிதாககாட்டிக்கொண்டு இருந்தார்கள். மொழி புரியாவிட்டாலும்– ‘நம்மவர்என்று உளம் பொங்கிவிட்டது.)

இந்திய அளவில் நடக்கும் ஆங்கில இலக்கிய விழாக்களில் நீங்கள் கலந்து கொள்வது முதலில் சற்று ஐயத்தை தான் ஏற்படுத்தியது. ‘இவர்கள் நம்ம வாத்தியாரையும் மேம்போக்காக மாத்தி விடுவார்களோ என்று, ‘மற்றோரு பெருமாள் முருகனை தயார் செய்து விடுவார்களோ?’ என்றும் தான். ஆனால், உங்களின் பதிவுகள் அந்த ஐயங்களை தூள் ஆக்கின. முக்கியமாகபின்னை பின் நவீனத்துவம் குறித்த நீங்கள் சொன்னது அங்கு ஒரு பெரும் வெடிப்பாகவே இருக்கும். ‘உணவு அயர்வில்இருந்தவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கும். பாவத்தை பற்றி இந்திய கண்ணோட்டம், தல்ஸ்தோய் தஸ்தாவஸ்கியின் மீது ஷோப்பனாரின் பாதிப்பு, பிராயிடின் பெறுமானம்–  இதெல்லாம் ஒரு தமிழ் எழுத்தாளர் இடம் இருந்து வரும் என்று நினைத்துக்கூட பார்த்து இருக்கமாட்டார்கள்.

மொழிபெயர்ப்புகளை பற்றி நீங்கள் சொன்ன அந்த இலங்கை கடத்தல்காரரின் உவமைஅருமையான, அசலான பார்வை. பலருக்கு அது திகைப்பை ஏற்படுத்தி இருக்கலாம். இதோ இந்த கணத்தில் நான் செய்துகொண்டு இருப்பதும் அந்த மொழிபெயர்ப்புதானே! ஜெ. நீங்கள் இங்கு மட்டுமல்ல எந்த உலக அரங்குக்கு சென்றாலும் ஜெ.வாகவே இருப்பீர்கள்.

மிக்க அன்புடன்,

ராஜு

முந்தைய கட்டுரைகலையறிதல் – கடிதம்
அடுத்த கட்டுரைகவிதைகள், பிப்ரவரி இதழ்