இரு பலியாடுகளின் கதை – கடிதங்கள்

ஆலம் மின்னூல் வாங்க

ஆலம் நூல் வாங்க – விஷ்ணுபுரம் பதிப்பகம்

ஜெ

நலமா.நீண்ட காலம் கழித்து எழுதுகிறேன்.ஆலம் கதையினை தினமும் வாசித்தேன்.வழக்கமாக எனக்கு கொலை துப்பறியும் கதைகள் பிடிக்காது.உங்கள் எழுத்தின் சுவாரசியத்தில் இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.ஆலகால விஷமாக பகை இருப்பதை தலைமுறையாக தொடர்வதை நான் நேரில் கண்டிருக்கிறேன்.

இக்கதையில் கிரிமினல் வழக்கறிஞர் கோப்ரா வின் குடும்பத்தை பற்றி சொல்லும்போது ஒரு மகள் நாய் வளர்க்கிறார்.மற்றொருத்தி பட்டுச்சேலை உடுத்தி மங்களகரமாக பக்தி கோவில் என்றிருக்கிறாள்.அது பின்னே அப்பா இத்தனை திறமையான குற்றவியல் வழக்கறிஞரா இருக்கையில் அதைப்பார்த்து வளரும் பிள்ளைகள் நேர்மாறாக மென்மையாக்தான் இருக்க விரும்புவார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள்.அதை வாசிக்கையில் எனக்கு ஒரு கணம் கண்ணீர் வந்தது.என்னைப்பற்றி  நேரில் அறிந்தது எழுதியது போல இருந்தது.என் பெற்றோர் இருவருமே இரண்டாயிரம் பிள்ளைகள் படித்த மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்கள்.மிகச்சிறந்த நிர்வாகிகள் என்று பெயர் எடுத்தவர்கள்.ஒரு பின்தங்கிய மலைப்பகுதியில் எழுபதுகளில் பள்ளியில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் ஆண்டுவிழாக்கள் கம்பன் விழா பட்டிமன்றங்கள் என்றெல்லாம் நடத்தி, பழங்குடி பிள்ளைகளில் நூறு சதவீதம் தேர்ச்சி காண்பித்து அத்தனை அழகாக கல்விப்பணியினை செய்தவர்கள்.நான் ஒருநாளும் ஆசிரியராவேன் என்று எண்ணியதில்லை.ஊழ்வினை நானும் இன்று ஒரு எளிய ஆசிரியப் பணியில் இருக்கின்றேன்.ஆனால் பணியாற்றும் இடத்தில் எனக்கான வேலையைத் தவிர இப்படி விழாக்கள் போட்டிகள் இன்று நடைபெறும் கலைத்திருவிழா எதிலும் என் பங்களிப்பு இல்லை.என்னால் அதிலெல்லாம் ஈடுபடவும் முடியவில்லை.அடிக்கடி நினைப்பேன்.என் பெற்றோர் எத்தனை திறமையாக இந்த துறையில் இருந்தார்கள்.நான் ஏன் இப்படி ஆர்வமில்லாமல் இருக்கிறேன் என்று.உங்கள் வரிகளை வாசிக்கையில் எனக்கு அதற்கு பதில் கிடைத்தது.அது அப்படித்தான் போல.மிகவும் அருமையான கதை.ஜெ இப்படி அடிக்கடி புனைவுகள் எழுதுங்கள்.

அன்புடன்

மோனிகா மாறன்

அன்புள்ள ஜெ

ஆலம் கதையை இப்போதுதான் இன்னொருமுறை வாசித்து முடித்தேன். நான் அமெரிக்கத் திரில்லர்களின் தொடர்வாசகன். ஆனால் மிகப்பெரும்பாலான திரில்லர்களை ஒரு செஸ் கேமின் வியூகம்- அதன் சொல்யூஷனை உரைநடையில் எழுதியதுபோல சொல்லிவிடலாம்.  அவை வாசிக்கையில் திரில் ஆக இருக்கும். மூளை ஒரு கூர்நிலையில் இருக்கும். ஆனால் கடைசியில் அந்த முடிவுக்குப்பின் ஒன்றும் எஞ்சாது. அவ்வப்போது சில செய்திகள் ஞாபகம் வரும். அவர்கள் சேர்த்துக்கொள்ளும் டேட்டா மட்டுமே அவற்றிலுள்ள ஒரே நல்ல விஷயம். நான் டாவின்ஸி கோட் நாவலை அண்மையில் வாசித்தேன். ஆச்சரியமாக இருந்தது. நகரவே இல்லை.  சலிப்பாக இருந்தது. பழைய கிரிக்கெட் ஆட்டத்தை டிவியில் திரும்பப்பார்ப்பதுபோல தோன்றியது.

ஆனால் ஆலம் உடனே இன்னொரு முறை படிக்க முடிகிறது. அதற்குக் காரணம் திரில் அல்ல. திரில்லான ரீடிங் வாய்ப்பு உண்டு. ஆனால் இரண்டு வலுவான ரியல் கேரக்டர்கள் உள்ளன. சந்தானம், வீரலட்சுமி. இரண்டு பலியாடுகளின் கதை இந்நாவல். இரண்டுபேரின் வாழ்க்கைதான் இந்நாவலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறது. அவர்களால்தான் நாவல் இலக்கியமாக ஆகிறது. ஒரு அமெரிக்க திரில்லரில் எது தவறவிடப்படுகிறது என்றால் இதுதான்

குமார் ராமசாமி

முந்தைய கட்டுரைசினிமாவம்பும் இலக்கியமும்
அடுத்த கட்டுரைகல்வி, கடிதங்கள்