அனல் காற்று (குறுநாவல்) : 5

சுசி, ஒருகணம் பிளந்து பிளந்து பிளந்து பின்பு முடிவிலாத காலமேயாக ஆன இப்போது, என்னைச்சுற்றி சிரித்தும் சினந்தும் அழுதும் ஆர்ப்பரித்தும் சூழும் உன் ஆயிரம் கண்ணாடிப்பிம்பங்களை நோக்கி நான் சொல்லும் அழியாத வாசகம் இது, நான் உன்னைக் காதலிக்கிறேன்.

உன்னுடன் நகரைச் சுற்றிவந்த அந்நாட்களில் என்னுடன் எப்போதுமிருந்த என் மனத்தை அந்த ஒற்றைச் சொற்றொடராக வரையறை செய்துவிடலாம் சுசி. ஒவ்வொரு கணமும் நான் அதைச் சொன்னபடி உன்னுடன் இருந்தேன். நீ என்னருகே இல்லாதபோதுகூட நான் உன்னருகே இருந்து கொண்டிருந்தேன்.

காதல் என்றால் என்ன என்று என்னையே கேட்டுக் கொள்கிறேன். நம் ஆளுமை திரவமாக கரைந்து, புகையாக உருவிழந்து இன்னொருவரை முழுமையாகச் சூழ்ந்துகொள்ளுதல் என்று சொல்வேன். ஆணவம் அழிந்து, தன்னிலை கரைந்து பிறிதொருவருக்காகவே ஒவ்வொரு கணமும் வாழ்ந்து கொண்டிருத்தல் என்பேன்.

சுசி நீ அதைப் புரிந்துகொள்வாயா? பெண்களுக்கும் காதல் என்றால் அப்படித்தானா? தெரியவில்லை. ஏன் என்னுடைய உணர்வுகள்தானா பிறருக்கும்? என்னுடையது ஓரு மனச்சிக்கலா? நான் சறுக்கிச் சென்று கொண்டே இருந்த என் பாதையை அஞ்சி உன்னை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டேனா? சமநிலையிழந்த எந்த சிந்தனைகளையும் மனச்சிக்கல் என்று சொல்பவர்கள் உண்டு. அப்படியானால் இதுவும் ஒரு மனச்சிக்கல். ஒரு மனநோய்

ஜோ என்ன சொல்வான்? காமம் என்று சொல்வான். அவனைப்போன்ற அறிவுஜீவிகள் எதையும் திட்டவட்டமாகப் புரிந்துகொள்ள முயல்பவர்கள். எல்லாவற்றையும் திட்டவட்டமாக ஆக்கிக் கொள்ள முடியாதென்பதையே அறியாதவர்கள். திட்டவட்டமாக ஆக்கிக் கொள்ளும்போது ஒவ்வொன்றும் எளிமைப்படுத்தப்படுகின்றன, நிலைக்க வைக்கப்படுகின்றன என்பதை அறியாதவர்கள். நீரை கையில் எடுக்க அதை பனிக்கட்டியாக உறைய வைக்க வேண்டும்….

காமமா? இருக்கலாம் சுசி… நீயும் அதையே சொல்லலாம். ஆனால் இல்லை இல்லை இல்லை என்றே நான் ஆவேசமாகக் கூவுவேன். காமத்தை நான் அறிந்திருக்கிறேன். காட்டுத்தீ போன்று சூழ்ந்தெரியும் காமத்தை. கடந்த மூன்று வருடங்களாக அதன் அனல்காற்றின் வெம்மையில் ஒவ்வொரு கணமும் வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்.

காமத்தில் சுயசமர்ப்பணம் இல்லை. காமத்தில் தியாகம் இல்லை. காமத்தில் நாம் ஒரு கணம் கூட இல்லாமலாவதில்லை சுசி. காமத்தில் நாம் எதையுமே கொடுப்பதில்லை. அதில் நாம் ஒவ்வொரு கணமும் நம்மையே பார்த்துக்கொண்டிருக்கிறோம். சதுரங்கம் விளையாடும் ஆட்டக்காரன் இம்மியேனும் தன்னை மறப்பானா என்ன? அவன் முன் பரப்பப்பட்டிருக்கும் சதுரங்கக்காய்கள் உண்மையில் பருவடிவம் கொண்ட அவனுடைய மனம்தான் அல்லவா?

காமம் ஒரு முடிவிலாத போர். அங்கே வெல்வது ஒன்றே இலக்கு என இரு உடல்கள் போராடுகின்றன. உள்ளத்தை ஆயுதமாக ஆக்கி உடல் நிகழ்த்தும் சமர் அல்லவா அது? காமத்தில் முன்வைக்கப்படும் ஒவ்வொன்றும் பிறிதொன்றே. காமத்தில் சொல்லப்படும் ஒவ்வொன்றும் சொல்லப்படாத ஒன்றே. சுசி, பாம்பு எடுக்கும் படத்தை நம் ஏன் அஞ்சுகிறோம்? அது அழகானதுதான். ஆனால் அது விஷம் என்பதன் வேறு ஒரு தோற்றம்… காமத்தின் உச்சத்தில் நம் அகங்காரம் மட்டுமே மலைச்சிகரநுனி மீது தன்னந்தனிமையில் நிற்கக் காண்கிறோம்… ஆனால்–

சுசி, நான் கற்ற கல்வியும் நான் வாசித்த நூல்களும் என்னை கைவிடுகின்றன. நான் சொல்லிச் சொல்லி வந்து என்ன சொல்கிறேன் என்ற திகைப்பின் முனையில் நின்று கொண்டிருக்கிறேன். சுசி, இதை மட்டும் சொல்கிறேன். காமம் வண்ண ஆடைகளில், மின்னும் அணிகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது. காதல் அம்மணக்குழந்தை போல களங்கமில்லாத அப்பட்டம்…

சுசி, அந்த நாட்களில் நான் உன்னை பின் தொடர்ந்துகொண்டிருந்தேன். உன் இடுப்பில் இருக்கும் குழந்தைபோல என்னை உணர்ந்துகொண்டிருந்தேன். உன் இடுப்பிலிருக்கும்போது குழந்தை உன்னை ஏதேனும் வகையில் பற்றியிருக்கிறது. உன் கூந்தலை உடை நுனியை…. நீ விட்டுவிடமாட்டாய் என அது அறியும். ஆனாலும் அதன் பலவீனத்தின் அச்சம் அப்படி பிடிக்கச் செய்கிறது.

நானும் உன்னை அப்படித்தான் பற்றியிருந்தேன். ஆனால் அதை என்னிடமிருந்தே மறைக்க ஆண்மகனின் மிடுக்கை நடித்துக் கொண்டிருந்தேன். அதை உணர்ந்து பெண்ணின் பேதமையை நீ நடித்தாய்…. நாம் மிக நேசிக்கும் ஒருவருக்கு நாமளிக்கும் ஆகச்சிறந்த பரிசே அவர் மிக விரும்பும் ஒரு நடிப்பைத்தான் இல்லையா?

உன்னை நான் மகாபலிபுரத்துக்குக் கூட்டிச்சென்றேன். காலமேயாகி நின்ற சிற்பங்களின் நடுவே உன் பறக்கும் துப்பட்டா என்னை தொட்டுத்தொட்டு வருடிச்செல்ல உன்னுடைய நிழல் என்மேல் விழுந்து என்னை அணைத்துக்கொள்ள நடந்தபோது அக்கணத்தில் அதை என் உயிர்ச்சாரமாக உணர்ந்தேன். அப்போதே அதைச் சொல்லவேண்டுமென்று துடித்தேன். நூறுமுறை வாயெடுத்தேன்

”என்ன?” என்றாய்

”ஒண்ணுமில்லை”

”நீ என்னமோ சொல்ல வர்ர மாதிரி இருந்தது”

”இல்லியே”

நான் எதை அஞ்சினேன்? எதற்காக நான் உன்னைச் சரணடைந்தேன்? ஆனால் உன்னில் நான் உணர்ந்த ஓர் அபாரமான தூய்மை என்னை அஞ்சவைத்தது. உன்னை நெருங்க முடியாமல், விலகவும் முடியாமல், உன்னுடனேயே வந்து கொண்டிருந்தேன். சுசி, அப்போது நீ என்னைத் தொட்டிருந்தால் நீர்த்துளி சிறு தொடுகையில் உருவழிவதுபோல் நான் உடைந்திருப்பேன்.

காரில் திரும்பிவரும்போது நீ உன் தனியுலகில் கண்ணிமைகள் சரிய அமர்ந்திருந்தாய். பெருமூச்சில் உன் மார்புகள் ஏறி இறங்கின.

நான் ”என்ன?” என்றேன்

”’என்ன?” என்றாய், சிறு எரிச்சலுடன். மிக அந்தரங்கமான ஓர் அறைக்குள் என் குரல் புகுந்துவிட்டதென…

”இல்லை… சட்டுன்னு வால்ட்டேஜ் குறைஞ்சிட்ட மாதிரி இருக்கு”

”ஒண்ணுமில்லியே”

”அப்டீன்னா சரி”

சற்றுநேரம் கழித்து ”அருண், காரை கடல்ஓரமா கொண்டுபோய் நிப்பாட்டுறியா?” என்றாய்

நான் காரை ஓரமாகக் கொண்டுபோனேன். அணைத்துவிட்டு கதவில் கையை வைத்தேன்.

”நோ… பிளீஸ்”என்றாய் ”நான் உங்கிட்ட பேசணும்”

நான் மனம் படபடக்க பெருமூச்சுவிட்டேன். நீ என்னை நிராகரிக்கப்போகிறாய் என்றுதான் அக்கணம் என் நெஞ்சு கற்பனை செய்தது. சுசி, அது சரிதான் என்று எண்ணி என் அகம் ஆறுதல் கொண்டது என்பதை அறிவாயா? ஆம், நீ என்னை நிராகரிக்கவேண்டுமென அப்போது ஆசைப்பட்டேன். அதன்பின் நான் எந்த தடையும் இல்லாமல் சந்திராவிடம் திரும்பிச்செல்ல முடியும். அங்கே இயல்பாக இருக்க முடியும். முன்பு போல… சுசி, மனம் என்பது ஓயாது மாறும் பாவனைகளின் பெருக்கு மட்டும்தானா?

நான் காரின் கண்ணாடியை தாழ்த்தினேன். கடற்காற்றில் உன் கூந்தல் பறத்து அலைந்தது. கையால் அதை மெல்ல பற்றியபடி நீ பேசாமலேயே அமர்ந்திருந்தாய்

நான் கணங்களாகக் காத்திருந்துவிட்டு மெல்ல ” என்ன?” என்றேன்

நீ முகம் தூக்கியபோது உன் இமைகளில் கண்ணீரின் பிசிறுகள் மின்னுவதைக் கண்டேன். நான் கனிந்து உன்னை நோக்கிச் சரிந்தேன்.”என்ன சுசி?”

நீ மெல்ல விசும்பி அழ ஆரம்பித்தாய். உன்னை என் மனதால் அணைத்துக் கொண்டவனாக கைகள் ஸ்டீரிங்கில் நடுங்க நான் அமர்ந்திருந்தேன் ”சுசி.. ப்ளீஸ்…சுசி ப்ளீஸ்…”

நீ அழுகையை அடக்கும்போது உன் கழுத்து குழிந்து மூச்சு விம்மி நெஞ்சு எழுந்தமர்ந்தது. டாஷ்போர்டில் இருந்து எடுத்த காகிதக் கைக்குட்டையால் கண்ணையும் முகத்தையும் துடைத்தாய்

”ப்ளீஸ்.. சுசி” என்றேன்

”நான் நேத்தெல்லாம் தூங்கவேயில்லை ”என்றாய்

”ம்?”

”நான் திரும்பி லண்டன் போக விரும்பலை அருண்”

”சரி இங்க இரு.. இங்கியே படி… இந்த ஊர் உனக்கு ரொம்ப பிடிச்சிருக்கே… அப்றமென்ன?”

நீ மௌனமாக ஒருகணம் இருந்துவிட்டு ”நான் உங்கிட்டே நேரடியாகவே கேக்கிறேனே… கேக்காம என்னால இருக்கமுடியல்லை… என்னை நீ தப்பா நெனைக்க மாட்டியே”

என் முகம் வலிப்பு கண்டவன் போல விகாரமடைந்தது என நான் உணர்ந்தேன். அந்தக் கணத்தில் சட்டென்று கார்க்கதவைத் திறந்து நான் ஏன் வெளியே ஓடவில்லை என்றால் என் உடல் செயலற்றிருந்ததனால்தான்.

”ஏன் அருண்?”

”என்ன?” என் குரல் கிசுகிசுப்பாக இருந்தது.

”ஏன் அப்டி ஒருமாதிரி ஆயிட்டே?”

”ஒண்ணுமில்லியே… சொல்லு”

”நான் நேரடியா கேக்கிறேனே” என்றாய். ஆனால் துப்பட்டாவை கைகளால் சுழற்றியபடி பிய்த்தபடி சில நிமிடங்கள் தவித்தபின் சட்டென்று தலை தூக்கி ”அருண் உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?”என்றாய்.

நான் என் அலைகள அனைத்தும் அடங்கி அப்படியே விழி பிரமித்து உன்னையே பர்த்திருந்தேன். காலம் அறியாத ஒரு கருங்கற்சிற்பம்…

”ப்ளீஸ்…” என்ற நீ சட்டென்று உடைந்து ”புடிக்கல்லைன்னு சொல்லிடாதே அருண்.. ப்ளீஸ்” என்றாய்

நான் என் கையை உன் தோளைத் தொடுவதற்காக நீட்டினேன். நீ அப்படியே பாய்ந்து என்னை கட்டிக்கொண்டு என் முகத்தில் வெறியுடன் முத்தமிட்டாய். உன் முத்தங்களில் நான் மூச்சுத்திணறினேன். உன் மெல்லிய கரங்கள் கொடிபோல என் தோளை சூழ்ந்திருந்தன.

உன்னை பிடித்து விலக்கினேன். என் கன்னங்களும் கழுத்தும் உன் கன்ணீரால் நனைந்திருந்தன. சுசி, சந்திரா என்னைத் தொடும்போதெல்லாம் அவள் உடலையன்றி எதையும் நான் அறிவதில்லை. ஆனால் அக்கணத்தில் நான் உன் உடலை அறியவேயில்லை.

”என்ன இது? இது ரோடு… யாராவது பாத்தா…” என்றேன்.

”ஏன்? நாம லவர்ஸ்தானே?” என்றபடி துப்பட்டாவால் மூக்கையும் கண்களையும் துடைத்துக் கொண்டாய்.

எனக்கு சிரிப்பு வந்தது. ”இந்தியாவிலே லவர்ஸ் தவிர வேற யாருவேணுமானாலும் சேந்து இருக்கலாம்” என்றபின் காகிதக் கைக்குட்டையை எடுத்து என் முகத்தை துடைத்தேன் . உன்னிடம் ”கண்ணீர்” என்றேன்

”நீயும் அழுதியா?” என்றாய்.

”உன்னோட கண்ணீர்”

சட்டென்று மலர்ந்து சிரித்தாய். உன் சிரிப்பு என்னையும் மலரச்செய்தது.

அப்போது ஒன்றை உணர்ந்தேன். உன்னை முதலில் கண்ட தருணம் முதல் நான் உன்னை போதிய அழகில்லாதவளாகவே எண்ணிக் கொண்டிருந்தேன் என. உன் இளமைதான் என் கண்களை நிறைத்தது. அதுதான் என்னை உன்னுடன் சேர்ந்து துள்ளச் செய்தது… ஆனால் உன் உடல் குறித்த ஓர் ஏமாற்றமும் அதனுள் இருந்துகொண்டே இருந்தது. உன் தோள்களும் புஜங்களும் சிறுமிகளைப் போலிருந்தன. உன் மார்பகங்கள் மிகச்சிறியவை. உன் பின்பக்கமும் தொடைகளும் எல்லாமே சிறியவை. மாநிறத்தில் ஒரு ஒடுக்கமான மரப்பொம்மை போல…

அசைவிலாது நீ இருக்கும்போது உன் அழகெல்லாம் வடிந்துபோய் மிகச் சாதாரணமாக ஆகிவிடுகிறாய். ஆனால் நீ அப்படி இருக்கும் கணங்களே குறைவு. துள்ளும்போது சிரிக்கும்போது கொஞ்சும்போது உன்னுள் இருந்து ஓர் ஒளி எழுந்து உன் கண்களில் சிரிப்பில் முகத்தில் பரவுகிறது. உன் கரங்களின் அசைவில் கழுத்தின் நளினத்தில் பேரழகு ஒன்று குடியேறுகிறது. சுசி, உன் சிரிப்பில் ஜொலித்து என் முன் நின்றாய். அப்போது அதுவே அழகு அது மட்டுமே பெண்ணழகு என்று எண்ணிக் கொண்டேன்…

என் பார்வையை உணர்ந்து ஒரு கணம் நாணி வாய்க்குள் சிரிப்புடன் நீ பார்வையை விலக்கிக் கொண்டாய். நான் பெருமூச்சுடன் என் உடலை இலகுவாக்கிக் கொண்டேன். கையில் காரின் சாவி இருந்தது, ஏனோ அதைப்பிடுங்கி விரல்களால் உருட்டிக்கொண்டிருந்திருக்கிறேன். சாவியை திருப்பி செலுத்தினேன்.

சுசி , அப்போது நான் தெளிவிலாது யோசித்ததை பின்னர் பலமுறை சிந்தனைசெய்து வகுத்துக் கொண்டிருக்கிறேன். பெண்ணின் அழகு என்பது ஆணின் கண்களால் உருவாக்கப்படுவது. பார்த்ததுமே நம்மைக் கவரும் பெண்ணின் அழகு மெல்ல மெல்ல நம் கண்ணில் குறைய ஆரம்பிக்கும். அந்த அழகு பிறரால் உருவாக்கப்பட்டு நமக்கு அளிக்கப்படுவது. பார்த்ததுமே நம்மைக் கவராத பெண்ணை நாம் விரும்பி அவ்விருப்பத்தாலேயே அவளில் மெல்ல மெல்ல கண்டடையும் அழகு அப்பிரியத்துடன் சேர்ந்து வளரக்கூடியது. அது நாம் மட்டுமே அறிந்தது. நம்மாலேயே உருவாக்கப்படக்கூடியது.

சுசி, இப்பூவுலகில் இதுவரை மலர்ந்த பெண்களிலேயே நீதான் பேரழகி என்று சற்றும் ஐயமின்றி நான் உணர்ந்த தருணங்கள் எனக்காக உருவாகிக் கொண்டிருந்தன அப்போது…

”அருண் ஐ யம் ஹேப்பி…ஐ யம் வெரி வெரி ஹேப்பி டுடே…” என்றபடி என்னருகே வந்து என் தோளில் சாய்ந்துகொண்டாய் ”அருண் இனிமே எனக்கு ஒண்ணுமே கவலை கெடையாது… இன்னிக்கு என் லை·ப்லே ஒரு கோல்டன் டே ..ரியலி”

நான் உன்னை மெல்ல அணைத்து உன் உதடுகளில் முத்தமிட்டுவிட்டு விட்டு காரைக் கிளப்பினேன். உன் உதடுகள் மிகச்சிறியவையாக, மன எழுச்சியால் அதிர்ந்து கொண்டிருப்பவையாக இருந்தன. உன் மூச்சுக்காற்றில் மெல்லிய உப்புமணம். உன் கன்னங்களில் கண்ணீரின் பசை ஒட்டியது.

”பேசிட்டு போலாமே” என்றாய். சுதி தாழும்போது உன் குரல் பேதைக்குழந்தையின் மழலையாக ஒலிக்கிறது.

”இல்ல இருட்டிட்டுது…” கார் சீறி அதிர்ந்து திரும்ப, ஒளிபட்ட மரங்கள் விலகி வழிவிட்டன.

காரில் செல்லும்போது நீ பெருமூச்சுடன் ”மகாபலிபுரத்துலே கடற்கரையிலே நடக்கிறப்ப நான் என்னென்னமோ நெனைச்சுட்டேன் தெரியுமா “என்றாய்

”என்ன?”

”உனக்கு என்னைப் புடிக்கல்லைன்னு…”

”ஏன்?”

”நீ என் கூட வர்ரப்ப அப்டியே வேற எங்கோ போய்ட்டது மாதிரி இருந்தது. சங்கடமான எதையோ நெனைச்சுக்கிடறது மாதிரி.. எனக்குப்பிடிக்காத எதையோ சொல்லவந்தே… சொல்லல்லை.”

”அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்றேன். என் முகத்தை அவள் பார்க்கமுடியாத அரை இருள்.

”நீ வேற ஏதோ பெண்ணை நெனைச்சுக்கிட்டேன்னு நான் கற்பனை பண்ணினேன்”

என் முகத்தை என்னிடமிருந்தே மறைக்க விரும்பினேன். எதிரே ஒரு லாரி பேரோலத்துடன் கடந்து சென்றது.”நீ என்னென்னமோ கற்பனை பண்றே” என்றேன்.

”என்னை சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கோ அருண்… படிக்கறதெல்லாம் ஒண்ணும் எனக்கு பிடிக்கல்லை. நல்ல ஒரு ஹவுஸ் வை·பாத்தான் இருக்கப் புடிச்சிருக்கு எனக்கு. கொழந்தையெல்லாம் பெத்துகிட்டு குங்குமம்லாம் வச்சுகிட்டு…”

”மெட்டி ஒலி?”

”சீ போ” என்று என்னை அடித்தாள் ”அது ரொம்ப நல்ல சீரியல்… உனக்கு என்னமோ புடிக்கலை”

”நான் எங்க அதைப் பாத்தேன்?”

”பின்ன உனக்கு எதில இண்ட்ரெஸ்ட்?”

”என்னோட டிராவல் பிசினஸ்.. ”

”பிசினஸா?

”பின்ன தொடங்கியே ஒண்ணரை வருஷம்தான் ஆகுது… அம்மாகிட்ட்ட வாங்கின பணத்திலே வண்டி ஒடுது… இண்ட்ரெஸ்ட் இல்லேன்னா என்ன பண்றது?”

”நான் உனக்கு டௌரி தரேனே”

”’அது சரி.. சீர் செனத்தி… தாம்பாளத்துல பூ பழம் பூசணிக்கா… எல்லாம்…”

”ஹௌ நைஸ்! ஒரு பொண்ணு அவ ஹஸ்பெண்டுக்கு பணம் குடுக்கிறதுன்னா…”

”உன்னோட சிந்தனையே ஒருமாதிரித்தான் இருக்கு”

”நான் போனதுமே அத்தைகிட்டே கிட்டே சொல்லிடுவேன்…”

”அய்யோ அப்ப நாளைக்கே கல்யாணமா?” என்றேன்.

கூந்தலை ஒதுக்கியபடி பின்னால் சாய்ந்து சிரித்தாய். சிரிப்பை உன்னால் அடக்கவே முடியவில்லை.

அன்றிரவு வீட்டில் சிரிப்பாக நுரைத்துக் கொண்டிருந்தது. வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மா நாம் இருவரையும் பார்த்துவிட்டு புன்னகையுடன் உள்ளே சென்றாள். நீ சமையலறைக்குள் சென்று அக்கணமே சொல்லிவிட்டாய் என்று தெரிந்தது. ஆம், அம்மாவிடம் பேசிவிட்டுத்தான் நீ வந்திருந்தாய்

அம்மா உன்னைக் கட்டிக்கொண்டு முத்தமிட்டாள். இழுத்துச்சென்று பூஜையறைக்குக் கொண்டுபோய் திருநீறு போட்டுவிட்டாள். அவள் பதறிக்கொண்டிருப்பது போலிருந்தது.

மிக நுட்பமான ஒரு பதற்றம் என்னையும் ஆட்கொண்டிருந்தது. நான் என் அறைக்குச் சென்று உடைமாற்றினேன். அறையின் விளக்கைப் போடவில்லை. வெளியே உங்கள் இருவரின் சிரிப்புகள் விளங்காத பேச்சொலிகள். என் மனம் தவில் ஒலியில் சுவர்கள் போல இனம் புரியாத அதிர்வை உணர்ந்து கொண்டிருந்தது. அறைக்குள் இருண்டிருந்ததனால் நான் ஒளிந்திருப்பது போலிருந்தது. விளக்கைப் போட்டால் என்னை நானே பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கும்….

அப்போது சந்திராவின் அழைப்புவந்தது. அதன் முதல் ஒலித்துளியைக் கேட்டதும் அதைத்தான் நான் எண்ணி எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் என உணர்ந்தேன்.

மேஜைக் கண்ணாடிப் பரப்பில் ஒளிவிட்டு அதிரும் செல்போனையே பார்த்துக்கொண்டு செயலிழந்து நின்றேன். பின் மெல்ல எடுத்து கம்மிய குரலில் ”ஹலோ” என்றேன்

”என்ன இன்னைக்கு ·போனையே காணும்?” என்று சந்திரா உற்சாகக்குரலில் கேட்டாள்.

”வெளியே போயிருந்தேன்…”

”அவ கூடயா?” என்று சந்திராவின் குரல் இறுகியது

”இல்ல… பிஸினஸ் விஷயமா…”

”ஓ” அந்த இறங்கும் தொனியை நான் நன்றாக அறிவேன். என் குரலில் இருந்து சந்திரா அறிந்துகொள்ள முடியாத எதுவுமே இல்லை.

”நான் அங்க வரேன், நாளைக்கு”

”ம்”

மேற்கொண்டு என்ன பேசுவதென புரியவில்லை. ”நவீன் இருக்கானா?” என்ன அற்பமான கேள்வி ”இன்னைக்கு ஒரே அலைச்சல்…” என்ன பேசுகிறேன்… ”இன்னைக்கு காலேஜ் போகலையா?”

”இல்லை…”

”ஏன்?”

”தலைவலி”

சொற்களில்லாமல் இரு தொலைபேசிகளுக்கு அப்பாலும் இப்பாலும் சில கணங்கள் நின்றிருந்தோம்.

”வச்சிடவா?”

நான் ”ம்ம்” என்றபின் அவசரமாக ”இப்பதான் வந்தேன், சாப்பிடல்லை” என்றேன்

”ம்ம்” என்றாள்

சந்திராவுடனான என் தொலைபேசி உரையாடல்கள் எல்லாமே அப்படித்தான் ஆகிக்கொண்டிருக்கின்றன என்பதை அப்போது எண்ணிக்கொண்டேன். ‘ம்ம்’ தான் அதிகமும் பேசும் வார்த்தை. ஆரம்பநாட்களில் சொற்களை அள்ளி இறைத்து பேசிக்கொண்டவற்றை விட அதிகமான விஷயங்களை அந்த எளிய முனகலோசை இப்போது தெரிவிக்கிறது… அப்போது பேசியவை எல்லாம் உரையாடல்களே அல்ல. சொற்களின் மணலுக்குள் சொல்ல வேண்டியதை புதைத்து வைத்து தேடி எடுத்துக்கொள் என்று சொல்லும் விளையாட்டு மட்டுமே..

அறைக்கு வெளியே அம்மா உன்னை அழைத்துவந்தாள். பளபளக்கும் காஞ்சிபுரம் பட்டு உடுத்து நகைகளும் பூவுமாக. உன் குழந்தை முகம் மட்டும் அப்படியே இருந்தது. கண்களில் சிறுமிகளுக்கு மட்டுமே சாத்தியமான உற்சாக ஒளி…

நான் ”கூப்பிடறேன்” என்று மெல்லச் சொன்னபடி செல்லை அணைத்துவிட்டு எழுந்தேன்

”எப்டிடா இருக்கா?” என்றாள் அம்மா ”மகாலட்சுமி மாதிரி இருக்கா இல்ல?”

நான் புன்னகை செய்தேன். நீ என்னை கண்களைத் தூக்கிப் பார்த்தாய். உன் சிரிப்பை அடக்க உதடை உள்ளே மடித்திருந்தாய்.

”கண்ணுசுத்தி போடணும்…” என்று அம்மா சொன்னாள் ”நாளைக்கு காலம்பற கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போய்ட்டு வரணும்டா”

”சரி” என்றேன்.

செல் மீண்டும் அதிர்ந்தது. அம்மாவின் கண் அரைக்கணம் அதை வந்து தொட்டுச் சென்றது. அதை எடுத்து சைலண்ட் மோடில் போட்டேன்.

”குளிச்சிட்டுவா… சாப்பிடணும்ல?” என்றாள் அம்மா

நான் பெருமூச்சுடன் குளிக்கச் சென்றேன். நீரைத் திறந்து விடு ஷவரின் கீழே நின்றுகொண்டிருந்தேன். எத்தனை நேரம் தெரியவில்லை. பின்பு அவசரமாகக் குளித்து வெளியே வந்தேன்.

அம்மா கதவருகே வந்து ”சாப்புடுறியாடா?” என்றாள்.

திரும்பாமல் ‘ம்’ என்றபின் தலை துடைத்த துவாலையை நாற்காலிமீது போட்டேன். அம்மா வந்து அந்த துண்டை எடுத்துச் சென்றாள். லுங்கியையும் ஜிப்பாவையும் அணிந்துகொண்டேன். செல் ·போனில் எட்டு மிஸ்டு கால் இருந்தது.

நான் டைனிங் டேபிளுக்குச் சென்றபோது உள்ளே நீ சமைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

”ஏன் அவளுக்கு உங்க சமையல் புடிக்கலியா? அவளே சமைச்சுக்கிறா?”

”புருஷனுக்கு தன் கையாலேயே சமைக்கணும்னு நெனைக்கிறா…. அதென்ன தப்பா?” என்றாள் அம்மா. அம்மா அப்படி வேடிக்கையாக பேசும் வழக்கமே இல்லை. ஆகவே அது செயற்கையாக இருந்தது. நான் புன்னகையுடன் டைனிங் டேபிளில் அமர்ந்துகொண்டேன்.

நீ பெசரெட் கொண்டுவந்து போட்டாய். அது சூடாக மணமாக இருந்தது. நான் உன் சிரிக்கும் கண்களைப் பார்த்தேன்

”உங்க ஓட்டலிலே ஆந்திர ஐட்டம்லாம் உண்டா?”

”சௌத் இண்டியன் ஐட்டம் எல்லாமே உண்டு… கேரளா வெள்ளையப்பம் ஒருவாட்டி செய்யறேன். ஸ்ட்யூ சேத்து சாப்பிட்டா பிரமாதமா இருக்கும்”

இனிய சிறி பேச்சுகள். சிரிப்புகள். ஆனால் என் நினைவின் ஒரு பகுதி என் அறைக்குள் அதிர்ந்து கொண்டே இருந்த என் செல்போனில்தான் இருந்தது.

சாப்பிட்டு கைகழுவி என் அறைக்கு வந்தபோது நீ அம்மா மடியில் படுத்துக்கொண்டு டிவி பார்ப்பதைப்பார்த்தேன். என் அறைக்குள் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டு ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டேன். செல்போனை மறந்தவன் போல பாவனை செய்துகொண்டேன்.

மீண்டும் செல்போன் ஒளிவிட்டது. அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். பின்பு விளக்கை அணைத்து இருளில் படுக்கையில் படுத்துக் கொண்டேன். அதன் ஒலி வேறு எங்கிருந்தோ வருவது போலிருந்தது.

இருளில் செல்போன் பிடிவாதமாக சுடர்ந்தது. அதன் வைபரேட்டர் அதிர டீபாயில் வண்டுபோல பின்பக்கமாக நகர்ந்து மெல்லச் சுழன்றது. அது நின்றபோது நான் நிம்மதியுடன் கண்களை மூடிக்கொண்டேன். மீண்டும் அதன் அழைப்பு. மீண்டும் மீண்டும்.

பொறுமை இழந்து எழுந்து அதை எடுத்தேன். ஒருகண நேரத்து தயக்கத்துக்குப்பின் அதை அணைத்தேன். அதை சோபாமேல் விட்டெறிந்துவிட்டு மெத்தை மீது பாய்ந்து படுத்துக்கொண்டேன். பின் தலையணையை எடுத்து முகத்தின்மீது வைத்துக் கொண்டேன். கரகரவென்று மின் விசிறி என் மீது சுழன்றுகொண்டிருந்தது போல் உணர்ந்தேன்.

[தொடரும்]

முந்தைய கட்டுரைமொழியாக்கம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைக்ருஷ்ணன் நிழல்:முகுந்த் நாகராஜன்