வீரான்குட்டி- கடிதம்

எளிமையெனும் விடுதலை

ஜெ,

அண்மையில் கனலி இணையத்தில் ஜப்பானிய மொழிபெயர்ப்பு கவிதைகள் சிலவற்றை வாசித்திருந்தேன். இருட்டு எனும் தலைப்பில்

ஒரு கவிதை,

இருட்டு

சிறுவன் தன் விளக்கை ஏற்றுகிறான்.

அணில்கள் மரத்தை நோக்கி பாய்ந்து ஓடுகின்றன.

அவன் தன் விளக்கை மரத்தை நோக்கி காட்டுகிறான்.

அணில்கள் விரைந்தோடி மர உச்சியில் ஒளிந்து கொள்கின்றன.

சிறுவன் தன் விளக்கை மரத்தின் உச்சியைப் பார்த்து காட்டுகிறான்.

அணில்கள் வானத்திற்குள் தாவிச்சென்று

நட்சத்திரங்களாகின்றன.

உண்மையிலேயே இந்த கவிதை எதைச்சொல்கிறது என்று தெரியவில்லை, மாறாக எனக்குள் இருந்த குழந்தையை  இந்த கவிதை அணில்கள் நட்சத்திரங்களா உருமாறும் ஒரு கனவு தேசத்தில் சில நொடிகள் கொண்டு நிறுத்தின. சித்தாந்தத்தை, அரசியலை அல்லது கருத்தை முன்வைப்பதற்க்காக மட்டுமே எழுதப்படுவது அல்ல கவிதைகவிதையில் நிகழும் கலை உச்சத்தில், நிறைவடையும் தருணத்தில், அந்த கவிதை பின்பெப்பொழுதும் காலம்முழுவதுமாக நம்முள் வளர்ந்து கொண்டே செல்கிறது. கவிதை வாசிக்க ஆசை ஆசையாக இருந்த போது தளத்தில்எளிமையெனும் விடுதலைவாசித்தேன். வீரான்குட்டியின் கவிதைகள். ஒவ்வொரு கவிதையும் கலை நிகழும் ஒரு உச்சம். ஓரிரு கவிதைகள் விதிவிலக்காக இருந்த போது நான் இன்னும் அக்கவிதைகளை வாசிக்கக்கூடிய தளத்திற்கு வந்து சேரவில்லை என்பதை உணர்ந்தேன்

பள்ளிவிட்டு வந்ததுமே புத்தகத்தை தூக்கிவீசி சீருடையை கழற்றி எறிந்து காற்றுமேவும் வெற்றுடலுடன் விளையாடச்செல்லும் பள்ளிச்சிறுவனின் விடுதலை கொண்டவை வீரான்குட்டியின் கவிதைகள்

நட்சத்திரமும் மலரும்தலைப்பில்

தாழ்ந்துபோனதே தலை 

செடிக்கு 

ஈரமாகிவிட்டது விழியோரம்

 உண்மையாகவே அக்கவிதைகள் பள்ளிச்சிறுவனின் விடுதலை கொண்டவை தான்.

வாசிப்பின் போது அதிக நாட்களில் உங்களின் அருகாமையை உணர்ந்திருக்கிறேன். இருபது நாட்களாக புதுமைப்பித்தன் எனை கிருக்காய் ஆக்கியபின், இன்று வீரான்குட்டி அவர்களை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

நன்றி!

அன்புடன் 

பொன்சக்திவேல்

முந்தைய கட்டுரைபயிற்சிகளின் வழியே…
அடுத்த கட்டுரைசுப்ரபாரதிமணியன்