காட்டை வென்றவன் – கடிதம்

 

அவன் காட்டை வென்றான் வாங்க

 அன்புள்ள ஜெ,

இப்போதுதான்அவன் காட்டை வென்றான்என்ற குறுநாவலை படித்து முடித்தேன். “அவன் காட்டை வென்றான்என்ற தலைப்பு பெரும் முரணாகவே எனக்குப்பட்டது. ஏனெனில் அந்த கிழவன் காட்டை வெல்லவில்லை. வெல்ல முயற்சித்தான், அவ்வளவே. இறுதியில் காடே வென்றது.

இயற்கையிடம் மனிதன் தன்னுடைய தோல்வியை எப்போதும் ஒத்துக்கொண்டதே கிடையாது. அதனால்தான் இந்த தலைப்பு போலும்.

காட்டில் காணாமல் போன தன்னுடைய சினைப் பன்றியை, ஒரு சிட்டுக்குருவியின் மூலமாகவே கிழவன் கண்டுபிடிக்கின்றான். அந்த சிட்டுக்குருவி, பன்றி குட்டிப்போடுவதை பார்த்து ஓயாது கத்திக்கொண்டே இருக்கிறது. அந்த குரலை பின்தொடர்ந்தே கிழவன் தன்னுடைய பன்றி இருக்கும் இடத்தை வந்தடைகிறான். இதனால் அக்கிழவன் சிட்டுக்குருவிக்கு மனதளவில் நன்றியும் கூறுகிறான்.

ஆனால் அவன் அந்த பன்றிய கண்டுபிடித்த பின்னும் சிட்டுக்குருவி எப்போதும் போல் தொடர்ந்து கத்திக்கொண்டே இருக்கிறது. அந்த குரலை பின்தொடர்ந்து இம்முறை நரிகள் கிளம்பி வந்துவிடுகின்றன. இதனால் அந்த கிழவன் வேறுவழியின்றி தனக்கு உதவிய சிட்டுக்குருவியையே கொல்லவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறான்.

இக்குறுநாவலில் வரும் இந்த பகுதி என்னை மிகவும் கவர்ந்தது. மனித மனநிலைகளை அருமையாக வெளிக்காட்டியது.

இந்த பகுதி, உங்களுடைய சில படைப்புகளை எனக்கு நினைவுப்படுத்தியது. முதலில்ஒரு தனி இடம்என்ற அருமையான சிறுகதையில் இதேபோல் தன்னை காப்பாற்றியவனையே கொல்லவேண்டிய சூழ்நிலையைப் பற்றி நீங்கள் விரிவாக எழுதி இருந்தீர்கள்.

அதே போல்வண்ணக்கடல்நாவலில் கர்ணன் தன்னுடைய அரசனை சிங்கங்களிடமிருந்து காப்பாற்றுவான். ஆனால் காப்பாற்றப்பட்ட அரசனோ, ஒரு சூத்திரன் தன் உயிரை காப்பற்றியது வெளியில் தெரிந்தால் அது தனக்கு இழுக்கு என்று கருதி கர்ணனை கொல்ல ஆணையிடுவான்.

அதே வெண்முரசில் துரியோதனனுக்கும் பீமனுக்கு இடையிலான உறவில் விரிசல் விழுந்ததும் இதே போல்தான். துரியோதனனை கரடியொன்று வலுவாக தாக்கி, கொல்ல இருக்கும் வேளையில், பீமன் அந்த கரடியை வீழ்த்தி துரியோதனனின் உயிரை காப்பாற்றுவான். ஆனால் காப்பாற்றப்பட்ட துரியோதனனோ, தன் உடன்பிறப்புகளின் முன்னால் இன்னொருவன் தன்னை காப்பாற்றியதே தனக்கு இழிவுதான் என்று கருதி பீமனை அந்த நொடியிலேயே கொல்ல முயற்சிப்பான்.

இந்த நிகழ்வுகளெல்லாம் என்னுடைய வாழ்வில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியவை. அந்த பட்டியலில் இப்போது கேசவரின் கிழவனும் சிட்டுக்குருவியும் இணைந்துள்ளன.

மணிமாறன்

முந்தைய கட்டுரைமுதல்கதவம்
அடுத்த கட்டுரைகங்காவுடன் நான் – ரம்யா மனோகரன்