மாப்பிளைச் சிரிப்பு

கேரளத்தில் நம்பூதிரிகள், வடகேரள முஸ்லீம்களாகிய மாப்பிளைகள் இரண்டுபேருக்கும்தான் அவர்களுக்கே  உரிய நகைச்சுவை உண்டு. நம்பூதிரி நகைச்சுவை எப்போதும் ஒரு சந்தர்ப்பத்தின் அபத்தம் நோக்கிச் செல்வது. கொஞ்சம் மட்டம்தட்டும் தன்மை உண்டு. தன்னைத்தானே கேலிசெய்வதுமுண்டு

மாப்பிளை நகைச்சுவை ஒரு சந்தர்ப்பத்திலுள்ள நட்பார்ந்த வேடிக்கையைச் சுட்டுவது. மாப்பிள்ளைகள் கடலோடிகள். ஆகவே நட்பு என்பது அவர்களின் இயல்பில் உண்டு. அந்த நட்புதான் நகைச்சுவைக்கும் அடிப்படையாக அமைகிறது. பொதுவாக எவரையும் நகைச்சுவை வழியாக மட்டம் தட்டுவதில்லை.

மாப்பிள்ளை நகைச்சுவையின் விளைகனி என வைக்கம் முகமது பஷீரைச் சொல்லமுடியும். யூ.ஏ.காதர், வி.ஏ.ஏ.அஸீஸ், புனத்தில் குஞ்ஞப்துல்லா என அந்நகைச்சுவை இலக்கியத்தில் விரிவு கொண்டிருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு குஞ்ஞுண்ணி என்னும் கவிஞர் நம்பூதிரி நகைச்சுவைகளை தொகுத்து இரண்டு தொகுதியாக வெளியிட்டார். கே.சி.நாராயணன் அதற்கொரு முன்னுரையும் எழுதினார். அண்மையில் கே.சி.நாராயணனின் நண்பரான எம்.என்.காரச்சேரி (மொஹியுத்தீன் நடுக்கண்டத்தில் காரச்சேரி. முதலில் உள்ளது பெயர். அடுத்தது குடும்பம். அதற்குப்பின் ஊர்) மாப்பிளா ஜோக்குகளை ஒரு நூலாக தொகுத்திருக்கிறார். எனக்கு ஒரு பிரதி கையெழுத்திட்டு அளித்தார்.

அதிலுள்ள சில நகைச்சுவைகள்

*

அக்பர் கார் ஓட்ட கற்றுக்கொள்ளும் காலம். கார் நடுவழியில் நின்றுவிட்டது. என்ன செய்தாலும் கிளம்பவில்லை. பின்னால் வந்த நாயர் எரிச்சலுடன் ஹார்ன் அடித்துக்கொண்டே இருந்தான்.

அக்பர் இறங்கிப்போய் அவரிடம் சொன்னார். “நீங்கள் இறங்கி வந்து என் காரை ஸ்டார்ட் செய்து கொடுங்கள். அதுவரை உங்கள் ஹார்னை நான் அடிக்கிறேன்”

*

அப்துல்லாவும் மோயின்குட்டியும் மிக நெரிசலான ரயிலில் பயணம் செய்தனர். அப்துல்லா குனிந்து தன் காலைச் சொறிந்தார். அதன்பின் சொன்னார்

“இபிலீஸ் (சாத்தான்) ஆட்சி வந்தே விட்டது இக்காக்கா. முன்பெல்லாம் காலைச் சொறிந்தால் சுகமாக இருக்கும். இப்போது ஒரு உணர்வும் இல்லை”

“அதைத்தான் நானும் நினைத்தேன். இபிலீஸின் விளையாட்டு” என்றார் மோயின்குட்டி. “இப்போதெல்லாம் நம் கால்கள் அதுவாகச் சொறிந்துகொள்கின்றன”

*

கலந்தன்குட்டி  தன் மச்சானை பழையகால ஃபோனில்  அழைத்தார். அவன் பணம் தரவேண்டியிருந்தது. ஆகவே அவன் ஃபோன் எடுத்ததுமே மொட்டை வசை.

ஆனால் எண் மாறிவிட்டது. மறுமுனையில் ஒரு கட்டைக்குரல் “டேய் நான் யார் தெரியுமாடா?”

“தெரியாதே” என்றார் கலந்தன்குட்டி

“உள்ளூர் இன்ஸ்பெக்டர்டா பொறுக்கி”

“டேய் நான் யார் தெரியுமாடா?” என்றார் கலந்தன் குட்டி

“தெரியாதுடா”

“படைத்தவனுக்கு நன்றி” கலந்தன் குட்டி ஃபோன் வைத்துவிட்டார்

*

அயமுதுவுக்கு 11 பிள்ளைகள். மறுபடியும் மனைவி கர்ப்பம். பிரசவ ஆஸ்பத்திரிக்கு வெளியே அயமுது நின்றிருந்தார். நர்ஸ் வந்து சொன்னார். “இரட்டைப்பிள்ளை பிறந்திருக்கு”

அயமுது வியந்து சொன்னார் “ஒரு டஜன் வாங்கினா  ஒண்ணு இலவசம்ங்கிற கணக்கு படைச்சவனுக்கும் உண்டு இல்ல?”

*

இதழாளர் கருத்தரங்கில் அரசியல் தலைவர் கே.ஏ.தாமோதர மேனன் சொன்னார். “பத்திரிகையாளர் வேலை புனிதமானது. காந்தியும் ஒரு பத்திரிகையாளர்தான்”

முஸ்லீம் லீக் தலைவரான சி.எச்.அகமதுகோயா சொன்னார். “கோட்ஸேயும் பத்திரிகையாளர்தான்”

*

பழைய முஸ்லீம் லீக் இதழ் சந்திரிகையில் மரணச்செய்திக்கு வழக்கமான சொற்றொடர்தான். ஆள், விவரம் எல்லாம் அளித்தபின் ‘மறைந்தவரை சொற்கப்பூங்காவில் படைத்தவன் அனுமதிக்கட்டும்’ என்று முடிப்பார்கள்.

அவ்வளவு முக்கியமில்லாத ஒரு லீக் தொண்டரின் மரணம். அச்செய்தியை அளிக்கலாம் என்று பரிந்துரை செய்த ஆசிரியர் கே.பி.குஞ்ஞிமூஸா அடைப்புக்குறியிட்டு ஒரு சிறு குறிப்பும் எழுதியிருந்தார். (இடமிருந்தால் மட்டும்) என.

அது கவனப்பிழையால் அப்படியே அச்சாகி வந்தது.

*

முஸ்லீம்லீக் கூட்டம். அப்போது லீக் எதிர்க்கட்சியாக இருந்தது. “நாமும் கம்யூனிஸ்டுகளைப்போல போராட்டங்கள் நடத்தணும் காக்கா” என்றார் ஒரு தொண்டர்

தலைவரான ஸீதி ஹாஜி கேட்டார் “என்ன போராட்டம்?”

“ரயில் மறிப்பு”

“டேய் அவன் கொடியக் கண்டா ரயில் நிக்கும். நம்ம பச்சைக்கொடிய கண்டா நிக்கிற ரயிலும் கிளம்பி வரும்டா”

*

வைக்கம் முகமது பஷீரின் ‘என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது’ நாவல் பாடமாக வைக்கப்பட்டபோது வந்த எதிர்ப்பைப் பற்றி லீக் தலைவர் சி.எஜ்.அகமது கோய சொன்னார்

“கம்யூனிஸ்டுகள் அந்நாவலை வாசித்து புரிந்துகொண்டதனால் எதிர்த்தனர். காங்கிரஸ்காரர்கள் அதை வாசித்து புரிந்துகொள்ளாமையால் எதிர்த்தனர். முஸ்லீம் லீகினர் வாசிக்காமையால் எதிர்த்தனர்”

*

பெரும் கோடீஸ்வரனாகிய ஹமீது முதலாளி அதிபயங்கர கஞ்சன். சந்தையில் இருந்து கிளம்பும்போது அலி வந்து சுமை தூக்குவதாகச் சொன்னான்.

அவனுக்கு ஆகக்குறைந்த காசு கொடுத்து எப்படி துரத்திவிடுவது என யோசித்தபடி முதலாளி நடந்தார். ஆனால் வீட்டுக்குச் சென்றதும் அலி சொன்னார். “காசு வேண்டாம். ஓர் உதவி மட்டும் போதும்”

“என்ன உதவி?

“உங்கள் கஜானாவை நான் ஒரே ஒருமுறை பார்க்கவேண்டும்”

“அதை பார்த்து ஒன்றுமே கேட்கக்கூடாது”

“மாட்டேன்”

சத்தியம் செய்தபின் முதலாளி அவனை கூட்டிக்கொண்டுசென்று கஜானவை திறந்து காட்டினார்.

பார்த்துவிட்டு திரும்பும்போது அலி அழைத்தான் “அடேய் ஹமீது…”

முதலாளி திடுக்கிட்டார்

“இப்போது நானும் நீங்களும் சமம். இருவரும் அதை பார்க்கமட்டும்தானே செய்திருக்கிறோம்?”

முந்தைய கட்டுரைமா. சுப்பிரமணியம்
அடுத்த கட்டுரைபின்நவீனத்துவமும் பிந்தைய எழுத்தும்…