அசோகமித்திரன் பேட்டி

அன்புள்ள ஜெ

அசோகமித்திரன் உங்களைப் பற்றிச் சொன்னதை வாசிக்க அந்த இணைப்பைச் சுட்டினேன். அது வேலை செய்யவில்லை. அவரது பேட்டி அங்கே இல்லை. அவர் உங்களைப் பற்றி சொன்னதை அறிய ஆவலாக இருக்கிறேன்

சரவணன்

அன்புள்ள சரவணன்,

அச்சு இதழை அனைவரும் வாங்கவேண்டும் என்ற நோக்கமாக இருக்கலாம். அவரது முழுப்பேட்டி அச்சிதழில்தான். என்னைப் பற்றி சொன்னவை என் நண்பரால் எனக்கு அனுப்பப்பட்டிருந்ததை இணைக்கிறேன்

தற்கால தமிழ்ப் படைப்புலகத்தில் உங்களைக் கவர்ந்த தமிழ் எழுத்தாளராக யாரைக் குறிப்பிடுவீர்கள்?

“ஜெயமோகன். இந்தத் தலைமுறையில் என்னைக் கவர்ந்த தமிழ் எழுத்தாளர் இவர்தான். சில விஷயங்களில் இவரது ஆழமும் படிப்பறிவும் வேறு யாருக்கும் இல்லை. இவருக்கு முன்னால் ஆய்வு என்கிற விஷயத்தில் இவரைப் போன்ற தேர்ச்சியை கொண்டிருந்தவர் க.நா.சுப்பிரமணியன்தான். இதுதவிர ஜெயமோகன் படைப்புகளில் சில இடங்கள் மிகவும் அபாரமாக இருக்கின்றன. அவரது குறுநாவல்கள் தொகுப்பு ஒன்று படித்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. இந்தத் தலைமுறையில் சிறந்த எழுத்தாளர் என்று சொல்லக் கூடிய எல்லாத் தகுதியும் ஜெயமோகனிடம் இருக்கிறது.”