ஜெய்ப்பூர் இலக்கிய விழா 2024

The Abyss  வாங்க

Stories Of the True வாங்க 

இலக்கிய விழாக்களுக்குச் செல்லும்போதெல்லாம் தோன்றும் ஓர் எண்ணம் உண்டு. முன்பு யூ.ஆர்.அனந்தமூர்த்தி சொன்னது. ‘ஆங்கிலம் நம் வரவேற்பறை மொழி. இலக்கியம் சமையலறையில் இருந்து உருவாகிறது’.

கொல்லைப்பக்கத்தில் இருந்தும், படுக்கையறையில் இருந்தும், கழிப்பறையில் இருந்தும்கூட உருவாகலாம். வரவேற்பறையில் இருந்து நமக்கேயான இலக்கியம் சாத்தியமல்ல. ஏனென்றால் வரவேற்பறை நாம் நமக்காக அமைத்துக் கொண்டது அல்ல. முழுக்க முழுக்க நம் வீட்டுக்கு வரும் அந்நியர்களுக்காக நாம் உருவாக்கி வைத்திருப்பது. அது நம்மை காட்டவில்லை, நாம் எப்படி நம்மை காட்ட விரும்புகிறோம் என்பதைக் காட்டுகிறது.

இந்திய இலக்கிய விழாக்களின் முதன்மைச்சிக்கலே அவை ஆங்கிலத்தில் நிகழ்கின்றன என்பதே. ஆகவே சரளமாக ஆங்கிலத்தில் பேசுபவர்களுக்கான இடமாக விழா இயல்பாக மாறிவிடுகிறது. ஆனால் நான் அவ்வாறு பேசுபவர்களின் உரையாடல்களை கேட்கக்கேட்க பெரும் சலிப்பை அடைகிறேன். பெரும்பாலும் அவை உள்ளீடற்றவை. நான்கு வரிகளில் சொல்லப்படவேண்டிய ஒன்றை பலவகை ஆங்கிலத் தேய்வழக்குகள் வழியாக நாற்பது வரிகளில் சொல்பவை. வெறும் ஒரு மணிநேரம்தான். ஆனால் நீண்டநேரமாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்று தோன்றிவிடும்.

தமிழ் போன்ற ஒரு மொழியில் இலக்கியச் சிற்றிதழ்ச்சூழலில் புழங்கும் ஒருவருக்கு இலக்கியவிழாப் பேச்சுக்களில் இருந்து தெரிந்துகொள்ள ஒன்றுமிருப்பதில்லை. மட்டுமல்ல, கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வகையான மேட்டிமை உணர்வு வந்துவிடும். அங்கிருக்கும் அத்தனைபேரையும் இளக்காரத்துடன் குனிந்து பார்க்க ஆரம்பித்துவிடுவோம்.

ஜெய்ப்பூரில் இலக்கியம் பேசும் அரங்குகளை மட்டும் மேலோட்டமாக சுற்றி வந்தேன். ஆங்காங்கே கேட்டேன். இலக்கியமறிந்த ஒருவரால் ஓர் எழுத்தாளர் நாலைந்து சொற்றொடர் பேசுவதற்குள்ளாகவே அவர் எந்த ரகம் என்று சொல்லிவிடமுடியும். நான்குநாளில் நான் அங்கிருக்கும் மொத்த எழுத்தாளர்களும் வெறும் சவலைகள் என எண்ணத்தலைப்பட்டேன். என்ன காரணத்தால் சர்வசாதாரணமான  படைப்புகளுக்குக்கூட அங்கே ஆதரவு இருக்கிறது என்று புரிந்தது.

ஆனால் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். மேடைகளில் பேசுபவர்களைக் கொண்டு அந்த முடிவுக்கு வந்துவிடலாகாது. அங்கே நெடுந்தொலைவில் இருந்து வந்து அமர்ந்திருக்கும் கூட்டத்தில் கூர்ந்த வாசகர்கள் பலநூறுபேர் இருக்கக் கூடும். மிக இயல்பாக அடுத்த காலகட்டத்தை நோக்கிச் செல்பவர்களாக அவர்கள் இருக்கலாம். அவர்களுக்காகவே நான் வந்திருக்கிறேன். சொல்லும் ஒரு சில சொற்கள்கூட அவர்களுக்காகவே.

திருவனந்தபுரத்தில் இருந்து 31 ஜனவரி காலையில் கிளம்பி ஹைதராபாத் வழியாக ஜெய்ப்பூருக்கு மாலை ஆறரை மணிக்குச் சென்று சேர்ந்தேன். மேரியாட் ஓட்டலில் என் தங்குமிடம். விரிவான சூட் அறை. இந்த உயர்தர விடுதிகளில்தான் பதினெட்டாண்டுகளாக பெரும்பாலும் பாதிநாட்களைக் கழிக்கிறேன். இங்குள்ள அழகும் நேர்த்தியும் இந்தியச் சூழலில் பெரிய ஆடம்பரங்கள். அவை சினிமா போன்ற ஒரு பெருந்தொழிலின் பகுதியாக இருக்கையில் இயல்பாகத் தெரிகின்றன. இலக்கியத்திற்காக என்றால் ஒரு குற்றவுணர்ச்சியும் வெட்கமும் உருவாகிறது.

இங்கே தங்கிக்கொண்டு, உயர்தர மது அருந்தியபடி, பலர் ஏகாதிபத்திய எதிர்ப்பு, அதிகார ஒறுப்பு, மூன்றாமுலக நாடுகளின் மீட்சி பற்றி பேசிக்கொண்டிருக்கையில் ஒருவகை உயர்தர அங்கதம் போலிருக்கிறது.

இந்த வகை விடுதிகளில் நான் மகிழும் சொகுசு என்பது குளியல்தொட்டி. குறிப்பாக வெந்நீர் குளியல். அதற்காகவே சென்னையில் அறை வெப்பத்தை 22 டிகிரி சென்டிகிரேட் வைத்திருப்பேன். ஜெய்ப்பூரில் வெளியே 20 டிகிரி இருந்தது. உடல் குளிரில் உறைந்துவிட்டிருக்க வந்து வெந்நீருக்குள் கிடப்பது ஒரு வகை தியானம். ஒரு மணிநேரம் அல்லது அதற்கும் கூடுதலாகவே.

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் என்னுடன் சுசித்ரா ராமச்சந்திரன் கலந்துகொண்டார். சுசித்ரா மொழியாக்கம் செய்த என் ஏழாம் உலகத்தின் ஆங்கில வடிவமான The Abyss வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. ஓர் அரங்கு அதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. 1 பிப்ரவரி 2024 அன்று நிகழ்ந்த அந்நிகழ்வில் அஞ்சும் ஹசன் என்னையும் சுசித்ராவையும் பேட்டி எடுத்தார். நாவலாசிரியை, இலக்கியக் கட்டுரையாளர், இதழாளர் என்னும் நிலைகளில் அறியப்பட்டவர்.

ஜெய்ப்பூர் விழாவில் நான் கவனித்தது மிகப்பெரும்பாலான நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் மிக மேலோட்டமான கேள்விகளையே பொதுவாகக் கேட்டுக்கொண்டிருந்தனர் என்பதுதான். எப்போது எழுத ஆரம்பித்தீர்கள், இந்த நூலை எழுதும் நோக்கம் என்ன, இதன் பின்னணி என்ன – இந்தவகை. இக்கேள்விகளை எவரிடமும் கேட்கலாம்.

மாறாக அஞ்சும் மிகக்கூர்ந்து என்னுடைய Stories of the True, The Abyss ஆகிய இரு நூல்களையும் வாசித்து அவற்றில் இருந்து கூரிய கேள்விகளைக் கேட்டார். உண்மையில் எனக்கு திகைப்பாக இருந்தது. அவ்வாறு ஒரு அமர்வை அங்கே நான் எதிர்பார்க்கவே இல்லை. அதனாலேயே பொதுவாக இலக்கிய விழாக்களின் தரத்திற்கு மேலாகவே அவ்வரங்கு அமைந்திருந்தது.

இலக்கிய விழாக்களில் எழுத்தாளர்களின் பதில்களும் பெரும்பாலும் சம்பிரதாயமாகவே இருப்பது வழக்கம். மிகப்பொதுவான பதில்கள். பெரும்பாலும் தங்கள் வாழ்க்கை, தங்கள் நூல் பற்றிய ஓர் அறிமுகக்குறிப்புதான் எல்லாரும் சொல்வது. மிக அரிதாகவே ஒரு பதிலில் வாழ்க்கை சார்ந்து ஏதேனும் தனித்தன்மை இருந்தது. மிகப்பெரும்பாலானவர்கள் உயர்நடுத்தர வர்க்க வாழ்க்கையில் இருந்து நேராக எழுத்துக்கு வந்தவர்கள்.

இலக்கிய விழாக்களில் வரும் வெளிநாட்டு எழுத்தாளர்களின் பேச்சுகள் இன்னும் எளிமையானவையாக இருக்கும். தட்டையானவையாக என்றும் சொல்லலாம்.  தன்னைப்பற்றி சில சொற்கள் சொல்வார்கள். தன் படைப்பைப் பற்றி சொல்வார்கள். அந்த நூலின் பின்னட்டையிலேயே அதெல்லாம் இருக்கும். நூலை தூக்கி பார்வையாளர்களுக்குக் காட்டுவார்கள். அவ்வளவுதான். எந்த கேள்விக்கும் கூரிய பதிலைச் சொல்லாமல் சுற்றிவருவார்கள்.

அதைப்பற்றி ஓர் இலக்கிய முகவர் என்னிடம் சொன்னார். அப்படி எளிமையாக, தட்டையாக இருக்கவேண்டும் என்பதே பதிப்பாளர்களின் விருப்பம். வாசிக்க விரும்பும் எவரும் மிரண்டுவிடக்கூடாது. ஒன்றும் தெரியாதவர் கூட நம்பிக்கை கொண்டு வாங்கிவிடவேண்டும். எந்நிலையிலும் நூலில் உள்ள உள்ளடக்கம் எதையும் சொல்லிவிடக்கூடாது. அதாவது ஒரு நூல் ஒரு விற்பனைப் பண்டம், அதை எவரும் இலவசமாக நுகர்ந்துவிடக்கூடாது.

ஆனால் என் அரங்கில் அஞ்சும் கேட்ட அபிஸ் பற்றி கேட்ட கேள்விகளுக்கு விரிவாகவே பதில் சொன்னேன். இந்திய ஆங்கில இலக்கிய சூழலில் உள்ள மையச்சிக்கல் என்னவென்றால் இலக்கியப்படைப்புகள் இதழாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோரால்தான் மதிப்பிடப்படுகின்றன. அவர்களுக்கு இலக்கியம் என்றால் பேசுபொருள் மட்டுமே. அந்தப்பேசுபொருளை ஒட்டி அவர்கள் பெண்ணியம், மூன்றாமுலக இலக்கியம், பின்காலனியாதிக்க இலக்கியம் என சில அடையாளங்களைப் போடுகிறார்கள். அவற்றை நாம் உடைத்தே ஆகவேண்டும்.

இன்னொன்று, இந்திய ஆங்கிலத்தில் எழுதும் பலருக்கு தமிழில் நவீன இலக்கியம் இருப்பதே தெரியாது. அதை பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள், நம்மவர்கள் அது சொல்பவரின் தகுதி என நினைப்பார்கள். உதாரணமாக, கொஞ்சநாட்களுக்கு முன் ஆங்கிலத்தில் அரசியல் குறிப்புகள் எழுதும் ஸ்ரீதர் (ஸ்ரீதர் சுப்ரமணியன் என ஞாபகம்) என் பெயரை அவர் கேள்விப்பட்டதே இல்லை என்று பெருமிதத்துடன் சமூகவலைத்தளத்தில் சொல்லியிருந்தார்.

ஜெய்ப்பூரில் இந்திய ஆங்கிலத்தில் எழுதும் நாலைந்து பெண் கவிஞர்கள் வந்திருந்தனர். எவர் பெயரும் எனக்கு தெரியாது. கூகிள் செய்து கவிதைகளைப் பார்த்தேன். தலையில் மடேர் என அறைந்துகொள்ளச் செய்யும் கவிதைகள். பள்ளிக்குழந்தைத்தரம். ஆங்கிலம் என்பதனால் மட்டுமே அவர்கள் அங்கே செல்ல முடிந்திருக்கிறது.

ஒரு பெண் கவிஞர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். அவருக்கு இங்கே தமிழில் நவீன இலக்கியம் இருக்கிறது என்று, எங்கள் அளவுகோலின்படி அவர் எழுதும் கவிதைகளுடன் அவரை எங்கள் மேடையில் பத்து நிமிடம் உட்காரச்செய்ய மாட்டோம் என்று தெரியுமா என்று தெரியவில்லை. இதுதான் இன்று இந்தியாவிலுள்ள காலனியாதிக்க மனநிலையின் நீட்சி. (ஆனால் அந்த மனநிலையில் திளைப்பவர்களே ஆங்கிலத்தில் பின் காலனித்துவ இலக்கியம், காலனித்துவ நீக்கம் என்றெல்லாம் பேசுவார்கள்)

இரண்டு முக்கியமான கருத்துக்களைச் சொன்னேன். ஒன்று, ஏழாம் உலகம் ’மனிதாபிமான’ (Humanism)  படைப்பு அல்ல. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. மனிதன் இப்புவியின் மையமோ உரிமையாளனோ அல்ல. அவன் இயற்கையில் ஒன்றும் அவ்வளவு முக்கியமானவன் அல்ல. மனிதமையவாதம் (Anthropocentrism) தான் மனிதநேயமாக ஆகிறது. அது ஒரு செமிட்டிக் கருதுகோள். வேதாந்தியாகிய எனக்கு அதில் ஏற்பு இல்லை. நான் ஒட்டுமொத்தமாக உயிர்க்குலத்தை பார்ப்பவன்.

ஏழாம் உலகம் அடித்தளத்துக்கும் அடித்தள மக்களின் துயரைச் சொல்லும் பொருட்டு எழுதப்பட்டது அல்ல. அவர்கள் மேல் கருணையை உருவாக்கும் நோக்கமும் அதற்கில்லை. ஆகவேதான் அது தொடர்ச்சியாக அங்கதச் சுவையுடன் செல்கிறது. அதிலுள்ள மனிதர்களான ராமப்பனோ மாங்காண்டிச்சாமியோ நம் பரிவை பெறவேண்டியவர்கள் அல்ல.

ஏழாம் உலகம் இந்தியத் தொன்மத்தின்படி பாதாளம். கிறிஸ்தவ தொன்மத்தை சொல்வதென்றால் தாந்தே சொல்லும் Purgatory. அதிலுள்ள எல்லா கதைமாந்தர்களும் அந்த கடுஞ்சூழல் வழியாக மேம்பாடு கொள்கிறார்கள். பர்தீஸா நோக்கிச் செல்கிறார்கள். அந்நாவலில் ஒருவர் விடுதலை அடைந்தவர். ஒருவர் விடுதலைக்கு மிக அண்மையில் உள்ளவர். குய்யனின் சிரிப்பில்தான் அந்நாவல் நிறைவடைகிறது.

நான் சொன்ன இன்னொரு மையக்கருத்து என் எழுத்து எந்த அழகியலைச் சார்ந்தது என்பது. நான் எழுதவந்தபோது நவீனத்துவம் உச்சநிலையில் இருந்தது. என் வாழ்க்கை அளித்த எழுத்துமுறைக்கு நவீனத்துவத்தின் இறுக்கமான யதார்த்தவாதமும், கட்டுப்பாடான மொழியும் ஏற்புடையவை அல்ல. ஆகவே அவற்றை கடந்தேன். ஆனால் நான் பின்நவீனத்துவன் அல்ல. எதையும் நான் உடைக்க அல்லது கலைக்க முயலவில்லை. என் பணி அது அல்ல. நான் கண்டடைந்ததை நிறுவவே வந்தேன். ஆகவே என்னை நான் பின்நவீனத்துவன் என்று உணரவில்லை. என் எழுத்தில் பின்னைநவீனத்துவக் கூறுகள் உள்ளன, அவ்வளவுதான். என்னை நான் நவீனத்துவத்தைக் கடந்தவன் என்று மட்டுமே சொல்லிவந்தேன்.

இன்று என் எழுத்தை பின்னைப் பின்நவீனத்துவம் என்று சொல்லமுடியும் என்று கண்டறிந்தேன். நான் எழுதிய காலகட்டத்தில் உலகின் முக்கியமான படைப்பாளிகள் அதை நோக்கிச் செல்ல ஆரம்பித்திருந்தனர். மரபையும், வரலாற்றையும் மீண்டும் உருவாக்குவது, வாழ்க்கைக் களங்களை உருவாக்கி அவற்றுக்குள் விழுமியங்களை முற்றிலும் தனித்துச்செயல்படுவனவாக நிலைநாட்டுவது போன்ற பின்னைப்பின்நவீனத்துவ எழுத்துக்குச் சரியான உதாரணமாக என் நூல்களைச் சொல்வேன். அறம் கதைகளும் சரி, விஷ்ணுபுரம் கொற்றவை முதல் வெண்முரசு வரையிலான நாவல்களும் சரி.

அஞ்சும் ஒரு வினாவை கேட்டார். மேலைச் சிந்தனையில் உளவியலாய்வு பின்னணி இருப்பதனால்தான் இலக்கியத்தில் ஆழ்ந்த உளஆய்வுகளை நிகழ்த்துகிறார்கள் என்று ஏ.கே.ராமானுஜன் சொல்லியிருப்பதை பற்றி என் எண்ணம் என்ன என்றார்.

நான் அதை மேலும் விரிவான பார்வையில் பார்க்கலாம் என்றேன். ஒன்று, மேலை ஆன்மிகத்திலுள்ள பாவம் (sin) என்னும் கருதுகோள். அது வெறும் தவறு அல்ல. அது முதற்பாவம். மனிதனுடன் பிறந்து மனிதனுடனேயே இருப்பது. மனிதன் அதற்குள்தான் வாழ்கிறான். அதுதான் ஃப்ராய்டின் id கொள்கைக்கு ஆதாரம். பாவமன்னிப்புதான் ஃப்ராய்டில் உளப்பகுப்பாய்வு ஆக மாறியது.

இந்திய மரபில் அத்தகைய பாவம் என்னும் கோட்பாடு இல்லை. ஏழாம் உலகம் நாவலில் பாவம் என்ற விவாதமே இல்லை. அது வாழ்க்கை, அதிலொரு அம்சம்தான் பிழைகளும் குற்றங்களும். இந்த வேறுபாடுதான் இந்திய சிந்தனையில் இருந்து இந்திய இலக்கியம் பெறவேண்டியது.

நான் சொன்ன இன்னொரு கருத்து, ஓர் எழுத்தாளனுக்கு தத்துவம் – மெய்யியல் எவ்வளவு முக்கியமானது என்று. அவன் இன்னொரு துறையைச் சார்ந்து செயல்படவேண்டியவன் அல்ல. ஆனால் தத்துவமும் மெய்யியலும் அவனுடைய மெய்காண் கருவிகளாக மிக முக்கியமானவை. தத்துவம், மெய்யியல் ஆகியவை இலக்கியத்திற்கு அயலானவை, அல்லது முக்கியமற்றவை என்னும் பார்வை நவீனத்துவம், பின்நவீனத்துவம் சார்ந்தது. மிகப்பழையது, காலாவதியானது. டேவிட் ஃபோஸ்டர் வாலஸ் போன்ற பின்னைப் பின்நவீனத்துவர்கள் தத்துவம் பயின்று அங்கிருந்து வந்தவர்கள்.

தத்துவம் பயில ஓர் ஆசிரியர், ஒரு குரு, இன்றியமையாதவர். ஒரு தத்துவஞானி எல்லா பேரிலக்கியத்தின் பின்னணியிலும் உள்ளார். சென்ற காலப் பேரிலக்கியவாதிகளான தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, தாமஸ் மன் போன்ற அனைவரிடமும் ஷோப்பனோவரின் செல்வாக்கு உண்டு. தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி இருவரும் ஷோப்பனோவரைப் பயிலும் பொருட்டு அவரை மொழியாக்கம் செய்தவர்கள்.

ஆச்சரியமாக வினாக்கள் ஆர்வமூட்டுபவையாக இருந்தன. ஒரு வினா ”நீங்கள் உங்கள் வாழ்க்கையின் கடுமையான சோதனைகளைப் பற்றிச் சொன்னீர்கள். அவற்றை எழுத்தாக ஆக்க என்ன பயிற்சியை மேற்கொள்கிறீர்கள்?” நான் இலக்கிய ஆக்கத்திலுள்ள விலக்கம் (distancing) பற்றி சொன்னேன்.

இன்னொரு வினா ஷோப்பனோவர் போன்ற ஓர் ஐயவாதியிடமிருந்து எப்படி தல்ஸ்தோய் ஊக்கம் பெற்றிருக்க முடியும் என்று. ஷோப்பனோர்வருக்கு பல சிந்தனைப் படிகள் உள்ளன. அவரை ஐயவாதி என குறுக்கிவிட முடியாது. அவருடைய மையவினாக்கள் அறம் சார்ந்தவை என பதில் சொன்னேன்.

நிகழ்வுக்குப்பின் வந்து சந்தித்த சிலர் மிகச்சிறந்த அமர்வாக இருந்தது என்றார்கள். ஒரு ஜெர்மானியர் ‘இறுதியாக ஓர் இலக்கியவிழாவில் ஒரு நல்ல உரையாடலைக் கேட்டேன்’ என்றார். (அவர் பெயரை அவர் உச்சரிப்பில் என்னால் நினைவில் கொள்ளவே முடியவில்லை) அவர் இந்தியவியல் ஆய்வாளரும்கூட. இங்கே உத்தரகண்டில் பல்கலையில் வருகைதரு பேராசிரியர். “இந்திய மரபில் சம்ஸாரா என்பது பாவம் என்னும் கருதுகோளுக்கு நிகரானது அல்லவா?” என்றார்.

நான் “இல்லை. சம்ஸாரம் என்பது நிகழ்வு – விளைவு அல்லது காரணம் – காரியம் என்னும் தொடர்ச்சிதான். அதில் ஓர் அம்சம்தான் பாவமே ஒழிய, மானுடத்தை மொத்தமாக அரவணைத்துக்கொண்டிருக்கும் பாவம் என்னும் கருத்து இங்கே இல்லை என்று சொன்னேன். ஆனால் ஒரு நிகழ்வு முடிந்ததுமே அடுத்த நிகழ்வு தொடங்கும் அவசரம். நூல்களில் கையெழுத்திடவேண்டிய அவசரம். நீண்ட உரையாடல்களுக்கு வாய்ப்பில்லை.

சுசித்ராவின் நிகழ்வும் சிறப்பாக இருந்தது. சுசித்ரா பங்கேற்பாளராக வரும் முதல் இலக்கிய விழா. அவருடைய மொழித்திறன் வெளிப்பட்டது. அத்துடன் தமிழ்ச்சூழலில் நிகழும் இலக்கியவிவாதங்களைக் கவனித்துவரும் ஒருவர் ஜெய்ப்பூர் இலக்கிய விழா போன்ற ஒன்றில் பள்ளி மாணவர் நடுவே பட்டதாரி போல உணர்வார்.

சுசித்ரா நிமிர்வுடன், கூரிய சொற்றொடர்களுடன் ஆழமாகப் பேசினார். இந்திய ஆங்கில இலக்கியச் சூழலில் புத்தக அறிமுகம் மட்டுமே இருப்பதை, கறாரான இலக்கிய விமர்சனம் இல்லாமலிருப்பதை, அதன் அவசியத்தை அழுத்தமாக முன்வைத்த அவருடைய பேச்சு முக்கியமான ஒன்று.

எனக்கு 4 பிப்ரவரி 2024 அன்று இன்னொரு அரங்கு இருந்தது. இருமொழிச் சூழலில் எழுதுபவர்களின் அனுபவங்கள் பற்றி. அதில் என்னுடன் மாலத்தீவு எழுத்தாளரான இப்ராஹீம் வகீது (Ibrahim Waheed) மற்றும் பிரெஞ்சு எழுத்தாளர் சுமானா சின்ஹா (Shumona Sinha) ஆகியோர் கலந்துகொண்டனர். இப்ராஹீம் வகீது மாலத்தீவின் மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதுபவர். – சம்ஸ்கிருதத்தின் வேர்கொண்ட மொழி. அவருடைய அன்னை நாகர்கோயில், திருவனந்தபுரம் ஆகிய ஊர்களில் பணியாற்றியவர்.

சுமானா வங்காளத்தில் கல்கத்தாவில் பிறந்து கல்லூரிப்படிப்புக்காக பிரான்ஸ் சென்று பிரெஞ்சிலும் வங்காளத்திலும் எழுதுகிறார். ஆங்கிலத்தை தவிர்ப்பதை தன்னுடைய காலனியாதிக்க எதிர்ப்பு மனநிலையின் வெளிப்பாடு என்று சொன்னார். இரு மொழிகளில் எழுதுவதிலுள்ள சிக்கல்கள், சவால்கள் பற்றிய அரங்கில் நான் என் தரப்பாகச் சொன்னது இரண்டு முக்கியமான கருத்துக்கள்.

முன்பு நான் ஓர் இலங்கைத் தமிழரைச் சந்தித்தேன். அவருடைய தொழில் கள்ளக்கடத்தல். ஆனால் அவருடைய குடும்பம் நாலைந்து தலைமுறையாக அதைச் சட்டபூர்வமான தொழிலாகச் செய்துவருகிறது. 1947க்குப்பின் அது கள்ளக்கடத்தல் என அறிவிக்கப்பட்டது. அவர் குற்றவாளி ஆகிவிட்டார். மொழியாக்கமும் அப்படித்தான்.

இந்தியாவில் நடந்த மொழிவாரி மாநிலப்பிரிவினை ஒருவகையில் இயற்கையான ஓர் அமைப்பை செயற்கையாக துண்டாடியது. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வேறுமொழி பேசுபவர்கள் பெரிய எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். எல்லைப்புற மாவட்டங்கள் எல்லாமே இயல்பான இருமொழித்தன்மை கொண்டவை. ஒவ்வொரு உரையாடலுடனும் மொழிபெயர்ப்பும் இணைந்துகொள்கிறது.

இந்தியாவில் மொழிபெயர்ப்பு இயல்பாக நடந்துகொண்டே இருக்கிறது. இந்தியா மொழியாக்கத்தால் உருவான பண்பாடு கொண்டது. விஷ்ணுசர்மாவின் அத்யாத்ம ராமாயணத்தின் மொழியாக்கம் வழியாக உருவான மொழி மலையாளம். மராட்டியின் முதல்நூல் எனப்படுவது கீதைக்கு ஞானேஸ்வர் அளித்த மொழியாக்கம்தான்.  இந்திய இலக்கியமே இருமொழித்தன்மை கொண்டதுதான்.

ஆனால் நான் ஒரு மொழியில்தான் எழுதுகிறேன். மலையாளம் என் தாய்மொழி. ஆனால் அதை இன்னொருவகை தமிழாகவே கருதுகிறேன். என் மொழி தமிழ். அது நான் தேர்ந்துகொண்ட மொழி. ஏனென்றால் அது இந்தியாவிலுள்ள தொல்மொழிகளில் ஒன்று. சம்ஸ்கிருதம்போல பல அடுக்குகள் கொண்ட, பற்பல காலகட்டங்கள் கொண்ட மொழி. ஆகவே மாபெரும் சொற்களஞ்சியம் கொண்டது.

ஓரு முதன்மை எழுத்தாளர் இருமொழிகளில் எழுதமுடியுமென நான் நம்பவில்லை. ஒரு மொழியில் ஊறிக்கிடப்பதே பெரிய படைப்பாளிகளின் இயல்பு. நான் ஆங்கிலத்தில் தொடக்ககாலத்தில் எழுத முயன்றேன். என் ஆசிரியர் ஆற்றூர் ரவிவர்மா அதை தடுத்தார். ஆங்கிலத்தின் மொழியமைப்பே வேறு. அதற்கு உளம் பழகினால் தமிழின் இசையொருமை, படிம ஆழம், சொற்றொடரமைப்பின் அழகு நடையில் அமையாது போய்விடும் என்றார். அதை உண்மை என்றே கருதுகிறேன். ஆங்கிலம் பேசுவதைக்கூட அண்மைக்காலம் வரை தவிர்த்தே வந்தேன்.

அதற்குத் தொடர்ச்சியாக இன்னொன்றைச் சொன்னேன். பண்பாடு, கலை, இலக்கியம் என்பதெல்லாமே மொழியில் அமைந்திருப்பவை என்று பின்னை அமைப்பியல்வாதிகளான தெரிதா போன்றவர்கள் சொல்லி, அதை பல இலக்கியவாதிகள் ஏற்றுச்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். காலாவதியாகிப்போன ஒரு சிந்தனை அது. மானுட உள்ளம், மானுடப்பண்பாடு எல்லாமே படிமங்களால் ஆனவை. ஆழ்படிமம் (Archetype) என்றாலும் சரி, பொருட்படிமம் (Gestalt) என்றாலும் சரி படிமங்களே நம் மனம், நம் கனவு எல்லாமே. அது மொழிகடந்தது. தியானம் செய்யும் எவரும் அதை உணரமுடியும். அதை எழுதுவதற்கே இலக்கியவாதி முயல்கிறான். மொழி அதன் கருவிதான்.

கேள்விகளும் முக்கியமானவையாக இருந்தன. மழை பொழிந்து கொண்டிருந்தமையால் கூர்ந்து கேட்டு பதில் சொல்லவேண்டியிருந்தது. தான் குஜராத்தியில் எழுத விரும்புவதாக ஒரு பெண் சொன்னார். ஆனால் ஆங்கிலமே பயின்ற மொழி என்றார். குஜராத்தியிலேயே எழுதும்படி நான் சொன்னேன். குஜராத்திச் சொற்களில் ஊடாடும் படிமத்தன்மையை, அதன்வழியாக அவர் தன் கனவுகளுக்குள் ஊடுருவும் வாய்ப்பை ஆங்கிலம் அளிக்காது. இலக்கியம் என்பது மொழியினூடாக நிகழ்த்தப்படும் கனவு என்றேன்.

நிகழ்வுகளுக்குப்பின் நூல்களில் கையெழுத்திட்டேன். நிறையவே நூல்கள் விற்பனையாயின என்பது கையெழுத்துகள் வழியாகத் தெரிந்தது. நான் முதலில் எண்ணியதுபோல ஒர் இலக்கிய விழாவை அதன் பார்வையாளர்களைக் கொண்டே மதிப்பிடவேண்டும் என எண்ணிக்கொண்டேன்.

சாரு நிவேதிதா வந்திருந்தார். அவருடைய Conversations with Aurangzeb நாவல் பற்றி ஓர் அரங்கு இருந்தது. நானும், என் நண்பரும், இலக்கிய மொழிபெயர்ப்பாளருமான செங்கதிர் இப்போது ஜெய்ப்பூரில் காவல் உயரதிகாரியாகப் பணியாற்றுகிறார். அவருடன் நானும் சுசித்ராவும் சாரு நிவேதிதாவின் அரங்கில் பங்கெடுத்துவிட்டு பிற்பகல் முழுக்க ஜெய்ப்பூரைச் சுற்றிப்பார்த்தோம். ஜெய்ப்பூரின் பருவநிலை சிறப்பாக இருந்தது – ஊட்டியின் கோடை போல இருபது பாகை வெப்பம். நினைவில் நின்றிருக்கப்போவது முதன்மையாக அதுதான்.

நாலாம் தேதி நிகழ்வுக்குப்பின் பண்டிட் விஸ்வமோகன் பட்டின் இசை நிகழ்வு இருந்தது. சுசித்ரா முறையாக இசை பயின்றவர். இந்துஸ்தானி இசையில் ஆர்வம் கொண்டவர். எனக்கு இந்துஸ்தானி இசையில் பயிற்சி இல்லை (சாரு நிவேதிதாவுக்கு பயிற்சி உண்டு என கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் சென்றிருக்கலாம்) நான் தவிர்த்துவிட்டேன். அன்று நல்ல குளிர். சட்டென்று மாலையில் மழை பெய்ய ஆரம்பித்தது. ஆகவே அமிர்மகாலில் திறந்தவெளியில் நிகழ்த்தப்படவிருந்த இசைநிகழ்வு உள்ளரங்கில் நடைபெற்றது. சுசித்ரா சென்றுவிட்டு வந்து தெய்வீக அனுபவம் என்று மெய்சிலிர்த்துக்கொண்டிருந்தார்.

இதுவரை நான் கலந்துகொண்ட இலக்கியவிழாக்களில் தவறாமல் ஒன்று நிகழ்ந்துள்ளது – என்னுடைய அமர்வு கவனிக்கப்படாமல் போனதில்லை. ஜெய்ப்பூர் முதல்நாளில் எட்டு அரங்குகளிலாக 40 நிகழ்வுகள் நடைபெற்றன. ஆனால் மறுநாள் நாளிதழ்களில் வெளிவந்த செய்திகளில் பலவற்றில் தொடக்கவிழா நிகழ்வும், தொடர்ந்து என் அரங்கும் மட்டுமே முதன்மையாக அளிக்கப்பட்டிருந்தது. (Discussion on war, democracy marks 1st day of Jaipur Lit Fest) அது நாம் தமிழில் க.நா.சு காலம் முதல் உருவாக்கியிருக்கும் தீவிர இலக்கிய விவாதத்தின் விளைவு.

ஆனால் என்னிடம் பேசிய பலர் ‘தமிழ் எழுத்தாளரிடமிருந்து இத்தனை ஆழமான விவாதத்தை எதிர்பார்க்கவில்லை’ என்றனர். அவை எவ்வகையிலும் பெருமைதரும் சொற்கள் அல்ல.


சுசித்ரா அபிஸ் குறித்து ஓர் உரையாடல்

முந்தைய கட்டுரைசுப்பா ஞானியார்
அடுத்த கட்டுரையோகப்பயிற்சி முகாம்