அறிவியக்கவாதியின் அளவுகோல்கள்

அன்புள்ள ஜெ

நலமா?

சமீபத்தில் உங்களை சென்னை புத்தக கண்காட்சியில் சந்தித்தேன். அது எனக்கு பெரும் மகிழ்ச்சி. ஒரு த்விட்டர் நண்பர் மூலமாக உங்கள் எழுத்துகள் எனக்கு அறிமுகமாகி இப்பொழுது பெரும்பாலும் உங்கள் முக்கியமான பல படைப்புக்களை படித்து வருகிறேன்

பள்ளி பருவத்தில் தமிழ் படிக்காமல் ஹிந்தி சமஸ்க்ரிதம் மற்றும் பிரெஞ்சு படித்த எனக்கு வெண்முரசு போல் ஒரு மாபெரும் காவியத்தை முடிக்கும் நிலையில் உள்ளேன் என்பது நிறைவாக இருக்கிறதுஉங்களை போல் அல்ல என்றாலும் ஒரு சிறிய அளவில் ஆவது ஒரு நாவலை எழுத வேண்டும் என்று எனக்கு ஒரு கனவு

இந்த பின்னணியின் உங்களிடம் எனக்கு ஒரு கேள்வி உள்ளது

நீங்கள் ஒரு அறிஞரை எப்படி தேர்வு செய்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல் புத்தகக்காட்சியில் அணைத்து துறையிலும் பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்ஒரு துறைசார்ந்து எங்கு தொடங்கவேண்டும் என்கிற குழப்பம் தான் அதிகமாக இருக்கிறது ஒரு எழுத்தாளன் அறியவேண்டிய துறைகள் என்று எதை நீங்கள் எண்ணுவீர்கள்? உதாரணமாக தத்துவம், வரலாறு, அரசியல் போல்

தங்கள் தளத்திலிருந்து நான் பல ஆளுமைகளை கண்டடைந்துள்ளேன். ராஜ் கவுதமன், பக்தவத்சலம் பாரதி, குடவாயில் பாலசுப்ரமணியன், ஆ கு பெருமாள், கோசாம்பி, அஸீஸ் நந்தி, லூயிஸ் அல்தூஸ்ஸர், எம் என் ராய், அயோதிதாச பண்டிதர்  என்னும் அறிஞர்கள் உதாரணம்

அதே போல் பல இலக்கிய முன்னோடிகளையும் சுட்டிக்காட்டி உள்ளீர்கள்.இப்படி ஒரு ஆளுமையை ஒரு துறையில் எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல்.

இதை நான் என் கேக்க விரும்புகிறேன் என்றால் சோழர்கள் குறித்த ஒரு விவாதத்தில் நீங்கள் ஒரு எழுத்தாளரின் வரலாற்று முறைமை முக்கியம் என்று கோசாம்பி, பர்டன் ஸ்டீன் மற்றும் நொபுரு கரஷிமா வை முன்வைத்தீர்கள் . இந்த துறைக்கு இது தான் முறைமை என்று ஒரு அளவுகோலை எப்படி ஒரு ஆரம்பகால எழுத்தாளன் கண்டு கொள்வது?

 இது குறித்து நீங்கள் முன்பே எழுதி இருந்தால என் கவனக்குறைவுக்கு மன்னிப்பு கோருகிறேன் 

அன்புடன் 

ஹரி 

அன்புள்ள ஹரி, 

எழுதுவதற்கு என்ன தேவை? அனுபவங்களை, கேட்டறிந்தவற்றை ஓரளவு நேர்த்தியாக எழுதினாலே தமிழில் எழுத்தாளராகிவிடலாம். தொடர்ந்து எழுதினால் மெல்ல மெல்ல ஓர் இடம் உருவாகும். ஏற்புகள் தேடிவரும். அப்படித்தான் இங்கே மிகப்பெரும்பாலான எழுத்தாளர்கள் திகழ்கிறார்கள். 

நான் அடுத்தகட்ட எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் உருவாவதைப் பற்றிப் பேசுகிறேன். அவ்வாறு உருவாகத் தேவையான அடித்தளத்தை உருவாக்க முடியுமா என முயல்கிறேன். அதற்கான அமைப்பு உருவாக்கப்பட்டு வகுப்புகளும் நிகழ்கின்றன. 

அடுத்த கட்ட எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் என்றால் எவர்? அறிவுத்தளத்திலும் வலுவான அடிப்படை கொண்டவர். அறிவுசார்ந்த அடிப்படைகளுடன் தன் அனுபவங்களையும் நுண்ணுணர்வையும் இணைத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாக யோசிப்பவர், பெரிய படைப்புகளை உருவாக்குபவர். எழுதவந்த காலம் முதல் இந்த ஒட்டுமொத்தப் பார்வையையேதரிசனம்என்று சொல்லிவந்தேன். தரிசனம் அற்ற எழுத்து பெரிய நாவல்களை உருவாக்காதென்பது என் எண்ணம்.

இங்கே இலக்கியவாதிகளின் வாசிப்பு என்பது தொடக்கத்தில் தமிழ்ச்சூழலில் பேசப்படும் படைப்புகள் சார்ந்ததாக உள்ளது. அவற்றை வாசித்து தனக்கான சில முன்னுதாரணங்களையும், தனக்கான வழியையும் உருவாக்கிக்கொண்டால் அதன்பின்னர் அவர்கள் வாசிப்பதே இல்லை. சிலர் பின்னரும் கொஞ்சம் வாசிப்பார்கள். அது இரண்டு வகைகளில் அடங்கும். புதிய இலக்கிய வடிவங்கள் என்ன என்று தெரிந்துகொள்ள. புதிய இலக்கிய கோட்பாடுகள் என்னென்ன (அது பெரும்பாலும் மேற்கோள்கள், கலைச்சொற்கள் ஆகியவற்றை மட்டுமே சார்ந்தது) . அதற்குமேல் வாசிப்பே இல்லை.

முதன்மையான இலக்கியப்படைப்புகளை எழுத விரும்பும் ஒருவருக்கு ஒரு முழுமையான வாசிப்பு இருக்கவேண்டும். டி.எஸ்.எலியட் ஓர் ஆங்கில இலக்கியவாதிக்கு என்னென்ன தெரிந்திருக்கவேண்டும் என ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதையொட்டி தமிழில் நான் அப்படி ஒரு கட்டுரை எழுதி 1999ல் சதங்கை இதழில் வெளிவந்துள்ளது. அதை மீண்டும் எழுதியிருக்கிறேன்.

ஓர் இலக்கியவாதிக்கு தத்துவமும் வரலாறும் இரண்டு சிறகுகள் போல. அவற்றில் குறிப்பிடும்படி வாசிப்பில்லா இலக்கியவாதி பறக்கவே முடியாது. உலகமெங்கும் நாம் மதிக்கும் பேரிலக்கியவாதிகள் அந்த இரண்டு தளங்களிலும் விரிவான அறிதல்கள் கொண்டவர்கள். பல இலக்கியவாதிகள் தத்துவஞானிகளாகவும் அறியப்பட்டவர்கள். வரலாற்றாய்விலும் ஈடுபட்டவர்கள். 

தத்துவ வாசிப்பில்லா இலக்கியவாதிவாழ்க்கை உண்மைகள்என சொல்லும் பல சொற்றொடர்கள் தத்துவத்தில் காசுக்கிரண்டாகப் புழங்கிக்கொண்டிருப்பவையாக இருக்கும். தத்துவம் நுண்ணிய கருத்துக்களை புறவயமாக விவாதிக்க ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறது. அந்த தர்க்கமுறை இலக்கியவாதிக்கு இன்றியமையாதது. 

வரலாறு அறியாத இலக்கியவாதி தன் வாழ்க்கையில் அறிந்தவற்றை மட்டுமே சொல்ல முடியும்.  அது அபிப்பிராயமாகவே எஞ்சும். தன் அனுபவ அறிதல்களை அவன் வரலாற்றில் வைத்துப் பார்த்தானென்றால் மட்டுமே அவற்றின் நீண்டகால மதிப்பென்ன, ஒட்டுமொத்த மதிப்பென்ன என உணரமுடியும்.  

அறிதல்களை வரலாற்றில் பொருத்திப்பார்த்து மதிப்பிடுவதும், தத்துவம் வழியாக தர்க்கபூர்வமாக பரிசீலிப்பதும் இலக்கியங்களை உருவாக்குவதற்கான அடிப்படைப்பயிற்சிகள். ஆனால் இலக்கியம் அவற்றில் இருந்து மேலெழுந்து ஓரு நிகர்வாழ்க்கையாக அந்த அறிதல்களை மாற்றிக் காட்டவும் வேண்டும்.

தத்துவம் என பொதுவாகச் சொல்கிறோம். இந்திய தத்துவம், மேலைத் தத்துவம் என இன்று அதை இரண்டாகப் பிரித்துச் சொல்லலாம். இன்னொரு பிரிவினை சமகால தத்துவம், தொல்தத்துவம். அவற்றில் மிக விரிவான வாசிப்பு இலக்கியவாதிக்கு கட்டுப்படியாகாது. ஏதேனும் ஓர் அறிஞரை முழுமையாகப் பின்தொடர்வதும் பிழையாக ஆகலாம். ஆனால் இவ்விரு தளங்களிலும் ஓர் அடிபபடை வரைபடம் இலக்கியவாதியிடம் இருக்கவேண்டும். அத்துடன் தத்துவப்படுத்தல் என்பதில் ஒரு பயிற்சி, அந்த தர்க்கமுறையில் ஒரு தேர்ச்சி இருக்கவேண்டும்.

வரலாறு என்றும் பொதுவாகச் சொல்கிறோம். உலகவரலாறு, அதற்குள் இந்திய வரலாறு, அதற்குள் தமிழக வரலாறு என மூன்று அடுக்குகள் உண்டுர். அவற்றைப் பற்றி ஓர் பொதுவான உளவரைபடம் இருக்கவேண்டும். அதற்குள் வட்டார வரலாறு உண்டு. அதை ஆசிரியன் தெளிவுற உணர்ந்திருக்கவேண்டும். வட்டார வரலாற்றை அறிய சமூகவியல், மானுடவியல் ஆகியவை இன்றியமையாதவை. அவற்றிலும் வாசிப்பறிவு இருக்கவேண்டும். 

வரலாற்றறிவு என்பது பண்பாட்டறிவுதான். சோழர் வரலாற்றை அறிந்தால்தான் பண்ணிசையின் வரலாற்றை அறிய முடியும். தமிழக உலோகச்சிற்பக்கலையின் வரலாற்றை அறியமுடியும். தமிழக ஆலயக்கலையை புரிந்துகொள்ள முடியும். தமிழகப்பண்பாட்டின் எல்லா களங்களிலும் எழுத்தாளனுக்கு அடிப்படைப் பயிற்சி இருக்கவேண்டும். தமிழ் தொல்லிலக்கிய மரபு, தமிழ் பக்தி காலகட்டம், தமிழகச் சிற்பக்கலை, தமிழக இசைமரபு, தமிழக நாட்டார் மரபுகள் ஆகியவற்றில் ஒரு புரிதல் இருக்கவேண்டும்.

இவையெல்லாம் உள்ள ஒருவனையே அறிவுஜீவி என்கிறோம். அறிவுஜீவி எழுதும் இலக்கியத்துக்கும் பாமரன் எழுதும் எழுத்துக்கும் பெரும் வேறுபாடு உண்டு. பெரும்படைப்பாளிகள் எல்லாருமே அறிவுஜீவிகள்தான். அதெல்லாம் அவர்களின் எழுத்தில் நேரடியாக வரவேண்டும் என்பதில்லை. 

ஓர் உதாரணம் சொல்கிறேன். அசோகமித்திரன் எழுத்தில் வரலாறும் தத்துவமும் நேரடியாக வராது. ஆனால் அவர் அவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சென்னையில் ஜே.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்துடனும் பிரம்மஞான இயக்கத்துடனும் தொடர்பு கொண்டவர். அவர்களின் வகுப்புகளில் தொடர்ச்சியாக பங்குகொண்டவர். வரலாற்றாய்வில் அவருக்கு ஆழமான ஈடுபாடும் பயிற்சியும் உண்டு. .எல்.பாஷாம் போன்றவர்களுடன் தொடர்பு உண்டு. சென்னையில் ஹிஸ்டரி காங்கிரஸ் நடத்திய கருத்தரங்குகளில் நான் அவரை பார்த்திருக்கிறேன். எனக்கு பல தத்துவ அறிஞர்களை அவரே அறிமுகம் செய்தார்.

இந்த எல்லா தளங்களிலும் அறிஞர்கள் வழியாக பயிலரங்குகளை ஏற்பாடு செய்யவேண்டும் என்பது என் எண்ணம். பல அரங்குகள் இரண்டு ஆண்டுகளாக மிக வெற்றிகரமாக நிகழ்ந்தும் வருகின்றன. இன்னும் வகுப்புகளை ஒருங்கிணைக்கும் எண்ணம் உண்டு. அத்தகைய அறிஞர்களை தேடி வாசிக்கவும் செய்யலாம். பலர் நம் சூழலிலேயே உள்ளனர். 

அத்தகைய அறிஞர்களை எப்படிக் கண்டடைவது? உண்மையில் நம் சூழலில் அது மிகப்பெரிய சவால். அதிகமாக நமக்கு வந்துசேர்பவர்கள் பொய்யானவர்கள், பிழையானவர்கள். ஏனென்றால் அவர்களுக்கு அறிவியக்க ஈடுபாடு இல்லை. அவர்கள் அறிஞர்களும் இல்லை. அவர்கள் எளிய அரசியல்வாதிகள். அவர்கள் பரப்புவது அரசியல் கருத்து, அறிவியக்கக் கருத்து அல்ல.

அரசியல் கருத்தைப் பரப்ப அமைப்புகள் உண்டு. அவர்களிடம் நிதி உண்டு. தொண்டர் திரள் உண்டு. ஆகவே அது எந்த அறிவியக்கக் கருத்தை விடவும் பல்லாயிரம் மடங்கு ஆற்றலுடன் நம்மிடம் வந்துசேர்கிறது. அதை எதிர்கொள்வதும் கடினம். ஏனென்றால் அதற்கு ஆதரவாளர்கள் மிகுதி. அவர்கள் எதிர்ப்பவர்களைச் சூழ்ந்து அவமதித்துக் கூச்சலிட்டு வாயடைக்கச் செய்துவிடுவார்கள்.

அரசியல் கருத்துக்களை எளிதில் கண்டடையலாம். ஏனென்றால் அவை வெறும் கருத்தாக இருக்காதுகருத்துப் பிரச்சாரமாகவே இருக்கும். அக்கருத்துக்கள் வழியாக உங்களை ஒரு நிலைபாட்டை நோக்கிச் செலுத்த முற்படும். அதன் வழியாக உங்களையும் ஒரு பெரிய மந்தையின் ஒரு பகுதியாக ஆக்கும். அந்த மந்தையை நடத்திச்செல்பவர்கள் அதிகாரம் அடைவார்கள்.

அறிவியக்கக் கருத்துக்கள் எவையானாலும் அவை விவாதத்திற்குரியவை. எதிர்தரப்புகளை வரவேற்பவை.  அரசியல் கருத்துக்களை முன்வைப்பவர்கள்  எதிர்க்கருத்துக்களையும் எதிரித்தரப்பாக நினைப்பார்கள். அவற்றை திரித்து, சிறுமை செய்து, எதிரியென முத்திரைகுத்தி அதன்பின்னர் வசைபாடுவார்கள். இப்படி வசைபாடுவதையே விவாதம் என அவர்கள் எண்ணுவார்கள். இதுதான் மெய்யான வேறுபாடு.

உதாரணமாக, தமிழகத்தின் வீழ்ச்சிக்கு பிராமணர், அல்லது தெலுங்கர், அல்லது முஸ்லீம்கள் காரணம் என ஒருவர் சொல்கிறார். அதற்காக ஏராளமான வரலாற்றுத் தரவுகளையும் அளிக்கிறார். அவர் தன்னை வரலாற்றாசிரியர் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அவர் வரலாற்றாசிரியர் அல்ல. வரலாற்றாய்வில் அப்படி ஒரு நோக்கம் செயல்படுவதில்லை. அவர் வெறும் அரசியல்வாதி. அந்த முடிவை நோக்கி நம்மை தள்ளுவதனால் அவருக்கு அரசியல் லாபம் உள்ளது. 

அவ்வாறு அந்த பிரச்சாரத்தால் லாபம் அடைபவர்கள் அவரை போற்றி பரப்புவார்கள். ஆகவே மெய்யான வரலாற்றாய்வாளரை விட அவர் பலமடங்கு புகழுடன் இருப்பார். அவருக்கு ஏராளமான ஆதரவாளர் இருப்பார்கள். அவர் விறுவிறுப்பான வசைமொழியில் பேசுவார். ஆகவே வரலாற்றாய்வாளர்களை விட அவரே பாமரர்களுக்குச் சுவாரசியமானவராகவும் இருப்பார். எனவே எல்லா ஊடகங்கள் வழியாகவும்  நம் மேல் வந்து மோதிக்கொண்டே இருப்பார். அப்பாலே போடா என அவரை விலக்கும் துணிவு இல்லையேல் நாம் அறிவுலகில் நுழையவே முடியாது.

எந்த துறையிலானாலும் ஒன்றைக் கற்பிப்பவரிடம் அரசியல் உள்நோக்கம் இருக்கலாகாது, கடும் எதிர்நிலைகள் இருக்கலாகாது, வெறுப்பின் மொழியில் அவர் பேசலாகாது என்னும் மூன்று நிபந்தனைகளை வைத்திருக்கிறேன். அந்த அளவுகோலில் தேறுபவரே என் வகையில் அறிவியக்கவாதி. உதாரணமாக, ஒருவர் நாலாயிர திவ்வியப்பிரபந்த வகுப்புகள் நடத்துகிறார். அவர் சைவத்தின் மேல் காழ்ப்பை கொட் கொட்டினால் அவர் வைணவ அறிஞரே அல்ல. வெறும் மதவாதிதான். அவர் எதையும் கற்பிக்க முடியாதுஅந்தக் காழ்ப்பைத்தவிர. 

அறிவியக்கவாதியின் முதன்மையான தகுதிமுறைமைதான். முறைமை என்பது இருபாற் தர்க்கம். அதற்கு இரண்டு வழிகள். செல்வழி, வரும்வழி. ஆய்வாளர்  தன் கண்டடைதல்களை சென்றடைவதும் சரி, அவற்றை முன்வைப்பதும் ஒரு புறவயமான தர்க்கமுறை வழியாகவே இருக்கவேண்டும். அந்த தர்க்கமுறைக்குரிய நெறிகள் எல்லாமே அவரால் கடைப்பிடிக்கப்பட்டிருக்கவேண்டும்

முன்முடிவுகளை வைத்துக்கொண்டு ஆய்வுசெய்வது அறிவியக்க வழிமுறை அல்ல. ‘தமிழே உலகின் தொன்மொழி அல்லது இந்து மதமே உலகின் தொல்மதம் என நிறுவும்பொருட்டு இந்த ஆய்வுகளைச் செய்தேன்என ஒருவர் சொன்னால் அவர் ஆய்வாளரே அல்ல. தன் நம்பிக்கைக்குத் தேவையான தரவுகளை அவர் சேர்க்கிறார், அவ்வளவுதான். அது அரசியல்வாதம் அல்லது மதவாதம். 

மெய்யான அறிவியக்கம் சார்ந்த  ஆய்வில் முடிவுகள் ஆய்வுக்குப் பின்னரே எட்டப்படுகின்றன. அவை அறுதியுண்மைகளாக முன்வைக்கப்படுவதில்லை, அவை மறுப்பை எதிர்நோக்கியே முன்வைக்கப்படுகின்றன. மறுப்புகளை எதிர்கொண்டு, எதிர்த்தரப்புகள் வழியாக கண்டடையப்பட்ட தேவையான மற்றங்களைச் செய்துகொண்டு அவை வளர்கின்றன. இதை கருத்துக்களின் முரணியக்கம்  என்கிறார்கள்.

முறைமையின் நெறிகள் முதன்மையாக மூன்று.

. தரவுகள் (Data)  

தரவுகள்புறவயமாக இருக்கவேண்டும். தரவுகள் பெறப்பட்ட விதம் முன்வைக்கப்படவேண்டும். அ எல்லா தரவுகளும் கருத்தில் கொள்ள பட்டிருக்கவேண்டும். தன் தரப்புக்கு எதிரான தரவுகள் இருந்தால் அவற்றையும் முன்வைக்கவேண்டும்

. தர்க்கம் (Logic)

தரவுகள் வெளிப்படையான புறவயமான தர்க்கத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு முடிவுகள் எட்டப்படிருக்கவேண்டும். அந்த முடிவு அதே தர்க்கப்படி முன்வைக்கப்பட்டிருக்கவேண்டும் 

. பொய்ப்பித்தல் (Falsification)

எதிர்த்தரப்புடன் நட்பார்ந்த ஆக்கபூர்வமான விவாதமே முறைமையின் நோக்கம். ஒரு கருத்து முன்வைக்கப்பட்டால் அதை எப்படி மறுப்பது என அந்தக் கருத்தை முன்வைப்பவரே சொல்லவேண்டும். அந்த முறைமைப்படி முன்வைக்கப்பட்டால் அதை ஏற்க வேண்டும். தான் முன்வைக்கும் கருத்துடன் ஆய்வாளருக்கு எந்த உணர்ச்சிகரமான ஈடுபாடும் இருக்கலாகாது. அது மறுக்கப்படுவது அவருரைய ஆணவத்தைச் சீண்டக்கூடாது. 

. முரணியக்கம் (dialectics)

எதிர்த்தரப்பை அவர்கள் முன்வைக்கும் தர்க்கப்படியே மறுக்கவேண்டும். எதிர்த்தரப்பை திரிப்பது, எளிமையாக்குவது, உள்நோக்கம் கற்பிப்பது, தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடுவது, வசைபாடுவது ஆகியவை அறிவியக்கத்தில் உள்ளவர்கள் செய்வது அல்ல. எதிர்த்தரப்பும் தன் தரப்பும் சேர்ந்து ஒரு கருத்தை மேம்படுத்தி உண்மையை நோக்கிக் கொண்டுசெல்கின்றன என்னும் புரிதல் வேண்டும்.

எவராயினும் இந்த நான்கு அளவுகோல்களின்படி அவர் செயல்படுகிறாரா என்று பாருங்கள். செயல்படுவார் என்றால் அவரே அறிவியக்கவாதி. அவரே அறிஞர். அவரை மட்டுமே பொருட்படுத்தவும். பிறரை முழுமையாகவே ஒதுக்கிவிடவும். ஒரு சொல் கூட அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டியதில்லை

ஜெ 

 

முந்தைய கட்டுரைதிருக்கண்டியூர்
அடுத்த கட்டுரைகண்ணையன் தட்சிணாமூர்த்தி- வாழ்த்து