இயற்கையின் நஞ்சு- கடிதம்

ஆலம் மின்னூல் வாங்க

ஆலம் நூல் வாங்க – விஷ்ணுபுரம் பதிப்பகம்

ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு ,

நீண்ட நாட்களுக்கு பிறகு இக்கடிதம் எழுதுகிறேன். சமீபத்தில் நீங்கள் எழுதிய ஆலம்  நாவலை kindle இல் ஒரே நாளில் படித்து முடித்தேன். மிகவும் அருமையான நாவல்.

இந்நாவலின் வாசிப்பில் நான் உணர்ந்தது,

 இயற்கை தன் லீலையை  நிகழ்த்திக்கொள்வதற்கு மனிதர்களை கருவியாக கொண்டுள்ளது. மனிதர்கள் மாறலாம் அனால்  நிகழ்வுகள் அலை போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். நாய் இனத்தை இயற்கை பூஞ்சை மூலம் ஆள்வது போல மனித இனத்தை விழைவு மற்றும் வஞ்சம் போன்ற எண்ணங்களின் (நஞ்சு) மூலம் ஆள்கிறது. ஒரு நாய் பூஞ்சை தொற்று மூலம் சொரிந்து சொரிந்து சாவது போல் நாமும் விழைவினாலும் வஞ்சத்தினாலும் அழிவை தேடிக்கொள்கிறோம்.

ஞானியர் மட்டுமே அந்த நஞ்சினை கையாள்கிறார்கள். மற்றவர்கள் அதனால் கையாளப்பட்டு தேவை முடிந்ததும் அழிக்கப்படுகிறார்கள். உங்கள்  நூல்களில் ஆக்கமும் அழிவும் இரு பக்கங்களாக கொண்ட தேவியாக (பிரக்யா  தேவி ) இயற்கையை குறிப்பிட்டு இருப்பீர்கள்.  ஆபகந்தி கதையில் விஷ்ணு அந்த இருளை (மூத்தவளை)   தன்  கால் கட்டைவிரல் கீழ் வைத்து அடக்கி ஆக்கத்தை நிகழ்த்துவதாக இருக்கும். வெண்முரசிலும் அந்த  இருளே கிருஷ்ணரை  பதினான்கு ஆண்டு காலம்  சூழ்ந்து  அவ்விருட் தவ முடிவில் அந்த இருள் அவரால் அவரது இடது கால்  கட்டைவிரல் நகமாக சுருக்கி ஆளப்படும் மேலும் அந்த  இருளின் வடிவமான கணிகரும்  அவர் முடிவில் அந்த இடது கால் கட்டை விரலில் புகுவதாக இருக்கும்.  ஆகவே தீமையும், அழிவும்  இயற்கையின் வடிவமே அது ஒன்றை ஒன்று சமன் செய்து இந்த லீலையை  நிகழ்த்துகிறது.

கதையில் மேல்கொண்டையார் மற்றும் சேவல்கொண்டையார் குடும்பத்தினர்  இயல்பிலேயே உள்ள  இரத்த வெறியால்  (நஞ்சு) ஒருவரை  ஒருவர் பல காலம் அழிக்கிறார்கள். பின் சந்தானம் தன்  மகனின் இழப்பினால் அந்த கண்ணியை தொடரச்செய்து மேல்கொண்டையார் வம்சத்தையே அழிக்க முயல்கிறார். அவர் மறைவுக்குப்பின் கதிரேசன் மூலமாக அக்கண்ணி தொடர்கிறது.

ஒருவன் பிறவியிலேயே தீயவனாக இருந்து செய்யும்  தீமையை விட தன்  நிலை திரிந்து செய்யும் தீமையின் வீச்சு  அதிகம் ஏனெனில்  கதை நாயகன் இறுதியில் சந்தானத்திடம் கூறுவது போல்  அவர் ஒரு நிலையில் அதை  ரசிக்க ஆரம்பித்து இருப்பார். உங்கள் கதைகளில்  கூறுவது போல் யானை மற்ற விலங்குகளை விட அபாயமானது ஏனெனில் அது கொல்வது உணவுக்காக அல்ல. சந்தானம்  வஞ்சத்தினாலும் , கிருஷ்ணசாமி விழைவாலும் நிலை பிறழ்கிறார்கள். ஆனால் அதன் காரணம்  நியாயமானது. சந்தானம் இயல்பிலேயே வன்முறை அற்றவர். அவர் பங்காளி மிரட்டும் போதும், தன்  மகன் இழப்பின் போதும்  மற்றும் பல சமயங்களிலும்  அமைதியாகவே இருக்கிறார்.  தன்  மகன் இழப்பிற்கு தகுந்த நியாயம் கிடைக்காத போது அவருள் ஒரு கொலை மாடன்  உருவாகிறார், அதன் பின் அவர் வன்முறையில் இறங்கும்  போது   அதன் வீச்சு அதிகம். தன்  நிலத்தை விற்க அதில் குடியிருப்பவர்களை காலி  செய்யும் போதும், மேல்கொண்டையார் வாரிசுகளை அழிக்கும் போதும் அது தெரிகிறது.  அதே போல் கிருஷ்ணசாமி இயல்பிலேயே நல்லவர் ஆனால் அவரின் வறுமை நிலை மற்றும் அதனால் அடைந்த அவமானங்கள் அவரை பண விழைவு கொள்ள செய்கிறது . மூன்று  தலைமுறை புண்ணியம் செய்து பட்டினி கிடந்தது  போதும் இனி பாவம் செய்து கொஞ்சம் சாப்பிடலாம் என அவனை சொல்ல வைக்கிறது.  பண விழைவினால்  கதிரை  இயக்கி அவர் அடுத்த கண்ணியை தொடங்கி வைக்கிறார்.  

காவல் மற்றும் நீதி துறை செயல்பாடு பற்றிய நடைமுறை உண்மை இயல்பாக வெளிப்பட்டுள்ளது. சந்தானம் அவரின் பங்காளியின் மூலம் மிரட்டப்படும் போடும், அவர் மகனின் இறப்பின் போதும் காவல் மற்றும் நீதி துறை பணம் மற்றும் அதிகாரம் உள்ளவர்களுக்கு துணையாக இருப்பதை மீண்டும் இயல்பாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் இல்லையேல் சந்தானம் இவ்வளவு வஞ்சம் கொண்டு  கொலை மாடனாக  மாறியிருக்க மாட்டார்.  

சோப்ராவும், கதைநாயகனும் , கிருஷ்ணசாமியும் ஆரம்பத்திலேயே துணிந்து ஒரு சிக்கலான கேஸிற்காக  தனியாக போய் வாதாட தொடங்கி விடுகிறார்கள். மற்றவர்கள்  அனுபவம் இருந்தாலும் அங்கேயே தங்கி விடுகிறார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.

கோப்ரா கூறும் போது , ஒரு கிரிமினல் கேசில் எல்லேமே பொய் தான், சாட்சி சொல்றது, கடைசி தீர்ப்பா வாறது எல்லாமே பொய். நமையை கொடுக்கிற பொய் உண்டு தீமையை கொடுக்குற பொய்யும் உண்டு அவ்வளவு தான் வித்தியாசம். ஆனா அத்தனை  பொய்களிலே முதல் பொய் கம்பளைண்ட் குடுக்குறவன் சொல்றது  plaintiff is  the  primary  liar.

பர்சனலா மூணு விஷயம் சொல்றன் , கட்சிக்காரன் கேஸுக்கும் மட்டும் தான்  நாம வக்கீல் அவனுக்கு இல்ல. ஒரு கேசுங்குறது ஒரு கேஸ் மட்டும் தான். கேஸ் முடிஞ்சதுக்கப்பறம் மானசீகமா  வெளிய வந்துரனும். எந்த கட்சிகாரன்  நம்ம கிட்ட சொல்றது முழுசும் உண்மை இல்ல.

இன்னும் அதிக படைப்புகளை உங்களிடம் எதிர்பார்க்கும் உங்கள் அன்பு வாசகன்

அருண் 

முந்தைய கட்டுரைமுதற்காட்டாளனும் காட்டாளத்தியும்
அடுத்த கட்டுரைகீரனூர் ஜாகீர்ராஜா கருத்தரங்கம்- உரைகள்